Published:Updated:

ஆறு பந்தும் ஆறு விதம்... ஐ.பி.எல் ஏலத்தில் 8.4 கோடி... யார் இந்த வருண் சக்ரவர்த்தி?!

வருண் பவுலர் மட்டுமல்ல, லோயர் ஆர்டரில் அடித்து விளையாடக்கூடிய பேட்ஸ்மேனும் கூட. சில போட்டிகளில் ஓப்பனராகவும் விளையாடியிருக்கிறார்.

ஆறு பந்தும் ஆறு விதம்... ஐ.பி.எல் ஏலத்தில் 8.4 கோடி... யார் இந்த வருண் சக்ரவர்த்தி?!
ஆறு பந்தும் ஆறு விதம்... ஐ.பி.எல் ஏலத்தில் 8.4 கோடி... யார் இந்த வருண் சக்ரவர்த்தி?!

வருண் சக்ரவர்த்தி - இந்தப் பெயர் திரையில் தெரிந்ததும், ஒவ்வொரு ஐ.பி.எல் அணிகளும் போட்டி போட்டு கோதாவில் இறங்கின. ஜெய்ப்பூரில் நடந்த, 2019 ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில், மிகப்பெரிய ஆச்சர்யம் இந்தத் தமிழக வீரர்தான். டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூர் என ஐந்து அணிகள் போட்டி போட, இறுதியில் பஞ்சாப் அணி 8.4 கோடிகளுக்கு ஏலம் எடுத்தது. ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு 'Uncapped’ வீரருக்குக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுதான். அவரின் அடிப்படை விலை வெறும் 20 லட்சம் தான். ஆனால், 8.4 கோடிக்கு விலைபோயிருக்கிறார். வருண் அப்படி என்ன ஸ்பெஷல்?

வருண் சக்கரவர்த்தி சென்னைப்பையன். தனது 13வது வயதில் கிரிக்கெட் ஆடத் தொடங்கினார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவேண்டும் என்பதுதான் அவரது கனவு. 17 வயது வரை ஆடிய அவர் பின்னர் 'ஆர்க்கிடெக்ட்' படித்தார். 23-வது வயதில் மீண்டும் கிரிக்கெட் ஆசை தொற்றிக்கொண்டது. இம்முறை வேகப்பந்து வீச்சாளராகக் களமிறங்கினார். ஆனால், முட்டியில் ஏற்பட்ட காயம் 6 மாதம் அவரை ஓரங்கட்டியது. அதிலிருந்து மீண்டவர் சுழற்பந்துவீச்சுதான் தனக்குச் சரிவரும் என்று ட்ராக்கை மாற்றினார். முதன்முறையாக ஜூப்லி கிரிக்கெட் க்ளப்பிற்காக ராபஸ்ட் சென்னை லீக் தொடரில் ஆடத்தொடங்கினார். 

2017- 18 சீசனில் 31 விக்கெட்டுகளை அசாதாரணமாக வீழ்த்தினார். அந்தத் தொடரில் 8.26 சராசரியையும், 3.06 எகானமியும் கொண்டிருந்தார். இப்படியான சாதனைகளுக்கு அவரின் சுழல் மந்திரம் தான் காரணம். ஒரே ஓவரில் டாப் ஸ்பின், ஃப்ளிப்பர், கூக்ளி, கேரம் பால் என வேரியேஷன்கள் காண்பிப்பதில் இவர் கில்லாடி. சுனில் நரேனின் ஆப் பிரேக்கையும், இம்ரான் தாகிரின் லெக் ப்ரேக்கையும் கலந்தது போல் இருக்கும் இவரின் பவுலிங்  ஸ்டைல். 

ஒரு ஆஃப் ஸ்பின் பௌலரின் டெலிவரிகளான ஆஃப் ப்ரேக், தூஸ்ரா, கேரம் பால் மற்றும் லெக் ஸ்பின்னரின் டெலிவரிகளான கூக்ளி, லெக் ப்ரேக், ஃப்ளிப்பர் என அனைத்தும் அவருக்கு அத்துப்படி. அத்தனையையும் விக்கெட்டுகளாக மாற்றுவதிலும் வல்லவர். கையிலிருந்து வெளிவந்த பந்து பிட்ச்சாவதைக்கூட கணிக்கமுடியாத அளவுக்கு இருக்கின்றன இவரின் டெலிவரிகள்.   ஒரு சில அனுபவ பவுலர்களுக்கு மட்டுமே வாய்க்கும் இப்படியான டெலிவரிகள் இவருக்கு சாதாரணமாகவே வாய்த்திருக்கிறது. அவர் வீசிய பந்து பிட்ச்சாகி  பேட்ஸ்மேன் கணிப்பதற்குள்ளாகவே ஸ்டம்பைப் பதம் பார்த்துவிடும். உள்ளூர் போட்டிகளில் அவர் விக்கெட் எடுப்பதன் சூட்சமம்  இதுதான்.

இந்த ஆண்டு நடந்த தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் மதுரை அணிக்காக ஆடினார் வருண். சென்னைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 16 ரன் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருணின் சிறப்பம்சம் பேட்ஸ்மென்களால் கணித்து ஆடமுடியாதபடி பந்துவீசி விக்கெட் வீழ்த்துவது மட்டுமன்றி, பேட்ஸ்மென்களால் அடித்து ஆட முடியாத பந்துகளைக் கொண்டு ரன்னைக் கட்டுப்படுத்துவதும்தான். 

டிஎன்பிஎல் சீசனில் வருண் வீசிய 40 ஓவர்களில் 125 பந்துகள் டாட்பால்கள். ஒன்பது விக்கெட்டுகள். அவரின் எக்கானமி 4.7. முக்கியமாக பவர் ப்ளே ஓவர்களிலும், டெத் ஓவர்களிலும் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் அசால்ட் காட்டுகிறார் வருண். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடக்கத்தில் சேப்பாக்கத்தில் சென்னை அணியினருடன் சிறிது நாள்கள் வலைப்பயிற்சிியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் கொல்கத்தா அணியினருடன் வலைப்பயிற்சியில் இணைந்தார். அப்போதுதான் தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், சுழற்பந்து பயிற்சியாளர் கார்ல் க்ரோ ஆகியோரின் ஆலோசனைகளுக்கேற்ப தன் பவுலிங்கை மாற்றிக் கொண்டார். 

ஏற்கெனவே அவரைப் பற்றி தெரிந்ததால், அவரை அணியில் எடுக்கவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார் தினேஷ் கார்த்திக். மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருந்தது நைட்ரைடர்ஸ். கொல்கத்தா அணி இவரை ஏலம் கேட்கத் தொடங்கியபோது அவர்களிடம் இருந்த இருப்புத் தொகை 10.4 கோடி ரூபாய். அந்தத் தொகையைக் கொண்டு 7 வீரர்களை வாங்க வேண்டிய நிர்பந்தத்திலும் வருணை 8.2 கோடி வரை கேட்டுப் பார்த்தது. வருண் மேட்ச் வின்னராக விளங்கக்கூடியவர் என்பதால், அதற்காக எதற்கும் தயாராகவே இருந்தது நைட்ரைடர்ஸ் அணி. 

டி.என்.பி.எல் தொடரில் வர்ணனையாளராக இருந்த மைக்கல் ஹஸி, "இந்த சீசனின் சிறந்த கண்டுபிடிப்பு" என அப்போதே வருணை புகழ்ந்திருந்தார். அதன்பின் விஜய் ஹசாரே கோப்பையில் ஆடுவதற்கான வாய்ப்பைப் பெற்ற வருண், அங்கும் தன் சுழல் ஜாலத்தை நிகழ்த்தினார். ஒன்பது போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி குரூப் பிரிவில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையையும் பெற்றார். அப்போது அவரது மாய பந்துவீச்சைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு வருண் சொன்ன வார்த்தைகள் : 

"அடிப்படையில் ஆர்க்கிடெக்ட்டான எனக்கு காட்சிப்படுத்துதல் மிகவும் பிடித்த ஒன்று, அதை அப்படியே கிரிக்கெட்டில் பந்து பிட்ச்சாகும் போது, பேட்ஸ்மென் பந்தை எதிர்கொள்ளும் போது என காட்சிப்படுத்திப் பார்த்ததால்தான் இத்தகைய பவுலிங் ஸ்டைல் கிடைத்திருக்கிறது. மேலும், டென்னிஸ் பாலில் கிரிக்கெட் பழகிய நான் கிரிக்கெட் பந்துக்கு மாறியபோது மிகவும் சிரமப்பட்டேன். ஆனால், டென்னிஸ் பாலில் மேற்கொண்ட பயிற்சி மூலமாகதான் இவ்வளவு வேரியேஷன்களை என்னால் கொண்டுவர முடிந்தது. முக்கியமாக சென்னையின் வலைப்பயிற்சியின் போதுதான் பேட்ஸ்மென்னை எதிர்கொள்வது, லைன் லென்த் பற்றிய புரிதல் என பலவற்றை கற்றுக் கொள்ள முடிந்தது.  கிரிக்கெட்டில் நான் மிகவும் ரசிப்பது அனில் கும்ப்ளேவின் பவுலிங்கை தான். அவரின் பவுலிங் வீடியோக்களை அடிக்கடி பார்த்து பயிற்சி செய்துக் கொண்டிருக்கிறேன்."

இத்தனைக்கும் வருண் பௌலர் மட்டுமல்ல, லோயர் அர்டரில் அடித்து விளையாடக்கூடிய பேட்ஸ்மேனும் கூட. சில போட்டிகளில் ஓப்பனராகவும் விளையாடியிருக்கிறார். அதனால், வருண் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்த எதிர்பார்ப்பு நெருக்கடியாக மாறாமல் வருண் பார்த்துக்கொள்ளவேண்டும். அதை அவர் கையாண்டால், நிச்சயம் இந்த ஐ.பி.எல் தொடரின் ஸ்டார் பிளேயராக வலம் வரலாம்!