Published:Updated:

SHOOT THE கேள்வி

SHOOT THE கேள்வி
பிரீமியம் ஸ்டோரி
SHOOT THE கேள்வி

SHOOT THE கேள்வி

SHOOT THE கேள்வி

SHOOT THE கேள்வி

Published:Updated:
SHOOT THE கேள்வி
பிரீமியம் ஸ்டோரி
SHOOT THE கேள்வி

ஜாம்பவான்களான மேற்கு வங்க அணிகளை கடந்து சென்னை சிட்டி எஃப்சி ஐ லீக் கோப்பையை வென்றது எப்படி ?

SHOOT THE கேள்வி

ந்த சரித்திர வெற்றிக்கு முதல் காரணம், அணியின் பயிற்சியாளராகப் பதவியேற்ற அக்பர் நவாஸ். அணியின் வீரர்களில், அவர்கள் பொசிஷன்களில், ஆட்ட அணுகுமுறையில், சென்னை அணியின் ஆட்டிட்யூடில்... அனைத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். பொதுவாக நம் ஊரில், ஃபுல் பேக் ஆடும் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் முக்கிய அங்கம் வகிக்கமாட்டார்கள். ஆனால், நவாஸ் அதை எதிர்பார்த்தார். ஃபுல் பேக்குகள், எதிரணியின் பாக்ஸ் வரை சென்று கிராஸ் போட்டுவிட்டு, உடனடியாக தங்கள் பாக்சுக்கு வந்து டிஃபண்ட் செய்யவேண்டும் என்று விரும்பினார். ஏற்கெனவே இருக்கும் வீரர்களை அதற்கு தயார் செய்யாமல், 90 நிமிடமும் களத்தில் சுழலக்கூடிய, கிராஸ், பாஸ் என அனைத்திலும் கில்லியாக இருக்கும் நடுகள வீரர்களை ஃபுல் பேக் பொசிஷனுக்குத் தயார் செய்தார். இப்படி ஒவ்வொரு வீரர்களின் குணத்திற்கு ஏற்ப, அவர்களின் பொசிஷனை மாற்றினார்.

சென்னை வெற்றி பெற இன்னொரு முக்கியக் காரணம், புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட 5 ஸ்பெய்ன் வீரர்கள்! கோல்கீப்பர் நௌஷத் சான்டானா, டிஃபண்டர் ராபர்டோ ஸ்லாவா இருவரும் பின்களத்தில் பலம் கூட்ட, பெட்ரோ மான்சி, நெஸ்டர் கார்டிலோ, சேன்ட்ரோ ராட்ரிக்யூஸ் அடங்கிய மூவர் குழு, மற்ற அணிகளின் பின்களத்தைப் பதம் பார்த்தது. இவர்களின் ஸ்பானிஷ் ஸ்டைல் ஃபுட்பால், ஐ-லீக் தொடரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. சென்னை ஆடிய ஒவ்வொரு போட்டியிலும் கோல் மழை பொழிந்தது. 20 ஆட்டங்களில் 49 கோல்கள் அடித்தது சென்னை சிட்டி. கடந்த 9 சீசன்களில் இதுதான் டாப் கோல் ஸ்கோரிங் சாதனை.

முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் அடித்து மிரட்டிய பெட்ரோ மான்சி, இந்தத் தொடரின் டாப் ஸ்கோரர். சான்ட்ரோ 9, நெஸ்டர் 8 கோல்கள் அடித்து டாப் - 10 இடங்களுக்குள் வந்தனர். மான்சி கோலடிக்க, நெஸ்டர் அசிஸ்ட் செய்வது, நெஸ்டர் கோலடிக்க சான்ட்ரோ அசிஸ்ட் செய்வது என, முன்களத்தில் இவர்கள் நிகழ்த்திய மாயம்தான் சென்னையை சாம்பியனாக்கியது. இன்னொரு முக்கியமான விஷயம் - சமீப காலமாக மேற்கு வங்க அணிகள், ஜாம்பவான் அந்தஸ்தை இழந்துகொண்டிருகின்றன. மான்செஸ்டர் யுனைடட் போல்! கடைசியாக ஒரு மேற்கு வங்க அணி சாம்பியன் பட்டம் வென்று 4 ஆண்டுகள் ஆகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐ.பி.எல் ஃபைனலில் தோனிக்கு ரன் அவுட் கொடுத்ததும், அம்பயர்கள் மீது ஏகப்பட்ட விமர்சனம் எழுந்ததே?!

SHOOT THE கேள்வி

ந்த சீசன் முழுவதுமே அம்பயர்களின் செயல்பாடு மோசமாக இருந்தது. மும்பை – பெங்களூரு போட்டியில் `நோ பால்’ கவனிக்காமல் போனதில் இருந்து, ஃபைனலில் தோனி ரன் அவுட் வரை, அம்பயர்களின் பல முடிவுகள் விமர்சனத்துக்குள்ளானது. அவுட் மட்டுமல்ல, வைடு, நோ பால் கொடுப்பதிலும் தடுமாற்றம். ஃபைனலில் வைடு கொடுக்கவில்லை என மும்பை பேட்ஸ்மேன் பொல்லார்டு கிரிஸை விட்டு விலகி நின்று அதிருப்தி தெரிவித்தார். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து தவறான முடிவுகளை எடுக்கும் அம்பயர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொதுவாக, கால்பந்தில் ரெஃப்ரிகளின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்கு தனியாக ஒரு குழு இருக்கும். முக்கிய முடிவுகளின் போது ரெஃப்ரி எந்த இடத்தில் நின்றிருந்தார், களத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எப்படி ரியாக்ட் செய்தார் என்பது உள்பட, ரெஃப்ரிகளின் செயல்பாட்டை அந்தக் குழு உன்னிப்பாக கவனிக்கும். ரெஃப்ரி மீது தவறு இருப்பது தெரியவந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 2014 ஃபிஃபா உலகக் கோப்பையின்போது, குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் நெய்மருக்கு ரெட் கார்டு கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதை விசாரித்த ரெஃப்ரி தொழில்நுட்பக் குழு, இந்தப் போட்டியில் நடுவராக இருந்த ஜப்பானைச் சேர்ந்த யுசி நிஷிமுராவை, உலகக் கோப்பை முடியும் வரை, ரெஃப்ரியாக பணியாற்ற அனுமதிக்கவில்லை.

கிரிக்கெட்டிலும் தவறான முடிவுகள் எடுக்கும் அம்பயர்களைக் கண்காணிக்க ஒரு குழு அமைக்க ஐ.சி.சி. ஆவண செய்ய வேண்டும்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கரை இனி வர்ணனையாளர் குழுவில் சேர்க்கக் கூடாது என சி.எஸ்.கே ரசிகர்கள் கொந்தளிக்கிறார்களே?!

SHOOT THE கேள்வி

வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வது சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்குப் புதிதல்ல. இவர் மட்டுமல்ல மும்பை விளையாடும் போட்டிகள் மற்றும் மும்பை வீரர்கள் அபாரமாக பெர்ஃபார்ம் செய்யும்போது கவாஸ்கரும் உணர்ச்சிவசப்பட்டு மும்பை புராணம் பாடுகிறார். ஊர் பாசம் இயல்புதான் என்றாலும், பல நேரங்களில் இவர்களது `மைண்ட் வாய்ஸ்’ எல்லோருக்கும் கேட்டுவிடுவதுதான் சிக்கல்.

தமிழ் உள்பட பிராந்திய மொழி வர்ணனையாளர்களைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. `இவங்கலாம் சின்னப் பசங்க... நான் அவன், இவன்னுதான் கூப்டுவேன்’ என ஸ்ரீகாந்த் ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார். இங்கே `வர்ணனை அறம்’ என்ற ஒன்று இல்லவே இல்லை. பேசுவது எல்லாம் சீனியர்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

வர்ணனையின்போது தப்பித் தவறி பி.சி.சி.ஐ–யின் செயல்பாடுகளைப் பற்றி கேள்வி எழுப்பிவிட்டால், அவருக்கு ஜென்மத்துக்கும் கான்ட்ராக்ட் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். 2016 டி–20 உலகக் கோப்பையின்போது ஹர்ஷா போக்ளே, இப்படி ஒரு கேள்வி எழுப்பியதால்தான், அவரை 2 ஆண்டுகள் வரை வனவாசம் அனுப்பி வைத்தார்கள்.

வர்ணனையாளர் என்பவர் ப்ரொஃபஷனல் கிரிக்கெட் வீரராகத்தான் இருக்க வேண்டும் என்ற விதியைத் தளர்த்தினால், ஹர்ஷா போக்ளே போல இன்னும் பல திறமையான வர்ணனையாளர்கள் கிடைக்கக்கூடும். இந்தியாவிலும் ஒரு ரிச்சி பெனாடு இருக்கக் கூடும். அதைச் செய்யாதவரை மஞ்ச்ரேக்கரும், ஸ்ரீகாந்தும் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள்.

கோமதி எனும் தடகள வீரரை தங்கம் வெல்லும்வரை விகடன் மறந்தது ஏன்?

SHOOT THE கேள்வி

தை நேர்மையாக விவாதிப்போம்!

அரவிந்த் அடிகா எழுதிய 'செலக்ஷன் டே' புத்தகத்தில் வரும் வார்த்தைகள் இவை :

'இந்தியர்கள், கொலஸ்ட்ரால் அளவு அதிகம் கொண்ட, சென்டிமன்ட்டான இனம். அவர்களை உணர்ச்சிவசப்படுத்தும் சமூகம் சார்ந்த மெலட்ராமாக்கள் இப்போது சினிமாவில் குறைந்துவிட்டதால், அதை கிரிக்கெட்டில் எதிர்பார்க்கிறார்கள்'

99 சதவிகிதம் உண்மையான வார்த்தை. ஆனால், அது கிரிக்கெட்டில் மட்டும் இல்லை, மொத்த விளையாட்டுத் துறையிலுமே அவர்கள் இந்த எமோஷன்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஒன்று, கண்ணீர் சிந்தும் கதையாக இருக்கவேண்டும். இல்லை, வெற்றி மேல் வெற்றிகள் குவிக்கவேண்டும். அப்போதுதான் நம் கவனம் அவர்கள்மீது திரும்புகிறது. வீரர்கள், களத்தில் ரத்தம் சிந்துவதை, குழந்தையோடு விளையாடுவதை, சதத்தை மனைவிக்கு சம்ர்ப்பிப்பதை, கண்ணீர் சிந்துவதையெல்லாம்தான் அதிகமாக பார்க்க, படிக்க, கேட்க விரும்புகிறோம்.

மோசமான ஆடுகளத்தில், ஒரு பேட்ஸ்மேன் ஆடிய அட்டகாசமான இன்னிங்ஸைப் பற்றி, மகளிர் கால்பந்தில் இந்தியா அடைந்துகொண்டிருக்கும் முன்னேற்றம் பற்றி, ஈட்டி எறிதலில் உலக சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கும் ஒரு வீரரைப் பற்றிய கட்டுரைகளில், நம் சென்டிமென்ட் தேவை நிவர்த்தி அடைவதில்லை என்பதால், அதை யாரும் அதிகம் படிப்பதில்லை. கடந்து சென்றுவிடுகிறார்கள். வாசகர்களின் தேவைக்கு ஏற்ப செய்திகள் கொடுப்பது நிர்பந்தமாகியுள்ள இந்த சூழலில், கோலி, கோலி கல்யாணம், தோனி, தோனி குழந்தை, ரோஹித், ரோஹித்தின் கல்யாண நாள் போன்றவற்றிலேயே அதிக கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது.

தபிதா என்ற 16 வயது தமிழகச் சிறுமி, யூத் அத்லெடிக்சில் தேசிய சாதனையோடு இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்றார். அந்தப் பெண்ணின் பேட்டியை, நம் தளத்தில் பிரசுரித்தபொது படித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஐ-லீக் கால்பந்துத் தொடரில், சென்னை எஃப்.சி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அதில் இருக்கும் தமிழக வீரர்களை அடையாளப்படுத்தினால், அதை 5,000 பேர் கூடப் படிக்கவில்லை. ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணியை சூப்பர் கிங்ஸ் வென்ற போட்டியைப் பற்றி எழுதினால், பல லட்சம் பேர் படிக்கிறார்கள். இத்தனைக்கும் அது லீக் போட்டிதான்! தோனியின் மகள் ஸிவாவைப் பற்றிய ஒரு சிறிய செய்தியைக்கூட குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேர் படிக்கிறார்கள். இப்படி இருக்கையில் எந்தக் கட்டுரைக்கு முக்கியத்துவம் தருவது? யாருமே படிக்காத ஒரு கட்டுரையை, எவ்வளவு காலம்தான் ஒருவன் எழுதிக்கொண்டிருப்பான்?

பி.கு : அவரை கவனிக்காமல் விட்டதற்கு ஊடகங்கள் எந்த சாக்கும் சொல்ல முடியாது. சொல்லக்கூடாது. எங்கள் பணி அதுதான். அதில் சறுக்கயிருக்கிறோம். அதை மறுக்க முடியாதுதான். ஆனால், உங்கள் கேள்விக்கு இப்படி பதில் சொல்வதில், உங்களிடம் பல கேள்விகள் கேட்டிருக்கிறோம். அது உங்களுக்குப் புரிந்தால், கோமதிகள் முன்பே அறியப்படுவார்கள்!