Published:Updated:

ஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்! #RCBvCSK #MatchAnalysis

ஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்! #RCBvCSK #MatchAnalysis
News
ஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்! #RCBvCSK #MatchAnalysis

ஜெயித்தது தோனி... ஜெயிக்க வைத்தது கோலி... ஜஸ்ட் கோலி திங்ஸ்! #RCBvCSK #MatchAnalysis

ராயல் சேலஞ்சர்ஸ் நிர்ணயித்த 205 ரன்களை சேஸ் செய்து மிரட்டலாக வென்றுவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். வெற்றிக்குக் காரணம் என்ன? ராயுடுவின் அதிரடி..? தோனியின் சரவெடி..? பிராவோவின் டெத் பௌலிங்..? இவற்றையெல்லாம் 'இதர காரணங்கள்' பட்டியலில்தான் சேர்க்கவேண்டும். அப்போ, முக்கிய காரணம்... இன்னுமும் பெங்களூரு அணியில் கோரி ஆண்டர்சன் இருக்கிறார். ஆனால், பௌலர் வோக்ஸ் இல்லை; கோரிக்கு 4 ஓவர்; அதிலும் கடைசி ஓவர்... வாஷிங்டனுக்கு ஒரே ஓவர், 8-வது ஓவர் முடிவில் உமேஷ் யாதவின் ஸ்பெல் முடிந்தது... - ஜஸ்ட் கேப்டன் கோலி திங்ஸ்..!

டாஸ் வென்றதும் பௌலிங் செய்த தோனி, அணியில் இரண்டு மாற்றங்கள் என்று அறிவிக்கிறார். கரண் ஷர்மாவுக்கு பதில் ஹர்பஜன். ஆர்.சி.பி-யில் இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்கள். அதற்காக பாஜி! இன்னொரு மாற்றம்தான் சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை வியக்க வைத்தது. டு ப்ளெஸ்ஸிக்குப் பதிலாக தாஹிர். 'எதுக்கு ஒரு பேட்ஸ்மேனுக்குப் பதில் எக்ஸ்ட்ரா பௌலர்?' குழம்பினார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் : பேட்ஸ்மேன் கோலி, டி வில்லியர்ஸ் இருவரையும் சமாளிக்க ஒரு கூடுதல் பௌலர் தேவை. ஆர்.சி.பி-யின் பந்துவீச்சுக்கு ஐந்து பேட்ஸ்மேன்களே போதும்! பிளான் சக்சஸ். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தோனியின் மாற்றங்கள் கிரிக்கெட் நிபுணர்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும். ஆனால், கோலி செய்த மாற்றங்கள்..? வோக்ஸ், வோஹ்ரா நீக்கப்பட்டு டி கிராந்தோம், பவன் நெகி..! 

'வோக்ஸ் இல்லனா யாரு டெத் ஓவர் பொடுறது?
'அதான் கோரி இருக்கான்ல'
'அப்போ மிடில் ஓவர் யாரு போடறது?'
'அதான் வோஹ்ரா-க்குப் பதில் நெகி எடுத்திருக்கேன்ல'
'அப்போ ஓப்பனிங்?'
'அதான் நான் இறங்குவேன்ல'

இப்படி நானும் ரௌடிதான் ஆனந்த்ராஜ் பேசுவது மாதிரிதான் இருந்தது கோலியின் டீம் செலக்ஷன்.

ஆட்டத்தைக் கொஞ்சம் மெதுவாகத்தான் தொடங்கியது கோலி-டி காக் ஜோடி. சஹார் வீசிய முதல் ஓவரில் தன் டிரேட்மார்க் ஃப்ளிக்  ஷாட் மூலம் முதல் பௌண்டரியை விளாசினார் கோலி. அடுத்த ஓவரில் தாக்கூர் வீசிய அவுட் ஸ்விங்கை கோலி அடித்த ஷாட்..! ஆசம். ஃபுல் லென்த் பந்தில் மிட் ஆஃப் ஏரியாவில் சூப்பராக விளாசினார் விராட். ஆனால், ஐந்தாவது ஓவரில் தாக்கூரின் ஸ்லோ பாலில் டைமிங் மிஸ்ஸாகி ஜடேஜாவிடம் கேட்ச்சாகி வெளியேறினார் (18 ரன்கள்) கோலி.

இரு ஜாம்பவான்களில் ஒருவர் அவுட். இன்னொரு ஜாம்பவானுக்கு நெருக்கடி. 15 ஓவரும் தாக்குப்பிடிக்கவேண்டிய நெருக்கடியுடன் களமிறங்கினார் ஏ.பி. முதல் நான்கு பந்துகளும் டாட். ஷர்துல் தாக்கூர் வாழ்க்கையில் எத்தனை சாதனைகள் படைத்தாலும், இதுதான் அவரது மிகச்சிறந்த ஓவராக இருக்கும். கோலி, டி வில்லியர்ஸ் இருவரையும் வைத்து டி-20 ஃபார்மட்டில் ஒரு மெய்டன் வீசுவதென்றால் சாதாரண விஷயமா!

5 ஓவர்களில் ஆர்.சி.பி 35/1. குதூகலமாக இருந்த சென்னை ரசிகர்களை சைலன்ட் மோடுக்குக் கொண்டுவந்தார் டி வில்லியர்ஸ். ஹர்பஜன் வீசிய அடுத்த ஓவரிலேயே 2 சிக்ஸர், 1 பௌண்டரி அடித்து 'இட்ஸ் ஜஸ்ட் தி பிகினிங்' என்று தன் விஸ்வரூபத்துக்கு டைட்டில் கார்டு போட்டார். அடுத்த ஓவர் ஜடேஜா, அதுவரை அமைதி காத்த டி காக், 'நானும் சவுத் ஆஃப்ரிக்காக்காரன்தாண்டா' என ஸ்கொயர் திசையில் சிக்ஸர் பறக்கவிட்டார். அடுத்தடுத்த ஓவர்களில் ஓவருக்கு ஒரு பௌண்டரி, சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை சீராக உயர்த்தியது இந்த தென்னாப்பிரிக்க ஜோடி. 10 ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் 87/1.

இவர்களைப் பிரிக்க, தன்னிடம் இருக்கும் தென்னாப்பிரிக்க ஆயுதத்தைப் பயன்படுத்தினார் தோனி. முதல் பால் ரிவர்ஸ் ஸ்வீப்பில் பௌண்டரி. அதற்கு முன்பு டி காக் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் முயற்சி செய்தார். ஆனால், டைமிங் சரியாக இல்லை. பால் கனெக்ட் ஆகவில்லை. ஆனால், ஏ.பி..! டைமிங்னா டைமிங்... அப்படியொரு டைமிங். மூன்றாவது பால் ஸ்வீப் செய்து சிக்ஸர். அடுத்த பந்தும் அதே மாதிரி... ஸ்வீப் செய்து லாங் ஆன் திசையில் பறக்கவிட்டார். ஃப்ளைட் மோடுக்குச் சென்ற பந்து சின்னசாமி ஸ்டேடியத்தைத் தாண்டியும் பறந்துகொண்டிருந்தது. 

அடுத்து வாட்சன் வீசிய ஓவரில் மிட்விக்கெட் ஏரியாவில் சிக்ஸர் அடித்து அரைசதம் அடித்தார் டி காக். 'இவ்வளவு நேரம் நான் ஏ.பி-ய மட்டும்தான பாத்துட்டு இருந்தேன்' என்பதுபோல் ஃபீல் செய்தார்கள் ரசிகர்கள். அவர் ஆடிய ஆட்டத்தில் இந்த மனிதனை மறந்துதான் போயிருந்தார்கள். ஆட்டம் அப்படி, அடி அப்படி. அடுத்த ஓவர் ஷர்துல் தாக்கூர். போன ஓவரில் வைத்த டாட் பாலுகளுக்கெல்லம் இந்த ஓவரில் சிக்ஸர் அடித்து 'காம்பன்சேட்' செய்தார் ஏ.பி. முதல் பந்து மிட்விக்கெட்டில் சிக்ஸ். 23 பந்துகளில் அரைசதம். சின்னசாமி மைதானம் அதிர்ந்தது! அடுத்தடுத்த பந்துகளையும் சிக்ஸர் அடித்து அலறவைத்தார். பந்து போட்டவுடன் 'யாரு சாமி இவன், எங்கிருந்து வந்தான்' என்றுதான் சென்னை பௌலர்கள் ஃபீல் செய்தனர். 

அடுத்த ஓவர் பிராவோ. முதல் பந்திலேயே டி காக்கை தானே கேட்ச் செய்து, ஒரு சாம்பியன் டான்ஸ் ஆடி, அதுவரை அமைதியாய் இருந்த மஞ்சள் கொடிகளை பறக்கவிட்டார். அடுத்து யார்? மந்தீப் சிங் நல்ல ஃபார்மில் இருக்கிறார். கிராந்தோம் நன்றாக ஆடுவார். யார் களமிறங்குவார்கள். இப்படி நினைத்துக்கொண்டிருந்த பெங்களூரு ரசிகர்களுக்கு 'பிம்பிளிக்கி பிலாப்பி' என கோரி ஆண்டர்சனை களமிறக்கினார் கேப்டன் கோலி. 'பாய்சன் கிடைச்சாலே பாயாசம் மாதிரி குடிப்பேன். பாயாசமே கிடைச்சிருக்கு' என்று குஷியானார் பிராவோ. ஐந்து டாட் பால்கள். இவர் ஸ்லோ பால்களாக உருட்ட, அவர் விருட்டு விருட்டு என்று சுத்த, ஐந்து பந்துகளையும் ஃபேஸ் பண்ணியது என்னவோ கீப்பர் தோனிதான். 

இதையெல்லாம் பார்த்து ஏ.பி டென்ஷன் ஆகிவிட்டாரோ என்னவோ. அதுவரை ஒரு தவறான ஷாட்கூட ஆடாதவர், தாஹிர் வீசிய வைட் பாலை அடிக்க, ஸ்வீப்பர் கவரில் நின்ற பில்லிங்ஸ் நோக்கிப் பறந்தது பந்து. அதைக் கொஞ்சம் முன்னாடி வந்து அவர் பிடித்துவிட்டு அன்னார்ந்து பார்த்தால் தன் கண் முன்னால் நிற்கிறார் தாஹிர். மனுஷன் பந்து போட்டதுமே ஓடத் தொடங்கிவிட்டார். பந்துக்கும் அவருக்கும் கொஞ்சம்தான் தூரம். இல்லையேல் பில்லிங்ஸுக்குப் பதில் அவரேகூட கேட்சைப் பிடித்திருப்பார். அடுத்த பந்தில் கோரி ஆண்டர்சனையும் அவுட்டாக்கி தடைபட்டிருந்த தன் மாரத்தானை வெற்றிகரமாக முடித்தது பராசக்தி எக்ஸ்பிரஸ்.

அடுத்து வந்த மன்தீப் நன்றாகவே ஆடினார். ஒரு பௌண்டரி, 3 சிக்ஸர்கள்.. 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். 230 ரன்களுக்கு மேல் போகும் என்று நினைத்த ஆர்.சி.பி-யின் ஸ்கோர் 19 ஓவர்களில் 191/5. கடைசி ஓவரில் பேட்டிங் செய்ய வந்தார் பவன் நெகி. நன்றாக பேட்டிங் செய்துகொண்டிருக்கும் வாஷிங்டனுக்கு முன்னால் அவர் வந்ததால், டி வில்லியர்ஸ் மாதிரி ஆடுவார் என்று எதிர்பார்த்தனர் பெங்களூர் ரசிகர்கள். ஆனால், அவரோ ரோஹித் ஷர்மாவாக மாறினார். முதல் பந்தில் கிராந்தோம்மை ரன் அவுட்டாக்கி, அடுத்த பந்தில் தானும் அவுட்டானார். ஏதோ கடைசி 3 பந்துகளில் வாஷி 12 ரன்கள் எடுக்க 205 ரன்கள் எடுத்தது ஆர்.சி.பி!

சென்னை சேஸ் செய்ய இது பெரிய டார்கெட். ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பௌலிங் டிஃபண்ட் செய்ய இது சின்ன டார்கெட். அதனால் சென்னை ரசிகர்களின் நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. அந்த நம்பிக்கையில் முதல் ஓவரிலேயே வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார் வாட்டோ. நெகி பந்துவீச்சில் கோலியைப் போலவே டைமிங் மிஸ்ஸாகி மிட் ஆனில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவை, ஸ்லோ ஷார்ட் பால்களாகப் போட்டு வரவேற்றார் உமேஷ் யாதவ். 3-வது ஓவர்... சூப்பர் கிங்ஸின் சேஸ் இங்குதான் கிக் ஸ்டார்ட் ஆனது. வாஷிங்டன் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசினார் ராயுடு. அடுத்து யாதவ் ஓவரிலும் ஒரு சிக்ஸர் என மிரட்டல் ஃபார்மில் இருந்தார்.

அடுத்த பந்துவீசிய முகமது சிராஜையும் விடவில்லை. இரண்டு பௌண்டரி அடித்து சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை உற்சாகமாகவே வைத்திருந்தார் ராயுடு. ரெய்னாவும் அந்த ஓவரில் பௌண்டரி அடிக்க, 'ஈசியா ஜெயிச்சிடலாம்' என்று மனக்கோட்டை கட்டினார்கள் யெல்லோ ஆர்மி சோல்ஜர்ஸ். ஆனால், உமேஷ் வீசிய ஃபுல் லென்த் பந்தில் லீடிங் எட்ஜாகி ரெய்னா அவுட்டாக, சிவப்புக் கொடியும் பறக்கத் தொடங்கியது.  ஸ்பின்னில் திணறும் பில்லிங்ஸை, அடுத்த ஓவரே சஹாலைக் கொண்டுவந்து காலி செய்தார் கோலி. '3 விக்கெட் போயிருச்சு... இப்போ தோனிதான்' என்று எதிர்பார்த்தால், 82 பந்துகளில் 147 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கினார் ஜடேஜா. ஆமா, ஜடேஜா..!

7 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளுக்கு 61 ரன் எடுத்துள்ளது சென்னை. ஒரு இடதுகை பேட்ஸ்மேன் வேறு களத்தில். இப்போது வாஷிங்டனுக்கு மீண்டும் பௌலிங் கொடுத்திருந்தால், அவரும் ஓரளவு நம்பிக்கை பெற்றிருப்பார். ஏற்கெனவே 3 ஓவர்கள் போட்டிருந்த உமேஷ் கையில் பந்தைக் கொடுத்தார் கோலி. வோக்ஸ் இல்லை. அணியில் இருக்கும் இன்னொரு அனுபவ ஃபாஸ்ட் பௌலரின் ஸ்பெல் எட்டாவது ஓவரிலேயே முடிகிறது. எங்கிருந்துதான் இப்படி ஐடியாக்கள் பிடிக்கிறாரோ கோலி..?

அடுத்த ஓவர் சஹால்... 'சரி நம்ம இருந்தா நம்ம டீம் ஜெயிக்காது' என அணியின் நலனுக்காக தன் விக்கெட்டைத் தியாகம் செய்து வெளியேறினார் ஜட்டு. தோனி வந்தார். சிங்கிள், டபுள் என ரன் சேர்த்தது தோனி - ராயுடு கூட்டணி. அவசரம் காட்டவில்லை. 13-வது ஓவர் முடிகிறது. 107/4. பெங்களூரு அணியின் டாப் 2 பௌலர்களான உமேஷ், சஹால் இருவருக்கும் இனி ஒரு ஓவர் கூட இல்லை. இனி இருக்கும் பந்துவீச்சாளர்கள் சிராஜ், நெகி, வாஷிங்டன், கிராந்தோம் அண்ட் தி கிரேட் கோரி ஆண்டர்சன் மட்டும்தான். செங்கிஸ்கான் மோடுக்கு மாறினார்கள் தோனி, ராயுடு இருவரும். 

பெங்களூரு அணியின் முக்கிய ஆயுதங்களுக்கு ஓவர் காலியானதும், அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள். சரியாக அப்போதென்று பார்த்து நெகி கையில் பந்தைக் கொடுத்து, 'நல்லா வாட்டமா போட்டுக் கொடு' என்று அனுப்பி வைத்தார் கோலி. 
'தோனி எப்படிப் போட்டா நல்லா அடிப்பாரு?'
'ஃபுல் லெந்த் பால், நல்ல ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போட்டா ஸ்ட்ரெய்ட்டா விட்டு விளாசுவாரு'
'ஃபைன்..போட்டுடலாம்'
அதே மாதிரி வீசினார் நெகி. முதல் இரண்டு பந்துகளுமே சிக்ஸர். அதுவும் தோனியின் பலத்துக்கு, பேட்டில் பட்ட மறுநொடி ரசிகர்களை அடைந்தது பந்து. தோனிக்கு வாட்டமாக ஆஃப் சைடில் போட்ட நெகி, ராயுடு ஸ்டிரைக் வந்ததும், அவருக்கு வாட்டமாக லெக் சைடில் போட, அவரும் அதை சிக்ஸராக்கி, அரைசதம் அடித்தார். அடுத்தது சிராஜ். நன்றாக லென்த்தை வேரி செய்தார். ஒரு சிக்ஸர் போனது. ஆனாலும், மற்ற 5 பந்துகளையும் நன்றாகவே வீசினார். தேவையான ரன்ரேட் 13.33 என இருக்கும்போது 9 ரன் ஓவரெல்லாம் சிறப்பானதே. 

அடுத்து கோரி ஆண்டர்சன். ராயுடு ஒரு பந்தை காற்றில் பறக்கவிட, கேட்சை மிஸ் செய்தார் உமேஷ். அதைப் பயன்படுத்திய ராயுடு, கவர் திசையில் ஒன்றுமாக, மிட்விக்கெட்டில் ஒன்றுமாக அந்த ஓவரிலேயே இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார். அடுத்த ஓவர் சிராஜ். மீண்டும் நன்றாகவே பந்துவீசினார். கடைசி பந்து மட்டும் பௌண்டரி போக, அந்த ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டது. 3 ஓவர்களில் 45 ரன்கள் தேவை. இப்போதாவது வாஷிங்டனைப் பயன்படுத்தியிருக்கலாம். குறைந்தபட்சம் கிராந்தோமையாவது. 'மாட்டேன்..மாட்டவே மாட்டேன்' எனக் கூறி மீண்டும் கோரி ஆண்டர்சனை அழைத்தார் கோலி.

'ஓவருக்கு எத்தனை ரன் வேணும்? 15 தான'... சரியாக அதைக் கொடுத்தார் கோரி. தோனி எங்கு போட்டால் அடிப்பாரென்று நெகி வீசினாரோ அதே லைன், அதே லென்த்... பாரபட்சமின்றி பறக்கவிட்டார் தோனி. 29 பந்துகளில் அரைசதம். பெங்களூரு மிரண்டது! தன் பங்குக்கு ஒரு பௌண்டரி அடித்து ராயுடு ரன் அவுட் ஆனார். இரண்டு ஓவர்களில் 30 ரன்கள். சிராஜ்... முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கிடைக்க ஆட்டம் கொஞ்சம் சூடு பிடித்தது. சென்னை ரசிகர்கள் கொஞ்சம் பதற்றப்பட, 'நான் இருக்கேன்' என ஃபுல் டாஸ் பந்தை பாயின்ட் திசையில் சிக்ஸர் அடித்து கூலாக்கினார் தோனி. அடுத்து தொடர்ந்து 3 வைட்கள். படுமோசம்தான். ஆனால், மற்ற பௌலர்களெல்லாம் தோனி அடிக்கும் இடமாகப் பார்த்து பந்துவீசையில், அவர் எங்கு போட்டால் அடிக்கமாட்டார் என்று யோசித்து, அதை முயற்சி செய்ததற்காகவாவது அவரைப் பாராட்டவேண்டும். 

கடைசி ஓவரில் 15 ரன்கள் வேண்டும். யார் பௌலர்? அதிலென்ன சந்தகேம், கோரி தான். முதல் பந்து பௌண்டரி, அடுத்து சிக்ஸர், மூன்றாவது பால் சிங்கிள், அடுத்த பால் சிக்ஸர். முடிஞ்சிருச்சு... இதுக்கு எதுக்கு இவ்ளோ டென்ஷன் என கூலாக ஆட்டத்தை முடித்தார் கோரி ஆண்டர்சன்... ஸாரி கோலி! கடைசி 7 ஓவர்களில் 99 ரன்களை டிஃபண்ட் செய்ய முடியாமல் தோற்றுள்ளது பெங்களூரு. தோனி, ராயுடு ஆகியோரின் ஆட்டம் நிச்சயம் வெற்றிக்குக் காரணமானவைதான். ஆனால், அதை சாத்தியப்படுத்த பேருதவி செய்தது கோலி எடுத்த முடிவுகள் மட்டுமே!