Published:Updated:

பிராவோவின் 5 சிக்ஸர்கள்... இரண்டு ஓவர்கள்... ஒற்றைக் கால்..! சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயித்தது எப்படி? #CSKvsMI #WhistlePodu

பிராவோவின் 5 சிக்ஸர்கள்... இரண்டு ஓவர்கள்... ஒற்றைக் கால்..!   சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயித்தது எப்படி?  #CSKvsMI #WhistlePodu
பிராவோவின் 5 சிக்ஸர்கள்... இரண்டு ஓவர்கள்... ஒற்றைக் கால்..! சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயித்தது எப்படி? #CSKvsMI #WhistlePodu

வாட்சன், ரெய்னா, ராயுடு, தோனி, ஜடேஜா என விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருந்த நேரம்... வந்துவிழுந்தது ஒரு பிரபல ட்வீட்டரின் ட்வீட்... ''முதியோர் இல்லம் பரவால்லயே... 120 தாண்டிருவாங்க போல...'' ஆமாம் அந்த ட்வீட்டில் உண்மையில்லாமல் இல்லை.  அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் மிகப்பெரிய தோல்வியை சந்திக்காமல் 120 ரன்கள் எடுத்தாலே போதும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், அப்போது எல்லோரும் பிராவோ பிட்ச்சில் இருப்பதையே மறந்துவிட்டார்கள்.

டெத் ஓவர்களில் பந்து வீசுவதாக இருந்தாலும் சரி, பேட்டிங்காக இருந்தாலும் சரி 'நான் இருக்கிறேன்' என்று எப்போதுமே அதிரடி ஆட்டம் ஆடுபவர் பிராவா.  வெறும் மூன்று ஓவர்களே கையில் இருக்கின்றன. இரண்டு விக்கெட்டுகள்தான். வெற்றிக்கு 18 பந்துகளில் 47 ரன்கள் வேண்டும் என்கிற நிலை. யாருமே எதிர்பாராதவகையில் மெக்ளினிகன் வீசிய அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர், 1 பவுண்டரி என மொத்தம் 20 ரன்கள் எடுத்ததார் பிராவோ. வெற்றிக்கு இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் என டார்கெட் சுருங்கியது.

அடுத்த ஓவர்தான் பிராவோவின் தாக்குதல் இன்னும் வெறிகொண்டது. பும்ரா வீசிய இந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் பிராவோ. கடைசிப் பந்தையும் பிராவோ அடிக்கமுயற்சி செய்ய அது கேட்ச் ஆனது. பிராவோ அடித்த அந்த 5 சிக்ஸர்களும், மெக்ளீகன், பும்ரா வீசிய இரண்டு ஓவர்களும்தான் மேட்ச்சின் திருப்புமுனை.

கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில்தான் உள்ளே வந்தார் காயத்துடன் வெளியேறியிருந்த கேதார் ஜாதவ்.  கிட்டத்தட்ட ஒற்றைக்காலில் பேட்டிங் ஆடிய ஜாதவின் பேட்டிங் மிகமுக்கிமானது. கேதர் ஜாதவால் ஓட முடியாது என்பது ஒரு நிலை என்றால் எதிர்முனையில் இம்ரான் தாஹிர் என்பதால் ஓடியும் உபயோகம் இல்லை. ஆறு பந்துகளையும் ஒருவரே எதிர்கொள்ள வேண்டும் என்பதால் பதற்றதைத் தணித்துவிட்டு பெளலரை கவனித்தார் ஜாதவ். முதல் மூன்று பந்துகளையும் ஃபீல்டர்களுக்கு இடையே தட்டிவிடவே முயற்சி செய்தார் ஜாதவ். ஆனால் அதேசமயம் பெளலரின் லைன் அண்ட் லெந்தைக் கணித்துவிட்டார். முஸ்டஃபைசுர் ரஹ்மான் ஒரே லைனிலேயே பந்துவீசுகிறார் என்பதை உணர்ந்துகொண்ட ஜாதவ் நான்காவது பந்தை லாவகமாகப் பின்னால் தட்டி சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். அடுத்தப் பந்து கிளீன் ஷாட்... பவுண்டரி. இப்படித்தான் மும்பையை கடைசி நேரத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்ஸ். 

பிராவோதான் இந்த மேட்ச்சின் ஹீரோ என்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றிக்கு முக்கியமான சில காரணங்கள் இருப்பதுபோலவே தடுமாற்றங்களும் இருந்தன. 

டீம்!

மும்பை பிட்ச்சில் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் ஆடுவதுதான் வழக்கம். ஆனால், டாஸ் வென்றதும் முதலில் பெளலிங்கை தேர்ந்தெடுத்தார் தோனி. இதற்கு முழுக்காரணம் அவர் பெளலிங்கின் மீது வைத்திருந்த நம்பிக்கைதான். பெளலர்கள் 160 ரன்களுக்குள் எதிர் அணியின் டார்க்கெட்டை சுருக்கினால் வெற்றி நிச்சயம் என்பதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் வகுத்திருந்த திட்டம். கிட்டத்தட்ட அதுதான் நடந்தது. டீமைப் பொருத்தவரை ஹர்பஜன், தாஹிர், ஜடேஜா என மூன்று ஸ்பின்னர்கள். அதுப்போலவே வுட், சாஹர், வாட்சன், பிராவோ என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் என பெளலிங் பிரிவைத்தான் ஸ்ட்ராங்காக்கி இருந்தார் தோனி. அதனால்தான் அவர் முதலில் பேட்டிங்கை தேர்தெடுக்காமல் பெளலிங்கை தேர்ந்தெடுத்தார்.

தோனியின் பெளலிங் பிளான்!

ஷேன் வாட்சன், தீபக் சாஹர் இருவரின் ஓப்பனிங் பெளலிங்குமே செம. தீபக் சாஹரின் ஸ்விங்கைப் பார்த்து ரோஹித் ஷர்மாவே மிரண்டார். ஆரம்பித்தில் சில பவுண்டரிகளை ரோஹித் அடித்தாலும் அவருக்கு கான்ஃபிடன்ஸை குலைத்துக்கொண்டேயிருந்தது தீபக் சாஹரின் ஸ்விங். முதல் 6 ஓவர்களை எந்த மாற்றமும் செய்யாமல் சாஹருக்கும், ஷேன் வாட்சனுக்கும் கொடுத்தார் தோனி. ஆனால் 9-வது ஓவருக்குப் பிறகு மார்க் வுட், தாஹிர், பிராவோ, வாட்சன் என இந்த நான்கு பேரையும் மாற்றி மாற்றி பந்துவீசச் செய்தார். பெளலிங் ஆக்‌ஷன் மாறிக்கொண்டேயிருந்ததால் மும்பை பேட்ஸ்மேன்களால் அடித்து ஆடமுடியவில்லை. பிராவோ வீசிய அந்தக் கடைசி ஓவர்தான் பெளலிங்கின் உச்சம். ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா என இரண்டு செட் பேட்ஸ்மேன்கள்... ஆனால் அவர்களால் 5 ரன்கள் மட்டுமே அந்த ஓவரில் அடிக்க முடிந்தது. ஹர்திக் பாண்டியாவின் காலைப் பதம் பார்த்த பிராவோவின் அந்த யார்க்கர்தான் இந்த போட்டியின் #ballofthematch.

சென்னை மீண்டும் ஸ்பின்னர்களையே நம்பியிருக்கிறது என்று எல்லோரும் விமர்சித்தபோதுதான் ஸ்பின்னர்களுக்கு ஓவர்களே தராமல்விட்டார் தோனி. ஜடேஜா ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசினார். ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிருக்குமே இரண்டு ஓவர்கள்தான் கொடுக்கப்பட்டன. வாட்சன், வுட், பிராவோ என வேகப்பந்து வீச்சாளர்களைதான் முழுவதுமாக பயன்படுத்தி மும்பையை கட்டுக்குள் கொண்டுவந்தார் தோனி.

மும்பையின் தவறு!

கீரன் பொலார்ட்டை 20/20 ஸ்பெஷலிஸ்ட் என அணிக்குள் வைத்திருக்கிறது மும்பை. ஆனால் பொலார்டை இறுதி ஓவர்களின்போது பேட்டிங் செய்ய அனுப்பாமல் ஹர்திக்கை அனுப்பியது மும்பையின் சொதப்பல். ஹர்த்திக் ரன்களை அடிக்கவே நிறைய தடுமாறினார். அதே போல் பொலார்டுக்கு ஒரு ஓவர்கூட பந்துவீசவும் வாய்ப்பு தரப்படவில்லை. டெத் ஓவர்களில் பொலார்டை பயன்படுத்தாமல் விட்டனர்.

இந்த வெற்றி போதுமா?

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான வெற்றி என்பது பிராவோ மற்றும் பெளலர்களால் கிடைத்த வெற்றி. மற்றபடி சென்னை சூப்பர் கிங்ஸின் பேட்டிங் படுமோசம். ஷேன் வாட்சன், ரெய்னா, தோனி, ஜடேஜா என யாருமே பார்க்க ஃபார்மில் இல்லாத பேட்ஸ்மேன்களைப் போலவே ஆடினார்கள். மும்பையின் சுழற்பந்து வீச்சாளர் மார்க்கண்டேவின் பந்துவீச்சை சமாளிக்க ஏன் இவ்வளவு திணறல்? முழுக்க முழுக்க ஸ்பின்னர்களை அடித்து ஆடி பயிற்சி பெறும் சென்னை அணிக்கு சுழற்பந்தை சமாளிக்க முடியவில்லை என்பது ஒருவகையில் அவமானம்தான். 

என்ன செய்ய வேண்டும்?

நிச்சயமாக பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். கேதர் ஜாதவ் அடுத்தடுத்தப் போட்டிகளில் விளையாட முடியாத அளவுக்கு காயம் அடைந்திருப்பதால் கேதர் ஜாதவுக்கு பதிலாக ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேனை உள்ளே கொண்டுவரவேண்டும். டுப்ளெஸ்ஸி அணிக்குள் வரவேண்டும். இம்ரான் தாஹிர், ஹர்பஜன் என இரண்டு பேரில் ஓருவர் இருந்தாலே சுழற்பந்து டிபார்ட்மென்ட்டுக்குப் போதுமானதாக இருக்கும் என்பது இந்தப் போட்டியில் தெரிந்துவிட்டது. அதனால் ஸ்பின்னர்களைக் குறைத்துவிட்டு பேட்டிங்கில் தோனி கவனம் செலுத்தவேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக தோனியே மீண்டும் ஃபார்முக்கு வரவேண்டும்.  

அடுத்த மேட்ச்சில் என்ன செய்யப்போகிறார் தோனி?!