Published:Updated:

14 பந்தில் அரைசதம், 17 வயது வீரனின் அறிமுகம்... பஞ்சாப் அணிக்கு ரெக்கார்ட் தினம்! #KXIPvDD

14 பந்தில் அரைசதம், 17 வயது வீரனின் அறிமுகம்... பஞ்சாப் அணிக்கு ரெக்கார்ட் தினம்! #KXIPvDD
14 பந்தில் அரைசதம், 17 வயது வீரனின் அறிமுகம்... பஞ்சாப் அணிக்கு ரெக்கார்ட் தினம்! #KXIPvDD

14 பந்தில் அரைசதம், 17 வயது வீரனின் அறிமுகம்... பஞ்சாப் அணிக்கு ரெக்கார்ட் தினம்! #KXIPvDD

அமித் மிஷ்ரா வீசிய அந்தப் பந்து ராகுல் பேட்டில் பட்டதும் விர்ரென பௌலரைக் கடந்து சென்றது. பேட்டின் வேகம், ராகுல் கொடுத்த பலம், அதை சீக்கிரமே லாங் ஆன் பவுண்டரியை அடையச் செய்தது. பேட்டை உயர்த்திக் கொண்டாடினார் ராகுல். மொத்த மொஹாலி அரங்கமும் உறைந்துபோயிருந்தது. கடைசி 10 நிமிடங்களாகவே மொஹாலி அரங்கம் அந்த நிலையில்தான் இருந்தது. ஏனெனில், மிஷ்ரா போட்டுக்கொண்டிருந்தது 3-வது ஓவர்தான். ஆம், மூன்றாவது ஓவர் முடிவதற்கு முன்னமே அரைசதம் கடந்துவிட்டார். அதுவும் 14 பந்துகளில்! ஐ.பி.எல் வரலாற்றின் அதிவேக அரைசதம்...!

167 என்ற டார்கெட்டை சேஸ் செய்த பஞ்சாப் அணிக்கு அப்படி ஒரு மாஸ்  ஓப்பனிங் கொடுத்தார் ராகுல். போல்ட் வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்து எட்ஜாகி தற்செயலாக சிக்ஸ் ஆனது. அங்கு ஆரம்பித்தது ராகுலின் தாண்டவம். அடுத்த பந்து, எக்ஸ்ட்ரா கவர் திசையில் பவுண்டரி. அடுத்த பந்தும் 4. முதல் ஓவரிலேயே 16 ரன்கள் எடுத்து மிரட்டினார். அடுத்த ஓவர் முகம்மது ஷமி... மூன்றாவது பந்தில், மீண்டும் ஃபைன்-லெக் திசையில் சிக்ஸ். அடுத்த பால், ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரி ஆனது. இப்படி முதல் இரண்டு ஓவரிலும் வெளுத்துக்கட்ட, மிஷ்ராவைக் கொண்டுவந்தார் கம்பீர்.

ஐ.பி.எல் வரலாற்றில் 134 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் அனுபவ ஸ்பின்னர். அதைப்பற்றியெல்லாம் ராகுல் அலட்டிக்கொள்ளவேயில்லை. முதல் பந்தில் ஓர் அற்புத கவர் டிரைவ். இரண்டாவது பந்தை லாங்-ஆஃப் பக்கம் பறக்கவிட்டார். அடுத்தது ஃபைன் லெக் திசையில் ஒரு சிக்ஸர். நான்காவது பந்தில் மிக்விக்கெட் பக்கம் பவுண்டரி. அதன்பிறகு, லாங் ஆன் பக்கம் பறந்தது  ஐந்தாவது பந்து! ராகுலின் அரைசதம். 'ஜஸ்ட் லைக் தட்' 2.5 ஓவர்களில் ஐம்பதைக் கடந்தது பஞ்சாப்! ராகுல் அடித்த அடியைப் பார்த்து பலருக்கும் தோன்றியது இதுதான் - 'கெய்ல் தேவையில்லை போலிருக்கிறதே!' ஆம், 'யுனிவர்சல் பாஸ்' கெய்ல் ஆட்டத்தில் இல்லை!

டாஸ் வென்றதும் பிளேயிங் லெவனில் விளையாடப்போகும் வெளிநாட்டு வீரர்கள் பற்றி பஞ்சாப் கேப்டன் அஷ்வின் சொன்னது, பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அந்த நால்வர் லிஸ்டில் கிறிஸ் கெய்ல் இல்லை. ஸ்டோய்னிஸ், மில்லர், ஆண்ட்ரே டை, அண்ட்... முஜீப் உர் ரஹ்மான். யார் அது. மிகவும் புதிய பெயர். இதுவரை கேள்விப்படாத பெயர். யார் அந்த முஜீப் உர் ரஹ்மான்..? 

ஆப்கானிஸ்தான் வீரர்... ஸ்பின்னர்... அதையும் தாண்டி ஐ.பி.எல் வரலாற்றின் மிக இளம் வீரர்! ஆம், நேற்று இந்தப் போட்டியில் அவர் அறிமுகமானபோது அவருக்கு வயது 17 வருடம், 11 நாள்கள்! கிறிஸ் கெய்ல் போன்ற ஜாம்பவானை வெளியில் அமரவைத்துவிட்டு, இவ்வளவு இளம் வீரரை எடுப்பதற்கு மிகவும் தைரியம் வேண்டும். அஷ்வின் - அதற்குத் தயங்கவில்லை. ரிஸ்க் எடுத்தார். அது அவருக்கு மிகச்சிறந்த ரிசல்ட் கொடுத்தது. பந்துவீசிய 3-வது பந்திலேயே நம்பர் 1 டி-20 பேட்ஸ்மேன் காலின் முன்றோவை காலி செய்தார். அடுத்து ரிசப் பன்ட்டையும் தன் கூக்ளியால் வீழ்த்தினார். 4 ஓவர்களில், 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள்... ஆசம் அறிமுகம்!

இவர் ஒருபுறம் மிரட்டினாலும், 'தி ஓல்டு ஹார்ஸ்' கம்பீர்... தன் சொந்த ஊர் அணிக்குத் திரும்பியுள்ள கம்பீர்... பட்டையைக் கிளப்பினார். அக்சர் பட்டேல் ஓவரில், தொடர்ந்து 2 பௌண்டரி, 1 சிக்ஸர். பின்னர், முஜீம், ஆண்ட்ரே டை, மோஹித் ஷர்மா என அனைவரின் ஓவரிலும் பௌண்டரிகள் விளாசினார். எல்லாமே கன்ட்ரோலோடு அடிக்கப்பட்ட ஷாட்கள். மிகவும் தெளிவாக தேர்ந்தெடுத்து அடிக்கப்பட்ட ஷாட்கள். மிகவும் சிறப்பாக விளையாடிவந்தவர், முஜீப் செய்த அற்புதமான டைரக்ட் ஹிட்டால் வெளியேற நேர்ந்தது. மற்றபடி, கம்பீர் - பேக் ஆன் ஃபயர்.

டெல்லி டேர்டெவில்ஸ் ரன்ரேட்

கம்பீர் தவிர்த்து, வேறு எந்த டெல்லி வீரர்களும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. ரிசப் பன்ட், கிறிஸ் மோரிஸ் இருவரும் முறையே 28,27 ரன்கள் எடுக்க, டெல்லி அணி 166 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் பௌலர்களில் அஷ்வின், முஜீப் இருவரும் நன்றாகப் பந்துவீசினர். மற்ற பௌலர்கள் ரன் கொடுத்தபோதும், இவர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசியதால்தான் எந்த தருணத்திலும் டெல்லி அணியின் ரன்ரேட் 8.5 ரன்களைத் தாண்டவில்லை. அஷ்வின் லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் என அனைத்து வகையான பந்துவீச்சையும் முயற்சி செய்தார். 4 ஓவர்களில் 23 ரன்கள்.

பௌலிங்கில் அஷ்வின் எடுத்த முடிவுகள் நன்றாக பலன் கொடுத்தது. ஆனால், பேட்டிங்கில் கொஞ்சம் காலை வாரியது. 3.2 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப். மயாங்க் அகர்வால் அவுட்டாகியிருந்தார். கருண் நாயர் இடத்தில், யுவ்ராஜ் சிங் களமிறக்கப்பட்டார். ஆம், ஒன் டவுனில் இறங்கினார் யுவி. ஷார்ட் பால்களுக்கு எதிரான தடுமாற்றம் இன்னும் குறையவில்லை. ரன் அடிக்கத் திணறினார். ராகுல் வெளியேறும்போது அணியின் ரன்ரேட் 13.24. அதன்பின் ரன்ரேட் படபடவெனக் குறைந்தது. கருண் நாயர் ஒருவழியாக அதையெல்லாம் மேனேஜ் செய்துவிட்டார். 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட்டிங் சார்ட்

தியோதர் டிராஃபி தொடரில் கொஞ்சம் சறுக்கியவர் நேற்று மிகவும் நம்பிக்கையுடன் ஆட்டத்தைத் தொடங்கினார். அவர் சந்தித்த முதல் பந்திலேயே, மோரிஸ் வீசிய பந்தை மிட்விக்கெட் திசைக்கு விளாசி பௌண்டரியோடு இன்னிங்ஸைத் தொடங்கினார். அடுத்த ஓவரில், போல்ட் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர். பிறகு முகமது ஷமி ஓவரில் ஹாட்ரிக் ஃபோர். எக்ச்ட்ரா கவர், லாங் ஆன், தேர்ட் மேன் என ஏரியாவுக்கு ஒன்று. அதுவும் தேர்ட் மேன் திசையில், பேட்டின் லாவகமாகச் சுழற்றி அடித்த அந்த மூன்றாவது பௌண்டரி...கிளாஸ்!

மறுபுறம் ஆடிய மில்லர் மெதுவாக ரன் எடுக்க, கொஞ்சம் அவசரம் காட்டினார் கருண், அதன் விளைவாக போல்ட் பிடித்த அட்டகாசமான கேட்ச்சால் வெளியேறினார். ஆனால், அவர் வெளியேறியபோது 26 பந்துகளுக்கு 29 ரன்கள் தேவை என்ற நிலைக்கு எடுத்துச் சென்றார். இவரது இன்னிங்ஸும், ராகுலின் அந்த அதிரடியும் இல்லாவிடில், பஞ்சாப் கொஞ்சம் தடுமாறியிருக்கும். இவர்களின் ஆட்டத்தால், கடைசியில் ஆடிய ஸ்டோய்னிஸ், மில்லர் இருவரும் எந்த நெருக்கடியும் இல்லாமல் நிதானமாக ஆடி ஆட்டத்தை முடித்து வைத்தனர். 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ரன்ரேட்

இந்த சீசனை பஞ்சாப் வெற்றியோடு தொடங்கியுள்ளது. அதோடு அஷ்வினின் கேப்டன்சி பயணமும் வெற்றியோடு தொடங்கியிருக்கிறது. ராகுல் ஆட்டநாயகன். அவருக்கும் இந்த சீசன் சிறப்பாகவே தொடங்கியிருக்கிறது. ஆட்டம் முடிந்ததும் அவர் சொன்னது, "என்னை டெஸ்ட் வீரன் என்று அடையாளப்படுத்தியிருந்தார்கள். இப்போது சாதனைகளை உடைப்பதும், வரலாறு படைப்பதும் என் மகிழ்ச்சி!" 

அடுத்த கட்டுரைக்கு