Published:Updated:

அதிரடி கேம் பிளான், மிரட்டும் ஃபினிஷிங்... - Welcome Back தோனி! #IPL2018

அதிரடி கேம் பிளான், மிரட்டும் ஃபினிஷிங்... - Welcome Back தோனி! #IPL2018
அதிரடி கேம் பிளான், மிரட்டும் ஃபினிஷிங்... - Welcome Back தோனி! #IPL2018

'CSK will be back in 2018' என கடந்த ஆண்டின் மத்தியில் ஒரு அறிவிப்பு வெளியாகிறது. அடுத்த நாள் மஞ்சள் டி-ஷர்ட்டில் ஏழாம் நம்பர் பளபளக்க ஸ்டைலாக திரும்பி நின்று போஸ் தருகிறார் தோனி.

'CSK will be back in 2018' எனக் கடந்த ஆண்டின் மத்தியில் ஒரு அறிவிப்பு வெளியாகிறது. அடுத்த நாள் மஞ்சள் டி-ஷர்ட்டில் ஏழாம் நம்பர் பளபளக்க ஸ்டைலாக திரும்பி நின்று போஸ் தருகிறார் தோனி. பற்றிக்கொண்டது மஞ்சள் ஜுரம். பத்து மாதங்கள் கழித்து இப்போது தெர்மாமீட்டரில் உச்சம் தொடுகிறது அந்தக் காய்ச்சல். காரணம்? - தோனியும் அவரது டீமும்தான்.

ஐபிஎல்லில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் பேவரைட் கிளப் சென்னை சூப்பர்கிங்ஸ்தான். உலகின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவர் வழிநடத்துகிறார். டி20க்காகவே அளவெடுத்து செய்த பிளேயர்களான ரெய்னா, பிராவோ, டு ப்ளெஸ்ஸி போன்றவர்கள் விளையாடுகிறார்கள். டி20 லீக்களில் அதிக வெற்றி சதவிகிதத்தைக் கொண்ட அணி (60.71 சதவிகிதம்). எல்லா ஆண்டும் ப்ளே ஆஃப் வரை செல்லும் கன்சிஸ்டன்ஸி கொண்ட அணி. 'கோப்பையை ஜெயிக்கணும்' என்பதைவிட 'சி.எஸ்.கே-வை ஜெயிக்கணும்' என்பதுதான் மற்ற அணி ரசிகர்களின் நினைப்பாக இருக்கிறது. இவை எல்லாமே இரண்டு ஆண்டுகள் முன்புவரை பாசிட்டிவ் விஷயங்கள்தான்! ஆனால் இந்த ஆண்டு?

எல்லாராலும் கொண்டாடப்படும் ஒரு பைசா வசூல் ஹீரோ திடீரென ஒருநாள் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரேக்கில் செல்கிறார். அவர் விட்டுச் சென்ற வெற்றிடம் அப்படியே இருக்கிறது. சில ஆண்டுகள் கழித்து அவர் திரும்பி வருகையில் ஹைப் ஏறுகிறது. 'முன்னாடி மாதிரியே நடிப்பாரா? போட்ட காசு வருமா? பிரேக்ல இருந்தப்போ அவர் திறமை மங்கியிருந்தா? ஒருவேளை தோத்துட்டா திரும்ப ஏன்டா வந்தோம்னு இருக்குமே? இவ்ளோ பில்டப்புக்கும் அவர் வொர்த்தா? என எக்கச்சக்க பயம், தயக்கம் கலந்த கேள்விகள் குடையத்தானே செய்யும்! அந்த ஹீரோவின் இடத்தில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு இசைக்கலைஞர், ஒரு ஓவியர், ஒரு குத்துச்சண்டை வீரர் என அந்த இடத்தில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். சி.எஸ்.கேவாகவும் கூட இருக்கலாம்.

இத்தனை கேள்விகளும் சேர்ந்து ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பை ஏற்றுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல்லின் பிசினஸ் பிராண்டே சி.எஸ்.கே-தான். முதல் லீக் மேட்ச் தொடங்கி இறுதி லீக் மேட்ச் வரை இந்த பிராண்ட் வேல்யூ எதிரொலிக்கும்படிதான் மொத்தத் தொடரும் வடிவமைக்கப்படுகிறது. பல்லாயிரம் கோடிகள் புழங்கும் தொடர், இவ்வளவு ஹைப்பிற்கும் தாங்கள் வொர்த் என நிரூபித்தாகவேண்டிய கட்டாயம், பழசும் புதுசும் கலந்த டீமை ஒன்றிணைத்து வெற்றியை நோக்கி ஓடவைக்க வேண்டும் - இத்தனையையும் சுமந்துகொண்டு ஏழாம் நம்பர் டி-ஷர்ட் தொடரில் களமிறங்குகிறது.

முதல் போட்டி மும்பையுடன். கிட்டத்தட்ட தோல்வியை சோகத்தோடு முத்தமிட நெருங்கிவிட்டது சென்னை. முத்தம் கசக்குமா என்ன? கசந்தது அன்று! உதடுகள் நெருங்க நெருங்க தோனி பதற்றமாகிறார். ஒவ்வொரு பால் முடியும்போதும் டிரெஸ்ஸிங் ரூமில் குறுக்கே மறுக்கே நடந்துகொண்டேயிருக்கிறார். பிராவோ சிக்ஸர் அடிக்க அடிக்க டக் அவுட் மொத்தமும் குதூகலிக்கிறது. தோனியோ பதற்றமாக டி.வி-யைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். மருந்துக்கும் சிரிப்பில்லை. தோல்வி முத்தமிட்டுவிடக்கூடாது என உதடுகளை இறுக்கிப் பிடித்திருப்பதால் யாருடனும் பேசவும் இல்லை. தோனியின் பாடி லாங்குவேஜை கூர்ந்து கவனிக்கும் எல்லாருக்குமே தெரியும் அன்று அவர் உருவில் இருந்தது வேறு யாரோ என! மற்றவர்களுக்கு முதல் மேட்ச்சாக இருக்கலாம். ஆனால், அவருக்கோ இது கம்பேக்கை கெத்தாக நிரூபிக்கவேண்டிய களம். முந்தைய பத்தியில் சொன்ன அத்தனை பிரஷரும் சேர்ந்து அவரை அப்படி மாற்றியிருக்கிறது. ஆயிரம் டன் சுமை! பிராவோ புண்ணியத்தில் கடைசியாக இறக்கி வைக்கிறார். ஆனால், நிலைமை மாறுமா?

இரண்டாவது ஆட்டம் கொல்கத்தாவுடன். சி.எஸ்.கே-வில் ஐந்தாவது, ஆறாவதுதான் தோனி ஆடும் இடம். இந்த முறை மிடில் ஆர்டர் வீக் லிங்க்காக இருப்பதால் தன்னை டூ டவுன் இடத்துக்கு ப்ரொமோட் செய்துகொள்கிறார். மறுபடியும் நெருக்கடி! கடந்த சில ஆண்டுகளாகவே பழைய பார்ம் மிஸ்ஸிங்! பெரிய இடைவேளைக்குப் பின் சென்னை ஹோம் க்ரவுண்டில் களமிறங்குகிறது அணி. பெரிய டார்கெட். வெற்றி பெற வேண்டும். இரண்டு ஓபனிங் பேட்ஸ்மேன்கள் அவுட்! ஆரவாரங்களுக்கு இடையே களமிறங்குகிறார் தோனி. ஆனால், பந்தைக் கணிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இவர் கட்டை போடப் போட டார்கெட் தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது. சாம் பில்லிங்ஸ் மறுபக்கம் அடித்து நொறுக்க திரும்பவும் 'முத்தமெல்லாம் வேணாம்' என தோல்வியை விரட்டுகிறது சென்னை. சென்னைக்காக சந்தோஷப்பட்டாலும் தோனிக்காக வருத்தப்பட்டபடி வெளியேறுகிறான் 'தோனீ......' என ஒரு மூலையில் இருந்து கத்திய சிறுவன். பழைய தோனியை இனி பார்க்கவே முடியாதா?

மூன்றாவது ஆட்டம் பஞ்சாப்புடன்! பாலூட்டி வளர்த்த கிளிதான் எதிரணி கேப்டன். அஸ்வினுக்காவது சென்னை அணி மேல்தான் கோபம், கெயிலுக்கோ ஏழு அணிகளின் ஓனர்கள் மீதும் கோபம். அடித்து வெளுக்கிறார். வழக்கமாக அடித்து வெளுக்கும் பேட்ஸ்மேன்களை சமாளிக்க எக்கச்சக்க ட்ரிக்களை மூட்டை கட்டி வைத்திருப்பார் தோனி. ஆனால், அந்த மேட்ச்சில் எதுவுமே பலனளிக்கவில்லை. பேட்டிங்கில் முதல் பந்திலிருந்தே அடித்து வெளுப்பதுதான் தோனி ஸ்டைல். இந்த ஆட்டத்தில் கொஞ்சம் நேரமெடுத்துக்கொள்கிறார். தசைபிடிப்பு வேறு படுத்துகிறது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை. இதற்கு முன்னால் நிறைய தடவை ஜெயிக்கவைத்த தோனியால் இப்போது முடியவில்லை. The world's dangerous batsman is no more a finisher? World's successful cricket captain lost his bundle of tricks?  கேலியும் கேள்விகளும் துரத்துகின்றன.

நான்காவது ஆட்டம் ராஜஸ்தானுடன்! பேட்டிங்கில் வாட்டோ வேகத்தில் 204 ரன்கள் எடுக்கிறது சென்னை. ஃபர்ஸ்ட் ஆஃப்பில் தோனிக்கு வேலையில்லை. செகண்ட் ஆஃப்பில் சாம்சன் களமிறங்கியவுடன் சஹார் கையில் பந்தைக் கொடுக்கிறார் தோனி. ஷார்ட் பிட்ச் பால்களை லெக் சைட் தூக்கியடிப்பது டிபிக்கல் சாம்சன் ஷாட். அதே பால், பீல்டர் கையில் தஞ்சமடைகிறது பந்து. 200-ஐ ராயல்ஸ் சேஸ் செய்தால் அது சாம்சன் பங்களித்தால் மட்டுமே முடியும் என்பது எல்லாருக்குமே தெரியும். 'இது அதுல்ல' என பழைய ரெக்கார்ட்களை ஓட்டிப் பார்க்கிறது ரசிகர்களின் மனம். தாக்கூர், சஹார், வாட்சன், தாஹிர், திரும்ப வாட்சன், அடுத்து பிராவோ என குறிப்பிட்ட பவுலர்களை டார்கெட் செய்து எதிரணியினர் ரன் அடிக்காமல் இருக்க பவுலர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார் தோனி. ரிசல்ட் - வெற்றி! தோனியின் பழைய மேஜிக் ட்ரிக்குகள் பலனளிக்கத் தொடங்குகின்றன.

ஐந்தாவது ஆட்டம் சன்ரைஸர்ஸோடு! இந்தத் தொடரில் பவுலிங்கில் பேய் பலத்தோடு இருக்கும் அணி. சட்டென ஒரு பவுலரை கழற்றிவிட்டுவிட்டு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனான டுப்ளெஸ்ஸியை உள்ளே கொண்டு வருகிறார். இதற்கு முன் சன்ரைஸர்ஸ் ஆடியிருந்த ஆட்டங்களில் எல்லாம் முறையே 9, 8, 5 விக்கெட்கள் எதிரணிகள் பறிகொடுத்திருந்தன. எனவே, சர்வதேச அனுபவமுள்ள எட்டு பேட்ஸ்மேன்கள். இந்த டெப்த் அளித்த நம்பிக்கையில் கடைசி பத்து ஓவர்கள் பந்தை வதம் செய்கிறார்கள் சென்னை பேட்ஸ்மேன்கள். ஹைதராபாத்தில் தவானும் இல்லை. டாப் ஆர்டரை பவர் ப்ளே முடிவதற்குள் சஹார் காலி செய்கிறார். பிராவோ வீசிய 16-வது ஓவரில் 14 ரன்கள். அப்படியும் 18-வது ஓவர் தருகிறார். அதில் ஆபத்தான கேன் வில்லியம்சன் நடையைக் கட்ட, 20-வது ஓவரும் பிராவோவுக்கே! 19 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் 5 பந்துகளில் 13 ரன்கள்! சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலை! அனுபவம் வாய்ந்த பிராவோ யார்க்கர் போட சென்னை வெற்றிக்கோட்டை தொடுகிறது.

கடைசியாக பெங்களூருவுடன்! சென்னை - மும்பைக்கு அடுத்து சென்னை - பெங்களூருதான் எல்லாரும் எதிர்பார்க்கும் மேட்ச். பவுலிங் வீக் என்பதால் டுப்ளெஸ்ஸி வெளியே! டி காக்கை சமாளிக்க ஆஃப் ஸ்பின்னரான ஹர்பஜன் உள்ளே! ஆனாலும் சமாளித்து ஆடுகிறார் டி காக்! மறுபுறம் லெக் சைடில் ஸ்வீப் செய்தே சிக்ஸர்கள் குவிக்கிறார் டிவில்லியர்ஸ். ஜோடியை பிரித்தே ஆகவேண்டும் என பிராவோவை கொண்டுவருகிறார் தோனி. டிகாக் அவுட்! அதன்பின் வரும் ஆண்டர்சன் ஐந்து பால்களை சாப்பிட ரன்ரேட் பிரஷர் டிவில்லியர்ஸ் மேல் எகிறுகிறது. 

தாஹிர் பந்துபோட வருகிறார். அதற்கு முந்தைய ஓவரில்தான் தாஹிரை போட்டுப் பொளந்திருந்தார் டிவில்லியர்ஸ். 17 ரன்கள். ஆனால், அவுட்டாக தேவையான பிரஷர் போன ஓவரிலேயே உருவாகியிருந்தது. ஆஃப் சைட் வந்த பாலை கேட்ச் கொடுத்து அவர் வெளியேற ரன்கள் மட்டுப்பட்டன. செகண்ட் இன்னிங்ஸில் நான்காவதாக இல்லை.. ஐந்தாவதாக இல்லை, ஆறாவதாக களமிறங்குகிறார் தோனி. சாஹலை சமாளிக்க இடது கை ஆட்டக்காரர் ஜடேஜாவை அவர் இறக்கிய முடிவு பலன் தராமல் போக, பொறுப்பு தோனி தலையில். 74/4. 66 பந்துகளில் 133 ரன்கள். வழக்கம்போல கேலிகளும் கேள்விகளும் தலைதூக்கின. ஆனால் Dhoni had other ideas!

சந்தித்த இரண்டாவது பந்தையே மிட் விக்கெட் பக்கம் ஓங்கிப் பறக்க விடுகிறார். அனுபவம் வாய்ந்த உமேஷ் யாதவின் கோட்டா முடிந்தது. சாஹல் ஓவரிலும் டீசன்ட்டாக ரன்ரேட் தேற்றினால் அடுத்து ருத்ரதாண்டவம் ஆடலாம் என்பதுதான் பிளான். 13 ஓவர்களில் அணியின் சூப்பர் பவுலர்கள் இரண்டு பேரின் கோட்டா முடிந்தது. களத்தில் இருப்பதோ நன்றாக செட்டிலாகி இருந்த அம்பதி ராயுடுவும் தோனியும். 42 பந்துகளில் 99 ரன்கள் தேவை. அந்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ்கள் தோனிக்கு. Welcome back dhoni! அதற்கடுத்த ஓவர் 9 ரன்கள், அதற்கடுத்த ஓவர் 16 ரன்கள் என பிரித்தெடுக்கிறது இந்த ஜோடி. சிக்ஸ் அடித்து அரைசதம் கடக்கிறார் தோனி. அதற்கடுத்து ராயுடு அவுட்! 8 பந்துகளில் 27 ரன்கள் தேவை. லோ புல்டாஸ் வைட் லென்த் பால் அது! சிக்ஸுக்குப் பறக்கிறது. முழுக்க முழுக்க ஹேண்ட் பவரால் மட்டுமே இது சாத்தியம்! ஸோ, தோனியால் மட்டுமே சாத்தியம். இந்தப் பந்தையே விரட்டினால் புல் டாஸ் யார்க்கர் எல்லாம் போட்டால் கட்டாயம் கூரைக்குச் செல்லும் என்பதால் ரொம்பவே கஷ்டப்பட்டு பந்து போடுகிறார் சிராஜ். ஆனாலும் டார்கெட் குறைந்தது.

கடைசி மூன்று பந்துகளில் ஐந்து ரன்கள் தேவை. கோரி ஆண்டர்சன் க்ரீஸ் தொடும் முன்பே ஆப் சைட் விலகி நிற்கிறார் தோனி. லேசாக இறங்கி பந்தை பேட்டில் வாங்கி மிட் - விக்கெட் பக்கம் திருப்புகிறார். 'Dhoniiiiiiiiiii………. finishes off in style….. a magnificent strike into the crowd' - அந்தக்குரலும் வசனமும் திரும்பவும் மனதுக்குள் ஓடுகிறது. Yes, He is back! தன் அணி மீதான பிரஷர், பேட்டிங் ஸ்டைல் மற்றும் சொதப்பல், பினிஷிங் தடுமாற்றம், கேப்டன்ஷிப் குறித்த கேள்விகள் என முதல் மூன்று போட்டிகளில் வந்த அத்தனை விமர்சனங்களுக்கும் அடுத்த மூன்று போட்டிகளில் பதில் சொல்லியிருக்கிறார் தோனி.

தன் அணி வீரர்கள் மேல் அளவு கடந்த நம்பிக்கை வைப்பது (ஜோகிந்தர் சர்மா முதல் சஹார் வரை), தனக்கிருக்கும் பிரஷரை தன் டீமிற்குக் கடத்தாதது( 2007 டி20 உலகக்கோப்பை தொடங்கி இப்போது வரை), ரோஹித் சர்மா, கம்பீர், கோலி போன்றவர்கள் சொதப்பும்போது முறையான கேம் பிளான்களோடு களமிறங்குவது (கேப்டனான நாள் முதல் இன்று வரை) என தோனியிடம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. முதல் ஆட்டத்தில் இருந்த பதற்றமான பாடி லாங்குவேஜ் நேற்றைய ஆட்டத்தில் இல்லை. கடைசிப் பந்து வரை கூலாக தோள் குலுக்கிக்கொண்டே பவுலர்களை பதற்றப்படுத்தி பயங்காட்டும் தோனிதான் நேற்று க்ரீஸில் இருந்தார். ''You will win some, you'll lose some but the job of the finisher is to finish the job and help others, sharing the experience with others, all those things really matter because I may not batting tomorrow.'' - இது கடந்த போட்டியில் மேன் ஆஃப் தி மேட்ச் விருதுக்குப் பின் தோனி சொன்ன வார்த்தைகள். நாளை அவர் இல்லாமல் கூட போகலாம். ஆனால், நேற்று கேட்ட 'Dhoniiiiiiiiiii………. finishes off in style' கடைசி தடவையாக இருக்கக்கூடாது என்பதுதான் ரசிகர்களின் ஆசை!

அடுத்த கட்டுரைக்கு