Published:Updated:

ஒரு பிளேயரை வாங்குறதுக்குள்ள...! ஐ.பி.எல் 2018... உள்ளே வெளியே என்ன நடக்கும்? பகுதி - 1 #IPLAuction

ஒரு பிளேயரை வாங்குறதுக்குள்ள...! ஐ.பி.எல் 2018... உள்ளே வெளியே என்ன நடக்கும்? பகுதி - 1 #IPLAuction
ஒரு பிளேயரை வாங்குறதுக்குள்ள...! ஐ.பி.எல் 2018... உள்ளே வெளியே என்ன நடக்கும்? பகுதி - 1 #IPLAuction

ஒரு பிளேயரை வாங்குறதுக்குள்ள...! ஐ.பி.எல் 2018... உள்ளே வெளியே என்ன நடக்கும்? பகுதி - 1 #IPLAuction

2018 ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் முடிந்துவிட்டது. 8 அணிகளில் விளையாட 187 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 628.70 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. சில அணிகள் முழு பலத்துடன் கம்பீரமாக களமிறங்கவுள்ளன.  சில அணிகளுக்கு ஏதோ ஒரு டிபார்ட்மென்ட் பலவீனமாக இருக்கிறது. ஏலத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு எண்ணிலடங்கா கேள்விகள். ``ஏன் அந்த பிளேயருக்கு இத்தனை கோடி", ``அவரை ஏன் யாரும் வாங்கலை", ``காச செலவு பண்ணாத்தான் என்ன, அத வச்சு என்ன பண்ணப் போறாங்க", "அவனை ஏன் வாங்குனாங்க" என சோஷியல் மீடியாவில் புலம்பித் தள்ளினார்கள் கிரிக்கெட் வெறியர்கள்.

கேள்விகள் நியாயம்தான். ஆனால், அந்த ஏலம் ஒன்றும் சாதாரண வேலை கிடையாது. வீரரின் பெயரை வைத்துக்கொண்டு மட்டும் ஏலம் கேட்டுவிட முடியாது. Paddle உயர்த்தப்படும் அந்த ஒரு நொடியில் பல்வேறு விஷயங்களை யோசித்து அலசவேண்டும். வீரரின் ஃபார்ம், வயது, அணியின் கைவசம் மிச்சமிருக்கும் தொகை, அவர் பிளேயிங் லெவனில் எங்கு செட் ஆவார், எவ்வளவு தொகைவரை சென்றால் மற்ற வீரர்களை வாங்குவது பாதிக்காது, பேக் - அப் ஆப்ஷன்கள் போதுமா, வெளிநாட்டு வீரர்கள் தொடர் முழுதும் ஆடுவார்களா, ஐ.பி.எல் தொடரில் அந்த வீரரின் முந்தைய செயல்பாடு எப்படி என இத்தனை விஷயங்களும் அலசவேண்டும். போதாக்குறைக்கு புதிய வெளிநாட்டு வீரர் எனில் துணைக்கண்ட ஆடுகளத்தில் அவரது முந்தைய செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். இத்தனையும் அலசி வாங்கினால் RTM என்ற பெயரில் முந்தைய அணியே வாங்கிவிடும். அங்கும் சிக்கல்! இப்படிப் பல சிக்கல்கள் நிறைந்ததுதான் ஏலம்.

நாம் வாங்க நினைத்த வீரரை மற்ற அணி வாங்கிவிட்டால், அவருக்குப் பதில் யார் என யோசிக்கவேண்டும். அவரைத் தீர்மானித்த பிறகு... மேலே சொன்ன அத்தனை விஷயங்களையும் மீண்டும் அலச வேண்டும். இவை மட்டுமா பிரச்னை. 'வேற என்னதான்யா பிரச்னை, சும்மா அடிக்கிட்டே போற...' இருக்கு... நிறைய இருக்கு. அதையெல்லாம்தான் இந்த மினி தொடரில் பேசப் போகிறோம். ஏலத்தின் போக்கை நிர்ணயித்த காரணங்கள் பற்றிப் பேசுவோம். 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல முன்னணி வீரர்களும் விலைபோகாமல் இருந்ததன் காரணம் என்ன? ஹஷிம் அம்லா, லஷித் மலிங்கா, மோர்னே மோர்கல் உள்ளிட்ட அனுபவ நட்சத்திரங்கள் ஏலம் போகாததற்கு, வயதாகிவிட்டது என்பது பதில் என்றால், 35 வயதைத் தாண்டிய ஷேன் வாட்சன், பென் லாலின் போன்றவர்கள் ஏலம் போனார்களே... அது எப்படி? இதைப் பற்றியும் அலசுவோம். உனத்கட், கே.எல்.ராகுல், மனீஷ் பாண்டே போன்ற இந்திய வீரர்கள் 10 கோடிக்கும் மேல் ஏலம் போனார்கள். ``இவங்களே இவ்வளவு போறாங்களே, தோனி, கோலி-லாம் ஏலத்துக்கு வந்திருந்தா எவ்வளவு போயிருப்பாங்க" என்று ஆச்சர்யமடைந்தனர் ரசிகர்கள். இந்நிலையில், ரஹானே, தவான் போன்ற சீனியர்கள் குறைவாகப் போனது ஏன்? அதுவும் பேசுவோம்.

எதன் அடிப்படையில் அணிகள் வீரர்களைத் தேர்வு செய்தன? உள்ளூர் வீரர்கள் ஐ.பி.எல் அணிகளின் கவனத்தை ஈர்த்தது எப்படி? இவற்றை அறிந்துகொண்டால், அணிகளின் கேம் பிளேன் நமக்குக் கொஞ்சம் விளங்கும். உள்ளூரில் நடந்த டி-20 தொடர் மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடந்த தொடர்கள் இந்த ஏலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ரசிகர்களின் எதிர்பார்ப்பு, அணியின் முந்தைய இமேஜ் என இன்னும் பல விஷயங்கள் இந்த ஏலத்தில் மறைமுகமாக அங்கம் வகித்தன. 

பழைய அணியின் core பிளேயர்களை வாங்கவேண்டும் என்பது சில அணிகளின் நோக்கமாக இருந்தது. அதற்காக செய்த பிளான்கள், அதற்காக செய்த செலவுகள் மற்ற வீரர்களை வாங்குவதில் கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்தியது.  அதேபோல், முந்தைய ஏலங்களில் செய்த தவறுகளில் இருந்து சில அணிகள் பாடம் பயின்றுள்ளன. அந்தப் பாடம் இந்த ஏலத்தின்போதுதான் அவர்களுடைய திட்டத்தை பெரிய அளவில் மாற்றியுள்ளது. 

'இந்திய ஆடுகளங்கள் சுழலுக்குச் சாதகமாக இருக்கின்றன' என வெளிநாட்டு அணிகள் ஒருபுறம் புலம்ப, 'க்ரீன் பிட்ச்களில் இந்திய வீரர்களுக்கு ஆடத் தெரியவில்லை' என இந்திய அணியை நாம் ஒருபுறம் திட்ட, சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுகளங்களின் பங்களிப்பு என்பது இப்போதெல்லாம் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், சத்தமில்லாமல் ஒவ்வொரு அணியின் 'ஹோம் க்ரவுண்ட்'களும், ஏலத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. முந்தைய ஏலங்களிலும் சில அணிகள், தங்கள் ஆடுகளங்களுக்கு ஏற்றதுபோல் அணியை அமைத்திருந்தன. அதைப்பற்றியெல்லாம் பெரிய விவாதங்கள் நடைபெறவில்லை. அதனால், இன்னும் அந்த ஃபார்முலா தொடர்கிறது. இந்த முறையும் ஆடுகளத்துக்கு ஏற்ப சில அணிகள் வீரர்களை வாங்கியுள்ளன. 

Base price - கடந்த 10 ஆண்டுகளாக ஏலத்தின்போது இந்த வார்த்தையைச் சாதாரணமாகக் கடந்துவந்துள்ளோம். ஆனால், ஒரு வீரருக்கான ஏலம் தொடங்குவதில் மிகமுக்கியப் பங்கு வகிப்பது இந்த அடிப்படை விலைதான். இதனால் பலரின் ஐ.பி.எல் கனவும் பாழாகியுள்ளது. அடையாளம் இல்லாத சில வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் ஆடவும் இதுவே காரணம். இந்த அடிப்படை விலை, ஏலத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை அறிவதும் முக்கியம். இதுபோல் பற்பல காரணங்கள் ஏலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

RTM, அடிப்படை விலை, ஆடுகளத் தன்மை, வீரர்களின் வரிசை, சமகாலத்தில் நடந்த தொடர்கள் என இந்த ஏலத்தை நிர்ணயித்த காரணிகளைப் பற்றி இந்தத் தொடரில் விரிவாக அலசுவோம்!

அடுத்த கட்டுரைக்கு