Published:Updated:

நான்கு கீப்பர்கள்... மூன்று கேப்டன்கள்... ஐ.பி.எல் 2018 பெஸ்ட் லெவன்! #IPL2018

நான்கு கீப்பர்கள்... மூன்று கேப்டன்கள்... ஐ.பி.எல் 2018 பெஸ்ட் லெவன்! #IPL2018
நான்கு கீப்பர்கள்... மூன்று கேப்டன்கள்... ஐ.பி.எல் 2018 பெஸ்ட் லெவன்! #IPL2018

நான்கு கீப்பர்கள்... மூன்று கேப்டன்கள்... ஐ.பி.எல் 2018 பெஸ்ட் லெவன்! #IPL2018

ஒவ்வொரு பெரிய டோர்னமென்ட் முடிந்ததுமே எல்லோரும் செய்யும் வேலை, 'இந்த சீசனின் சிறந்த லெவன் என்ன?' என்பதைப் பற்றி விவாதிப்பதுதான். இப்போது ஐ.பி.எல் முடிந்துவிட்டது. ஐ.பி.எல் தொடரின் சிறந்த லெவனையும் தேர்வு செய்துதானே ஆகவேண்டும். இதோ விகடனின் 2018 ஐ.பி.எல் லெவன்... #IPL2018

பி.கு :     * குறைந்தபட்சம் 8 போட்டிகளிலாவது விளையாடிய வீரர்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 
               * ஐ.பி.எல் பிளேயிங் லெவன் போல் இந்த அணியிலும் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கே.எல்.ராகுல் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் இல்லை. ஒருநாள் அணியில் இடமே இல்லை. திறமை இருந்தும் அணிக்குள்வர சரியான ஓப்பனிங் இல்லாமல் திண்டாட, விக்கெட் கீப்பர் ஸ்லாட்டைக் குறிவைத்து விஜய் ஹசாரேவில் கூட கீப்பராகக் களமிறங்கினார் ராகுல். நல்லவேளை இந்த ஐ.பி.எல் சீசன் எல்லா வகையிலும் அவருக்கு மிகச்சிறந்த வாய்ப்பை வழங்கியது. பஞ்சாப் அணியின் பிரதான  ஓப்பனர் + ஒரே விக்கெட் கீப்பர். கிடைத்த அந்த வாய்ப்பை கனகச்சிதமாகப் பிடித்துக்கொண்டார். 14 போட்டிகளில் 659 ரன்கள். தொடக்கத்தில் அதிவேக அரைசதமெல்லாம் அடித்து கெய்லை விட வேகமாக ஆடிக்கொண்டிருந்தார் ராகுல். ஆனால், அணி தொடர்ந்து தோற்றுக்கொண்டிருந்தபோதும் அவர் வெளிப்படுத்திய ஆட்டம் டாப் கிளாஸ். மும்பை, ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் ஒற்றை ஆளாக கடைசிவரை போராடித் தோற்றார். இவருக்கு ஒரு பேட்ஸ்மேனாவது ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால் பட்லர் ராஜஸ்தானைக் கரைசேர்த்ததுபோல், பஞ்சாப்பை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றிருப்பார். இந்த சூப்பர் பெர்ஃபாமன்ஸ் எப்படியோ இங்கிலாந்து தொடருக்கான வாய்ப்பை பரிசாகக் கொடுத்துவிட்டது. 

சுனில் நரைன் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

5 ஆண்டுகளுக்கு முன்பு நரைன் பந்துவீச வந்தால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அள்ளு கிளம்பும். இப்போது அந்த பயம் இல்லை. இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் கொடுத்த பௌலர்கள் வரிசையில் டாப்-5 பொசிஷனில் இருக்கிறார். ஆனால், இந்த சீசனின் சிறந்த ஆல்ரவுண்டர் நிச்சயம் நரைன்தான். கடந்த சீசனில் ஓப்பனராகக் களமிறக்கப்பட்டவர், பேட்ஸ்மேனாகவே மாறிவிட்டார். 189.89 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 357 ரன்கள் எடுத்து உத்தப்பா, ரஸ்ஸல், ராணா போன்ற அந்த அணியின் பேட்ஸ்மேன்களுக்கு முன்னால் அமர்ந்திருக்கிறார். பௌலிங்கில் அந்த பழைய மாயாஜாலம் இல்லாவிட்டாலும், முக்கியமான நேரங்களில் எப்படியும் விக்கெட் எடுத்துவிடுகிறார். இந்த சீசனில் 7.65 என்ற எகானமியில் 17 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். பட்லர் இந்த இடத்துக்கான நல்ல ஆப்ஷன். ஆனால், அணியில் ஆல்ரவுண்டர் தேவை இருப்பதாலும், நரைன் அந்த இடத்தை டிக் செய்வதாலும், ஓப்பனர் ஸ்லாட் அவருக்கே..!

கேன் வில்லியம்சன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

'டேவிட் வார்னர் என்ற கேப்டனின் இடத்தை நிரப்ப முடியுமா?' 'டேவிட் வார்னர் என்ற அதிரடி பேட்ஸ்மேனின் இடத்தை நிரப்ப முடியுமா?' வில்லியம்சன் கேப்டனானதும் இத்தனை கேள்விகள். அத்தனை கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்லியாகவேண்டும். ஒரு சாதாரண வீரராக இருந்திருந்தால் அந்தக் கேள்விகளைப் பொருட்படுத்தாமல் போய்விடலாம். ஆனால், ஒரு சர்வதேச அணியின் கேப்டன், தற்போதைய காலகட்டத்தில் கிரிக்கெட்டின் டாப்-4 பேட்ஸ்மேன்களில் ஒருவர்... அவர்மீது சந்தேகம் கொள்ளும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வது அவசியம். ஆனால், வில்லி எவ்வளவு சிறப்பாகக் கூற முடியுமோ அவ்வளவு சிறப்பாகக் கூறியிருக்கிறார். அணியை முன் நின்று வழிநடத்தி இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்றுவிட்டார். தவான், மணிஷ், ஹேல்ஸ் என அனைவரும் சொதப்பியபோது தானே அந்த இடத்தில் இறங்கி அடித்து அணியை வெற்றி பெறவைத்தார். ஆரஞ்சு கேப் தாண்டி அவர் கோப்பை ஏந்தவும் தகுதியானவர்.

அம்பாதி ராயுடு - சென்னை சூப்பர் கிங்ஸ்

நரைன் ஓப்பனிங் ஸ்லாட்டை பிடித்துக்கொண்டதால், மிடில் ஆர்டர் பக்கம் ஒதுங்கியிருக்கிறார் ராயுடு. ஆனால், எல்லா இடங்களிலும் தன் திறமையை நிரூபித்துள்ள இவருக்கு பேட்டிங் பொசிஷன் ஒரு பொருட்டல்ல. நீண்ட காலமாக இந்திய அணியில் இடத்தை இழந்திருந்தவருக்கு இந்த ஐ.பி.எல் தொடர் நல்ல வாய்ப்பு. முரளி விஜய் என்ற உள்ளூர் ஃபேவரிட் இருக்கும்போது தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பில் தொடக்கத்திலிருந்தே ஜொலித்த ராயுடு, இந்த சீசனில் அடித்தது 602 ரன்கள். சன்ரைசர்ஸ் பௌலிங்கை எதிர்த்து சேஸ் செய்வது கடினம் என்று அனைவரும் நினைக்க, அந்தப் போட்டியில் ராயுடு சதமடித்தது கிளாஸ் பேட்டிங். இங்கிலாந்து தொடரிலும் சோபித்தால் உலகக் கோப்பை வாய்ப்பை நோக்கி நகரலாம். 

ரிசப் பன்ட் - டெல்லி டேர்டெவில்ஸ்

ஆரம்பத்தில் சைலன்ட்டாக இருந்த இந்த லிட்டில் டைனமோ, தொடரின் பிற்பாதியில் வெடித்துச் சிதறி சின்னாபின்னமாக்கியது. 684 ரன்கள் எடுத்து இந்த ஆரஞ்ச் கேப் வரிசையில் இரண்டாவதாக வந்திருக்கிறார் இந்த 20 வயது இளைஞர். ஒருவேளை பிளே ஆஃப் சுற்றுக்கு டெல்லி நுழைந்திருந்தால் 800 ரன்களையும் கடந்திருப்பார். கடந்த சில ஆண்டுகளாக இவர்மீது மீடியா வெளிச்சம் இருந்துகொண்டே இருக்க, சற்று தடுமாறியே வந்தார். ஆனால், இம்முறை 'தோனியின் இடத்தை நிரப்ப நான் சரியான ஆள்தான்' என்பதை நிரூபித்துள்ளார். அதுவும் டி-20 போட்டியில் 4 ஓவர்கள் முழுதாக சேர்த்தே 25 ரன்களுக்குள் கொடுக்கும் புவி ஓவரில், 5 பந்துகளில் 26 ரன்கள் எடுத்ததெல்லாம் ஏலியன் லெவல் பேட்டிங். பேட்டிங்கின்போது, இவரது பேலன்ஸ் மட்டும் கொஞ்சம் மோசமாக இருப்பதாக வர்ணனையாளர்கள் தொடர்ந்து கூறிவந்தனர். அதையெல்லாம் சரிசெய்துகொண்டால் பன்ட் ஒரு முழுமையான பேட்ஸ்மேனாக வலம் வருவார். 

மஹேந்திர சிங் தோனி - சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்த அணியில் இவர் ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்பதை விளக்கத் தேவையில்லை. யாரும் கேள்வி எழுப்பவும் போவதில்லை. வழக்கம்போல் அணி ஃபைனலுக்கு போய்விட்டது. கூலாக கோப்பையைத் தூக்கிவிட்டார். வழக்கம்போல் மின்னல் வேக ஸ்டம்பிங், ரன் அவுட்களைத் தொடர்ந்தார். ஆனால், இந்த சீசனில் தோனி பேட்டிங்கில் செய்ததுதான் மெர்சல்! பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் ஒற்றை ஆளாக வெற்றியைத் துரத்தியவர், ராயல் சேலஞ்சர்ஸை அவர்கள் சொந்த ஊரிலேயே வதம் செய்தார். 75.83 என்ற சராசரியில் 455 ரன்கள் குவித்து, 'வின்டேஜ்' தோனியை மீண்டும் ஒருமுறை தன் ரசிகர்களுக்குக் காட்டி அனைவரையும் சிலிர்க்கச் செய்துவிட்டார். இந்த சீசனின் பெஸ்ட் லெவனுக்கு கேப்டன், கீப்பர் எல்லாமே தோனிதான்.

தினேஷ் கார்த்திக் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

இந்த சீசனுக்குப் பேசாமல் 'கீப்பர்களின் சீசன்' என்று டேக்லைன் வைத்துவிடலாம். அந்த அளவுக்குக் கீப்பர்கள் பட்டையைக் கிளப்பினார்கள். இந்த அணியில் மட்டும் டி.கே-வுடன் 4 கீப்பர்கள். தினேஷ் கார்த்திக் தன் வாழ்நாளின் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். வெறும் 19 பேர் கொண்ட அணி... அதிலும் சிலர் 19 வயதுகூட ஆகாதவர்கள்... அந்த அணியை சிறப்பாக வழிநடத்தியதோடு, தானே முதல் ஆளாக முன்னின்று மிரட்டல் பெர்ஃபாமன்ஸ் கொடுத்தார். சேஸிங்கின்போது கடைசிவரை நின்று பல போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தார் டி.கே. இரண்டே அரைசதங்கள்தான். ஆனால், 498 ரன்கள். இந்த ஸ்டேட்ஸ் சொல்லிவிடும் டி.கே-வின் கன்சிஸ்டன்சியை.

ரஷீத் கான் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

'ரஷீத் வீசும் 4 ஓவர்களைத் தொடாதீங்க... மத்த பௌலர்களை வச்சி செஞ்சிடுங்க' - சி.எஸ்.கே முதல் டெல்லி வரை சன்ரைசர்ஸை எதிர்கொள்ளும் ஒவ்வொரு அணி பேட்ஸ்மேன்களுக்கும் சொல்லப்படும் முதல் அறிவுரை. இதுதான் ஒரு 19 வயது வீரனுக்கான வெற்றி. கோலி, தோனி என பெரும் தலைகளே இவரது கூக்ளிகளுக்கு ஆட்டம் கண்டதைப் பார்க்கும்போது, உலக கிரிக்கெட்டில் இந்த இளைஞன் பெறப் போகும் இடத்தை நினைத்துப் பார்ப்பதே கடினமாக இருக்கிறது. இரண்டே ஆண்டுகளில் ஐ.பி.எல் தொடரின் டாப் பௌலராகிவிட்டார் ரஷீத். 17 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாது, பேட்டிங் இறங்கியபோது சிக்சர்களால் மிரட்டி ஆல் ரவுண்டர் அந்தஸ்தையும் குறிவைத்துள்ளார். வலது கை பேட்ஸ்மேன்களை வாட்டி வதைக்கும் இவரது பந்துவீச்சு, இடது கை பேட்ஸ்மேன்களிடம் கொஞ்சம் சோடை போகிறது. அதைச் சரிசெய்துகொண்டால் விரைவில் வார்னே, முரளி வரிசையில் தனக்கென ஒரு இடம் பிடித்துவிடுவார்.

உமேஷ் யாதவ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஆர்.சி.பி-யின் இன்னொரு மோசமான சீசனின், ஒரேயொரு பாசிடிவ் உமேஷ் யாதவ். பவர்பிளே ஓவர்களில் தன் வெறித்தனமான வேரியேஷன்களால் அனைத்து பேட்ஸ்மேன்களையும் மிரட்டினார். வேகமும் துல்லியமும் கலந்த இவரது பந்துவீச்சுதான், தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துக்கொண்டிருந்த பெங்களூரு அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினார். 14 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் வீழ்த்திய உமேஷ், ஒவ்வொரு 16 பந்துகளுக்கும் ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். 'பௌலிங் சரியில்லை..பௌலிங் சரியில்லை.." என்று புலம்பிக் கொண்டிருந்த பெங்களூரு அணிக்கு வரும் சீசன்களில் உமேஷ் - சஹால் கூட்டணி மிகச்சிறந்த மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். 

ஆண்ட்ரே டை - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

பேட்டிங்கில் ராகுல் ஒன் மேன் ஷோ நடத்த, பௌலிங்கில் டை தனியாளாகப் போராடிக்கொண்டிருந்தார். 7.20 கோடி ரூபாய்க்கு அவர் ஏலம் போனபோது 'இந்தத் தொகைக்கு அவர் வொர்த்தா' என்று ஏகப்பட்ட கேள்விகள். ஆனால், 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி தன் திறமையை நிரூபித்திருக்கிறார் டை. முன்பு இவர் வீசிய நக்கில் பாலை இப்போது ஐ.பி.எல் தொடரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு பௌலருமே பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் நிலையில், அதை மட்டும் நம்பாமல், வேகம், லென்த் என ஒவ்வொன்றிலும் துல்லியமாகச் செயல்பட்டு விக்கெட் வேட்டை நடத்தினார் டை. இவர் லீக் சுற்றுடன் நடையைக் கட்டியபோதும் வேறு எவராலும் பர்ப்பிள் கேப் போட்டியில் இவரை முந்த முடியவில்லை. சென்னை வீரர் லுங்கி எங்கிடி தொடக்கத்திலிருந்து விளையாடியிருந்தால் இவருக்குக் கொஞ்சம் டஃப் கொடுத்திருப்பார். 

ஜஸ்ப்ரீத் பும்ரா - மும்பை இந்தியன்ஸ்

21 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணிக்குத் தேர்வாகியிருக்கும் சித்தார்த் கௌல்.. மிகச்சிக்கனமாகப் பந்துவீசும் புவனேஷ்வர் குமார்.. இவர்களை விடவும் இந்த சீசனில் சிறப்பாகப் பந்துவீசினார் பும்ரா. 14 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தியவர், வழக்கம்போல் டெத் ஓவர்களில் டெட்லியாகப் பந்துவீசினார். சித்தார்த் கௌல் கடைசி சில போட்டிகளில் மேட்ச் பிரஷரை சமாளிக்க முடியாமல் ரன்களை வாரி வழங்கினார். புவி, ஒருசில போட்டிகளிலேயே விளையாடியிருந்தாலும், முந்தைய சீசன்களைப் போல் விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை. சித்தார்த்தைவிட நல்ல எகானமி கொண்டிருக்கும் பும்ரா, புவியைவிட எகானமி, ஸ்ட்ரைக் ரேட் இரண்டுமே சிறப்பாக வைத்துள்ளார். 

குறிப்பிடிப்படவேண்டிய வீரர்கள் : ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்), லுங்கி எங்கிடி (சென்னை சூப்பர் கிங்ஸ்), சித்தார்த் கௌல் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), முஜீப் உர் ரஹ்மான் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்).

அடுத்த கட்டுரைக்கு