Published:Updated:

பெங்களூரை பங்கமாக்கிய பார்ட் டைமர்கள்... ஈடனில் படபடத்த ஊதா நிறக் கொடி! #KKRVsRCB #IPL2018

பெங்களூரை பங்கமாக்கிய பார்ட் டைமர்கள்... ஈடனில் படபடத்த ஊதா நிறக் கொடி! #KKRVsRCB #IPL2018
News
பெங்களூரை பங்கமாக்கிய பார்ட் டைமர்கள்... ஈடனில் படபடத்த ஊதா நிறக் கொடி! #KKRVsRCB #IPL2018

பெங்களூரை பங்கமாக்கிய பார்ட் டைமர்கள்... ஈடனில் படபடத்த ஊதா நிறக் கொடி! #KKRVsRCB #IPL2018

டாஸ் போட்டவுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் கோலியிடம்  டீமைப் பற்றிச் சொல்லுங்கள் எனக் கேட்கப்படுகிறது. `இதுதான் பத்தாண்டுகளில் எங்களுக்குக் கிடைத்த பெஸ்ட் அணி' என்கிறார். உண்மைதான். மின்னல் வேகத்தில் ரன்களைக் குவிக்கும் மூன்று வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள், ஒரு வேர்ல்ட் க்ளாஸ் ஆல்ரவுண்டர், கோலி, மந்தீப், சர்ஃபராஸ் கான் என நம்பிக்கை தரக்கூடிய லோக்கல் பேட்ஸ்மேன்கள், போதாக்குறைக்கு உமேஷ் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சாஹல் என இந்திய அணியின் பவுலர்கள் வேறு! ஆக, பலம் குறைந்த கொல்கத்தா அணியை எளிதாக வீழ்த்திவிடும் என கோலி மட்டுமல்ல பெரும்பான்மையான ரசிகர்கள் நம்பினார்கள். ஈடன் கார்டன் மட்டும் அவர்களுக்கு வேறொரு பதில் வைத்துக்கொண்டு காத்திருந்தது. #KKRVsRCB

டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் ஆட பெங்களூரு அணியை அழைத்தது. களமிறங்கினார்கள் மெக்கல்லமும் டி காக்கும்! ஐ.பி.எல் அணிகளிலேயே ஆபத்தான ஓபனிங் பேட்ஸ்மேன்களைக் கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ்தான். அதை நிரூபிக்கும் விதமாக முதல் ஓவரிலேயே 14 ரன்களை பறக்கவிட்டார் மெக்கல்லம். ஃபாஸ்ட் பவுலிங்கில் பந்து சரியாக பேட்டுக்கு வருவதை பார்த்த நைட்ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் சட்டென பியூஷ் சாவ்லாவிடம் பந்தைக் கொடுத்தார். பந்து மேல் பலன்! டி காக் அவுட்! அதன்பின் களமிறங்கிய கோலி தடுமாறினாலும் மெக்கல்லம் அடித்து ஆடி ரன்ரேட்டை தக்கவைத்தார். 

இப்போதும் டி.கேவிற்கு கைகொடுத்தது ஸ்பின்தான். சுனில் நரைனின் ப்ளோட்டர் டெலிவரியில் க்ளீன் போல்டானார் மெக்கல்லம். ஆனாலும் 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து தன் பங்கை சரியாக செய்துவிட்டே வெளியேறினார். அடுத்து வந்தது எல்லா கிரிக்கெட் ரசிகர்களின் பேவரைட்டுமான டிவில்லியர்ஸ். குல்தீப் யாதவ் ஓவரில் இரண்டு, நரைன் ஓவரில் ஒன்று என அடுத்தடுத்து மூன்று சிக்ஸ்கள். மூன்றும் ஒவ்வொரு திசையில்! அதற்கடுத்து ஒரு காலத்தில் தாதாவாக இருந்த மிட்செல் ஜான்சனின் பந்துகளையும் பதம் பார்த்தார். க்ரீஸில் நன்றாக செட்டிலாகிவிட்ட டிவில்லியர்ஸை டிஸ்டர்ப் செய்ய பார்ட் டைம் ஸ்பின்னரான நிதிஷ் ராணாவை கொண்டுவந்தார் டி.கே. ப்ளான் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. டாப் எட்ஜில் பட்டு எகிறிய பந்து ஜான்சன் கையில் தஞ்சமடைந்தது. அடுத்த பந்து கோலிக்கு. கண்ணை மூடித் திறப்பதற்குள் ஸ்டம்ப்பில் லைட் மினுக் மினுக்கென எரிய சில வினாடிகள் புரியாமல் முழித்தார் கோலி. சர்ரென ஃபுல் லென்த்தில் உள்ளே வந்த ராணாவின் பால் கோலிக்கு சான்ஸே கொடுக்காமல் ஸ்டம்ப்பை தகர்த்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முக்கியமான கட்டத்தில் இரண்டு முக்கியமான பேட்ஸ்மேன்கள். மந்தீப்பும் சர்ஃப்ராஸ் கானும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய, ஒருகட்டத்தில் சர்ஃப்ராஸ் அவுட்! 160-ஐ கூட தாண்டாது என்ற நிலையில் கடைசி ஒவரில் 16 ரன்கள் எடுத்து 177 என்ற டார்கெட்டை பிக்ஸ் செய்தது ராயல் சேலஞ்சர்ஸ். பேட்டிங்கில் அசுர பலம்கொண்ட ஒரு அணி 180-ஐ தாண்டாதது ஏமாற்றம்தான். பெங்களூருவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரையும் காலி செய்தது ஸ்பின் என்பதால் சாஹலைக் கொண்டு பவுலிங்கை தொடங்கினார் கோலி. But, Narine had other ideas!

வீசப்பட்ட முதல் பந்தே பவுண்டரி தொட்டது. இரண்டாவது பந்து சிக்ஸ்! முதல் ஓவர் முடிவில் 12 ரன்கள். அடுத்த ஓவரில் வோக்ஸை எதிர்கொண்டு ஆடிய க்றிஸ் லின் தட்டுத் தடுமாறி இறுதியில் விக்கெட்டையும் பறிகொடுத்தார். மூன்றாவது ஓவரில் எல்லாருடைய எதிர்பார்ப்புமான வாஷிங்டன் சுந்தர் பத்து ரன்கள் விட்டுக்கொடுக்க ரன்ரேட் எட்டைத் தாண்டியது. அதற்கடுத்த இரண்டு ஓவர்களும் நரைன் ஆடியது ருத்ரதாண்டவம். கவர், மிட் ஆஃப், லாங் ஆன் என எல்லாப் பக்கங்களிலும் நான்கும் ஆறுமாக சிதறவிட்டார். வோக்ஸ் போட்ட நான்காவது ஓவரில் 20 ரன்கள், சுந்தர் போட்ட ஐந்தாவது ஓவரில் 19 ரன்கள். இந்த 39 ரன்களில் நரைன் பங்கு 37 ரன்கள். விளைவு 17 பந்துகளில் அரைசதம். 17 பந்துகளில் அரைசதம் எடுப்பது நரைனுக்கு இது இரண்டாவது முறை. முதல் முறையும் ஆர்.சி.பிதான் எதிரில் நின்றது. 

கொல்கத்தாவுக்கு கைகொடுத்த ஸ்பின் தங்களுக்குப் பாதகமாக மாறுவதை உணர்ந்த கோலி,  உமேஷ் யாதவை கொண்டுவந்தார். கேப்டனின் ஆசையை புல் டாஸ் போட்டு நிறைவேற்றினார் உமேஷ். நரைனின் பேட் அண்டர் எட்ஜில் பட்டு ஸ்டம்ப்பை தொட்டது பந்து. கோலியின் முகத்தில் ஆசுவாசம். 19 ரன்களில் 50 ரன்கள் - கொல்கத்தா எதிர்பார்த்த படபட பட்டாசு இதுதான். Job Done Narine! உமேஷின் அடுத்த ஓவரில் உத்தப்பாவும் வீழ, இரு கேப்டன்களும் நேருக்கு நேர் மோத வேண்டிய நேரம் இது! 

நரைன் புண்ணியத்தில் ரன்ரேட் நன்றாகவே இருந்ததால் நிதானமாக ஆடினார்கள் நிதிஷ் ராணாவும் தினேஷ் கார்த்திக்கும். பிட்ச் வேகப்பந்துக்கு ஈடு கொடுக்க ஷார்ட் பிட்ச் பந்துகளாக போட்டு ரன்ரேட்டை குறைக்க முயன்றார்கள் ஆர்.சி.பி பவுலர்கள். நேற்றைய மேட்சில் ஆர்.சி.பி வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டதில் 70 சதவிகித பந்துகள் ஷார்ட் பிட்ச் பால்கள்தான். அதை தடுத்தாடியவர்கள் சுந்தரின் ஓவரில் மட்டும் அடித்தாட ஆரம்பித்தார்கள். தன் கடைசி ஓவரில் ராணாவை பெவிலியனுக்கு அனுப்பிவிட்டு ஓய்ந்தார் சுந்தர். 4 ஓவருக்கு 48 ரன்கள். சுந்தருக்கு நிச்சயம் இது மறக்கவேண்டிய தினம்தான்.

அதற்கடுத்து வந்த ரிங்கு சிங்கும் சீக்கிரமே அவுட்டாக, ரஸ்ஸலின் சில நிமிட அதிரடியில் மீண்டும் போட்டிக்குள் வந்தது கொல்கத்தா. ரஸ்ஸல் அவுட்டாகும்போது 14 பந்துகளில் 13 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் இருந்தது கொல்கத்தா. தினேஷ் கார்த்திக்கும் வினய்குமாரும் சுபம் போட்டு முடித்து வைக்க, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நைட்ரைடர்ஸ் அணி. 

ஆர்.சி.பி செய்த தவறு:

என்னதான் பெஸ்ட் டீம் என கோலி சொன்னாலும் அதில் ஒரு பெரிய வீக் லிங்க் இருக்கத்தான் செய்கிறது. டி20யில் ஒரே ஒரு ஆல்ரவுண்டரை வைத்துக்கொண்டு களமிறங்குவது எவ்வளவு பெரிய தவறு என ஆர்.சி.பி நேற்று உணர்ந்திருக்கும். நான்கு பவுலர்கள், ஒரு ஆல்ரவுண்டர் என கோலிக்கு இருந்தது ஐந்தே ஆப்ஷன்கள்தான். எதிரணி அடித்தாலும் வெளுத்தாலும் அதே ஐந்து பவுலர்கள்தான் பந்துவீசியாக வேண்டும். பேக்கப் பவுலர்கள் கைகொடுப்பது இந்த மாதிரியான நெருக்கடி தருணங்களில்தான். பார்ட் டைம் பவுலர்களின் லைன் அண்ட் லென்த்தை பேட்ஸ்மேன்கள் கணிப்பதற்கு கொஞ்சம் நேரமெடுக்கும். கொல்கத்தாவின் நிதிஷ் ராணா, கோலியை வீழ்த்தியது அப்படித்தான். அடுத்த ஆட்டத்தில் பெங்களூரு அணி கவனிக்கவேண்டிய அம்சம் இது. போக, பார்ட் டைம் ஓபனரான நரைன்தான் கோலியின் கனவைக் கலைத்ததும்!

பிரஷர்... பிரஷர்... பிரஷர்!

ஐ.பி.எல்லின் முதல் மூன்று ஆட்டங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. மூன்று ஆட்டங்களிலும் டாஸ் வென்ற அணி பவுலிங்கைதான் தேர்ந்தெடுத்தது. சேஸிங்கில் வெற்றியும் பெற்றுள்ளது. வென்ற மூன்று அணி கேப்டன்களுக்கு மேலும் எக்கச்சக்க பிரஷர் குவிந்துகிடந்தது. கம்பேக் சீசனை வெற்றியோடு தொடங்கவேண்டிய நிர்பந்தம் தோனிக்கு. சென்னை கைவிட்ட நிலையில் பஞ்சாப் அணியை வழிநடத்துவதன் மூலம் தன் மதிப்பை புரியவைக்கவேண்டிய பிரஷர் அஸ்வினுக்கு. கம்பீரின் வெற்றி வெற்றிடத்தை வெற்றியால் இட்டு நிரப்பவேண்டிய அழுத்தம் தினேஷ் கார்த்திக்கிற்கு. அதை மூவருமே கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இந்த வெற்றிநடை தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.