Published:Updated:

பிங்க் ஜெர்சி, ஸ்டீவ் ஸ்மித் வருகை... மாற்றங்களை நம்பி ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐ.பி.எல் ரவுண்ட் அப்

பிங்க் ஜெர்சி, ஸ்டீவ் ஸ்மித் வருகை... மாற்றங்களை நம்பி ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐ.பி.எல் ரவுண்ட் அப்

மிடில் ஆர்டர் பேலன்ஸ், லீடர்ஷிப், இன்ஸ்பிரேஷன் - கடந்த ஆண்டு என்னவெல்லாம் இல்லாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் தடுமாறியதோ, அதையெல்லாம் ஒரே பேக்கேஜில் சுமந்துவருகிறார் ஸ்மித்.

பிங்க் ஜெர்சி, ஸ்டீவ் ஸ்மித் வருகை... மாற்றங்களை நம்பி ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐ.பி.எல் ரவுண்ட் அப்

மிடில் ஆர்டர் பேலன்ஸ், லீடர்ஷிப், இன்ஸ்பிரேஷன் - கடந்த ஆண்டு என்னவெல்லாம் இல்லாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் தடுமாறியதோ, அதையெல்லாம் ஒரே பேக்கேஜில் சுமந்துவருகிறார் ஸ்மித்.

Published:Updated:
பிங்க் ஜெர்சி, ஸ்டீவ் ஸ்மித் வருகை... மாற்றங்களை நம்பி ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐ.பி.எல் ரவுண்ட் அப்

இன்னும் ஒரு வாரத்தில் சென்னை களைக்கட்டப்போகிறது. தோனி, கோலி என இந்தியாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்களும் மோதும், ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் சேப்பாக்கத்தில் தொடங்கப்போகிறது. சில அணிகள் கடந்த ஆண்டில் இருந்ததுபோலவே இருக்கின்றன. சில அணிகள் சில மாற்றங்கள் செய்திருக்கின்றன. ஓரிரு அணிகள் மொத்தமாக மாறியிருக்கின்றன. ஓர் அணி அடையாளத்தையே மாற்றியிருக்கிறது. இந்த மாற்றங்கள், இந்த சீசனில் அவர்களுக்கு என்ன பலனைக் கொடுக்கப்போகிறது? இந்த ஐ.பி.எல் தொடரில் நாம் என்ன எதிர்பார்க்கலாம்? ஒவ்வோர் அணியின் பலம், பலவீனம் என்னென்ன? தினமும் ஓர் அணியாக அலசுவோம். இன்று ராஜஸ்தான் ராயல்ஸ். 

இத்தனை ஆண்டுகள் நீல ஜெர்சியில் விளையாடிய ராயல்ஸ், இப்போது பிங்க் நிற ஜெர்சியோடு களமிறங்கப்போகிறது. கடந்த ஆண்டு ஒரு போட்டியில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக அந்த உடை அணிந்து விளையாட, அது ரசிகர்களுக்கு ரொம்பப் பிடித்துப்போனதால் இந்த மாற்றம். ``நாங்கள் பிங்க் சிட்டியில் விளையாடுகிறோம். அதனால் இனி ஜெர்சியும் பிங்க்" என்று டைமிங் சிக்சர் அடித்திருக்கிறார் கேப்டன் ரஹானே! 

ஜெர்சியில் மாற்றம் இருந்தாலும், கடந்த ஆண்டு ஆடிய பிளேயிங் லெவனுக்கும், இந்த சீசனைத் தொடங்கப்போகும் பிளேயிங் லெவனுக்கும் பெரிதாக வித்தியாசம் இருக்கப்போவதில்லை. ஒரேயொரு மாற்றம் மட்டுமே இருக்கும். ஆனால், அது அவர்களின் மொத்த செயல்பாட்டையும் மாற்றும் மாற்றமாக இருக்கும். `முன்னாள்' கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஓராண்டு தடை முடிந்து மீண்டும் அணிக்குத் திரும்புகிறார். மிடில் ஆர்டர் பேலன்ஸ், லீடர்ஷிப், இன்ஸ்பிரேஷன் - கடந்த ஆண்டு என்னவெல்லாம் இல்லாமல் அந்த அணி தடுமாறியதோ, அதையெல்லாம் ஒரே பேக்கேஜில் சுமந்துவருகிறார் ஸ்மித். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு வெளிநாட்டு வீரருக்கான இடம், கடந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாட்டியெடுத்தது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே களமிறங்கிய டார்சி ஷார்ட் ஏமாற்றமே அளித்தார். அவருக்குப் பதிலாக ஆடிய ஜெய்ன்ரிச் கிளாசன் பெரிதாக சோபிக்கவில்லை. அதனால் சில ஆட்டங்களில் ஈஷ் சோதி, பென் லாலின் எனப் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினர். அதுவும் பயன்தரவில்லை. இந்த முறை அந்தப் பிரச்னைகள் ஏதும் இல்லை. ஸ்டீவ் ஸ்மித், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் என 4 டாப் வீரர்கள் இருக்கிறார்கள். 

9-வது வீரர்வரை அடித்து ஆடும் அளவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் லெவன் பேட்டிங் டெப்த் கொண்டுள்ளது. பட்லர், ரஹானே, ஸ்மித் என டாப் ஆர்டரும் ஆர்ச்சர், கௌதம், கோபால் என லோயர் ஆர்டரும் சிறப்பாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக சாம்சன் ஷார்ட் ஃபார்மட் போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் மீண்டும் தன்னை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஸ்டோக்ஸ், 2018-ம் ஆண்டு அவரது ஒருநாள் ஸ்ட்ரைக் ரேட் 76 வரை குறைந்துவிட்டது. கடந்த ஐ.பி.எல் தொடரில் 200 ரன்களைக்கூடத் தாண்டவில்லை. உலகக் கோப்பைக்கு முன்னாள் அவர் தன் ஃபார்மை மீட்கவேண்டும். ராகுல் திரிபாதி, சையது முஸ்தாக் அலி டி-20 தொடரில் சிறப்பாக விளையாடினார். மஹாராஷ்டிரா அணியை ஃபைனல் வரை வழிநடத்தியது அவரது நம்பிக்கையை அதிகரிக்கும். 

பிளேயிங் லெவனில் ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் எல்லோருமே நம்பத்தகுந்த வீரர்களாக இருக்கின்றனர். ஸ்டோக்ஸ் தவிர்த்து அனைவருமே ஃபார்மிலும் இருக்கிறார்கள். ஸ்மித் மட்டும் கேள்விக்குறி. ஓராண்டாக ஆடாமல் இருந்தாலும், அவர் பழைய ஃபார்மிலேயே இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், ராயல்ஸ் அணிக்கு இருக்கும் இந்திய பேக் அப் பேட்ஸ்மேன்கள்தான் கொஞ்சம் கவலையளிக்கின்றனர். யாரும் பெரிதாக நிரூபித்ததில்லை. முன்பு கொடுக்கப்பட்ட ஐ.பி.எல் வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. சாம்சன், திரிபாதி, ரஹானே ஆகியோரில் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டாலும், அந்த ஒரு வீரரின் இடத்துக்கு, பிளேயிங் லெவனில் கூடுதல் மாற்றங்கள் செய்யவேண்டிய நிலை ஏற்படும். அதுதான் அந்த அணிக்கு இருக்கும் பெரிய பிரச்னை. 

இன்னொரு முக்கியமான விஷயம் - ரஹானே எந்த மனநிலையில் விளையாடுகிறார் என்பது. தன்னை நிரூபிக்கவேண்டும், மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடிக்கவேண்டும் என்பதையெல்லாம் அஜெண்டாவாகக் கொண்டு அவர் விளையாடினால், நிச்சயம் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தமாட்டார். அது அவருக்குக் கூடுதல் நெருக்கடியைத்தான் கொடுக்கும். கடந்த ஆண்டே, ஒரு கேப்டனாக தன் அணிக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கத் தவறினார். ஜாஸ் பட்லர், தன் அதிரடி ஆட்டத்தால், மொத்த அணிக்கும் நம்பிக்கை கொடுத்துக்கொண்டிருந்தார். இந்த முறை ரஹானே, ஒரு கேப்டனாக முன் நின்று, முன்மாதிரியாக நின்று அணியை வழிநடத்தவேண்டும். 2012 சீசனைப்போல் இன்னோர் அட்டகாசமான பர்ஃபாமன்ஸ் அவர் கொடுக்கவேண்டும். 

இங்கிலாந்து வீரர்கள் பாதியில் வெளியேறிய பிறகு அந்த இடத்தை நிரப்ப ஆஷ்டன் டர்னர், லியாம் லிவிங்ஸ்டோன், ஒஷேன் தாமஸ் போன்ற இளம் வீரர்கள் இருக்கிறார்கள். ஒரு போட்டியில் தன்னால் என்ன தாக்கம் ஏற்படுத்த முடியும் என்பதை ஒரே போட்டியில் நிரூபித்துவிட்டார் ஆஷ்டன் டர்னர். பாகிஸ்தான் சூப்பர் லீக் பார்த்தவர்களுக்கு லிவிங்ஸ்டோன் என்ன செய்வார் என்பது தெரியும். சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக ஆடக்கூடியவர். அவரது பார்ட் டைம் பந்துவீச்சும் அணிக்கு பலம் சேர்க்கும். 

பந்துவீச்சைப் பொறுத்தவரை விக்கெட் எடுக்கும் பௌலர்கள் நிறைய இருக்கிறார்கள். உனத்கட், குல்கர்ணி, ஆர்ச்சர், ஸ்ரேயாஷ் கோபால் எல்லோருமே விக்கெட் எடுக்கக்கூடியவர்கள். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வருண் ஆரோனை வாங்கியிருப்பது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையான ஆப்ஷன்களை அதிகரித்துள்ளது. ஆனால், `லோ - ஸ்கோரிங்' ஆட்டங்களில் இவர்கள் சுத்தமாக எடுபடமாட்டார்கள். அனைவரின் எகானமியும் 8,9 என அதிகமாகவே இருக்கிறது. கடந்த சீசனில் பென் ஸ்டோக்ஸ் கூட பந்துவீச்சில் காலை வாரினார். அதனால், அந்த அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். கிட்டத்தட்ட ஆர்.சி.பி போன்றதொரு நிலைமைதான். ஷேன் வார்னே இதைக் கட்டாயம் சரிசெய்தாகவேண்டும். 

பௌலிங்கில் அதிக ரன் விட்டுக்கொடுப்பதைத் தவிர்த்தால் ராயல்ஸ் நிச்சயம் சவாலான அணியாக இருக்கும். ஆனாலும், இந்த முறையும் பட்லர், ஸ்டோக்ஸ் ஆகியோரிடம் அதிகம் எதிர்பாராமல் இருப்பதும் முக்கியம். அப்போதுதான் அவர்கள் இல்லாதபோதும் சிறப்பாகச் செயல்படவேண்டும். அதற்கு ரஹானேவின் ஆட்டம் மிகமுக்கியம். அவர் இந்த சீசனை எப்படித் தொடங்கப்போகிறாரோ, அப்படித்தான் ராஜஸ்தானின் சீசன் முடியும். அதுதான் அவர்களின் அரையிறுதி வாய்ப்பை நிர்ணயிக்கும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism