Published:Updated:

கெயில்... ராகுல்... ரன் மழை! கொல்கத்தா தமிழனை வீழ்த்திய பஞ்சாப் தமிழன் #KXIPvsKKR

கார்த்தி
கெயில்... ராகுல்... ரன் மழை! கொல்கத்தா தமிழனை வீழ்த்திய பஞ்சாப் தமிழன் #KXIPvsKKR
கெயில்... ராகுல்... ரன் மழை! கொல்கத்தா தமிழனை வீழ்த்திய பஞ்சாப் தமிழன் #KXIPvsKKR

கெயில்... ராகுல்... ரன் மழை! கொல்கத்தா தமிழனை வீழ்த்திய பஞ்சாப் தமிழன் #KXIPvsKKR

ஐபிஎல்-ல் வீக்கெண்டு என்றாலே டபுள் தமாக்காதான். அதிலும் இன்றைய போட்டியின் கேப்டன்கள் இருவரும் சென்னைப் பசங்க!. தமிழகத்துக்காகப் பல ஆண்டுகள் ஒரே அணியில் டொமஸ்டிக் சீசன் விளையாடியவர்கள். அதிலும் இருவரும் கேப்டனாக இருந்தவர்கள். தற்போதும் இருவரும் கேப்டன். பஞ்சாப் தமிழன் வெர்சஸ் கொல்கத்தா தமிழன்தான் இந்த மேட்சின் ஒரே ஹைலைட்.. இரு கேப்டன்களும், தங்கள் டீம்களை டாப் 4ல் வைத்திருந்தது சிறப்பு. #KXIPvsKKR

கடந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், மீண்டும் ஃபீல்டிங் சென்டிமென்ட்டில் தஞ்சம் புகுந்துவிட்டார் அஷ்வின். டாஸ் வென்றதும், சேஸிங் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் விக்கெட் வீழ்த்தியிருந்தாலும், ரன்களை வாரி வழங்கிய மோஹித் ஷர்மாவுக்குப் பதில், ராஜ்பூட் தேர்வு செய்யப்பட்டார். தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா, வெற்றிக் கூட்டணியை மாற்றாமல் அப்படியே களமிறங்கியது. 
ரஹ்மான் வீசிய இரண்டாவது ஓவரில் லெக் திசையில், சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு, லாங் ஆனில் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் நரேன் 1(4). தம்பி, இது மத்த ஊர் இல்ல, ஈடென் என நினைவூட்டியது கொல்கத்தாவின் அகண்ட மைதானம். அடுத்து களமிறங்கிய உத்தப்பா ரஹ்மான் ஓவரில் ஹாட்ரிக் 4 அடித்து அதிரடி மோடை லின்னுடன் ஆரம்பித்தார். பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா. லின் 24 (19), உத்தப்பா 27 (20) . 

வழக்கம் போல, அஷ்வின் பவர்பிளே முடிந்ததும் தன் கோட்டாவை ஆரம்பித்தார். கடந்த போட்டியில் ( 4 - 0 - 53 - 0 ) நடந்ததை, மறந்து , அட்டகாசமாக முதல் ஓவர் வீசினார். ஆனால், அதற்கு  அடுத்து பந்துவீச வந்த பர்விந்தர் ஸ்ரன் ஒட்டுமொத்தப் போட்டியின் போக்கையே மாற்றிவிட்டார். முதல் பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் உத்தப்பா ஒரு சிக்ஸ். லின் தன் பங்குக்கு மிட்விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ், மீண்டும் ஸ்கொயர் லெக் திசையில் ஒரு சிக்ஸ். இந்த சீசனில் பஞ்சாபின் மோசமான பந்துவீச்சு இந்த ஓவர்தான் .23 ரன்கள் ( 6 1 4 6 0 6 ) .
அடுத்தடுத்த ஓவர்களில் உத்தப்பாவும், ராணாவும் அவுட்டாக, பத்து ஓவர் முடிவில் 86/3 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. அடுத்த ஒவ்வோர் ஓவரிலும் பத்து ரன்களுக்கும் குறைவில்லாமல், வெளுத்து வாங்கினர் தினேஷ் கார்த்திக்கும் லின்னும். அதிலும், டை வீசிய பந்தில் , லின் லாங் ஆன் திசையில் அடித்த சிக்ஸ் 103 மீட்டர் !. அடேங்கப்பா லின்னே இப்படி அடிக்கறார்ன்னா, கெயில் அடிக்கறதெல்லாம் மைதானத்தைத் தாண்டிடும்ல என்ற மோடில் நம்பிக்கை வைத்து காத்திருந்தனர் டர்பன் பாய்ஸ். 

நல்ல பந்தையெல்லாம் வெளுத்து வாங்கிய லின், கடைசியாக ஒரு டம்மி பந்தில் அவுட்டானதுதான் பெருஞ்சோகம். நான் பாட்டுக்கு செவனேன்னு தான போறேன் மோடில் ஃபுல் வொய்டு அவுட்சைடு ஆஃப் திசையில் வந்த பந்தை அடிக்க ஆசைப்பட்டு கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 74 (41b 6x4 4x6). ஸ்ரன் வீசிய பந்தில் 2 பவுண்டரி அடித்து, நடையைக் கட்டினார் ரஸல். 
ஒரு ஹிட்டர் என்றால் அனைத்துப் பந்துகளையும் அடிக்க வேண்டுமென எந்தவித அவசியமும் இல்லை என்பதை நினைவுறுத்தினார் தினேஷ் கார்த்திக். ஸ்டிரைக் ரொட்டேட் செய்வது, எந்த எஃபோர்ட்டும் இல்லாமல் கூலாக 4 அடிப்பது என தினேஷ் கார்த்திக் மற்றுமொரு கேப்டன் இன்னிங்ஸ். அதிலும் கெட்டித் தயிர் கப்பில் இருக்கும் தயிரை ஸ்பூனில் ஸ்லைசாக எடுப்பது போல் ஷார்ட் தேர்டு மேனுக்கும், கீப்பருக்கும் இடையே தினேஷ் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் அழகு!. 

200 ரன்களை அசால்ட்டாக கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. 
முதல் பந்திலிருந்தே அதிரடிக்கு ஆயத்தமானது பஞ்சாப். 8 ரன்கள் (4 4) என ஆரம்பித்து அமர்க்கள என்ட்ரி கொடுத்தார் கே.எல்.ராகுல்.முதல் ஓவர் முதலிரண்டு பந்துகள் பவுண்டரி. இரண்டாம் ஓவரும் முதலிரண்டு பந்துகள் பவுண்டரி... என எல்லாவற்றையும் ராகுல் பவுண்டரிகளில் டீல் செய்தார்.

நான்காவது ஓவரை ரஸல் வீச , கெயில் எதிர்கொண்டார். கிரவுண்டில் இரு கிங்காங் எதிர் எதிரே நிற்பது போல காட்சியளித்தது. முதல் பந்திலேயே ஒரு இமாலய சிக்ஸ். அதே ஓவரில் மீண்டும் ஒரு பவுண்டரி, சிக்ஸ். வலது தொடையில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக ரஸல் ஃபீல்டுக்குத் திரும்ப, அந்த ஓவரை நித்திஷ் ராணா முடித்து வைத்தார். 

'இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா ' என நினைத்த தினேஷ் கார்த்திக், சுனில் நரேனை அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு பந்தையும் லென்ந்த் பந்தாக வீசி பேட்ஸ்மென்னுக்கு நெருக்கடி கொடுத்தார் நரேன். என்ன நினைத்தாரோ, கடைசிப் பந்தை லெக் சைடில் வீச, அதை பவுண்டரி ஆக்கினார் கெயில். பவர்பிளே முடிவில் பஞ்சாப் அணி ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்திருந்தது. 
இன்று ஏனோ ஃபீல்டிங்கில் மிகவும் மெத்தனமாகச் செயல்பட்டது கொல்கத்தா. எப்படியும் பந்து நம்மை நோக்கித்தானே வருகிறது, நாம் ஏன் நகர வேண்டும் என இந்தியாவின் முன்னாள் பந்து வீச்சாளர் முனாஃப் பட்டேல் அதே இடத்தில் நின்று கொண்டிருப்பார். முனாஃப் பயிற்சி கொடுத்தாரோ என்னவோ, `பந்து வரட்டும் தம்பி, தூக்கி வீசுவோம்' என ஹாயாக நின்று கொண்டிருந்தனர் கொல்கத்தா ஃபீல்டர்ஸ். ஒருவேளை கொல்கத்தாவுக்கு அடுத்த ஒரு வாரத்துக்குப் போட்டி இல்லை என்பதால், இப்போதே ரெஸ்ட் மோடுக்குப் போய்விட்டார்கள் போல. 

8வது ஓவரில் சாவ்லா, பந்தை சிக்ஸருக்கு அனுப்ப, கொல்கத்தா அணியைக் காப்பாற்ற , ஈடன் கார்டனில் மழை பெய்ய ஆரம்பித்தது. 8.2 ஓவரில் பஞ்சாப் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் எடுத்திருந்தது. DLS முறைப்படி 28 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என மாற்றியமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. 
சாவ்லா வீசிய முதல் பந்தில் சிக்ஸ் அடித்து வெல்கம் சொன்னார் கெயில். மழை விட்டும் கெயில் விடவில்லை என அப்போது உணர்ந்திருப்பார் சாவ்லா.  நரேனின் ஓவரைக்கூட கண்டுகொள்ளாமல், அதிரடி கிளப்பினார் ராகுல். டீப் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ், அதைத் தொடர்ந்து இரு பவுண்டரி என அடித்தவர் அடுத்த பந்தில் குரானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

இறுதியாக குரான் பந்தில் லாங் ஆனில்  வின்னிங் சிக்ஸ் அடித்தார் கெயில். 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி, முதல் இடத்துக்கு வந்தது பஞ்சாப். 

PC: BCCI

STATS #KXIPvsKKR 

* 3 இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்த கெயில், ஆரஞ்ச் கேப்பைப் பெற்றார்.  

* 6 இன்னிங்ஸில் 8 விக்கெட் வீழ்த்திய நரேன் பர்ப்பிள் கேப்பைப் பெற்றார். மும்பை ஸ்டாரான மார்க்கண்டேவும் 8 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். ஆனால், மும்பை இதுவரையில் நான்கு போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அடுத்த கட்டுரைக்கு