Published:Updated:

தமிழ்ல கிரிக்கெட் கமென்ட்ரி கேட்கிறது ஒரு குத்தமாய்யா?! #IPL2018

தமிழ்ல கிரிக்கெட் கமென்ட்ரி கேட்கிறது ஒரு குத்தமாய்யா?! #IPL2018
தமிழ்ல கிரிக்கெட் கமென்ட்ரி கேட்கிறது ஒரு குத்தமாய்யா?! #IPL2018

முதலில் முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர்களை உபயோகப்படுத்தினார்கள். அவர்கள் கிரிக்கெட் விளையாட டென்னிஸ் பேட்டை எடுத்து வந்தது போல் திணறினார்கள். நல்ல கமென்ட்ரி என்பது புரோட்டாவுக்கு கிரேவி போல இருக்க வேண்டும். இவர்கள் உப்பில்லா சாம்பாரை ஊற்றினார்கள்.

கிரிக்கெட் விளையாட்டை கமென்ட்ரி இல்லாமல் பார்ப்பது என்பது வெறும் புரோட்டாவைச் சாப்பிடுவது போல. உள்ளூரில் மைதானங்களில் கிரிக்கெட் ஆடப்படும்போதுகூட, பார்த்துக்கொண்டிருக்கும் இதர வீரர்களில் யாராவது ஒருவர், 'இப்படித்தான் போன மேட்ச் ஸ்பின்னர்ஸோட ஆடும்போது இவன் சொதப்புனான். இன்னைக்கும் இப்படித்தான் விளையாடுறான்’ என்பது போல ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார். அது பார்த்துக்கொண்டிருக்கும் மற்றவர்களை பெரிதாக ரசிக்க வைக்கும். 

சர்வதேசப் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதற்கு முந்தைய போட்டி நடந்த விதம், அதில் விளையாடியவர்களின் சாதனை போன்ற தகவல்களையும், நடந்துகொண்டிருக்கும் போட்டியில் பந்து வீசப்படும் விதம், பேட்ஸ்மென் அதை ஆடும் விதம் என கிரிக்கெட் நுணுக்கங்களையும் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அது பார்வையாளர்களுக்குப் புது பரிமாணத்தைக் கொடுக்கும். ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் அடுத்த தலைமுறை கிரிக்கெட்டர்களுக்கு ஆட்டம் தொடர்பான சில திறப்புகளையும் கொடுக்கும். அதைவிட முக்கியமாக அவர்கள் சொல்லும் உவமைகள், உவமேயங்கள், சொல் வழக்குகள் எல்லாம் வாசிப்பின்பம் போல கேட்டலின்பம் கொடுப்பவை.

ஒரு முறை இங்கிலாந்தைச் சேர்ந்த வர்ணனையாளர் ஹென்ரி புளோபீல்ட், இங்கிலாந்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் மேட்ச்சில் வர்ணனை செய்து கொண்டிருந்தார். அப்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், வக்கார் யூனிஸ் பந்துவீச்சுக்குத் திணறிக்கொண்டிருந்தார்கள். ஆட்டநேரம் முடியும் தறுவாய் வேறு. அப்போது புளோபீல்ட் "சூரியன் வெகு வேகமாய் மறைந்து கொண்டிருக்கிறான். ஆனால், வக்கார் யூனிஸோ தன் வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறார். பாவம் பேட்ஸ்மென்கள்” என்றார். இதேபோல முன்னாள் இந்திய அணி கேப்டன் முகமது அசாருதீன் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட்டில் அறிமுகமாகி தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தார். நான்காவது போட்டியில் 17 ரன்களில் அவுட்டாக, அப்போது இருந்த வர்ணனையாளர், "ஓ... அசாருதீன் தனது சதத்தை 83 ரன்களில் இழந்து விட்டார்’’ என்றார். இதுபோல ஏராள வர்ணனைகள்  சர்வதேசக் கிரிக்கெட்டில் நடந்துள்ளன.

இந்தியாவில் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு இல்லாத காலங்களில் ஏபிசி எனப்படும் ஆஸ்திரேலியன் பிராட்காஸ்டிங் கார்ப்ரேஷன், பிபிசி எனப்படும் பிரிட்டிஸ் பிராட்காஸ்டிங் கார்ப்ரேஷன் ஆகியவற்றின் வானொலி வர்ணனைகள்தான் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவை நம்மை மைதானத்தில் இருப்பது போலவே உணரவைக்கும் சக்தி உடையவை. தமிழ் வர்ணனைகளில் கூட அப்துல் ஜப்பார் போன்ற ஜாம்பவான்கள் நமக்கு அந்த உணர்வை கடத்தக்கூடியவர்கள். எப்போது முழுக்கமுழுக்க கிரிக்கெட் வீரர்களே வர்ணனை செய்யும்படி மாறத்தொடங்கியதோ, அப்போதிருந்தே வர்ணனையின் தரம் குறைந்து கொண்டேதான் வருகிறது. 

அவர்கள் தங்களின் மேதா விலாசத்தைக் காட்ட குறைகூறுவதையும், சொந்த அணி அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் வர்ணனையில் கலக்க ஆரம்பித்தார்கள், இங்கிலாந்தின் ஜெஃப்ரி பாய்காட், இந்தியாவின் கவாஸ்கர், மஞ்ரேக்கர், பாகிஸ்தானின் ரமீஸ் ராஜா எனத் தங்கள் அணியை உயர்த்தி மற்ற அணிகளை எப்போதும் மட்டம் தட்டிப் பேசும் ஒரு தலைமுறை உருவானது. மற்ற நாட்டு வர்ணனையாளர்கள் கூட பரவாயில்லை. இந்திய அணி வர்ணனையாளர்கள் குறிப்பாக கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர் மும்பை அணி வீரர்களை மட்டும்தான் உயர்த்திப் பேசுவார்கள்.

இந்தச் சூழ்நிலையில்தான் தொலைக்காட்சிகளில் தமிழ் வர்ணனை ஆரம்பமானது. முதலில் முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர்களை உபயோகப்படுத்தினார்கள். அவர்கள் கிரிக்கெட் விளையாட டென்னிஸ் பேட்டை எடுத்து வந்தது போல் திணறினார்கள். அவர்களின் கமென்ட்ரியானது ஆட்டத்துடன் இணைந்து இல்லாமல், டிவி ஓசை இல்லாமல் இருப்பது போலவும், பக்கத்துக் கோயிலில் மந்திரம் சொல்லும் ஓசை கேட்பது போலவும் இருந்தது. நல்ல கமென்ட்ரி என்பது புரோட்டாவுக்கு கிரேவி போல இருக்க வேண்டும். இவர்கள் உப்பில்லா சாம்பாரை ஊற்றினார்கள்.

அடுத்த முயற்சியாக ஆர்.ஜே பாலாஜியை அழைத்து வந்தார்கள். பெயர்களை அப்போதைய டிரெண்டிற்கு ஏற்ப ஜம்பிள் செய்து சொல்வது,  ஒருவருக்குரிய தனிப்பட்ட குணாதிசயத்தை எல்லாவற்றுக்கும் பொருத்துவது, வேகமாகப் பேசுவது எனத் தனக்குரிய டெம்பிளேட்டை வைத்துக்கொண்டு ரேடியோவிலிருந்து கிரிக்கெட் வர்ணனைக்கும் வந்தார் பாலாஜி. ஆனால், கிரிக்கெட் நுணுக்கங்களைப் பேசாமல் வார்த்தை விளையாட்டுகளில் இறங்குவது, கண்டபடி கலாய்ப்பது என ஆர்.ஜே பாலாஜியின் கமென்ட்ரி களையிழந்தது. வீட்டில் உள்ள பெரியோர்கள், 'அடுத்த வருஷம் ஒழுங்காப் படிச்சு நல்ல மார்க் எடுக்காட்டி ஆர்.ஜே பாலாஜி கமென்ட்ரியை ஆறு நாள் தொடர்ந்து கேட்க வெச்சிருவேன்’ என மிரட்டும் அளவுக்கு அவரது வர்ணனை படுமோசம். 

இவர்தான் இப்படி என்றால், முன்னாள் இந்திய அணி கேப்டன், தேர்வாளர் ஸ்ரீகாந்தை அழைத்து வந்தார்கள். ஏதாவது நுணுக்கங்கள் சொல்வார், பழைய போட்டிகள் பற்றி பகிர்வார் என்று பார்த்தால், ஆர்.ஜே பாலாஜிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என யோசித்தவர்களுக்கு ஸ்ரீகாந்தின் கமென்ட்ரியைக் கேட்கச் சொல்லலாம் என்னும் அளவுக்கு இருந்தது அது. இவர் புரோட்டாவுக்கு ஊற்றியது கெட்டுப்போன சாம்பார். `அடிச்சான் பாரு, புடிச்சான் பாரு, ஜொய்ங்குன்னு போகுது, மூக்கு மேல ராஜா’ என்று எல்லாமே உளறல்கள்தாம். இதெல்லாம் வர்ணனையா?

பிட்ச் எப்படி இருக்கிறது? பந்து எப்படி ஸ்விங்/ஸ்பின் ஆகிறது எனப் பேசாமல், 'அப்படிப் போச்சு இப்படிப் போச்சு’ எனப் பொத்தாம் பொதுவாக ஒரு வர்ணனை. அதைவிட கொடுமையான ஒரு விஷயம், ஆட்டக்காரர்களை அவன் இவன் என விளிப்பது. மைக்கேல் ஹோல்டிங், இயன் சேப்பல் போன்று ஸ்ரீகாந்தை விட பல சாதனைகள் செய்தவர்களே அறிமுக வீரர்களைக் கூட ஒருமையில் பேசியதில்லை. ஸ்ரீகாந்த் வர்ணனையில் கொண்டு வந்த அவன், இவன் கலாசாரம் மிகத் தவறானது.     

ஐ.பி.எல் என்பது இந்தியாவில் இனி கிரிக்கெட் விளையாடப்படும் முறையை மாற்றிவிடக்கூடிய அளவுக்குத் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஒரு போட்டியாக இருக்கிறது. வழக்கமாக ஆடும் கிரிக்கெட் ஷாட்களை விட ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட், ஸ்கூப் என 360 டிகிரியிலும் பந்தைப் பறக்கவிட இளைய தலைமுறை முயல்கிறது. இந்தச் சூழலில் மரியாதையில்லாமல் இளம் வீரர்களை ஒருமையில் விளிப்பதும் ஒரு வழக்கமாகி விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. மேலும், சென்னை அணி விளையாடும்போது முழுக்கமுழுக்க அந்த அணியின் ஆதரவாளர் போலவே அப்பட்டமாக வர்ணனை செய்வது எல்லாம் வர்ணனையா?

தமிழ்நாட்டுக்குச் சரியான தமிழில் பேச நல்ல கமென்ட்டேட்டர்கள் தேவை. யார் நல்ல கமென்ட்டேட்டர்களாக இருப்பார்கள் என்கிற உங்கள் சாய்ஸ்கள் வரவேற்கப்படுகின்றன. அதை அப்படியே ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்குப் பரிந்துரைப்போம்!

அடுத்த கட்டுரைக்கு