Published:Updated:

மும்பையை மீண்டும் தோற்கச் செய்த டெத் ஓவர் பவுலிங் - கெத்து காட்டிய கெளதம் #RRvMI

நித்திஷ்

`இனி என்ன பார்த்துகிட்டு... ரெண்டு பாயின்ட் கன்ஃபார்ம்' என ரசிகர்களுக்கு பூஸ்ட் கொடுத்து கடைசியில் தோற்று பெவிலியன் திரும்புகிறது மும்பை அணி. இப்படி அந்த அணி தோற்பது இது நான்காவது தடவை.

மும்பையை மீண்டும் தோற்கச் செய்த டெத் ஓவர் பவுலிங் - கெத்து காட்டிய கெளதம் #RRvMI
மும்பையை மீண்டும் தோற்கச் செய்த டெத் ஓவர் பவுலிங் - கெத்து காட்டிய கெளதம் #RRvMI

இந்த ஐ.பி.எல்லில் பரம வைரிகளான சென்னைக்கும் மும்பைக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ராசி ஒர்க் அவுட் ஆகிறது. எதிரெதிர் திசைகளில்...! தோல்வியை நெருங்கிச் சென்று எல்லாரையும் பதட்டப்படுத்தி சட்டென ஜெயித்து கெத்து காட்டுகிறது சென்னை அணி. மறுபக்கம், `இனி என்ன பார்த்துகிட்டு... ரெண்டு பாயின்ட் கன்ஃபார்ம்' என ரசிகர்களுக்கு பூஸ்ட் கொடுத்து கடைசியில் தோற்று பெவிலியன் திரும்புகிறது மும்பை அணி. இப்படி அந்த அணி தோற்பது இது நான்காவது தடவை. விளையாடியிருப்பதே ஐந்து ஆட்டங்கள்தாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை நடந்த அத்தனை ஆட்டங்களிலும் மும்பைதான் முதலில் பேட் செய்திருக்கிறது. நேற்றும் டாஸ் ஜெயித்த ரோஹித் பேட்டிங்கையே தேர்ந்தெடுத்தார். பெங்களூரு உடனான வெற்றி கொடுத்த கான்ஃபிடன்ஸாக இருக்கலாம். அதனால் டீமிலும் எந்த மாற்றமும் இல்லை. மறுபக்கம் ரஹானே போன போட்டியில் சொதப்பிய பின்னியைக் கழற்றிவிட்டுவிட்டு குல்கர்னியைக் கொண்டுவந்தார். பென் லாலினுக்கு பதில் ஜோஃப்ரா ஆர்ச்சர். சென்னையுடனான கடந்த ஆட்டத்தில் டீசன்ட்டாகப் பந்துவீசிய ஒரே ஃபாஸ்ட் பவுலர் லாலின்தான். ஒருவேளை ஓவர் ஆல் எகானமி 10-க்கு மேல் இருப்பதால் ஆர்ச்சருக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தாரோ என்னவோ?

மும்பை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினார்கள் லூயிஸும் சூர்யகுமார் யாதவும்! அதென்னவோ மும்பைக்கு ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைவது வரலாற்று அதிசயமாக இருக்கிறது. இரண்டு பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் டக் அவுட் ஆகி வெளியேறிவிடுகிறார். நேற்றும் அப்படித்தான். லூயிஸ் கோல்டன் டக்! குல்கர்னியின் பந்து இன்சைட் எட்ஜாகி பெயில்ஸை பறக்கவிட்டது. அதன்பின் களமிறங்கிய இஷான் கிஷன் ஆரம்பத்தில் ரன் எடுக்கவே தடுமாறினார். 4 ஓவர்கள் முடிவில் 17 ரன்கள். ஐந்தாவது ஓவரில் குல்கர்னி புண்ணியத்தில் 18 ரன்கள் வர ஆட்டம் சூடுபிடித்தது. 

அதன்பின் ஆட்டம் மும்பை வசம் வந்துவிட்டது. இரண்டு பேட்ஸ்மேன்களும் ஓவருக்குக் குறைந்தது ஒரு பவுண்டரியாவது அடித்து ரன்ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டார்கள். ராஜஸ்தான் ரொம்பவே நம்பியிருந்த ஸ்ரேயாஸ் கோபாலின் ஓவரில் ஆளுக்கொரு சிக்ஸ் பறக்கவிட்டார்கள். பத்து ஓவர்களில் 113 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி. சராசரியாக 11 ரன்கள். ரஹானே முகத்தில் சிரிப்பே இல்லை. `என்னை டீம்ல எடுத்ததுக்கு நன்றிக்கடன்' என்பதுபோல 15-வது ஓவரில் இஷானை பெவிலியன் அனுப்பினார் குல்கர்னி. லோ ஃபுல் டாஸை ரிவர்ஸ் அடிக்க முயன்று கீப்பரிடம் கொடுத்தார் கிஷன். அவர் அவுட்டாகும்போது 14.2 ஓவரில் 130 ரன்கள் எடுத்திருந்தது மும்பை. கைவசம் எட்டு விக்கெட்கள். 200 நிச்சயம் என தில்லாக இருந்தார்கள் மும்பை ரசிகர்கள். 

அதன்பின் நடந்ததுதான் வழக்கமான மும்பை சொதப்பல். 16வது ஓவரில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து யாதவ் வெளியேறினார். 47 பந்துகளில் 72 ரன்கள். ஐந்தாவதாகக் களமிறங்கினார் ரோஹித். உனட்கட்டின் பந்தை மிட் ஆஃப் பக்கம் தட்டிவிட்டுவிட்டு சிங்கிள் எடுக்க முயன்றார் ரோஹித். அதிவேக ரன்னர்களே இந்தத் தப்பை செய்யமாட்டார்கள். விளைவு, ரோஹித் தாம்பரம் தாண்டும் முன்பே பந்து பெருங்குளத்தூரிலிருந்த ஸ்டம்ப்பைத் தாக்கியது. அதன்பின் பொல்லார்ட் கொஞ்சம் போக்குக் காட்ட, மறுபக்கம் ஆர்ச்சர் ஒரே ஓவரில் மூன்று முக்கிய விக்கெட்கள் எடுத்து அசத்தினார். ஓவர் ஆஃப் தி மேட்ச் அதுதான். முக்கி முனங்கி 167 ரன்கள் எடுத்தது மும்பை. கடைசி 34 பந்துகளில் 37 ரன்கள். எல்லா க்ரெடிட்களும் ராஜஸ்தான் பவுலர்களுக்கே!

ராஜஸ்தான் அணி ஓபனிங் ஜோடியை மாற்றுவது இது மூன்றாவது தடவை. ரஹானேவும் ராகுல் த்ரிபாதியும் களமிறங்கினார்கள். பெரிய பலனில்லை. க்ருனால் பாண்ட்யாவின் ஸ்பின்னில் மூன்றாவது ஓவரிலேயே வீழ்ந்தார் ராகுல். இப்போது கேப்டன் இன்னிங்ஸ் ஆடவேண்டிய கட்டாயம் ரஹானேவுக்கு! ஆனால் அவரும் ராகுல் போலவே கைக்கு கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். பல கோடிகள் கொடுத்து எடுத்த ஸ்டோக்ஸ் கையில்தான் இப்போது எல்லாமே! பிரஷர் உணர்ந்து ஸ்டோக்ஸும் அதிரடி காட்டினார். 

ஸ்பின்னில் திணறிய இந்த ஜோடி வேகப்பந்தை மட்டும் பதம் பார்த்தது. 10 ஓவர் முடிவில் 70 ரன்கள். 11-வது ஓவரில் மட்டும் 16 ரன்கள். அந்த ஓவர் அளித்த நம்பிக்கையில் பேட்டிங்கில் வேகம் கூட்டினார்கள் சாம்சனும் ஸ்டோக்ஸும். விளைவு அடுத்த நான்கு ஓவர்களில் நாற்பது ரன்கள். `அய்யோ இந்தத் தடவையும் ஸ்கெட்ச் நமக்குத்தான் போலயே' என ரோஹித் தன் ட்ரேட்மார்க் ஸ்டைலில் நகம் கடிக்க, ஆபத்பாந்தவனாக வந்தார் ஹர்திக் பாண்ட்யா! ஃபுல் லென்த் டெலிவரி ஸ்டோக்ஸை ஏமாற்றி லெக் ஸ்டம்ப்பைத் தகர்க்க, ஆட்டம் மும்பைக்கும் சாதகமானது. 

இப்போது களத்திலிருக்கும் ஒரே பேராபத்து சாம்சன். நான்கு ஓவர்களில் 44 ரன்கள் எடுக்கவேண்டும். பந்து பும்ராவிடம். `இந்தா அடிச்சுக்க' என அவர் ஆசை காட்டிய ஸ்லோ பாலை தூ.........க்கியடித்த சாம்சன் ஹர்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, அடுத்த பாலே பட்லரைத் தாண்டி ஸ்டம்ப்பைப் பறக்கவிட்டது. இரண்டு பால்களில் இரண்டு பெரிய விக்கெட்கள். அதுவும் இரண்டு பெரிய பேட்ஸ்மேன்கள். ஒரே ஒரு ரன் மட்டும்தான் அந்த ஓவரில். 

அதற்கடுத்த ஓவரின் முதல் பாலிலேயே இஷான் கிஷனின் அபார கேட்ச்சால் வெளியேறினார் க்ளாசன். 125/3 என இருந்த ஸ்கோர் ஆறே பந்துகளில் 125/6 ஆனது. களத்தில் இருந்தது முதல் மேட்ச் ஆடும் ஆர்ச்சரும் அதிகம் தெரியாத கிருஷ்ணப்பா கெளதமும். அசால்ட் மேட்டரு எனதான் நினைத்தார்கள் மும்பை அணியினர். அதிகம் பிரபலமடையாத கெளதம்தான் அந்த நைட்டின் ஸ்டார் என்பதை ராஜஸ்தான் அணியினரே எதிர்பார்த்திருக்கவில்லை. முஸ்டபிஷுர் ரஹ்மானின் 18-வது ஓவரில் மட்டும் 15 ரன்கள் வந்தது. அதில் 14 கெளதம் அளித்த கொடை.   
 
19-வது ஓவர் போட திரும்ப டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ராவைக் கொண்டுவந்தார் ரோஹித். அதென்னவோ தெரியவில்லை ஐ.பி.எல்லில் ஆட்டம் க்ளைமாக்ஸை நெருங்க நெருங்க ரொம்பவே சொதப்புகிறார்கள் மும்பையின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்கள். சென்னைக்கெதிரான 19-வது ஓவரில் பும்ரா கொடுத்தது 20 ரன்கள். டெல்லிக்கெதிரான 17-வது ஓவரில் 11 ரன்கள். நேற்று ராஜஸ்தானுக்கெதிரான 19-வது ஓவரில் 18 ரன்கள். முஸ்டபிஷுரும் அப்படித்தான். சென்னைக்கு எதிரான கடைசி ஓவரில் 10 ரன்கள், டெல்லிக்கெதிரான கடைசி ஓவரில் 11 ரன்கள், நேற்று 18-வது ஓவரில் 15 ரன்கள். அனுபவம் வாய்ந்த இரண்டு டி20 பவுலர்கள் இப்படிச் சொதப்புவது மும்பை அணிக்கு நல்லதல்ல.

கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை. மெக்லானஹென் அல்லது ஹர்திக் இருவரில் யார் போடுவார்கள் எனக் கூட்டம் எதிர்பார்க்க ஹர்திக் கையில் பந்தைக் கொடுத்தார் கேப்டன். முதல் பந்திலேயே விக்கெட். `ஷார்ட் பால் போட்டு பால் வார்த்தப்பா மகராசா' என மகிழ்ந்தது மும்பை மேனேஜ்மென்ட். ஆனால், அடுத்த பந்தையே பவுண்டரிக்கு அனுப்பி வெறியேற்றினார் கெளதம். Very well planned shot! வைடாக வந்த பந்தை அப்படியே திருப்பி தேர்டுமேன் பக்கம் அனுப்ப ஆளில்லாத அந்த லெவல் க்ராஸிங்கில் பவுண்டரி கடந்தது பந்து. அதற்கடுத்து ஒரு டாட் பால். மூன்று பந்துகளில் ஆறு ரன்கள் எடுக்க வேண்டும். என்னத்துக்கு மூணு பந்து என அடுத்த பாலையே சிக்ஸுக்கு அனுப்பி `சக்ஸஸ்' என பேட்டை ஆக்ரோஷமாக உயர்த்தினார் கெளதம். மும்பைக்கு மற்றுமொரு கடைசி ஓவர் தோல்வி.

தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த ராஜஸ்தானுக்கு இது ரொம்பவே தேவைப்பட்ட வெற்றி. ஒவ்வோர் ஆட்டத்தின் முடிவிலும் மும்பை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு சில கிலோமீட்டர்களுக்குத் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. முக்கிய காரணம் டெத் ஓவரில் சொதப்பும் பும்ராவும் ரஹ்மானும். மூன்று ஆட்டங்களில் அவர்கள் வீசிய ஆறு டெத் ஓவர்களில் 85 ரன்கள் பறிகொடுத்திருக்கிறார்கள். ஸ்கோரை டிபெண்ட் செய்யும் இடத்தில் இருந்துகொண்டு இவ்வளவு ரன்கள் கொடுப்பது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பரிசாக அளிக்கவே செய்யும். Work out a plan Hitman!