Published:Updated:

``எங்க பிபி ஏத்துறதே உங்க வேலைடா..!” - சென்னையின் இன்னொரு டென்ஷன் மேட்ச் #CSKvsRR

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``எங்க பிபி ஏத்துறதே உங்க வேலைடா..!” - சென்னையின் இன்னொரு டென்ஷன் மேட்ச் #CSKvsRR
``எங்க பிபி ஏத்துறதே உங்க வேலைடா..!” - சென்னையின் இன்னொரு டென்ஷன் மேட்ச் #CSKvsRR

தோனி வில்லியை ஓவராக நம்பியது, பவர் ப்ளேவில் அதிக ரன்களைத் தந்தது, பட்லரின் கேட்ச்களை விட்டது என இந்தப் போட்டியில் சென்னை செய்த தவறுகள் ஏராளம்.

இந்த சீசனைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இந்தப் போட்டி குஷி படம் போலதான். ஜெயிக்கப்போவது சென்னை. ஆனால் எப்படி என்பதற்காகத்தான் பார்த்திருப்பார்கள். அவர்களுக்கு ஷாக் தந்திருக்கிறது வார்னேவிடம் பாடம் படித்த ராஜஸ்தான் ராயல்ஸ். #CSKvsRR

இந்த முறை சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள். பில்லிங்க்ஸும் கார்ன்ஷர்மாவும் மீண்டும் அணிக்குத் திரும்பினார்கள். ராஜஸ்தான் அணியிலும் இரண்டு மாற்றங்கள். ரெண்டு வருஷமா ரெண்டு டீமும் தடை செய்யப்பட்டு, இந்த சீசனில் ரெண்டாவது முறையாக மோதும்போதும் ரெண்டு மாற்றங்களுடன் ரெண்டு புள்ளிகளுக்காக மோதும் போட்டியில் டாஸ் வென்ற தோனி ராஜஸ்தானை ரெண்டாவதாக பேட்டிங் செய்யலாம் என்றார். சென்னையை விட ராஜஸ்தானுக்குத்தான் அந்த ரெண்டு புள்ளிகள் முக்கியமானவை. 

ராஜஸ்தானின் சக்ஸஸ்ஃபுல் ஸ்பின்னரான கெளதம் வீசிய முதல் ஓவரில் கொஞ்சம் கஷ்டமான கேட்ச் ஒன்றைத் தந்தார் ராயுடு. ம்ஹூம். பிடிக்கவில்லை ராஜஸ்தான். ஆனால் மூன்றாவது ஓவர் வீச வந்த ஆர்ச்சர் போட்ட பிள்ளையார் சுழியே ராயுடு விக்கெட்தான். கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆன பந்தை இன்சைடு எட்ஜ் ஆக்கி போல்ட் ஆனார் ராயுடு. அடுத்து வந்தவர் ரெய்னா. இந்த சீசனில் பெரிதாக ஷைன் ஆகாத ரெய்னாவிடம்``எதையாவது மாத்தியே ஆகணும்” எனச் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் குழந்தை முகத்தில் குறுந்தாடியுடன் வந்தார் சின்னத்தல. ஆனால், தமிழகத்தை தாடி எப்போது ஏமாற்றியிருக்கிறது? தொட்டதெலாம் ரன்தான். அதுவும் நோபால் போட்டு ஆரம்பித்து வைத்தார் ஆர்ச்சர். ஃப்ரீ ஹிட்டில் வைடு போட, ``இதெல்லாம் வைடா? ஃபிக்ஸிங்” என அலற ஆரம்பித்தது சமூக வலைதளம்.

ஆர்ச்சரைப் போலவே பிள்ளையார் சுழி போட நினைத்தார் உனட்கட். ஆனால், அது வைடானது. அந்த ஓவரில் லாங் ஆஃபுக்கு போன பந்தை விரட்டிச் சென்று விழுந்து விழுந்து தடுத்து நிறுத்தினார் ஸ்டோக்ஸ். மழை பெய்தால் சூப்பர் ஸாப்பர் பதிலாக ஸ்டோக்ஸை பயன்படுத்தலாம். அப்படி ஒரு பெருக்கு பெருக்கி ஒரு பவுண்டரியைத் தடுத்தார். அதனால் பவர் ப்ளேயில் 56 ஆக வேண்டிய சென்னையின் ஸ்கோர் 55 ஆனதுதான் மிச்சம்.

அதன் பின் மந்தமானது சென்னை அணி. ``மெதுமெதுவாய் உனை இழந்தேனே… இழந்ததில் புது சுகம் உணர்ந்தேனே” என ரன்ரேட்டைப் பார்த்து பாடியது வாட்ஸன் - ரெய்னா ஜோடி. ஒரு வழியாக கிடைத்த லூஸ் பால்களை பார்சல் செய்து, 50 ரன் பார்னர்ஷிப்பைப் கடந்து 11வது ஓவரில் சதமடித்தார்கள். அடுத்த ஓவர் ஆர்ச்சர் வீச, பொறுமையிழந்தார் வாட்ஸன். முதல் ஷாட் கீப்பர் தலைக்கு மேல் 4 போனது. ஆனால், அடுத்த பந்து கீப்பர் கையிலே தஞ்சமடைந்தது. “ஃபேன்டஸி டீம்ல எடுத்தவங்களுக்குப் போதுமான பாயின்ட் கொடுத்துட்டேன்ல” என்பது போல நடையைக் கட்டினார் வாட்ஸன். அடுத்த ஓவரிலே ``நீ முன்னால போனா நான் பின்னால வாறேன்” எனப் பாடிக்கொண்டே பெவிலியன் திரும்பினார் ரெய்னா. 

பில்லிங்க்ஸுடன் ஜோடி சேர்ந்த தோனி கடற்கரையில் கிளிஞ்சல்கள் பொறுக்கும் சிறுவனைப் போல ஒரு ஒரு ரன்னாகச் சேர்த்தார். பில்லிங்க்ஸ் விளாசினார். ஆனால், அவருக்கும் கிளிஞ்சல்தான் கிடைத்தது என்பதுதான் சோகம். 18 ஓவரில் 153 ரன்களைச் சேர்த்தது இந்த இந்திய - இங்கிலாந்து இணை. 

19வது ஓவர் பஞ்சா பறக்கும் எனக் காத்திருந்தனர் சென்னை ரசிகர்கள். ஆனால், 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற ரேஞ்சிலியே விளையாடியது தோனிங்க்ஸ் ஜோடி. தெரியாத்தனமாக கால் சந்தில் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்தார் தோனி. பிராவோவும் வில்லியும் நரம்புப் புடைக்க டக்கவுட்டில் காத்திருந்தது தனிக்கதை. 

20வது ஓவரில் அடித்தே ஆக வேண்டும். ஏனெனில் 21வது ஓவர் போடுவதாக இல்லை ராஜஸ்தான். அதனால், வேறு வழியில்லாமல் ரெண்டு பவுண்டரிகள் அடித்தார் பில்லிங்க்ஸ். ``சிக்ஸ் எங்கடா” என சிங்கம்புலி கணக்காகக் கதறிய சென்னை ரசிகர்களுக்குக் கடைசிவரை அந்த அப்பளம் கிடைக்கவேயில்லை. கடைசிப் பந்து. களத்தில் தோனி. அப்புறம் என்ன என்கிறீர்களா? அவ்வளவுதான். கிளிஞ்சல். ஒரே ஒரு ரன்.

“We are short of 15 runs “ என மேட்ச் முடிந்ததும் சொல்வதற்கேற்ற ரன்கள். 176.

ராஜஸ்தான் இன்னிங்க்ஸை மூன்று பவுண்டரிகளுடன் தொடங்கினார் பட்லர். எதுவுமே பெரிய ஹிட் இல்லை. கிடைக்கிற சந்தில்தான் சிந்து பாடினார். எல்லோரையும் ஆஃப் சைடில் நிற்க வைத்தால் ரிவர்ஸ் ஸ்வீவ் ஆடுவது, எட்ஜ் ஆகி பவுண்டரி போவது என பட்லர் தோனியை ரொம்பவே டென்ஷன் ஆக்கினார். எதிர்முனையில் ஸ்டோக்ஸும் ரஹானேவும் அவர்களது லிமிட் ஆன சிங்கிள் டிஜிட் ரன் எடுத்ததும் அவுட் ஆகிக்கொண்டிருந்தனர். ஆனால், ``அந்தச் சாவல்களுக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லை” என்ற ரீதியில் பொளந்து கொண்டிருந்தார் பட்லர். 10 ஓவரில் சென்னை எவ்வளவு எடுத்திருந்ததோ (90) அந்த இடத்துக்கு ராஜஸ்தானைக் கட்டி இழுத்து வந்திருந்தார். ஆனால், கூட நிதானமாக ஆடிய சாம்சனை 12வது ஓவரில் ரன் அவுட் ஆக்கிவிட்டார் பட்லர். சென்னைக்கு பட்லர் காட்டிய ஒரே ஒரு கரிசனப் பார்வை அதுதான்.

அதன்பின் வந்த புதுப்பையன் சோப்ரா இரண்டாவது பந்தையே பவுண்டரி ஆக்கினார். அடுத்தும் இன்னொரு 4 அடித்துவிட்டு “இவ்ளோ தக்கையா இருக்கே” என்பது போல பார்க்க, அடுத்த பந்திலே அவரை அவுட் ஆக்கி வெயிட் காட்டினார் தாக்கூர். சென்னை அணியில் தோனி சொன்னதை ஓரளவுக்குக் கேட்டு போட்டது அவர்தான். அதனாலோ என்னவோ, விக்கெட் விழுந்த கேப்பில் தாக்கூரின் தோளில் கைப்போட்டு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார் தோனி. இந்த சீசன் முழுவதுமே ஓவர் அட்வைஸா இருக்கே தல? வயசாயிடுச்சோ?

16வது ஓவரைத்தான் வாட்ஸனுக்கு தந்தார் தோனி. அந்த ஓவரில் கைக்கு ஒரு கேட்ச் தந்தார் பட்லர். ஆனால், ``வெள்ளையா இருக்கிறவன் கேட்ச் பிடிக்க மாட்டான்” என்பது போல அதைத் தவறவிட்டார் வாட்ஸன். பிடித்திருந்தால் ``நயி சோச் அவார்டு”, ``ஸ்டைலிஷ் அவார்டு”, ``இதுக்கு பேரில்லை அவார்டு” என ஏதாவது ஒன்று கிடைத்திருக்கும்.

அடுத்த ஓவர் வில்லி. ``ஒத்த டிஜிட்லாம் ஆகாதுப்பா” என்பது போலவே வீசினார். அடுத்த ஓவர் வீசிய பிராவோவின் பந்தை லாங் ஆனில் லாங் சிக்ஸ் ஆக்கினார் பின்னி. 4,6 போகும்போதெல்லாம் கேமராமேன் தோனி பக்கம் திரும்பிவிடுவார். அய்யனார் சிலை போல ஆடாமல் நிற்பார் தோனி. அவரை அசைத்தே ஆக வேண்டிய கட்டாயம் பிராவோவுக்கு. கைகளை எப்படியோ சுழற்றி போட்ட பந்தை பின்னி மேலே தூக்க மிஸ் செய்யாமல் பிடித்துவிட்டார் வாட்ஸன். லேசாக அசைந்தார் தோனி. பட்லரை அவுட் ஆக்கினால்தான் அவரை நன்றாக அசைக்க முடியுமென்பது சென்னை பவுலர்களுக்கு நன்றாகத் தெரிந்தது. ஆனால், எப்படி அவுட் ஆக்குவது என்பதுதான் தெரியவில்லை. ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்வீப் என ஸ்டம்புக்குப் பின்னால்தான் பெரும்பாலான ரன்களை எடுத்தார் பட்லர். அப்படி அடித்த ஒரு பந்து தோனி கிளவுஸ் வரை சென்றது. ஆனால் கேட்ச் ஆகவில்லை. `ஒருத்தனுக்கு நேரம் நல்லா இருந்தா பந்து தோனி கைக்குப் போனா கூட மிஸ் ஆகும்’ என்பார்களே. அந்த நல்ல நேரம் நேற்று பட்லருக்கு.

இந்த வில்லி மீது தோனிக்கு அப்படி என்ன நம்பிக்கை எனத் தெரியவில்லை. அவ்வளவு ரன் கொடுத்தும் அவரிடமே 19வது ஓவரைத் தந்தார். களத்துக்கு வந்த கெளதம் முதல் பாலையே சிக்ஸ் ஆக்கினார். ஐந்தாவது பந்தில் இன்னொரு சிக்ஸ். அந்த ஓவர் முடிவில் ராஜஸ்தானுக்கு 12 ரன் தேவைப்பட்டது. கடைசி ஓவர் பிராவோ. ``எங்க பிபி ஏத்துறதே உங்க வேலைடா” எனக் கொதித்தனர் சென்னை ரசிகர்கள்.

முதல் பாலே ஸ்லோ பால். பந்து பட்லரை அடைய பத்து நிமிடம் ஆனது. ஆனாலும் அவரால் தொடமுடியவில்லை. அடுத்து 2 ரன்கள். அடுத்த பாலும் ஸ்லோ. எட்ஜ் ஆகி ராக்கெட் விட்டார் பட்லர். ஆனால், பிடிக்க யாரும் வரவில்லை. பட்லரும் ரன் ஓடவில்லை. சென்னையின் மிகப்பெரிய தவறு அது. அடுத்த பந்தை மிட் விக்கெட்டில் சிக்ஸர் ஆக்கினார் பட்லர். அடுத்த பந்து சிங்கிள் ஆக வேண்டியது. ஆகியிருந்தால் டை. ஆனால், ஸ்டம்ப்பை அடிக்கிறேன் என வாட்ஸன் செய்த அடுத்த தவறால் ஓவர் த்ரோ ஆனது. அந்தப் பந்திலே மேட்ச்சை முடித்தார் பட்லர்.

பாயின்ட் டேபிளில் எந்த மாற்றமுமில்லை. ஆனால், இப்போது ப்ளே ஆஃப்க்கு எந்த டீம் போகும் என்பதில் எக்ஸ்டிரா குழப்பம். இந்த வெற்றியால் ராஜஸ்தானுக்கும் இப்போது வாய்ப்பு அதிகரித்திருக்கிறது

தோனி வில்லியை ஓவராக நம்பியது, பவர் ப்ளேவில் அதிக ரன்களைத் தந்தது, பட்லரின் கேட்ச்களை விட்டது என இந்தப் போட்டியில் சென்னை செய்த தவறுகள் ஏராளம். போட்டி முடிந்ததும் பேசிய தோனி ``இந்த ரன் நல்ல ரன்தான். பிரச்னை பவுலர்களிடம்தான்” என்றார். உண்மைதான். ஆனால், அவர்களும்தான் சென்னை சூப்பர் கிங்ஸ். அவர்களை சரி செய்யாமல் சாம்பியன் ஆவது சாதாரண விஷயமில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு