Published:Updated:

'பேட்டிங் எதுக்கு... பௌலிங் இருக்கு...!' பெங்களூருவைப் பந்தாடிய சன்ரைசர்ஸ் #SRHvRCB

'பேட்டிங் எதுக்கு... பௌலிங் இருக்கு...!' பெங்களூருவைப்  பந்தாடிய சன்ரைசர்ஸ் #SRHvRCB
News
'பேட்டிங் எதுக்கு... பௌலிங் இருக்கு...!' பெங்களூருவைப் பந்தாடிய சன்ரைசர்ஸ் #SRHvRCB

'பேட்டிங் எதுக்கு... பௌலிங் இருக்கு...!' பெங்களூருவைப் பந்தாடிய சன்ரைசர்ஸ் #SRHvRCB

'இந்த சீசனின் சிறந்த பௌலிங் யூனிட்' என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது சன்ரைசர்ஸ். 146 ரன்களே எடுத்திருந்த போதும், ஸ்பின், வேகம் என்று கலந்துகட்டி அடித்து ஆர்.சி.பி-யை 5 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று தோற்கடித்தது. இத்தனை நாள்கள் பௌலிங்கைக் காரணம் காட்டித் தப்பித்துக்கொண்டிருந்த பெங்களூரு அணி நேற்று பேட்டிங்கில் சொதப்ப, பிளே ஆஃப் வாய்ப்பு அவர்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டது. 

ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தார் விராட் கோலி. மொயீன் அலி முதல் வாய்ப்பு பெற்றார். கடந்த 8 ஆண்டுகளில் 'balanced' பெங்களூரு பிளேயிங் லெவன் நிச்சயம் இதுதான். ஐ.பி.எல் அனுபவம் கொண்ட ஓப்பனர்கள், உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்கள், ஃபார்மில் இருக்கும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், இரண்டு ஆல்ரவுண்டர்கள், சர்வதேச அனுபவம் கொண்ட 4 பௌலர்கள்... கண்டிப்பாக இதுதான் பெங்களூரு அணியின் சிறந்த லெவன். இத்தனை நாள்கள் ஸ்டார் பெயர்களைப் பிடித்துக்கொண்டிருந்த கோலி, நேற்று டீம் செலக்ஷனில் சரியான முடிவு எடுத்திருந்தார். ஆனால், சன்ரைசர்ஸ் அணிக்கெதிராக பௌலிங் தேர்வு செய்தது..?

இதற்குமுன் 3 போட்டிகளில் சன்ரைசர்ஸ் இரண்டாவதாக பௌலிங் செய்திருந்தது. அந்தப் போட்டிகளில் எதிரணிகள் எடுத்த ஸ்கோர்கள் - 87, 119, 140! பேட்டிங்குக்குச் சாதகமான மும்பை, ஜெய்ப்பூர் மைதானங்களிலும் மிகச்சிறப்பாக தங்களின் சுமாரான ஸ்கோரை டிஃபண்ட் செய்தனர் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள். அப்படிப்பட்ட பௌலிங்குக்கு எதிராக சேஸிங் தேர்வு செய்தார் கோலி! அந்த முடிவு இந்தப் போட்டியின் வெற்றியை அப்போதே அவர்கள் கைகளில் இருந்து பறித்துவிட்டது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெங்களூரு அணியின் பந்துவீச்சை அனைவருமே கேலி செய்கிறார்கள். ஆனால், சன்ரைசர்ஸ் அணிக்குப் பிறகு அதிக ஆப்ஷன்களும், பேலன்ஸும் கொண்ட ஒரு பௌலிங் யூனிட் பெங்களூருதான். ஆனால், இத்தனை நாள்கள் அவர்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. நேற்று அதையும் மாற்றினார் விராட். பந்துவீச்சாளர்களை இந்தப் போட்டியில் சரியாகப் பயன்படுத்தினார். ஷிகர் தவான், அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி ஆட்டத்தைப் பொறுமையாகவே தொடங்கியது. மொயீன் அலி வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள். உமேஷ் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் இருவரும் தங்கள் பங்குக்கு ஒரு பௌண்டரி அடித்தனர். ஆனால், வழக்கம்போல் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சீக்கிரம் பிரிந்தது. மூன்றாவது ஓவரில், டிம் சௌத்தி வீசிய அற்புதமான 'கிராஸ் சீம்' பந்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார் ஹேல்ஸ். 

சன்ரைசர்ஸ் அணிக்காக எல்லா மேட்சும் அடிக்கும் ஒரே பேட்ஸ்மேனான வில்லியம்சன் களமிறங்கினார். முதல் பந்திலேயே பௌண்டரி அடித்து அமர்க்களமாக இன்னிங்ஸைத் தொடங்கினார். ஆனால், பெங்களூரு பௌலர்கள் நன்றாகப் பந்துவீசியதால் ஸ்கோர் மெதுவாகவே நகர்ந்தது. கையில் காயம் ஏற்பட்ட பிறகு தொடர்ந்து சொதப்பிவரும் தவான், நேற்றும் விரைவில் நடையைக் கட்டினார். முகம்மது சிராஜ் வீசிய ஷார்ட் பாலைத் தூக்கியடிக்க, பவுண்டரி எல்லையில் இருந்த சௌத்தியிடம் கேட்ச்சாகி (19 பந்துகளில் 13 ரன்கள்) வெளியேறினார். பவர்பிளே முடிவில் சன்ரைசர்ஸ் இரண்டு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது.

அடுத்து வில்லியம்சன், மணிஷ் இணையை சஹால், மொயீன் அலி ஸ்பின் கூட்டணியை வைத்து சைலன்ட் மோடில் வைத்திருந்தார் விராட். 11 கோடி ரூபாய்க்குக் கொஞ்சமும் வலுசேர்க்காத மணிஷ் பாண்டே நேற்றும் தடுமாறினார். அந்த இடத்தில் கோலியும் மிகவும் சிறப்பான ஒரு முடிவை எடுத்து, ஷார்ட் கவர் பொசிஷனில் தானே நின்றார். சஹால் நன்கு ஃப்ளோட் செய்த பந்தை பொறுமையாக நெட் பிராக்டீஸில் ஆடுவது போல் அடித்து அவுட்டானார் மணிஷ். அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கே.எல்.ராகுல் என இந்திய வீரர்களெல்லாம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும்போது, இவர் இப்படிச் சொதப்பினால் 2019 உலகக்கோப்பையை டி.வி-யில்தான் பார்க்க வேண்டியிருக்கும்!

48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், ஷகிப் அல் ஹசன் பொறுப்பாக விளையாடினார். சிங்கிள் எடுத்து கேப்டன் வில்லியம்சனுக்கு ஸ்டிரைக் ரொடேட் செய்து கொடுத்தவர், மோசமான பந்துகளில் பவுண்டரிகள் அடிக்கவும் தவறவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்து சிறந்தவொரு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஓவருக்கு 7, 8 , 4 என ரன்கள் மெதுவாகவே வந்தது. உமேஷ் யாதவ் வீசிய 14-வது ஓவரில்தான் ரன்ரேட்டை விரட்டினார் வில்லி. அவர் 1 பௌண்டரி, 1 சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. உமேஷை வெளுத்த கையோடு சஹால் ஓவரில் மிட்விக்கெட் திசையில் ஒரு மிரட்டல் சிக்ஸர் விளாசினார் சன்ரைசர்ஸ் கேப்டன். அடுத்த பந்தில் சிங்கிள் தட்டி, இந்த சீசனில் தன் ஐந்தாவது அரைசதத்தை நிறைவுசெய்தார். 

ஆனால், அவரால் நீண்ட நேரம் நிலைத்து நிற்க முடியவில்லை. உமேஷ் யாதவ் பந்தை, சிக்ஸர் அடிக்க நினைத்து அவர் தூக்க, சரியாகப் படாத பந்து மந்தீப் கையில் விழுந்தது. 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து வெளியேறினார் வில்லியம்சன். மிகவும் மெதுவான இந்த ஆடுகளத்தில் இவர் அடித்த இந்த 54 ரன்கள் வான்கடே, சின்னசாமி போன்ற மைதானங்களில் சதம் அடிப்பதற்குச் சமம். அதனால்தான், பௌலர்கள் சிறப்பாகப் பந்துவீசியிருந்தும் இவர் ஆட்டநாயகன் விருது பெற்றார். 

அடுத்து சிராஜ் ஓவரில் 2 பௌண்டரிகள் அடித்து ஷகிப், சௌத்தி பந்தில் அவுட்டாக (32 பந்துகளில் 35 ரன்கள்), சௌத்தி பந்தில் 2 பௌண்டரிகள் அடித்த யூசுஃப் பதான் (7 பந்துகளில் 12 ரன்கள்), சிராஜ் பந்தில் ஸ்டம்புகள் பல்டியடிக்க வெளியேறினார். 19-வது ஓவரில், 146 கிலோமீட்டர் வேகத்தில் சிராஜ் வீசிய சூப்பர் பாலில் போல்டாகி வெளியேறினார் சஹா. முகம்மது சிராஜ் - இந்த சீசனில் மிகச்சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளார். பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப யோசித்துப் பந்துவீசுகிறார். வேரியஷன்களால் மிரட்டுகிறார். தவானுக்கு ஃபுல் லென்த், யார்க்கர் என்று வீசிவிட்டு உடனடியாக ஷார்ட் போல் போட்டு அவரை வெளியேற்றினார். கடைசி ஓவரில் அவர் எடுத்த இரண்டு விக்கெட்டுகளுமே வேற லெவல் பால்கள். அவ்வப்போது சில மோசமான பந்துகள் வீசுவதைத் தவிர்த்தால், இந்திய அணியில் மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு. 

கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த சன்ரைசர்ஸ், 3 விக்கெட்டுகளையும் இழக்க, 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமானதாக இருந்தாலும், பெங்களூரு அணியின் பந்துவீச்சு நன்றாகவே இருந்தது. முந்தைய போட்டிகளை ஒப்பிடும்போது இது மிகச்சிறந்த முன்னேற்றம். 147 ரன்களை சேஸ் செய்ய பார்த்தி - வோரா கூட்டணி களமிறங்கியது. புவனேஷ்வர் குமார் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகள் அடித்து இன்னிங்ஸை அமர்க்களமாகத் தொடங்கினார் பார்த்திவ். ஷகிப் அல் ஹசன் ஓவரிலும் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்தவர், ஸ்வீப் ஷார் ஆட முயற்சி செய்து எல்.பி.டபிள்யூ ஆனார். 

அடுத்துக் களமிறங்கிய கோலி, ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆட முனைப்பு காட்டினார். புவி ஓவரில், தன் டிரேட் மார்க் கவர் டிரைவில் அவர் பவுண்டரி அடிக்க, 'ஆர்.சி.பி....ஆர்.சி.பி' என்று ஹைதரபாத் மைதானம் அலறியது. சொல்லப்போனால் இந்த சீசனில், அந்த மைதானத்துக்கு நேற்றுத்தான் அதிக பார்வையாளர்கள் வந்திருந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் இந்த ரன் மெஷின் விளையாடும் அழகை ரசிக்கத்தான். அந்த ஒரு கவர் டிரைவ் அவர்கள் டிக்கெட்டின் விலையை ஈடுகட்டியிருக்கும். விராட் - எ பியூட்டி டு வாட்ச்!

ரஷித் கான் என்னும் ஏலியன் பந்துவீச வந்துவிட்டால், சேஸ் செய்வது கடினம் என்பதால், மற்ற பௌலர்களை டார்கெட் செய்வது என்ற திட்டத்தோடு களமிறகியிருந்தது ஆர்.சி.பி. அதிலும், வழக்கமாக நிதானமாகவே இன்னிங்ஸை நிலைநிறுத்தும் கோலி, நேற்று சரவெடியாய் வெடித்தார். ஷகிப் வீசிய 5-வது ஓவரில் 15 ரன்கள் விளாசினார். முதல் இரண்டு பந்துகளும் டாட் பாலாக, மூன்றாவது பந்தை புல் ஷாட் மூலம் மிட்விக்கெட் பௌண்டரிக்கு அனுப்பினார் கோலி. அடுத்த பந்து... அரௌண்ட் தி ஸ்டம்பிலிருந்து விக்கெட்டுக்கு நேராக வீசுகிறார் ஷகிப்... இறங்கி வந்து லாங்-ஆன் திசையில் பறக்கவிட்டார் விராட். அடுத்த பந்து.. லேட் கட்.. தேர்ட் மேன் திசையில் பௌண்டரி. சேஸ் மாஸ்டர் ஆன் ஃபயர்!

கோலியின் அதிரடியை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மனன் வோரா, சந்தீப் ஷர்மா ஓவரில் தானும் அடித்து ஆட ஆசைப்பட்டு வேடிக்கையான முறையில் போல்டானார். அடுத்து களமிறங்கினார் டி வில்லியர்ஸ். ஏ.பி - வி.கே பார்ட்னர்ஷிப். 'ரெண்டு பேரும் அடிச்சுப் பார்த்து எத்தனை நாளாச்சு'... அந்த கிரிக்கெட் கொண்டாட்டத்தைப் பார்க்க வேண்டும் என்று ஏங்கியது ஹைதராபாத். ஆனால், அது இந்தப் போட்டியிலும் நடக்கவில்லை. கோலியின் பிளானே அவருக்கு ஆப்பு வைத்தது. ரஷித் கான் ஓவர்களில் அவர் ரொம்பவுமே அடக்கி வாசித்தார். அவரது முதல் இரு ஓவர்களில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே. அதுவும் வில்லியம்சன் கேட்ச் விட்டதால் போன பவுண்டரி. அந்த அளவுக்குக் கோலி மிகவும் எச்சரிக்கையாக விளையாடினார்.

ரஷீத் ஓவரில் ரன்கள் குறைந்ததால், முன்பைப் போல் ஷகிப் ஓவரை டார்கெட் செய்தார் விராட். அந்த அவசரம் அவரது விக்கெட்டைக் காவு வாங்கியது. யுசுஃப் பதான் பிடித்த சூப்பர் கேட்ச்சில் 39 ரன்களில் (30 பந்துகள்) வெளியேறினார் கோலி. சேஸ் கிங் வெளியேறியாச்சு... 10 ஓவர்களில் 72 ரன்கள் தேவை. ஹைதராபாத்தின் இரவு வானத்தில் சூரியன் மெல்ல உதித்தது. ரசீத் வீசிய 11-வது ஓவரில் டி வில்லியர்ஸ் போல்டு. சித்தார்த் கௌல் வீசிய அடுத்த ஓவரில் மொயீன் அலி அவுட். ஆர்.சி.பி மெல்ல தோல்வியை நோக்கிப் பயணித்தது. 

ஆனால், மந்தீப் சிங் - கிராந்தோம் கூட்டணி சூழ்நிலை உணர்ந்து விளையாடியது. தேவையில்லாத ஷாட்கள் அடிப்பதை இருவருமே தவிர்த்தனர். அதேநேரம் சன்ரைசர்ஸ் பந்துவீச்சு வேற லெவலில் இருந்தது. 'ஸ்டம்ப் டு ஸ்டம்ப்' பந்துவீசி மிரட்டியது சந்தீப் - சித்தார்த் கூட்டணி. 19 பந்துகளில் பவுண்டரியே இல்லை. தேவையான ரன்ரேட் அதிகமாகிக்கொண்டே இருந்தது. 4 ஓவர்களில் 39 ரன்கள் தேவை. ரஷீத் கான்... எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும், 'இந்த ஓவர் தாக்குபிடிச்சிட்டு அடுத்த ஓவர் அடிச்சிடலாம்' என்றுதான் நினைத்திருப்பார்கள். ஆனால், கிராந்தோம் வேறு மாதிரி யோசித்தார். ரஷீத் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள். 18 பந்துகளுக்கு 25 ரன்கள். ஆர்.சி.பி டக் அவுட்டில் புன்னகை பூத்தது. 

ஆனால், அடுத்த ஓவரை வீச வந்தது புவி. 18-வது ஓவரில் 3 டாட் பால்கள்..! வெறும் ஆறே ரன்கள். 2 ஓவர்களில் 19 ரன்கள் தேவை. சித்தார்த் கௌல்...ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு ரகம். ஆனால், ஒவ்வொன்றும் அற்புதமாக வீசப்பட்டன. 5 சிங்கிள், 1 டபுள். வெறும் 7 ரன்களே கொடுத்தார் கௌல். இன்னும் 6 பந்துகளில் 12 ரன்கள். டி-20யைப் பொறுத்தவரை எளிதான இலக்கு. ஆனால், பந்துவீசப்போவது புவனேஷ்வர் என்னும் டெத் ஓவர் அரக்கன்! முதல் ஐந்து பந்துகளில் 6 ரன்கள்... ஒரு பந்துக்கு 6 ரன் தேவை... கிராந்தோமின் கண்கள்... மந்தீப்பின் கண்கள்... கோலியின் கண்கள்... பெங்களூரு வீரர்களின், ரசிகர்களின் கண்கள்... எல்லாம் பவுண்டரி எல்லைகளை நோக்குகின்றன. ஆனால், புவியின் பார்வை ஸ்டம்புகளைத் தாண்டிச் செல்லவேயில்லை. கண்கள் வைத்த குறியை கைகள் சரியாகத் தகர்க்க, கிராந்தோம் போல்ட்... சன்ரைசர்ஸ் வெற்றி..! 

முந்தைய போட்டிகளைப் போல் இது பெங்களூருக்கு மோசமான போட்டி என்று சொல்லிட முடியாது. இந்த மைதானத்தில், இந்த அணிக்கு எதிராக இது 'டீசன்ட்' பெர்ஃபாமென்ஸ்தான். இனி அவர்கள் பிளே ஆஃப் செல்லவேண்டுமானால், எஞ்சியிருக்கும் 4 போட்டிகளிலும் வெற்றிபெறவேண்டும். அதற்காக வழக்கம்போல் கோலி பிளேயிங் லெவனை மாற்றிக்கொண்டே இருக்கக்கூடாது. இந்தப் போட்டியில் தோற்றிருந்தாலும், இது நல்ல அணி. இதைத் தொடர்ந்தால்தான் அந்த அணியின் பலம் முழுமையாக வெளிப்படும்.