Published:Updated:

ஸ்மித், வார்னர், ஸ்டார்க்... இவர்களுக்கு பதிலாக களமிறங்குபவர்களின் பிளஸ், மைனஸ் என்ன?! #IPL2018

ஸ்மித், வார்னர், ஸ்டார்க்..... இவர்களுக்குப் பதிலாக ஐபிஎல்லில் யார் ஆடுகிறார்கள்?

ஸ்மித், வார்னர், ஸ்டார்க்... இவர்களுக்கு பதிலாக களமிறங்குபவர்களின் பிளஸ், மைனஸ் என்ன?! #IPL2018
ஸ்மித், வார்னர், ஸ்டார்க்... இவர்களுக்கு பதிலாக களமிறங்குபவர்களின் பிளஸ், மைனஸ் என்ன?! #IPL2018

கிரிக்கெட் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் ஐ.பி.எல் -11 சீசன் (IPL2018) வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் கோப்பை அறிமுக விழாவுக்குப் பின், இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து களமிறங்க உள்ளது.

ஐ.பி.எல் தொடங்குவதற்கு சில நாட்களே இருக்கும் நிலையில், சில முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகி இருக்கின்றனர். இதனால் கடைசி நேரத்தில் மாற்று வீரர்களை அணிகள் அறிவித்து வருகின்றன. இதில் ஸ்மித், வார்னரைத் தொடர்ந்து, ஐ.பி.எல்- தொடரில் இருந்து ஸ்டார்க், கூல்டர் நைல், பெஹரன்டார்ஃப் ஆகியோரும் காயம் காரணமாக விலகியுள்ளனர்.  இவர்களுக்குப் பதிலாக ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோகாத டாம் குர்ரான் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து), கோரி ஆண்டர்சன் மற்றும் மிட்ச்செல் மெக்லீனகன் (நியுசிலாந்து), தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஹெய்ன்ரிச் கிளாஸன் உள்ளிட்டோர் ஐ.பி.எல்- தொடரில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் நியூசிலாந்தைச் சேர்ந்த 26 வயதான ஆல் ரவுண்டர் மிட்செல் சான்ட்னரை பெரிதும் நம்பியிருந்தது. அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு அவரை வாங்கியிருந்தது. ஆனால், காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவரால் ஐ.பி.எல் போட்டிகளில் பங்குபெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அணியில் போதுமான வீரர்கள் இருப்பதால், இவருக்கு மாற்றாக இதுவரை யாரையும் சி.எஸ்.கே நிர்வாகம் அறிவிக்கவில்லை. அதேபோல, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ரபாடா காயத்தால் அவதிப்பட்டுள்ளார். அவரை மூன்று மாதங்கள் ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவருக்குப் பதிலாக மாற்று வீரரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி இன்னும் அறிவிக்கவில்லை. ரபாடாவை டெல்லி அணி ரூ.4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

மிட்ச்செல் ஸ்டார்க்  -  டாம் குர்ரான்

ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில், வலது முழங்காலின் கீழ்ப்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்ச்செல் ஸ்டார்க் ஆடவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் அவர் விலகியிருக்கிறார். 28 வயதான ஸ்டார்க், இம்முறை ரூ.9.4 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவருக்குப் பதிலாக இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான டாம் குர்ரானை, 1 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது கொல்கத்தா. சுர்ரே கவுன்ட்டி அணிக்காக விளையாடிய இவர், கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி-20 போட்டியில் அறிமுகமானார். ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் குர்ரான் சிறந்த திறனை வெளிப்படுத்தியிருந்தார். 

மேலும், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், இறுதிகட்ட ஓவர்களில் தனது யார்க்கர்களால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார். டெயில் எண்டராக இருப்பினும் பேட்டிங்கிலும் அசத்தக்கூடியவர். இதுவரை இங்கிலாந்துக்காக 2 டெஸ்ட், 8 ஒருநாள் போட்டி, 6 T20 போட்டிகளில் விளையாடியுள்ள  23 வயதான டாம் குர்ரன், இதற்கு முன்பு 51 உள்ளூர் T20 லீக் போட்டிகளில் 128.36 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். ஏற்கெனவே, கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், ஆண்ட்ரூ ரஸெல் ஆகியோரும் முழு உடல் தகுதியுடன் இல்லாமல் இருப்பதால், அது தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குப் பின்னடைவே. மேலும், சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக்கில், பந்தை எறிவதாக கொல்கத்தாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரேன் மீது அம்பயர்கள் புகார் கூறினர். ஐபிஎல்-லில் அவர் பந்து வீச அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றாலும், போட்டிகளின்போது இந்த வெஸ்ட் இண்டீஸ் வீரரின் பந்துவீச்சு முறை தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. 
 

டேவிட் வார்னர் - அலெக்ஸ் ஹேல்ஸ்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் மாட்டிக்கொண்ட ஆஸ்திரேலிய அணியின் துணைக்கேப்டன்  டேவிட் வார்னருக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்தது. இதன் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வாரியம், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அவருக்கு, இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கு அனுமதி மறுத்தது. ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக, நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், வார்னருக்குப் பதிலாக இங்கிலாந்தின் ஓபனிங் பேட்ஸ்மேனான அலெக்ஸ் ஹேல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோகாத இவர், அடிப்படை விலையான 1 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 29 வயதான அலெக்ஸ் ஹேல்ஸ், இங்கிலாந்துக்காக 52 சர்வதேச T 20 போட்டிகளில் விளையாடி 1 சதம், 7 அரைசதம் உள்பட 1,456 ரன்களை அடித்திருக்கிறார். சர்வதேச T 20 போட்டிகளில், இங்கிலாந்து சார்பில் சதமடித்திருக்கும் ஒரே பேட்ஸ்மேனான இவர், 2015-ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார்.

ஸ்டீவ் ஸ்மித் - ஹெய்ன்ரிச் கிளாஸன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டு தடைக்குப் பின் களமிறங்கும் மற்றொரு அணிதான் ராஜஸ்தான் ராயல்ஸ். வீரர்களுக்கான ஏலத்துக்கு முன்பாகவே, 'ஆஸ்திரேலியாவின் விராட் கோலி' எனப் புகழப்படும் ஸ்டீவ் ஸ்மித்தை, 12 கோடிக்கு அந்த அணி தக்க வைத்தது. ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐபிஎல் நிர்வாகத்தால் கிரிக்கெட்டிலிருந்து ஒரு வருடத்துக்குத் தடை செய்யப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்துக்குப் பதிலாக, தென்னாப்பிரிக்காவின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஹெய்ன்ரிச் கிளாஸன் ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ளார். இவர் இந்த ஆண்டு இந்தியாவில் எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 27 பந்துகளில் 43 ரன்களை விளாசி, 'தென் ஆப்பிரிக்கா பிங்க் நிற உடையணிந்து விளையாடிய போட்டிகளில் தோற்றதில்லை' என்ற சாதனையைத் தக்கவைக்க உதவினார். T20 கிரிக்கெட்டில் 146 எனும் அட்டகாசமான ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டிருக்கும் ஹெய்ன்ரிச் கிளாஸனை, அவரது அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது ராஜஸ்தான். 26 வயதான இவர், தென் ஆப்பிரிக்காவுக்காக 4 ஒருநாள் போட்டி மற்றும் 3 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 

நாதன் கூல்டர்நைல் - கோரி ஆண்டர்சன்

ஐ.பி.எல் ஏலத்தில் 2.2 கோடி ரூபாய்க்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் கூல்டர்நைலை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. 30 வயதான இவர், கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். முதுகில் ஏற்பட்டுள்ள காயத்தால், ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கான மாற்று வீரராக, நியூசிலாந்தைச் சேர்ந்த கோரி ஆண்டர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  ஏலத்தில் விலை போகாத இந்த ஆல்ரவுண்டரை, அவரது அடிப்படை விலையான 2 கோடிக்கு அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி, 142 ரன்களும் 3 விக்கெட்களும் எடுத்திருந்தார். 

ஜேசன் பெஹரன்டார்ஃப் - மிட்ச்செல் மெக்லீனகன்

ஐ.பி.எல் ஏலத்தில் 1.5 கோடி ரூபாய்க்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளள் ஜேசன் பெஹரன்டார்ஃபை, மும்பை அணி வாங்கியது. 27 வயதான இவர், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதில்லை. ஆனால், இவர் இந்தியாவுக்கு எதிராகக் கடந்தாண்டு நடைபெற்ற T20 போட்டியில், 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதை, கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் முதுகில் ஏற்பட்டுள்ள காயத்தினால், ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கான மாற்று வீரராக, நியூசிலாந்தைச் சேர்ந்த மிட்செல் மெக்லீனகனைத் தேர்ந்தெடுத்துள்ளது, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி.  ஏலத்தில் விலை போகாத இவரை, அவரது அடிப்படை விலையான 1 கோடிக்கு அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த 2 சீசன்களில் மும்பை அணிக்காக 40 போட்டிகளில் விளையாடி, 54 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.