Published:Updated:

அன்று தோனியுடன் செல்ஃபிக்கு பயந்தவர்... இன்று செய்தது மெர்சல்' - யார் இந்த பில்லிங்ஸ்?

அன்று தோனியுடன் செல்ஃபிக்கு பயந்தவர்... இன்று செய்தது மெர்சல்' - யார் இந்த பில்லிங்ஸ்?
அன்று தோனியுடன் செல்ஃபிக்கு பயந்தவர்... இன்று செய்தது மெர்சல்' - யார் இந்த பில்லிங்ஸ்?

அன்றைய ஐபிஎல் ஏலத்தில், பரபரப்பு முழுவதுமாக அடங்கியிருந்தது. பல கோடி ரூபாயில் நட்சத்திர வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுவிட, மிச்ச சொச்சம் இருந்த விளையாட்டு வீரர்களை எல்லோரும் ஏலத்தில் எடுத்துக்கொண்டிருந்தார்கள். சாம் பில்லிங்ஸின் பெயர் ஏலத்தில் வந்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சாம் பில்லிங்ஸ், 2016-2017 ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியவர். ஆனால், `சென்னையின் மிடில் ஆர்டரும் ஸ்டிராங்காக இருக்கிறது. தோனியும் விக்கெட் கீப்பராக இருக்கிறார்' என சாம் பில்லிங்கை ஏலத்தில் எடுக்க யோசித்தது சென்னை.

`1 கோடி ரூபாய் அடிப்படை விலை' என நிர்ணயம் செய்யப்பட்ட சாம் பில்லிங்ஸை, அதே 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தின் இறுதியில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கட்டக்கடைசியாக எடுக்கப்பட்டவர்தான்  இப்போது கொல்கத்தா அணியைப் பதம்பார்த்தவர். வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியிலேயே சாம் பில்லிங்ஸ் வெடித்த வெடி ஒவ்வொன்றும் சரவெடி. 

52 பந்துகளில் 103 ரன் தேவை என்ற நிலையில்தான், சாம் பில்லிங்ஸ் சேப்பாக்கம் மைதானத்துக்குள் பேட்டோடு நுழைந்தார். சுரேஷ் ரெய்னா அவுட்டானதால் உள்ளே வந்தவருக்கு எதிர்முனையில் பார்ட்னர் அணியின் கேப்டன் தோனி. அப்போது சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் பந்துவீசிக்கொண்டிருந்தார்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்குப் பொதுவாகவே ஸ்பின்னர்கள் என்றால் அலர்ஜி. அந்த அலர்ஜி சாம் பில்லிங்ஸுக்கும் உண்டு. நரேனின் பந்துகளை மிகவும் கவனமாக எதிர்கொண்ட பில்லிங்ஸ், அடுத்து வந்த சாவ்லாவை உரசிப்பார்த்தார். சாவ்லாவை எதிர்கொண்ட முதல் பந்தையே கிரீஸைவிட்டு விரட்டி பெளண்டரிக்கு வெளுத்தார் சாம். இந்த நம்பிக்கைதான் அவரை பியுஷ் சாவ்லாவின் அடுத்தடுத்த பந்துகளையும் அசால்டாக எதிர்கொள்ளும் துணிச்சல் கொடுத்தது.  எதிர் திசையில் கேப்டன் தோனி குல்தீப் யாதவை வெளுக்க, ஸ்பின்னர்களின் ஓவர்கள் கிட்டத்தட்ட முடிந்தன. ஆனால், 24 பந்துகளில் 51 ரன் தேவை என்னும் முக்கியமான சூழலில் ஆட்டம் இழந்தார் தோனி. 

புதிதாக களத்துக்குள் வந்தவர் ஜடேஜா. அதனால் அடித்து ஆடும் முழு பொறுப்பும் பில்லிங்கிஸிடமே வந்தது. ஸ்பின்னர்களின் ஓவர்கள் கிட்டத்தட்ட முடிந்து பில்லிங்ஸ் எதிர்பார்த்ததுபோல வேகப்பந்து வீச்சாளர்களின் கைகளுக்குப் பந்து வந்தது. `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பில்லிங்ஸ்' என்பதுபோல வேகப்பந்து வீச்சாளர்களின் ஒவ்வொரு பந்தையும் அவர் எதிர்கொண்டவிதம் அசாத்தியமானது. குரானின் பந்துகளை அடித்து ஆடியவர், ரஸலின் பந்துகளைப் பறக்கவிட்டார். கவர், ஸ்கொயர் லெக், ஃபைன் லெக், லாங் ஆன், மிட் விக்கெட் என 5 சிக்ஸர்கள் எல்லா திசைகளிலும் பறந்தன. எல்லாமே மிகச்சிறந்த கிரிக்கெட்டிங் ஷாட்கள். ஒன்றுகூட எட்ஜ் ஆகி, ஸ்லிப் ஆகி பெளண்டரிக்குப் பறந்ததல்ல.

26 வயதான சாம் பில்லிங், இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸுக்குக் கொடுத்திருக்கும் பரிசு. சென்னை அணிக்காக ஏலத்தில் சாம் பில்லிங்ஸ் எடுக்கப்பட்டபோது, சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம், ஒரு தகவலை ரீ-ட்வீட் செய்தது. `அன்று தோனியுடன் செல்ஃபி எடுக்க பயந்த சாம் பில்லிங்ஸ், இன்று தோனி தலைமையில் விளையாடப்போகிறார்' என்றது அந்த ட்வீட். ஆமாம், அன்று பயந்தவர் இன்று தோனிக்கே பாடம் எடுத்தார். தோனி சிங்கிள்ஸில் கவனம் செலுத்த பெளண்டரிகளையும், 2 ரன்னையும் மாறி மாறி எடுத்து அணியின் பிரஷரையும், தோனியின் பிரஷரையும் குறைத்தார் பில்லிங்ஸ். தோனி வெளியேறியப் பிறகு தோனி இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அதற்கு மேலும் செய்தார். பில்லிங்ஸின் சிக்ஸர்கள் ஒவ்வொன்றையும் பார்த்து தோனியே மிரண்டுபோனார். 

``நீங்கள் உங்கள் மனதுக்குள் வெற்றிக்காக ப்ளான் ஏ, ப்ளான் பி, ப்ளான் சி என நிறைய ஆப்ஷன்கள் வைத்திருக்கலாம். ஆனால், நீங்கள் உங்கள் மீது நம்பிக்கைவைத்தால்தான் வெற்றிபெற முடியும். தோனியுடன் களத்தில் நின்று விளையாடியது மிகப்பெரிய அனுபவம். பிரஷர் அதிகமாகிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு டாட் பாலையும் விட்டுவிடக் கூடாது என ஓடிக்கொண்டேயிருந்தார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸில், அதுவும் தோனி போன்ற தலைவர் இருக்கும் அணியில் ஆடுவது எனக்கு வாழ்நாள் அனுபவம்'' என்றார் சாம், வெற்றிக்குப் பிறகு!

கொல்கத்தா அணிக்கு எதிராக 2016-ம் ஆண்டிலும் இதேபோல் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் பில்லிங்ஸ். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய பில்லிங்ஸ், அப்போது 34 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அசத்தியவர். இன்னொரு விஷயம் தெரியுமா? தோனியின் ஜெர்சி நம்பர் 7. பில்லிங்ஸ்  ஜெர்சி நம்பர் 77!