Published:Updated:

ஐந்தே டாட் பால்... 39 பந்துகளில் 90 ரன்... டி வில்லியர்ஸ் ஆடியது ஆட்டம் அல்ல மேஜிக்! #RCBvDD

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஐந்தே டாட் பால்... 39 பந்துகளில் 90 ரன்... டி வில்லியர்ஸ் ஆடியது ஆட்டம் அல்ல மேஜிக்! #RCBvDD
ஐந்தே டாட் பால்... 39 பந்துகளில் 90 ரன்... டி வில்லியர்ஸ் ஆடியது ஆட்டம் அல்ல மேஜிக்! #RCBvDD

டெஸ்ட் கிரிக்கெட்டோ, ஒன்டே மேட்ச்சோ, டி-20யோ, எந்த ஃபார்மட்டாக இருந்தாலும், டி வில்லியர்ஸ் களத்தில் இருந்தால், சூழல் பரபரப்பாக இருக்கும். பெங்களூருவில் நேற்று அப்படியொரு சூழலை ஏற்படுத்தினார் டி வில்லியர்ஸ்.

ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்தார்; ரிஷப் பன்ட் ஆட்டத்தை கோலியே கைதட்டி பாராட்டினார். கோலியை டிரென்ட் போல்ட் ஒரு மிராக்கிள் கேட்ச்சில் வெளியேற்றினார்; ஜேசன் ராய் விக்கெட்டை சாஹல் சொல்லிவைத்து தூக்கினார். இவர்கள் எல்லோருமே நாயகர்கள் எனில், இவர்கள் எல்லோருக்கும் நாயகன் ஏ பி டி வில்லியர்ஸ். சந்தித்த 39 பந்துகளில் ஐந்து டாட் பால். மீதமுள்ள 34 பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள், பத்து பவுண்டரிகள் விளாசி, ஐ.பி.எல் வரலாற்றில் சேஸிங்கில் தன் அதிகபட்சத்தைப் பதிவுசெய்து, பெங்களூரு ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவைத்தார் டி வில்லியர்ஸ். ஆம், டி வில்லியர்ஸ் ஆடியது ஆட்டம் அல்ல மேஜிக். 


புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் இருந்த டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆர்.சி.பி கேப்டன் கோலி ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார். `சர்ஃபராஸ் கானை ஏன் ரீடெய்ன் செய்தனர்’ என புலம்பியவர்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக, மனன் வோராவை களமிறக்கினார் கோலி. `இந்த டோர்னமென்ட்டில் நாங்கள் இரண்டு முறை 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து விட்டோம்’ எனப் புலம்பிய கெளதம் கம்பீர், முகமது ஷமிக்குப் பதிலாக ஹர்ஷல் படேலை டிக் செய்தார். 

உமேஷ் யாதவ் மீண்டும் ஒருமுறை தன் முதல் ஸ்பெல்லில் விக்கெட் எடுத்தார். ஷார்ட் பிட்ச் பந்தில் புல் ஷாட் அடிக்க முயல, அது டாப் எட்ஜாக, சாஹல் அதை ஈஸி கேட்ச் பிடிக்க, கெளதம் கம்பீர் கதை 3 ரன்களிலேயே முடிந்தது. கேப்டன் அவுட்டானதும் ஜேசன் ராய் தடுமாற்றத்துடனேயே இருந்தார். சாஹல் ஒரே லைனில் வீசிய பந்தைத் தொடவே பயந்தார். தவிர, இதற்கு முன் 22 டி-20 போட்டிகளில் 12 முறை லெக் ஸ்பின்னர்களிடம் அவுட்டாகியுள்ளார் ஜேசன் ராய் என்ற தகவலும் விராட் கோலி முன் வைக்கப்பட்டிருந்தது. ஆக, அப்போதே தெரிந்துவிட்டது ஜேசன் ராய் விக்கெட் சாஹலுக்குத்தான் என்பது. எதிர்பார்த்ததுபோலவே, சாஹல் தன்னுடைய இரண்டாவது ஓவரில் ஜேசன் ராயை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். 


பொதுவாக, ஹிட்டர்களுக்கு எதிராக அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப்பில் பிட்ச் செய்து டர்ன் செய்யும் சாஹல், இந்தமுறை மிடில் ஸ்டம்ப்பில் பிட்ச் செய்து ஜேசன் ராயை கட் ஷாட் அடிக்கத் தூண்டினார். முந்தைய பந்துகளில் டர்ன் அதிகமாக இருந்ததால், இந்தமுறையும் பந்து சுழலும் என எதிர்பார்த்தார் ஜேசன் ராய். ஆனால், டர்ன் செய்வதற்குப் பதிலாக வேகத்தை மட்டுமே கூட்டினார் சாஹல். பந்து லெக் ஸ்டம்ப் லைனில் பிட்ச்சானது. லைன் மட்டுமல்ல லென்த்தையும் கொஞ்சம் மாற்றியிருந்தார். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. ஜேசன் ராய் (5 ரன்கள்) கிளீன் போல்டு. 

பவர்பிளே முடிவில் டெல்லியின் ஸ்கோர் 28/2. இந்த சீசனில் பவர்பிளேவில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவே. பவர்பிளே மட்டுமல்ல, அடுத்த நான்கு ஓவர்களிலும் ரன்ரேட் எகிறவில்லை. பத்தாவது ஓவர் முடிவில் டெல்லியின் ஸ்கோர் 58/2. இதற்கு ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் சேர்ந்து 26 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்ததும், சாஹல் – உமேஷ் கூட்டணியின் அட்டகாசமான பெளலிங்கும் காரணம். முந்தைய போட்டிகளில் உமேஷ் யாதவ் டெத் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததால், பத்து ஓவர்களிலேயே அவரது கோட்டாவை முடிக்கவைத்த கோலியின் முடிவும் பாராட்டுக்குரியது. 


`எப்படியும் இந்த மேட்ச் ஜெயிச்சே ஆகணும்’ என வெறியோடு இருந்த விராட் கோலி கவர் திசையிலும், `ஏலியன்’ டி வில்லியர்ஸ் மிட் ஆஃப்  திசையிலும் நின்றிருந்தனர். தவிர, பெஸ்ட் ஃபீல்டர்கள் சரியான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர். அந்தளவு ஃபீல்டிங் பக்கா. இது, ஜேசன் ராய் பாயின்ட்டில் தட்டிவிட்டு ரன் எடுக்க முயன்றபோது, அங்கிருந்து மன்தீப் direct hit  அடித்தபோதே தெரிந்துவிட்டது. 


முதல் பத்து ஓவர்களில் அடக்கி வாசித்த ஷ்ரேயாஸ், ரிஷப் பன்ட் ஜோடி அதற்குப் பின் அடித்து ஆடத் தொடங்கியது. இந்திய அணிக்காக பவர்பிளே ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் பந்தைக் குறிவைத்து வெளுத்தார் ஷ்ரேயாஸ் ஐயர். அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டு, அரைசதம் கடந்தார். டெல்லி அணியினர் எழுந்துநின்று கைதட்டினர். முதன்முறையாக டெல்லி இந்த மேட்ச்சில் நிமிர்ந்து நின்ற தருணம் அது. ஆனால், அதே ஓவரில் ஆஃப் ஸ்டம்பிலிருந்து தள்ளி, wide செல்வது போல இருந்த பந்தைத் தூக்கி அடிக்க நினைத்து கேட்ச் கொடுத்தார் ஷ்ரேயாஸ். 31 பந்துகளில் 52 ரன்கள். டீசன்ட்டான பேட்டிங். அடுத்து வந்த மேக்ஸ்வெல் தன் பிரத்யேக ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டில் வீழ்ந்தார். ஆனால், ரிஷப் பன்ட் அதே ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் தேர்ட் மேன் ஏரியாவில் சிக்ஸர் பறக்கவிட்டார். அரைசதமும் கடந்தார்.

தெவேத்தியாவை எதிர்முனையில் வைத்துக்கொண்டு ரிஷப் பன்ட் ஆடியதுதான் ஆட்டம். யார் போட்டாலும் சராசரியாக இரண்டு சிக்ஸர்கள் விரட்டினார். பவர்பிளேவில் ரன்களைக் கட்டுப்படுத்திய ஆர்.சி.பி, மிடில் ஓவரில் ரன்களைக் கட்டுப்படுத்திய ஆர்.சி.பி, டெத் ஓவரில் ரன்களை  விட்டுக் கொடுத்தது. இதற்கு, 12 ஓவர் முடிவிலயே உமேஷ் தன் கோட்டாவை முடித்ததும், வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்களை முடித்ததும் காரணம். அதோடு, கோலியின் மிஸ் கால்குலேஷனால், சாஹல் ஒரு ஓவரை கடைசிவரை வீசமுடியாமலேயே போய்விட்டது. இதனால் டெத் ஓவர்களில் கிறிஸ் வோக்ஸ், முகமது சிராஜை நம்ப வேண்டியிருந்தது. கிறிஸ் வோக்ஸ் வீசிய 19-வது ஓவரில் ரிஷப் பன்ட்டிடம் இருந்த ஏபிடி வெளிப்பட்டார். சுற்றிச் சுழன்று அவர் அடித்ததெல்லாம் பவுண்டரியைக் கிளியர் செய்தது. 


`லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்… உங்கள் பணியை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு இந்த ஆட்டத்தைப் பாருங்கள்’ என வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே உணர்ச்சிவப்பட்டார் எனில், ரிஷப் பன்ட்டின் ஷாட்களை `Skilful, classy, wounderful execution’ என பாராட்டினார் மைக்கேல் கிளார்க். ஆனால், அந்த இன்னிங்ஸ், ஆட்டம் முடிய 2 பந்துகள் இருந்தபோது முடிவுக்கு வந்தது. ரிஷப் பன்ட் 48 பந்துகளில் 85 ரன்கள் அடித்து வெளியேறியபோது பவுண்டரி லைனில் இருந்த விராட் கோலியே கைதட்டி பாராட்டினார். 20 ஓவர் முடிவில் டெல்லி 174/5 ரன்கள் எடுத்தது.

சர்ஃபராஸுக்குப் பதிலாக களமிறங்கிய மனன் வோராவும் கோலியை ஏமாற்றினார். 18 ரன்கள் எடுத்திருந்தபோது டி காக் ரன் அவுட். பவர் பிளே முடிவில் பெங்களூரு 43/2. டி வில்லியர்ஸ் – கோலி என உலகின் தலைசிறந்த இரு பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப். இறங்கிய முதல் பந்தில் இருந்தே அடிப்பதுதான் ஏபிடி பியூட்டி. நதீம் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து மிரட்டினார் அந்த ஏலியன். 9 பந்துகளில் 23 ரன்கள். அதில் ஐந்து பவுண்டரி, அதில் மூன்று ஸ்வீப் ஷாட் மூலம் வந்தவை. 


 டி வில்லியர்ஸ் அடிக்க நினைத்தால் அடிதான். அது எந்த பெளலராக இருந்தாலும் சரி, பந்து எந்த லைனில் வந்தாலும் சரி, எந்த லென்த்தில் வந்தாலும் சரி. நதீம் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த டி வில்லியர்ஸ், தெவேத்தியா பந்தில் டீப் மிட்விக்கெட் திசையில் சிக்ஸர் பறக்கவிட்டார். பந்து மேற்கூரையில் பட்டு தெறித்தது. பொதுவாக, கோலி ஸ்ட்ரைக்கர் எண்டில் இருப்பதையே விரும்புவார். ஆனால், ஸ்ட்ரைக்கர் எண்டில் டி வில்லியர்ஸ் இருக்கிறார், அதுவும் ஃபார்மில் இருக்கிறார் என்பதால், அவரை ஆட விட்டு வேடிக்கை பார்த்தார் கோலி.


கோலியின் விக்கெட்டை எடுக்க ஃபீல்டர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டியது அவசியம். இந்தமுறை டிரென்ட் போல்ட் அந்த முயற்சியைச் செய்தார். ஹர்ஷா படேல் புல்டாஸாக வீசியதை ஃபிளிக் செய்தார் கோலி. பந்து டீப் ஸ்கொயர் லெக் திசையில் பறந்து செல்கிறது. அங்கிருந்த போல்ட் ஜம்ப் செய்து வலது கையில் பந்தைப் பிடித்து விட்டார். ஆனால், அவரால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. இடது காலை மட்டும் தரையில் ஊன்றி, மார்பை தரையில் பதித்து, பவுண்டரி அட்டையை முத்தம் கொடுப்பது போல விழுந்து கிடக்கிறார். முதன்முறை பார்க்கும்போது அவரது முகம் பவுண்டரியைத் தொட்டது போல இருந்தது. ஆனால், தொடவில்லை. முகம் மட்டுமல்ல, உடலின் எந்தப் பாகமும் எல்லையைத் தொடவில்லை. கேட்ச். அட்டகாசமான கேட்ச். சென்சேஷனல் கேட்ச். Catch of the tournament… கோலியால் நம்பமுடியவில்லை. எதிரில் இருந்த டி வில்லியர்ஸால் நம்பமுடியவில்லை. எதிரணி கேப்டன் கம்பீரால் நம்பமுடியவில்லை. அம்பயர்களால் நம்பமுடியவில்லை. ரசிகர்களால் நம்பமுடியவில்லை. நம்பித்தான் ஆக வேண்டும். அது அவுட். கோலி 30 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த பார்ட்னர்ஷிப் பிரிந்தது. ஆனாலும், டி வில்லியர்ஸ் களத்தில் இருப்பதால் ரசிகர்கள் நம்பிக்கையிழக்கவில்லை. டி வில்லியர்ஸும் ஏமாற்றவில்லை.


டெஸ்ட் கிரிக்கெட்டோ, ஒன்டே மேட்ச்சோ, டி-20யோ, எந்த ஃபார்மட்டாக இருந்தாலும், டி வில்லியர்ஸ் களத்தில் இருந்தால், சூழல் பரபரப்பாக இருக்கும். பெங்களூருவில் நேற்று அப்படியொரு சூழலை ஏற்படுத்தினார் டி வில்லியர்ஸ். டீப் மிட் விக்கெட், டீப் ஸ்கொயர் லெக், எக்ஸ்ட்ரா கவர், லாங் ஆஃப், தேர்ட் மேன் என ஏரியாவுக்கு ஒன்று வீதம் எல்லா திசைகளிலும் சிக்ஸர் அடித்திருந்தார். அவர் 4 அடிக்காத ஏரியாவே இல்லை. ஷ்ரேயாஸ், ரிஷப் பன்ட் சிறுகச் சிறுக சேகரித்த ரன்களை, கிளாசிக் இன்னிங்ஸை மடார் மடார் என அடித்து காலி செய்தார் ஏபிடி. டெல்லிக்கு மீண்டும் ஒரு தோல்விப் பாதைக்கு வழி காட்டிக் கொண்டிருந்தார். பெங்களூரு ஜெயிக்கும் என்று தெரியும். எத்தனை பந்துகளை மிச்சம் வைத்து, எத்தனை விக்கெட் வித்தியாசத்தில் ஜெயிக்கும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே எஞ்சியிருந்தது. 


முடிவில், 12 பந்துகளை மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ஆர்.சி.பி. 39 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 90 ரன்கள் எடுத்து, , 230.76 ஸ்ட்ரைக் ரேட் வைத்து, ஆட்ட நாயகன் விருதை வென்றார் டி வில்லியர்ஸ். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது ஆர்.சி.பி. மேட்ச் முடிந்தபின் கோலி, ``டி வில்லியர்ஸ் எப்போதும் நம் முகத்தில் புன்னகையை வரவைப்பார்’’ என்றார்.  அது பொய்யில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு