Published:Updated:

கேப்டன் பதவியிலிருந்து இப்படிப் பாதியிலேயே விலகுவது சரியா கம்பீர்?!

11 மணி நேரம் ஆடி 436 பந்துகளைச் சந்தித்து இந்திய டெஸ்ட் வரலாற்றில் ஒரு மிக நீண்ட போராட்டமான இன்னிங்ஸை ஆடிய கௌதம் கம்பீர்தான். இன்று என்னால் இக்கட்டான சூழலில் போராட முடியவில்லை. நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என்கிறார்

கேப்டன் பதவியிலிருந்து இப்படிப் பாதியிலேயே விலகுவது சரியா கம்பீர்?!
கேப்டன் பதவியிலிருந்து இப்படிப் பாதியிலேயே விலகுவது சரியா கம்பீர்?!

2009-ம் ஆண்டு நியூஸிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரின் 2-வது ஆட்டம் அது. இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் தோல்வியைத் தவிர்ப்பதற்காக ஃபாலோ ஆன் ஆடுகிறது. அன்று 11 மணி நேரம் ஆடி 436 பந்துகளைச் சந்தித்து இந்திய டெஸ்ட் வரலாற்றில் மிக நீண்ட போராட்டமான இன்னிங்ஸை ஆடிய கெளதம் கம்பீர்தான், ''இன்று என்னால் இக்கட்டான சூழலில் போராட முடியவில்லை. நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன்'' என்கிறார்.

2007-ம் ஆண்டில் டி20 உலகக்கோப்பையோ, 2011-ம் ஆண்டில் ஒருநாள் உலகக்கோப்பையோ இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் கம்பீர்தான். ''பேட்ஸ்மேனா ஓகே-தான். ஆனா, கேப்டனுக்குச் சரிபட்டுவருவாரா?'' இந்தக் கேள்விக்குப் பதிலாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக இரண்டு முறை சாம்பியன் பட்டம் வாங்கிக் கொடுத்தவர் கம்பீர். கங்குலி தலைமையில்கூட தடுமாறிய கேகேஆருக்கு கம்பீர்தான் பவர் பூஸ்டர்.

''நம்ம கம்பீருக்கு என்னதான் ஆச்சு?'' டெல்லி அணிக்கு கேப்டனாக 2018-ம் ஆண்டு களமிறங்கி மீண்டும் தன்னை நிரூபிப்பார் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியாக, அணி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 'இந்த முடிவு சரியா?' என்ற விவாதங்கள் தொடர்கின்றன. எப்படிப்பார்த்தாலும் இந்த முடிவு முற்றிலும் தவறானதுதான். 

ஐபிஎல் போட்டிகளில் ஒரு கேப்டனிடம் அவசியம் இருக்கவேண்டிய விஷயம், விடாமுயற்சி. எட்டு அணிகள் ஆடும் போட்டி என்பதால், 75 சதவிகித ஆட்டங்கள் முடிந்ததுமே, இரண்டு அணிகள் வெளியேறிவிடும் எனத் தெரிந்துவிடும். ஆனாலும் மீதமுள்ள ஆட்டங்களை அந்த அணிகள் வெறித்தனமாக ஆடி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் கிடைக்காமல் இருக்க கடுமையாகப் போராடும். 

2010-ம் ஆண்டு அரை இறுதிச்சுற்றுக்குக் கிட்டத்தட்ட சிஎஸ்கே தகுதி பெற முடியாது என்கிற சூழலில், கடைசி ஐந்து போட்டிகளில் மூன்றை வென்று 3-வது அணியாக சிஎஸ்கே உள்ளே நுழையும். சிஎஸ்கே உள்பட நான்கு அணிகள் 14 புள்ளிகளைப் பெற்றிருக்கும். தரம்சாலாவில் தோனியின் சமயோஜித அதிரடி ஆட்டம், சென்னையை பிளே-ஆஃப் சுற்றுக்குக் கொண்டுசென்று கோப்பையை வெல்லவைக்கும். இதுதான் ஒரு கேப்டனிடம் அந்த அணி எதிர்பார்ப்பது.

ஆர்சிபி-யின் தோல்விகள் தொடர்ந்தாலும், கோலி என்றைக்கும் தன்னம்பிக்கையைத் தவறவிட்டது கிடையாது. இந்த சீசனில் ரோஹித் ஷர்மா தலைமையில் மும்பை அணி சொதப்பினாலும், அவர் சாம்பியன்களின் கேப்டன் என்பதை மறக்காதவர். களத்திலோ அல்லது களத்துக்கு வெளியேவோ ரோஹித்திடம் இந்த அணியை என்னால் நடத்த முடியாது என்ற மனநிலை இருக்காது. 

2018-ம் ஆண்டில் கம்பீர் கேப்டன்ஸி!

முதல் போட்டியில் கம்பீர் அரைசதம் அடித்தாலும் மற்ற யாருக்கும் பெரிய ஸ்கோர் இல்லை. கிங்ஸ் லெவன் கே.எல்.ராகுலின் ருத்ரதாண்டவத்தில் அடங்கியது டெல்லி. க்ளாஸ் பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது குறை என்றாலும் போல்ட், ஷமி என கேம் சேஞ்சர்கள் கைகொடுக்கத் தவறியது டெல்லியின் தோல்விக் கணக்கைத் தொடங்கிவைத்தது. 

ராஜஸ்தான் ஆட்டத்தில் மழை, டக்வெர்த் விதி என டெல்லிக்குச் சோதனைமேல் சோதனை. ஆனால், மூன்றாவது போட்டிதான் டெல்லியின் ரியல் கேம். மும்பை வைத்த 195 டார்கெட்டை, ஜேஸன் ராய், ஷ்ரேயாஸ் ஐயர், பண்ட் என பேட்டிங் பட்டாளம் காட்டிய அதிரடியில் கடைசிப் பந்தில் சேஸ் செய்து வென்றது டெல்லி. 

அதன்பிறகு ஆர்சிபி, கேகேஆர், கிங்ஸ் லெவன் என டெல்லிக்கு ஹாட்ரிக் தோல்விகள்தாம். களத்தில் கேப்டன் கம்பீர் என்ன செய்வது எனத் தெரியாமல் முழிப்பது, அக்ரசிவ் ஆட்டத்தை வெளிப்படுத்தாதது என கம்பீரின் செயல்பாடு மொத்தமும் மோசம்.

அணித்தலைவருக்கு இருக்கக் கூடாத தகுதி, அணியைப் பாதியில் விட்டுச்செல்வது. இந்தியாவோ, சிஎஸ்கே-வோ தோனி பெரிய ஸ்கோர் அடிக்காவிட்டாலும் தோனி களத்தில் இருந்தாலே போதும் வென்றுவிடலாம் என்பதுதான் தோனி எனும் கேப்டனின் பலம். இதை கம்பீர் செய்ய தவறியிருக்கிறார். களத்தில் குழப்பமான மனநிலையில் கேப்டன் இருந்தால், அது தோல்விக்கு மட்டுமே அழைத்துச் செல்லும். புதிய கேப்டன்களாகக் களமிறங்கியுள்ள அஷ்வின், தினேஷ் கார்த்திக் சரியாக முடிவெடுக்கிறார்கள். களத்தில் ஆக்ட்டிவாக இருக்கிறார்கள். 

ராஜஸ்தான் ராயல்ஸுடன் 6 ஓவரில் 71 ரன்கள் அடிக்க வேண்டும். மேக்ஸ்வெல்லையும் முன்ரோவையும் ஓப்பனிங் இறக்கிவிட்டதில் தவறில்லை. ஆனால், நான்கு விக்கெட்டுகள் விழும்போதுகூட கம்பீர் களமிறங்காததுதான் கம்பீரின் பிரச்னை. தன் மீதே நம்பிக்கை இல்லாதவர் கம்பீர் என்பதை, அவரது முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. முகத்தில் துளிகூட நம்பிக்கை ஒளி தெரியவில்லை. தோல்வி உறுதியானதால் வெறுப்பு, இக்கட்டான சூழலில் களமிறங்கத் தயக்கம் என, தான் ஒரு கேப்டன் மெட்டீரியல் அல்ல என்பதை கம்பீர் தெளிவாக நிரூபித்துள்ளார். 

கோலியுடன் சண்டை, அக்தரை முறைத்தது என, அக்ரசிவ் கம்பீரும் இப்போது இல்லை. ஒற்றை ஆளாக கடைசி வரை போராடி அணியைக் காப்பாற்றும் கம்பீரும் இப்போது இல்லை. டெல்லி அணியைப் பாதித் தொடரில் அப்படியே விட்டுச் செல்லும் கம்பீர்தான் இப்போது இருக்கிறார். அழுத்தம், கேப்டன்ஸியில் இல்லை கம்பீரிடம்தான். இந்நிலையில், நீங்கள் கேப்டன்ஸியை அல்ல தொடரைவிட்டே விலகி இருக்க வேண்டும்!

வருத்தம் கம்பீர்... வாழ்த்துகள் ஷ்ரேயாஸ்!