Published:Updated:

வில்லியம்சனின் கேப்டன் இன்னிங்ஸை ஓவர்டேக் செய்த அம்பதி ராயுடு! #CSKvsSRH

தா.ரமேஷ்
வில்லியம்சனின் கேப்டன் இன்னிங்ஸை ஓவர்டேக் செய்த அம்பதி ராயுடு! #CSKvsSRH
வில்லியம்சனின் கேப்டன் இன்னிங்ஸை ஓவர்டேக் செய்த அம்பதி ராயுடு! #CSKvsSRH

மும்பைக்கு எதிராக பிராவோ, கொல்கத்தாவுக்கு எதிராக சாம் பில்லிங்ஸ், பஞ்சாபுக்கு எதிராக தோனி, ராஜஸ்தானுக்கு எதிராக வாட்சன் வரிசையில் ஹைதரபாத்துக்கு எதிராக வெளுத்து வாங்கினார் அம்பதி ராயுடு. உள்ளூர் வீரர் ராயுடுவின் அதிரடி, தீபக் சாஹரின் அட்டகாச ஸ்பெல் முன், கேன் வில்லியம்சனின் கேப்டன் இன்னிங்ஸ் எடுபடவில்லை. சி.எஸ்.கே மீண்டும் ஒருமுறை கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. #CSKvsSRH


இம்ரான் தாஹிர் ஃபிட்னெஸ் காரணமாக விலக, விரல் காயத்திலிருந்து குணமடைந்த டு பிளெஸ்ஸி சி.எஸ்.கே பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். சன்ரைசர்ஸ் தரப்பில், காயமடைந்த ஷிகர் தவனுக்குப் பதிலாக ரிக்கி புயி வாய்ப்புப் பெற்றார். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அப்போதே சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஏனெனில், அவர்களது சேஸிங் ரிசல்ட் அப்படி.  

வில்லியம்சனின் கேப்டன் இன்னிங்ஸை ஓவர்டேக் செய்த அம்பதி ராயுடு! #CSKvsSRH


சென்னைக்கு  வாட்சன் – டு பிளெஸ்ஸி ஓப்பனிங் இறங்கினர். ஸ்டேன்லேக் பந்தை டிரைவ் செய்ய முயன்றபோது அது எட்ஜாகி ஃபர்ஸ்ட் ஸ்லிப் பக்கம் செல்ல, தீபக் ஹுடா அந்த சான்ஸை தவறவிட்டார். டு பிளெஸ்ஸியும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடும் வாய்ப்பை நழுவவிட்டார்.

இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்து அடித்து வெளுக்கும் வாட்சன், 13 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பதிலேயே, சன்ரைசர்ஸ் பெளலிங்கின் தரத்தை யூகித்துக் கொள்ளலாம். இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது என, அடுத்த பந்திலேயே அதிரடியை ஆரம்பித்தார். இடுப்பு உயரத்தில் வந்த ஷார்ட் பிட்ச்சை புல் ஷாட் அடித்தால் அது மிட் விக்கெட் பக்கம் சிக்ஸ் போகும். வாட்சனும் அதைத்தான் செய்தார். சி.எஸ்.கே-வுக்கு முதல் பவுண்டரி. அடிபடுகிறது என உணர்ந்த அடுத்த கணமே, லைன் அண்ட் லென்த்தை மாற்றுவது தேர்ந்த பெளலருக்கு அழகு. புவி தேர்ந்த பெளலர். சிக்ஸ் கொடுத்த அடுத்த பந்திலேயே வாட்சனுக்கு ஒரு Knuckle ball பார்சல் செய்தார். அதைத் தவறாகக் கணித்த வாட்சன், அவசரப்பட்டு ஃபிளிக் செய்ய அது ஷார்ட் மிட் விக்கெட்டில் இருந்த தீபக் ஹுடாவின் கைகளில் சிக்கியது. இந்தமுறை தீபக் மிஸ் செய்யவில்லை. நல்ல கேட்ச். வாட்சன் 9 ரன்களில் அவுட்.


டு பிளெஸ்ஸியுடன் ஜோடி சேர்ந்த சி.எஸ்.கே-யின் செல்லாக்குட்டி ரெய்னா, வழக்கம் போல பேக்வார்ட் பாயின்ட் பக்கம் தட்டிவிட்டு பவுண்டரி கணக்கைத் தொடங்கினார். பவர்பிளேவின் கடைசி ஓவரில் டு பிளெஸ்ஸி ஆக்டிவ் மோடுக்கு மாறினார். சித்தார்த் கவுல் பந்தில் எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்தார். ஆனாலும், ரன்ரேட் அப்படியேதான் இருந்தது. `டேய் இது பவர்பிளேடா, அடிங்கடா…’ என ரசிகர்கள் கதறாத குறைதான். பவர்பிளே முடிவில் சென்னையின் ஸ்கோர் 27/1. இந்த சீசனில் பவர்பிளேவில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவே.

வில்லியம்சனின் கேப்டன் இன்னிங்ஸை ஓவர்டேக் செய்த அம்பதி ராயுடு! #CSKvsSRH


வந்ததும் வராததுமாக ரஷித்கான் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார். ஸ்வீப் அடிக்க முயன்ற டு ப்ளெஸ்ஸி, பந்தைக் கணிக்கத் தவறி தடுமாற, விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா சிரமமின்றி ஸ்டம்பிங் செய்தார். டிவி அம்பயரிடம் கூட ஆலோசிக்காமல் அம்பயர் செளத்ரி விரலை உயர்த்தினார். டு பிளெஸ்ஸி 11 ரன்களில் அவுட். பவர்பிளே ஓவர்களில் அம்பதி ராயுடு ஸ்ட்ரைக் ரேட் 163.50 வைத்திருக்கிறார். ஆனால், அவருக்குப் பதிலாக ஓப்பனிங் இறங்கிய டு பிளெஸ்ஸியின் ஸ்ட்ரைக் ரேட் 84.61. அடுத்த போட்டிகளில் சி.எஸ்.கே உடனடியாகச் சரிசெய்யவேண்டிய விஷயம் இது.


மிடில் ஓவரில் இறக்கிவிட்டாலும் பொளந்து கட்டினார் அம்பதி ராயுடு. புவி வீசிய ஸ்லோ பாலில் (111.4 km) ஸ்லாக் ஸ்வீப் மூலம் மிட் விக்கெட் பக்கம் சிக்ஸர் அடித்தார் ராயுடு. தன் பங்குக்கு ரெய்னா டவுன் தி லைன் வந்து இன்சைட் அவுட் மூலம் பவுண்டரி அடித்தார். ஆனாலும், இந்த ஐ.பி.எல் சீசனில் 10 ஓவர்களில் குறைந்தபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற பெருமை(!) சி.எஸ்.கே-வுக்கே கிடைத்தது. ஆம், பத்து ஓவர் முடிவில் ஸ்கோர் 54/2.


பெளலிங் வளம் கொண்ட சன்ரைசர்ஸ் 11-வது ஓவரில் ஆறாவது பெளலர் தீபக் ஹூடாவை இறக்கியது. அவரது ஓவரில் ரிவர் ஸ்வீப் மூலம் அம்பதி ராயுடு பவுண்டரி அடித்தார் என்றாலும், ரெய்னாவின் இயல்பான ஆட்டம் வெளிப்படாமல் இருந்தது சி.எஸ்.கே ரசிகர்களுக்கு அதிருப்தியே. `போதும் தலைவா ரொம்ப பால் சாப்டாச்சு. Its time to shift gears’ என ரசிகன் புலம்பிக்கொண்டிருந்தபோது, ரஷீத் ஓவரில் இறங்கி வந்து டீப் மிட் விக்கெட்டில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.  

வில்லியம்சனின் கேப்டன் இன்னிங்ஸை ஓவர்டேக் செய்த அம்பதி ராயுடு! #CSKvsSRH


சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் அதுவரை பெளலர்களைச் சரியாகப் பயன்படுத்தி வந்தார். ஷார்ட் பால் மூலம் ரெய்னாவின் விக்கெட்டை எடுக்க நினைத்து ஸ்டேன்லேக் கையில் பந்தைக் கொடுக்க, அந்த ஓவரில் அம்பதி ராயுடு 3 பவுண்டரி, ஸ்ட்ரெய்ட்டில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக ஒரு சிக்ஸர் வெளுக்க, மொத்தம் 19 ரன்கள் கிடைத்தது. அதே சூட்டோடு அரைசதம் கடந்தார் ராயுடு. 50 அடித்தபின் ராயுடுவின் ஆட்டம் வேற லெவலில் (ஸ்ட்ரைக் ரேட் 211) இருந்தது. குறிப்பாக, ஷாகிப் அல் ஹசன், ரஷித் ஓவர்களில் ஈவு இரக்கமில்லாமல் வெளுத்துக்  கட்டினார். ஃபுல்டாஸை பெளலரின் தலைக்கு மேல் சிக்ஸர், நல்ல லைனில் விழுந்த பந்துகளை ஸ்லாக் ஸ்வீப் மூலம் 4, 6 எனச் சிதறவிட்டார். கட் ஷாட்டில் சிங்கிள் தட்டவும் தவறவில்லை இந்த லோக்கல் ஹீரோ. ரிவர்ஸ் ஸ்வீப்பும் ராயுடுவுக்குக் கைவந்த கலை.


ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே, சி.எஸ்.கே… என டெசிபில் உச்சகட்டத்தில் இருந்தபோது, தேவையில்லாமல் இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு, ரன் அவுட்டானார் ராயுடு. எதிர்முனையில் இருந்த ரெய்னாவையும் குறை சொல்ல முடியாது. அவுட்டானதும் ரெய்னா அப்செட் ஆகக் கூடாது என்பதற்காக, அவரைக் கட்டித்தழுவி விடைபெற்றார் அம்பதி ராயுடு. ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் என சோசியல் மீடியாவில் பாராட்டு மழை. சமூக வலைதளங்கள் மட்டுமல்ல, 37 பந்துகளில் 79 ரன்கள் குவித்தவனுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டுமோ அந்த மரியாதையைக் கொடுத்தனர் களத்தில் இருந்த ரசிகர்கள்.

வில்லியம்சனின் கேப்டன் இன்னிங்ஸை ஓவர்டேக் செய்த அம்பதி ராயுடு! #CSKvsSRH


20 பந்துகள் மட்டுமே உள்ள சூழலில் களமிறங்கிய தோனி, ரஷித் பந்தில் லாங் ஆஃபில் பவுண்டரி, சித்தார்த் கவுல் வீசிய ஃபுல் டாஸில் தேர்டு மேன் ஏரியாவில் பவுண்டரி, ஸ்டேன்லேக் வீசிய கடைசி ஓவரில் சிக்ஸர் என வெரைட்டி காட்டினார். மறுமுனையில் ரெய்னா, இந்த சீசனில் முதல் அரைசதம் அடித்ததோடு, ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் வரிசையில் கோலியைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார். 20 ஓவர்களில் சென்னை 182 ரன்கள் எடுத்தது. முதல் பத்து ஓவர்களில் 54 ரன்கள் எடுத்த சென்னை, அடுத்த பத்து ஓவர்களில் 128 ரன்கள் குவித்தது. தேங்ஸ் டு அம்பதி ராயுடு.


ஷிகர் தவனும் இல்லை. பவர் ஹிட்டரும் இல்லை. `இவங்களைச் சுருட்ட இந்த ஸ்கோர் போதும்’ என்பதே சி.எஸ்.கே ரசிகர்களின் கணிப்பு. உண்மைதான். முதல் ஓவரிலேயே ரிக்கி புய் விக்கெட்டைத் தூக்கினார் தீபக் சாஹர். ரிக்கி, ஸ்லிப்பில் இருந்த வாட்சனிடம் கேட்ச் கொடுக்க, தன் இரண்டாவது ஓவரில் மணீஷ் பாண்டேவை டக் அவுட்டில் அனுப்பி வைத்தார். மற்றுமொருமுறை மணீஷ் பாண்டே ஏனாதானோவென விளையாடினார். ஷார்ட் செலக்ஷன் படு மோசம். போதாக்குறைக்கு, தீபக் சாஹர் தன் மூன்றாவது ஓவரில் தீபக் ஹூடாவைக் காலி செய்தார். பந்தைத் தவறாகக் கணித்து, ஃப்ளிக் செய்ய முயன்று, ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்தார். ஸ்கோர் 22/3. அப்போதே ஹைதராபாத்தின் தோல்வி முடிவுசெய்யப்பட்டுவிட்டது.


`உங்களை நம்பி புண்ணியமில்லை’ என வில்லியம்சன் அடித்து ஆட ஆரம்பித்தார். அவருக்கு ஷகிப் அல் ஹசன் ஒத்துழைத்தார். வாட்சன் பந்தில் ஃபைன் லெக் பக்கம் சிக்ஸர், ஷார்ட் பாலில் மிட் விக்கெட்டில் பவுண்டரி என, ஹைதராபாத் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். ஆனாலும், ஷாகிப் 24 ரன்கள் எடுத்திருந்தபோது கரண் சர்மா பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுமுனையில் தனி ஆளாகப் போராடிய வில்லியம்சன், ஐ.பி.எல் தொடரில் ஆறாவது அரைசதம் அடித்தார். 35 பந்துகளுக்கு 86 ரன்கள் தேவை என்ற சூழலில் வேகத்தைக் கூட்டினார் வில்லியம்சன். கரண் சர்மா சுழலில் மூன்று சிக்ஸர்கள் விளாச, அதுவரை அமைதியாக இருந்த மைதானத்தில் சத்தம் விண்ணைப் பிளந்தது. கேம் ஹைதராபாத் பக்கம் எட்டிப் பார்த்தது. யுசுஃப் பதான் – வில்லியம்சன் ஜோடியைப் பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது சென்னை.

வில்லியம்சனின் கேப்டன் இன்னிங்ஸை ஓவர்டேக் செய்த அம்பதி ராயுடு! #CSKvsSRH


இதுபோன்ற சேஸிங்கில் அமைதியாக பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்தால் போதும், மோசமான ஒரு ஓவர் மேட்ச்சையே மாற்றி விடும். கரண் சர்மா 15-வது ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்ததே ஹைதராபாத்துக்குக் கிடைத்த மொமன்ட். வில்லியம்சன், யுசுஃப் இருவரும் அந்தத் தருணத்தை தக்கவைத்துக் கொண்டனர். பிராவோ ஓவரில் தன் பங்குக்கு யுசுஃப் சிக்ஸர் வெளுக்க, சென்னை ரசிகர்கள் அமைதி காத்தனர்.


24 பந்துகளில் 52 ரன்கள் தேவை என்ற நிலை. 17-வது ஓவரை ஷர்துல் தாக்கூர் கையில் கொடுத்தார் தோனி. யுசுஃப் பதான் ஒரு சிக்ஸர் அடித்தாலும், வில்லியம்சன் கொஞ்சம் தடுமாறியதால், அந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. மீண்டும் பிராவோ மீது நம்பிக்கை வைத்தார் தோனி. வேறு வழியும் இல்லை. சாஹர், ஜடேஜாவின் கோட்டா முடிந்தது. ஸ்பின் போட்டால் யுசுஃப் வெளுப்பார். கரண் சர்மாவுக்கு இன்னொரு ஓவர் கொடுக்க முடியாது. பிராவோ 18-வது ஓவரை நேர்த்தியாக வீசினார். ஒரு ஸ்லோ டெலிவரியைச் சரியாகக் கணிக்கத் தவறினார் வில்லியம்சன். லாங் ஆனில் இருந்த ரவீந்திர ஜடேஜா ஃபுல் லென்த் டைவ் அடித்து அற்புதமாக கேட்ச் பிடித்தார். வில்லியம்சன் 84 ரன்களில் அவுட்டாக, கேப்டன் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. கூடவே, ஹைதராபாத்தின் வெற்றியும்…

வில்லியம்சனின் கேப்டன் இன்னிங்ஸை ஓவர்டேக் செய்த அம்பதி ராயுடு! #CSKvsSRH


யுசுஃப் பதான் களத்தில் இருந்தவரை, ஹைதராபாத் ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஷர்துல் தாக்கூர் வீசிய 19-வது ஓவரில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து யுசுஃப் (45) வெளியேறியபோது தலைமேல் கைவைத்தனர் ஹைதராபாத் ரசிகர்கள். ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் ரஷித் சிக்ஸர் பறக்கவிட, கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற சூழல்.


சி.எஸ்.கே மேட்ச் த்ரில்லிங் இல்லாமலா? பிராவோ வீசிய கடைசி ஓவரின் முதல் மூன்று பந்தில் 3 ரன்கள் கிடைக்க, நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்தார் ரஷித். 2 பந்தில் 10 ரன்கள் தேவை. தோனி ஓடிவந்து பிராவோவிடம் பேசுகிறார். ஃபீல்டிங் மாற்றப்படுகிறது. ஆனால், ஐந்தாவது பந்தில் எட்ஜாகி, பவுண்டரி. கடைசி பந்து. சிக்ஸர் அடித்தால் வின். ஃபுல் லென்த் டெலிவரியில் சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது. நான்கு ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி. மீண்டும் ஒருமுறை சேஸிங் தங்களுக்குக் கைகூடாது என நிரூபித்தது சன்ரைசர்ஸ். மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது சி.எஸ்கே.