Published:Updated:

பெளலர்களே பேட்ஸ்மேன்களாக...தோனியின் மாத்தி யோசி மாஸ்டர் பிளான்! #CSKvsKXIP

பெளலர்களே பேட்ஸ்மேன்களாக...தோனியின் மாத்தி யோசி மாஸ்டர் பிளான்! #CSKvsKXIP
பெளலர்களே பேட்ஸ்மேன்களாக...தோனியின் மாத்தி யோசி மாஸ்டர் பிளான்! #CSKvsKXIP

ப்ளே ஆஃப்க்குள் தகுதிபெற வேண்டும் என்றால் சென்னையை 53 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடிக்க வேண்டும். ஆனால் பட்டையைக் கிளப்ப வேண்டிய கெய்ல் சொதப்ப, ஏற்கெனவே சொதப்பல் ஆர்டரான மிடில் ஆர்டரும் சொதப்ப சுருண்டது பஞ்சாப்.

2018 ஐ.பி.எல்-ன் உச்சகட்ட டென்ஷன் நாள் நேற்று. டெல்லியை வீழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை, டென்ஷனை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி கடைசியில் தோற்றுப்போனது. மும்பை தோற்றதால் ராஜஸ்தான் ராயல்ஸ் நான்காவது இடத்துக்கு முன்னேற, பஞ்சாப், ராஜஸ்தானை பின்னுக்குத்தள்ள வேண்டும் என்றால் சென்னையிடம் பெருவெற்றிபெறவேண்டும் என்கிற நிலை. #CSKvsKXIP

சென்னை கேப்டன் தோனியும், பஞ்சாப் கேப்டன் அஷ்வினும் டாஸ் போடும்போது கிட்டத்தட்ட மும்பை வென்றுவிடும் என்கிற நிலையில்தான் இருந்தது. டாஸ் வென்ற தோனி, ஃபீல்டிங்கைத் தேர்தெடுத்தார். கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் இரண்டு கேப்டன்களுமே ப்ளேயிங் லெவனில் என்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பதில்தான் இருந்தது. டு ப்ளெஸ்ஸியை நிச்சயம் அணிக்குள் தோனி அழைத்துவருவார் என எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே டு ப்ளெஸ்ஸி வந்தார். ஆனால், அவர் பில்லிங்ஸுக்கு பதிலாக இல்லாமல் வாட்ஸனுக்கு பதிலாக களமிறக்கப்பட்டதுதான் அதிர்ச்சி. 

அதேபோல் பஞ்சாப் கேப்டன் அஷ்வின் யுவராஜ் சிங்குக்கு பதிலாக கருண் நாயரை அணிக்குள் சேர்த்திருந்தார். முஜீபுக்கு காயம் குணமாகததால் அவருக்கு பதிலாக, முன்பு பஞ்சாப் அணியில் ரெகுலர் வீரராக இருந்த டேவிட் மில்லர் சேர்க்கப்பட்டார்.

கெய்ல் காலி!

பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் கெய்லும், ராகுலும் களம் இறங்கினர். பஞ்சாப் பேட்டிங் ஆட ஆரம்பித்த முதல் ஓவர் முடிவில்தான் மும்பையின் தோல்வி உறுதியானது. அதனால் இரண்டாவது ஓவரில் இருந்து பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடுவார்கள், ஆட்டம் அனல் பறக்கும் என கமென்ட்டேட்டர்கள் உற்சாகம் ஆனார்கள். காரணம் ப்ளே ஆஃப்க்குள் தகுதிபெற வேண்டும் என்றால் சென்னையை 53 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடிக்க வேண்டும். ஆனால், பட்டையைக் கிளப்ப வேண்டிய கெய்ல் சொதப்ப, ஏற்கெனவே சொதப்பல் ஆர்டரான மிடில் ஆர்டரும் சொதப்ப சுருண்டது பஞ்சாப்.

லுங்கி எங்கிடி வீசிய மேட்ச்சின் இரண்டாவது ஓவரிலேயே விக்கெட் விழுந்தது. கெய்ல் 2 ரன்களுக்கு அவுட். சாஹரின் மூன்றாவது ஓவரில் நான்கு ரன்களுடன் ஆரோன் ஃபின்ச் அவுட். நான்காவது ஓவரில் எங்கிடியின் பந்தை சரியாகக் கணிக்காமல் விட்ட கே.எல் ராகுலின் ஸ்டம்புக்கள் தெறித்தது. இந்த ஐபிஎல்-ன் டாப் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ராகுல் 7 ரன்களுக்கு அவுட் ஆனார். முதல் நான்கு ஓவர்களுக்குள் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பஞ்சாப்.

மில்லரும், மனோஜ் திவாரியும் பவர்ப்ளே ஓவர்களை சமாளித்து விளையாடினர். 12-வது ஓவரில் மீண்டும் சொதப்பல் ஆரம்பித்தது. ஜடேஜாவின் பந்துவீச்சில் மனோஜ் திவாரி அவுட்டாக, அடுத்த ஓவரிலேயே பிராவோவின் பந்துவீச்சில் மில்லர் கிளீன் போல்டு. போன மேட்ச்சில் பெஞ்ச்சில் உட்காரவைக்கப்பட்ட கருண் நாயர்தான் பஞ்சாபின் பேட்டிங்கைக் காப்பாற்றினார். 25 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார் கருண் நாயர். பிராவோவின் 19-வது ஓவரில் அவுட் ஆவதற்கு முந்தைய மூன்று பால்களையும், பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசினார் நாயர்.  153 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது பஞ்சாப். லுங்கி எங்கிடி நான்கு ஓவர்களில், 1 மெய்டன் ஓவர் போட்டு, 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஈஸி டார்கெட்!

சென்னைக்கு டார்கெட்டாக 154 ரன்களே கொடுத்திருந்தது பஞ்சாப். இந்த டார்க்கெட்டை 17.4 ஓவர்களுக்குள் அடித்தால் பாயின்ட்ஸ் டேபிளில் முதல் இடத்தை சென்னை பிடிக்கலாம். 100 ரன்களுக்குள் சென்னையை சுருட்டினால் பஞ்சாப் ப்ளே ஆஃப்குள் நுழையலாம் என்கிற நிலையில் சென்னை பேட்டிங்கைத் தொடங்கியது.

இதற்கு முந்தைய போட்டிகள் வரை பேட்டிங் பிட்ச்சாக இருந்த புனே பிட்ச், நேற்று இங்கிலாந்து பிட்ச் போல ஸ்விங்குகளால் தெறிக்கவிட்டது. முதல் ஆஃபில் லுங்கி எங்கிடியின் பந்துகள் ஸ்விங் ஆனதால் இரண்டு ஸ்லிப் ஃபீல்டர்களுடன் ஆரம்பித்தார் அஷ்வின்.
பந்து பயங்கரமாக ஸ்விங் ஆகும் என்பது அங்கித் ராஜ்புட்டின் முதல் ஓவரிலேய நிரூபணமானது. மேட்ச்சின் இரண்டாவது ஓவரான மோஹித் ஷர்மாவின் ஓவரில் விக்கெட். வேகமாக ஸ்விங் ஆகி வந்த பந்து அம்பதி ராயுடுவின் பேட் எட்ஜில் பட்டு கீப்பரிடம் போக 1 ரன்னில் அவுட் ஆனார் ராயுடு. அங்கித் ராஜ்புத்தின் மூன்றாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள். டு ப்ளெஸ்ஸி 14 ரன்களில் இருக்கும்போது அங்கித் ராஜ்புத்தின் ஸ்விங் பேட்டில் பட்டு ஸ்லிப்புக்குப் போக ஆச்சர்யமாக கீழே விழுந்து பிடித்தார் கெய்ல். அடுத்தப்பந்திலேயே பில்லிங்ஸ் அவுட். ஸ்விங்காகி வந்தபந்து பில்லிங்ஸின் பேட்டைக் கடந்துபோக என்ன ஆனது என்று புரியாமல் முழித்தார் பில்லிங்ஸ். ஸ்விங்கை சரியாகக் கணிக்காமல் விட்ட பில்லிங்ஸ் போல்டாகி டக் அவுட் ஆனார். 

மாத்தியோசி மாஸ்டர் பிளான்!

இங்கேதான் தோனியின் மாத்தியோசி மாஸ்டர் பிளான் ஆரம்பம். பில்லிங்ஸுக்கு அடுத்தடியாக களம் இறங்கவேண்டிய தோனி உள்ளே வரவில்லை. அவருக்கு பதிலாக பின்ச் ஹிட்டரைப் போல ஹர்பஜன் சிங்கை களத்துக்குள் இறக்கினார். இங்குதான் அனுபவம் வாய்ந்த கேப்டன் என்ன செய்வார் என்பதை மற்ற கேப்டன்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பந்து அதிகமாக ஸ்விங் ஆகிறது. பெளலர்கள் உள்ளே வந்தால் அவர்களின் விக்கெட்டை வீழ்த்துவதற்காகவே யார்க்கர், ஃபுல் லென்த் பந்துகளை வீசுவார்கள். லைன் அண்ட் லென்த்தை விட்டுவிடுவார்கள் என்கிற யோசனையுடன் தோனி ஹர்பஜன் சிங்கை களத்துக்குள் இறக்கினார்.

ஹர்பஜன் சிங்கிற்கு மூன்று ஸ்லிப் ஃபீல்டர்களை நிறுத்திவைத்தார் அஷ்வின். அங்கித் ராஜ்புத்தின் ஹாட்ரிக் பாலை சரியாகத்தடுத்து ஆடிய ஹர்பஜன் அடுத்த பாலை நேராக ஸ்லிப்புக்குக் கொடுத்தார். முதல் ஸ்லிப்பில் இருந்த கிறிஸ் கெய்ல் பிடித்திருக்கவேண்டிய கேட்சை இரண்டாவது ஸ்லிப்பில் இருந்த ஆரோன் ஃபின்ச் பாய்ந்து பிடிக்க முயன்று கேட்ச்சைவிட்டார். மேட்ச்சையும் விட்டார்.

அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரி, ராஜ்புத்தின் ஓவரில் ஒரு சிக்ஸர் என ஹர்பஜன் பஞ்சாப் பெளலர்களை டீஸ் செய்தார். 11-வது ஓவருக்கு அஷ்வின் வந்தார். அஷ்வினின் முதல் ஓவரின் முதல் பந்தில் பார்ட்னர்ஷிப் உடைந்தது. 19 ரன்களில் அவுட் ஆனார் ஹர்பஜன். 59 பந்துகளில் 96 ரன்கள் அடிக்கவேண்டும் என மேட்ச் பரபரப்பான கட்டத்தை நோக்கிப் பறந்தது. ஒரு ஓவருக்கு கிட்டத்தட்ட 10 ரன்கள் தேவை என்கிற நிலை. ஆனால், அப்போதும் தோனி அசரவில்லை. தீபக் சாஹர் பேட்ஸ்மேனாக உள்ளே வந்தார். 

ஓவர் பிரஷரில் சிதறவிட்ட அஷ்வின்!
100 ரன்களுக்குள் சென்னையை சுருட்ட வேண்டும் என்கிற பிரஷரில் ஸ்ட்ரைக் பெளலர்கள் அனைவரையும் போட்டு முடித்தார் அஷ்வின். 8 ஓவர்களுக்குள்ளேயே ராஜ்புத்தின் ஓவர்களை முடித்துவிட்டார். அதேபோல் 12-வது ஓவரிலேயே இந்த ஐபிஎல்லின் அதிகபட்ச விக்கெட் டேக்கரான ஆண்ட்ரு டையின் மூன்று ஓவர்களை முடித்துவிட்டார். ''டெத் ஓவர்களில் முக்கியமான பெளலர்கள் இருக்கமாட்டார்கள். நாம் இறங்கி அடிக்க சரியாக இருக்கும்'' என்கிற தோனியின் பிளான் சூப்பராக வொர்க் அவுட் ஆனது.

சாஹர் பெளலர்களை சாத்தி எடுத்தார். கடைசி 36 பந்துகளில் 73 ரன்கள் தேவை என்கிற நிலையில் கேப்டன் அஷ்வினின் பெளலிங். முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார் சாஹர். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் 1 பவுண்டரி அடித்து பஞ்சாப் ப்ளே ஆஃபுக்குள் நுழையமுடியாதவகையில் 100 ரன்களைக் கடந்தது சென்னை. இந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் கொடுத்தார் அஷ்வின். ஆனால், மனம் தளராத, வேறு ஆப்ஷன்கள் இல்லாத அஷ்வின் மீண்டும் 17-வது ஓவரை வீசினார். முதல் பந்திலேயே விக்கெட் விழுந்தது. 20 பந்துகளில் 39 ரன்கள் அடித்திருந்த சாஹர் அவுட் ஆனார்.  தோனி களத்துக்குள் வந்தார். 23 பந்துகளில் 40 ரன்கள் தேவை என்கிற நிலையிலும் செம கூலாக அஷ்வின் ஓவரை விளையாடியது தோனி- ரெய்னா இணை. இந்த ஓவரில் 6 ரன்கள்தான் அடித்தது சென்னை.

18 பந்துகளில் 34 ரன்கள் தேவை. தோனி காத்திருந்ததுபோலவே மோஹித் ஷர்மா ஓவர் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி உள்பட 11 ரன்கள். 19-வது ஓவர் ஆண்ட்ரு டை. 12 பந்துகளில் 23 ரன்கள் அடிக்கவேண்டும். முதல் பந்தை ஸ்டம்ப்பை நோக்கி ஸ்லோ பாலாக போட்டார் டை. ரெய்னா அதை சரியாக ரீச் செய்து சிக்ஸருக்கு அடித்தார். அடுத்த பால் இரண்டு ரன். மூன்றாவது பந்து மீண்டும் சிக்ஸர். ஷார்ட் பாலை லாங் ஆன் நோக்கி அடித்தார் ரெய்னா. நான்காவது பால் பவுண்டரி. ஐந்தாவது பந்தும் பவுண்டரி. இந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் கொடுத்து சென்னைக்கு வெற்றியை கிஃப்ட்டாக கொடுத்தார்  ஆண்ட்ரூ டை. மோஹித் ஷர்மாவின் கடைசி ஓவரின் முதல் பந்தை  சிக்ஸருக்கு அனுப்பிவைத்து ஆட்டத்தை முடித்தார் தோனி. 

பெளலர்களை பேட்ஸ்மேன்களாக களமிறக்கிய உத்தி டி-20 கிரிக்கெட்டில் புதுசு. அதுவும் தோனி, ஜடேஜா, பிராவோ என அடுத்தடுத்து மூன்று பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது தோனி இந்த மாஸ்டர் பிளானை கையில் எடுத்தார். ஹர்பஜன் சிங்கின் கேட்சை ஃபின்ச் பிடித்திருந்த்தால், சாஹர் வந்த வேகத்தில் அவுட் ஆகியிருந்தால் இந்த முடிவு 'பைத்தியக்காரத்தனம்' என கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கும். ஆனால், தோனிக்கு எல்லாமே நேற்று ஆல் இஸ் வெல்தான்! 

ஆனால், இதே மாஸ்டர் பிளானை எல்லாம் குவாலிஃபையரில் காட்டிடாதீங்க தோனி!

அடுத்த கட்டுரைக்கு