Published:Updated:

459 ரன்கள்... 67 பௌண்டரிகள்... வெறித்தன ஆட்டத்தில் கொல்கத்தா கூல் வெற்றி! #KXIPvKKR

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
459 ரன்கள்... 67 பௌண்டரிகள்... வெறித்தன ஆட்டத்தில் கொல்கத்தா கூல் வெற்றி! #KXIPvKKR
459 ரன்கள்... 67 பௌண்டரிகள்... வெறித்தன ஆட்டத்தில் கொல்கத்தா கூல் வெற்றி! #KXIPvKKR

​இந்த சீசன் முழுதும் 'இன்ஃபினிடி வார்' ஹல்க் போல் முக்கிக்கொண்டிருந்த ஆரோன் ஃபின்ச், இந்தப் போட்டியில் கொஞ்சம் அடித்து ஆடினார். குல்தீப் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள் #KXIPvKKR

இந்தூரில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் கிங்ஸ் லெவன் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். டாஸ் வென்றதும் நம்பிக்கையாக பௌலிங் தேர்வு செய்தார் அஷ்வின். டாம் கரன் நீக்கப்பட்டு ஜேவன் சியர்லஸ் சேர்க்கப்பட, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் காம்போவாகக் களமிறங்கியது நைட் ரைடர்ஸ். 'ஷார்ட் பால் போட்டாத்தான் நரைன் அவுட்டாவார்' என்பதைத் தன் பௌலர்களுக்கு சொல்லிக்கொடுத்து அழைத்துவந்திருந்தார் அஷ்வின். ஆனால், மோஹித் ஷர்மா அதைக் கொஞ்சம் மறந்து கிறிஸ் லின் பேட்டிங் செய்யும்போது ஷார்ட் பால்களாக வீச, முதல் ஓவரிலேயே தொடர்ந்து 2 பௌண்டரிகள் அடித்து அமர்க்களமாகத் தொடங்கினார் லின். மற்றொரு எண்டில் முஜீப் பந்துவீச, இருவரும் கொஞ்சம் அடக்கியே வாசித்தார்கள். 20 பந்துகளுக்கு 20 ரன்கள் என்று மெதுவாகத் தொடங்கியிருந்த ஆட்டம், 4-வது ஓவரில் மொத்தமாக மாறியது. #KXIPvKKR

நரைன் அடித்த பந்து, பௌலர் முஜீப்பின் கையத் தாக்கியதால், பாதியிலேயே வெளியேறினார் அந்த இளம் ஆப்கானிஸ்தான் வீரர். வழக்கம்போல் முந்திக்கொண்டு வந்தார் அஷ்வின். அதுவரை அமைதியாய் இருந்த நரைன் அடுத்தடுத்து சிக்ஸர், பௌண்டரி என அதிரடித்தார். அடுத்த ஓவர் ஸ்ரன்... முதல் பந்தையே ஸ்டேடியத்துக்கு வெளியே அனுப்பினார் லின். நரைனுக்கு ஸ்ரன் ஷார்ட் பால் வீச, டாப் அட்ஜாகி அதுவும் பௌண்டரி ஆனது. அந்த ஓவரில் இன்னொரு பௌண்டரி உள்பட 15 ரன்கள். 

அடுத்து பர்ப்பிள் கேப் பௌலர் டை-யை அழைத்துவந்தார் அஷ்வின். முதல் பந்தில் சிக்ஸர் அடித்தவர், அடுத்த பந்தையும் காட்டுத்தனமாகச் சுத்த, விசித்திரமான முறையில் போல்டானார் லின். அவர் சுத்தும்போது, தொடையில் பட்டு ஏறிய பந்து, கடிகாரம் போல் சுற்றிக்கொண்டிருந்த அவரது கைகளில் பட்டு ஸ்டம்புகளைப் பதம் பார்த்தது. கொல்கத்தா 53-1. ஆனாலும், அந்த ஓவரில் 12 ரன்கள். அக்சர் படேல் வீசிய அடுத்த ஓவரிலும் 12 ரன்கள். 7 ஓவர்களுக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது நைட்ரைடர்ஸ். 'நானே வர்றேன்' என மீண்டும் பந்துவீச வந்தார் ஆஷ். அவருக்காகவே காத்திருந்ததைப் போல் முதல் இரண்டு பந்துகளையும் பௌண்டரிக்குப் பறக்கவிட்டார் நரைன். அந்த ஓவரிலும் 11 ரன்கள். அக்சர் வீசிய அடுத்த ஓவரிலும் 11 ரன்கள். அவர் வீசிய ஷார்ட் பாலில், லாங் ஆன் திசையில் பௌண்டரி விளாசி 27 பந்துகளில் அரைசதம் அடித்தார் நரைன். ஐ.பி.எல் வரலாற்றில் அவரது 'ஸ்லோயஸ்ட் 50'!  அஷ்வினின் அடுத்த ஓவரை உத்தப்பாவும் வெளுத்து வாங்க 9.3 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்தது கொல்கத்தா. 

ஸ்ரன் ஓவரில் ஸ்கொயர் லெக் திசையில் ஒரு சிக்ஸர், மிட்விக்கெட் திசையில் 1 சிக்ஸர், 1 பௌண்டரி என மெர்சல் காட்டினார் நரைன். எந்த பௌலரையும் விட்டுவைக்கவே இல்லை. வேறு வழியில்லாமல் மீண்டும் டையை அழைத்தார் அஷ்வின். மொத்த டீமும் ரன்களை வாரி வழங்க, இவர் மட்டுமே அணியைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். ஒரே ஓவரில் நரைன், உத்தப்பா இருவரும் அவுட். எதிர்பார்த்ததைப் போல் ஷார்ட் பாலிலேயே வெளியேறினார் நரைன். இரு புது பேட்ஸ்மேன்கள்... ரன் ரேட் குறையும் என்று எதிர்பார்த்தால், மாறாகக் கூடியது. கார்த்திக் பௌண்டரிகளாகவும், ரஸ்ஸல் சிக்ஸர்களாகவும் டீல் செய்ய, 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது கொல்கத்தா.

தன் அணி பந்துவீசிய அழைகைப் பார்த்து கைவலியோடு மீண்டும் பந்துவீச வந்தார் முஜீப். 2 பௌண்டரி, 2 சிக்ஸர் என அந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள். மீண்டும் பெவிலியனுக்கே சென்றுவிட்டார். மீண்டும் டை... ரஸ்ஸல் (31 ரன்கள்) அவுட். அந்த ஓவரிலேயே 200 ரன்களையும் கடந்திருந்தது கே.கே.ஆர். நித்திஷ் ராணா - முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து இவரும் தன் பங்குக்கு பஞ்சாப்பைப் பஞ்சராக்கினார். இன்னொரு பௌண்டரி அடித்தவர், மோஹித் வீசிய நக்கில் பாலில் கேட்சானார். அடுத்து சுப்மான் கில்.. சந்தித்த முதல் பந்திலேயே பௌண்டரி. இப்படி பாரபட்சமில்லாமல் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் அஷ்வின் அண்ட் கோ-வை அடித்து நொறுக்கினார்கள். 19-வது ஓவரி ஐந்தாவது பந்தில் சிங்கிள் எடுத்து, இந்த சீசனில் தன் முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார் டி.கே. கடைசி ஓவரிலும் 16 ரன்கள்... 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது நைட்ரைடர்ஸ். ஐ.பி.எல் வரலாற்றின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். 

20 ஓவர்களில் 246 ரன்கள் தேவை. மிகவும் கடினம். ஆனால், களமிறங்கியிருப்பது யுனிவர்சல் பாஸ்! அவருடன் மரண ஃபார்மில் இருக்கும் கே.எல்.ராகுல். அதனால் பஞ்சாப் அணியின் நம்பிக்கை குறையவில்லை. அதற்குத் தகுந்தார்போல், நரைன் வீசிய முதல் ஓவரிலயே, ராகுல் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட 15 ரன்கள் கிடைத்தது. இரண்டாவது ஓவரை, இளம் வீரர் பிரஷித் கிருஷ்ணா சிறப்பாக வீச, 8 ரன்களே எடுத்தனர் பஞ்சாப் ஓப்பனர்கள். ஓவருக்கு ஒரு பௌண்டரி அல்லது ஒரு சிக்ஸராவது வந்துகொண்டிருக்க, 5 ஓவர்கள்ல் முடிவில் 51 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப். 6-வது ஓவரை வீசிய ரஸ்ஸல் பஞ்சாப்புக்கு டபுள் ஹார்ட் அட்டாக் கொடுத்தார். அவர் வீசிய ஷார்ட் பாலில் கெயில் எட்ஜாக, முன்பு கேட்ச் விட்டிருந்த கார்த்திக், இம்முறை பெர்ஃபெக்டாகப் பிடித்துவிட்டார். 3-வது வீரராக 'ஆல்ரவுண்டர்' அஷ்வின் களமிறங்குவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். வந்தது அகர்வால். அடுத்த பந்தும் ஷார்ட் பால்.. தேவையில்லாமல் புல் ஷாட் அடித்து அவுட்டானார் மயாங்க். 

ஆனால், ராகுல்... நிறுத்தவேயில்லை. சியர்லஸ், ரஸ்ஸல் என யார் பந்துவீசினாலும் சிக்ஸர்களாலேயே டீல் செய்துகொண்டிருந்தார். வந்ததிலிருந்து உருட்டிக்கொண்டே இருந்த கருண் நாயர், ரஸ்ஸல் ஓவரில் முதல் முறையாகத் தூக்கியடிக்க, லாங் ஆனில் நின்றிருந்த பிரஷித் கிருஷ்ணா கேட்ச் பிடித்தார். 6 பந்துகளைச் சந்தித்து வெறும் மூன்றே ரன்களில் வெளியேறினார் கருண். மீண்டும் நரைன்... மீண்டும் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார் ராகுல். அதுவரை வீசிய 11 பந்துகளில் 29 ரன்கள் கொடுத்திருந்தார் ஜீனியஸ். பேட்ஸ்மேன் நரைன் தாண்டவமாட, அமைதியாக தனக்குள் படுத்திருந்த சுழல் ஜீனியஸை திடீரென்று தட்டியெழுப்பினார். ராகுல் அவுட் (29 பந்துகளில் 66 ரன்கள்). அரௌண்ட் தி ஸ்டம்பிலிருந்து வந்து வீச, ஸ்வீப் ஆட முற்பட்ட ராகுலை ஏமாற்றி ஸ்டம்ப்பைத் தாக்கித் தகர்த்தது அந்தப் பந்து. பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பு அந்த இடத்தில் பறிபோனது. 

சியர்லஸ், நரைன் வீசிய அடுத்த இரண்டு ஓவர்களில் முறையே 8, 4 ரன்களே வந்தன. 11 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்களே எடுத்திருந்தது பஞ்சாப். ராகுல் களத்திலிருந்த வரை இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கும் பௌலிங் கொடுக்காமலேயே வைத்திருந்தார் டி.கே. நரைன் பந்தையே பறக்கவிடும்போது அவர்கள் பந்துவீச்சை..? 12-வது ஓவரில் முதல் முறையாக குல்தீப்பை அழைத்தார். ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 'நானும் ஆல்ரவுண்டர் தான்டா' என்று விளாசிக்கொண்டிருந்த அக்ஸர் படேலை கடைசிப் பந்தில் வெளியேற்றினார் குல்தீப். 

​இந்த சீசன் முழுதும் 'இன்ஃபினிடி வார்' ஹல்க் போல் முக்கிக்கொண்டிருந்த ஆரோன் ஃபின்ச், இந்தப் போட்டியில் கொஞ்சம் அடித்து ஆடினார். குல்தீப் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள், சியர்லஸ் ஓவரில் ஒரு சிக்ஸர் எனப் பறக்கவிட்டவர் 34 ரன்களில் வெளியேறினார். பேட்ஸ்மேன்களெல்லாம் வெளியேறிவிட, திடீரென்று விஸ்வரூபம் எடுத்தார் அஷ்வின். நரைன் ஓவரில் தொடர்ந்து இரண்டு பௌண்டரிகள் அடித்து அசத்தினார். ரஸ்ஸல் ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பௌண்டரி என மிரட்டினார். லேட் கட், உப்பர் கட் என பேட்ஸ்மேனாக கலக்கினார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 45 ரன்களில் பிரஷித் கிருஷ்ணா ஓவரில் வெளியேறினார். இறுதியாக பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் கே.கே.ஆர் 4-வது இடத்துக்கு முன்னேறியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு