Published:Updated:

சி.எஸ்.கேவில் யார் அந்த ஃபாஸ்ட் பெளலர்... யாருக்கு எங்கே இடம்?- ஐபிஎல் அலசல்

42.7 கோடியுடன்... வழக்கம்போல், ஏலத்தில் அதிக தொகையுடன் களமிறங்குகிறது கிங்ஸ் லெவன். அஷ்வின் டெல்லியில் இணைந்திருக்கும் நிலையில், அனைத்தையும்விட கேப்டனின் தேவை அந்த அணிக்கு அதிகமாக இருக்கிறது.

IPL Auction
IPL Auction
இன்னும் 2 வாரங்களில் அடுத்த ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் நடக்கவுள்ளது. முதல் முறையாகக் கொல்கத்தாவில் ஒவ்வொரு அணியும் சில வீரர்களை அணியிலிருந்து விலக்கி, தங்கள் பர்ஸைப் பலப்படுத்தியுள்ளன. ஏலத்தில் பங்கேற்க 971 வீரர்கள் பதிவு செய்திருக்கின்றனர். கடந்த சீஸனில் இல்லாத சில பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சில பெரிய பெயர்கள் ஏலத்தை, ஐ.பி.எல் தொடரைப் புறக்கணித்துள்ளன. பல வீரர்கள் ஏலத்துக்கு முன்பாகவே அணி மாறியிருக்கின்றனர். ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கும் தொடர், இப்போதே பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டிசம்பர் 19-ம் தேதி நடக்கவிருக்கும் ஏலத்தில் என்ன எதிர்பார்க்கலாம், அணிகளின் திட்டங்கள் என்னவாக இருக்கும்?

சென்னை சூப்பர் கிங்ஸ்

வழக்கம்போல் தங்களின் Core வீரர்களைத் தக்கவைத்திருக்கிறது சி.எஸ்.கே. அங்கிள்ஸ் ஆர்மியின் சராசரி வயது 1 கூடியிருக்கிறது. இருந்தாலும் ஐ.பி.எல் என வரும்போது அனைவரும் ஃபார்மில் இருப்பார்கள் என்பதால் பெரிதாக எந்த மாற்றமும் தேவைப்படப்போவதில்லை. கடந்த ஆண்டு ஆடிய வீரர்களில் சாம் பில்லிங்ஸ், மோஹித் ஷர்மா உட்பட 6 வீரர்களை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஆனால், அதிக தொகைக்கு ஏலமெடுக்கப்பட்ட கேதர் ஜாதவ் (7.8 கோடி) போன்றவர்களை விடுவித்து குறைவான தொகைக்கு எடுத்திருக்கலாம். அந்த இடத்தில் சூப்பர் கிங்ஸின் முடிவு கேள்வியெழுப்புவதாக இருக்கிறது. இருந்தாலும், 5 இடங்களை நிரப்ப 14.6 கோடி ரூபாய் இருப்பதால், செலவு செய்வதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.

Cottrell
Cottrell

ஏலத்தில், வேகப்பந்துவீச்சாளர்களை வாங்குவதில் யெல்லோ ஆர்மி ஆர்வம் காட்டும். இரண்டாவது வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தை நிரப்புவதற்கு அந்த அணிக்குப் பல ஆப்ஷன்கள் இருக்கின்றன. முன்புபோல் அடிப்படை விலைக்கு ஏதாவதொரு வீரரை வாங்காமல், ஷெல்டன் காட்ரல், கிறிஸ் ஜோர்டான் போன்ற முன்னணி வீரர்கள் யாரையேனும் வாங்க முற்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஒருவரை வாங்குவதும் அவர்களது அஜெண்டாவில் இருக்கக்கூடும். ஏற்கெனவே, இரண்டு இடது கை ஸ்பின்னர்கள் இருப்பது பற்றி நிர்வாகம் கவலை கொள்ளவில்லையென்றால், தமிழக வீரர் சாய் கிஷோரை மஞ்சள் உடையில் பார்க்கலாம்!

டெல்லி கேபிடல்ஸ்

பெயரை மாற்றியதும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது டெல்லி அணி. தவான், பிரித்வி, ஷ்ரேயாஸ், பன்ட் என இந்திய பேட்ஸ்மேன்கள் நிறைந்திருக்கும் அணியில் இப்போது ரஹானேவையும் இணைத்திருக்கிறது அந்த அணி நிர்வாகம். மிகவும் அட்டகாசமான முடிவு. ஆனால், பேட்டிங் ஆர்டரில் குளறுபடி ஏற்படுத்தாமல் இருந்தால் நல்லது. கடந்த ஆண்டு அதிகமான இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தது அவர்களுக்குப் பாதகமாக அமைந்தது. பார்ட் டைம் ஆஃப் ஸ்பின்னர்களை வைத்துகூட சில அணிகள் அவர்களுக்கு முட்டுக்கட்டை போட்டன. அதனால், மன்றோ, இங்ரம் போன்றவர்களை ரிலீஸ் செய்திருப்பது நல்ல முடிவுதான்.

Neesham Plays a shot.
Neesham Plays a shot.
AP

பேட்டிங் ஆர்டரில் டாப்-5 இடங்கள் திடமாக இருப்பதால், லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஆல் ரவுண்டர்களுமே அவர்களின் பிரதான இலக்காக இருக்கும். ஜேம்ஸ் நீஷம், கிராந்தோம், பிரிட்டோரியஸ், மிட்சல் மார்ஷ் போன்றவர்கள் அந்த அணிக்கு சரியான சாய்ஸாக இருப்பார்கள். மேக்ஸ்வெல் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பவுள்ளதால், மீண்டும் அவரை வாங்கக்கூடும். ட்ரென்ட் போல்ட் இடத்துக்குச் சரியான ஒரு வீரரை வாங்குவது அவசியம். ரபடாவின் ஃபிட்னஸ் இந்த முறையும் சிக்கல் ஏற்படுத்தலாம். அதனால், 2 வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களை அந்த அணி வாங்கக்கூடும். ஒரு வெளிநாட்டு விக்கெட் கீப்பரை வாங்குவதும் அந்த அணிக்கு பலம் சேர்க்கும். அஷ்வின், மிஷ்ரா, லாமிசேன், அக்சர் படேல் என சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசைகட்டுவதால், ஏலத்தில் ஸ்பின் பக்கம் அவர்கள் தலைகாட்ட வாய்ப்பில்லை.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

42.7 கோடியுடன் வழக்கம்போல், ஏலத்தில் அதிக தொகையுடன் களமிறங்குகிறது கிங்ஸ் லெவன். ஆனால், இந்த முறையாவது அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து வீரர்களை வாங்குவார்களா எனத் தெரியவில்லை. அஷ்வின் டெல்லியில் இணைந்திருக்கும் நிலையில், அனைத்தையும்விட கேப்டனின் தேவை அந்த அணிக்கு அதிகமாக இருக்கிறது. ஏலத்தில் இருக்கும் வீரர்களில், இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் அவர்களுக்கு மிகச் சரியான சாய்ஸாக இருப்பார். அவரை வாங்குவது அவர்களின் மிடில் ஆர்டர் பிரச்னைக்கும் பதிலாக இருக்கும். கிறிஸ் கெய்லை பென்ச்சில் அமரவைக்கத் தயாராக இருந்தால், ஆரோன் ஃபின்ச்சை மீண்டும் வாங்குவது பலனலிக்கும்.

Morgan
Morgan

முஜீப், முருகன் அஷ்வின் என இரண்டு நல்ல ஸ்பின்னர்கள் இருப்பதால், கடந்த முறைபோல் இன்னொரு ஸ்பின்னருக்குக் கோடிகளைக் கொட்டாமல் இருப்பது புத்திசாலித்தனம். தரமான இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஒருவரையாவது வாங்குவது அவசியம். இந்த முறையும் உனத்கட்டுக்கு பிரீத்தி ஜிந்தா போட்டியிடும் கொடுமையைப் பார்க்க வாய்ப்புகள் அதிகம்! மிடில் ஆர்டரில் விளையாட கன்சிஸ்டன்ட்டான வீரர்களை வாங்குவது முக்கியம். மில்லர், ஆண்ட்ரே டை, சாம் கரண் எனப் பலரையும் விடுவித்துவிட்டதால், வெளிநாட்டு வீரர்களை சரியாகத் திட்டமிட்டு வாங்க வேண்டும்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

கிறிஸ் லின், உத்தப்பா, பிராத்வெயிட் என காஸ்ட்லி வீரர்கள் பலரையும் கழட்டிவிட்டு சரியான முடிவை எடுத்துள்ளது நைட் ரைடர்ஸ் நிர்வாகம். லின்னை குறைந்த விலைக்கு மீண்டும் வாங்குவதற்கு அவர்கள் முயற்சி செய்யலாம். எட்டரை கோடி மதிப்பிலான சுனில் நரைனையும் விடுவித்திருக்கலாம். அவரது சமீப செயல்பாடுகளுக்கு அது நிச்சயம் அதிக தொகைதான். இம்முறையாவது ஐகானிக் வீரர்களுக்குக் கோடிகளைக் கொட்டாமல், சரியாக வாங்குவதுதான் சரியான ப்ளேயிங் லெவனை அமைப்பதில் வழிவகுக்கும்.

Lynn
Lynn
Twitter- t10 league

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் அந்த அணியின் பிரதான இலக்காக இருக்கும். ரோஹன் கடம், விராட் சிங், ஆதித்யா வாக்மோட் போன்ற தரமான உள்ளூர் இந்திய வீரர்கள் ஓரிருவரையாவது வாங்குவது அவசியம். அவர்களுக்குச் செலவழிப்பது அந்த அணிக்கு அவசியம். குறைவாக இருக்கும் இந்திய பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கை, முந்தைய சீஸன்களிலேயே அவர்களைப் பாதித்திருக்கிறது. கையிலிருக்கும் 35.65 கோடி ரூபாயை எப்படி செலவு செய்கிறார்கள் என்பதுவே அவர்களின் சீஸனைத் தீர்மானிக்கும்.

மும்பை இந்தியன்ஸ்

2019 ஐ.பி.எல் ஃபைனலில் ஆடியே அதே அணி. மெக்லனகனுக்குப் பதிலாக ட்ரென்ட் போல்ட். அவ்வளவுதான். பர்ஃபெக்ட்டாக இருக்கிறது ரோஹித் அண்ட் கோவின் லைன் அப். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தரமான பேக் அப் வீரர்களை வாங்குவதுதான். அதுமட்டுமல்லாமல் 13.05 கோடி ரூபாயே கையில் இருப்பதால், இந்த ஏலத்தில் ஜூனியர் அம்பானியின் அதகளம் இருக்க வாய்ப்பில்லை. அவ்வப்போது மட்டுமே உலகின் பணக்கார குரூப்பின் செயல்பாடைப் பார்க்க முடியும்.

Pollard
Pollard
Twitter- t10 league

பொல்லார்டின் ஃபார்மை நம்பமுடியாது என்பதால் தரமான ஒரு வெளிநாட்டு பேட்ஸ்மேனை வாங்கி வைப்பது நல்லது. சையது முஸ்தாக் அலி தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட உள்ளூர் வீரர்கள் ஷாம்ஸ் முலானி, சுபாம் ராஞ்சனே போன்றவர்களை அந்த அணி வாங்க முற்படலாம். ஆல்ரவுண்டர் சித்தேஷ் லேட், நைட்ரைடர்ஸுக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்கலாம். கடந்த முரை யுவராஜுக்கு சென்றதுபோல் உத்தப்பா போன்ற முன்னணி வீரருக்குக் காசை செலவு செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

ராஜஸ்தான் ராயல்ஸ்

வீரர்கள் பரிமாற்றத்தில் ராயல்ஸின் முடிவுகள் அவர்களுக்குச் சாதகமா பாதகமா என்பதைத் தீர்மானிப்பது சற்று கடினம்தான். ரஹானே, கே.கௌதம் எனப் ப்ளேயிங் லெவனில் தவறாமல் இடம்பெறும் இரண்டு வீரர்களை இழந்திருக்கிறது அந்த அணி. கௌதம் இடத்தில் தெவேதியா, மார்கண்டே என இரு வீரர்களை வாங்கியிருப்பதும், அன்கித் ராஜ்புத்தை வாங்கியதும் நல்ல பிசினஸ்தான். ஆனால், ரஹானேவை விட்டிருப்பது சரியான முடிவில்லை என்றே தோன்றுகிறது. இப்போது அந்த இடத்துக்கு சரியான இந்திய வீரர் ஒருவரை வாங்க வேண்டும். ராஜஸ்தானின் விஷ்லிஸ்டில் இருப்பது யார் எனத் தெரியவில்லை. ரஹானேவின் டி-20 ஃபார்ம் முன்புபோல் இல்லையென்றாலும், அவரை இழந்திருப்பது ராயல்ஸுக்கு சிக்கலாக அமையலாம்.

Rahane
Rahane
AP

பட்லர், ஸ்டீவ் ஸ்மித், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் நால்வரும் தவறாமல் ப்ளேயிங் லெவனில் இருப்பார்கள். இந்த முறை இங்கிலாந்து வீரர்கள் முழுமையாக ஆடுவார்கள் என்பதால், வெளிநாட்டு வீரர்களுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. குறைந்த விலையில் பேக் அப் வீரர்களை வாங்குவதன் மூலம், இந்திய வீரர்களுக்கு அந்தத் தொகையை செலவழித்துக்கொள்ளலாம். ஒரு ஓப்பனர், ஒரு நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், ஒரு தரமான வேகப்பந்துவீச்சாளர் - இந்த மூன்றும் இல்லாமல் அவர்களால் நல்ல ப்ளேயிங் லெவனை அமைக்க முடியாது. அதனால், ஏலத்தில் அந்த பொசிஷன்களே அவர்களது பிரதான இலக்காக இருக்கும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

டி வில்லியர்ஸ், மொயீன் அலி தவிர்த்து ஒட்டுமொத்த வெளிநாட்டு வீரர்களையும் கழற்றிவிட்டிருக்கிறது ஆர்.சி.பி தற்போதைய நிலையில் மிகவும் சிறிய ஸ்குவாடைக் கொண்டிருக்கும் அணியும் அதுதான். கைவசம் இருக்கும் 27.9 கோடியில் 12 வீரர்கள் வாங்க வேண்டும். அதில் 6 வெளிநாட்டு வீரர்கள் அடக்கம். ஆர்.சி.பி எப்படி செலவு செய்யப்போகிறது தெரியவில்லை. கோலி, ஷிவம் தூபே, வாஷிங்டன், தேவ்தத் படிக்கல், சஹால், சைனி, உமேஷ் எனத் தரமான இந்திய வீரர்கள் இருப்பதால், கண்ணை மூடிக்கொண்டு வெளிநாட்டு வீரர்களுக்குச் செலவு செய்யலாம். மிட்சல் ஸ்டார்க் போனதற்குப் பிறகு அவர்களுக்குச் சரியான வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் அமையவில்லை. இந்த ஏலத்தில் பெங்களூரு அதைச் சரிசெய்துகொள்வது அவசியம். கிறிஸ் ஜோர்டான், ஷெல்டன் காட்ரல், சாம் கரண், கம்மின்ஸ் போன்ற முன்னணி பௌலர்கள் பலர் இருப்பதால், அவர்களில் இருவருக்கு நன்றாகச் செலவு செய்வது பந்துவீச்சைப் பலப்படுத்தும்.

Maxwell
Maxwell

அதேபோல், மிடில் ஆர்டரிலும் சரியான பேட்ஸ்மேன் ஒருவர் அமையவில்லை. ஹிட்மேயர், ஸ்டாய்னிஸ், கிராந்தோம் எல்லோருமே பெரும் ஏமாற்றமாகவே அமைந்தார்கள். அந்த இடத்தையும் பலப்படுத்துவது அவசியம். வழக்கமாக ஸ்டார் வீரர்களை வளைத்துப்போடும் ஆர்.சி.பி இம்முறையும் அதையே செய்யலாம். மேக்ஸ்வெல், மோர்கன் போன்றவர்களுக்கு நிச்சயம் அந்த அணி போட்டிபோடும். தேவ்தத் படிக்கல், சையது முஸ்தாக் அலி தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினார். அதனால், பார்த்திவ் பட்டேலின் இடம் கேள்விக்குறியாகலாம். அப்படியாகும் பட்சத்தில் தரமான வெளிநாட்டு விக்கெட் கீப்பர் ஒருவரை வாங்குவதும் முக்கியம். அலெக்ஸ் கேரி, சாம் பில்லிங்ஸ் போன்றவர்கள் நல்ல சாய்ஸாக இருப்பார்கள். ஏற்கெனவே அணியில் இருக்கும் வீரர்களை எப்படிப் பயன்படுத்தப்போகிறோம் என்று முடிவு செய்துவிட்டு ஏலத்தில் பங்கேற்பது நல்லது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

வீரர்கள் பரிமாற்றத்தின்போது இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்தது சன்ரைசர்ஸ். தங்களிடம் இருக்கும் வீரர்களுடன் பரிபூரண திருப்தியில் இருப்பார்கள்போல. டாப் ஆர்டர், பந்துவீச்சு போன்ற ஏரியாக்கள் அசுர பலத்தில் இருப்பது உண்மைதான். ஆனால், கடந்த ஆண்டு அவர்களின் பெரிய சிக்கலாக இருந்த லோயர் மிடில் ஆர்டரை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அந்த அணி. தீபக் ஹூடா, யூசுஃப் பதான் போன்றவர்களை வெளியேற்றியிருப்பதன் மூலம், அந்த இடத்துக்குப் புதிய வீரர்களை வாங்கும் திட்டத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. வார்னர், பேர்ஸ்டோ, வில்லியம்சன், ரஷீத் கான் ஆகிய நால்வரில் யாரையும் வெளியே அமர்த்த முடியாது என்பதால், லோயர் மிடில் ஆர்டரில் வெளிநாட்டு வீரரைக் களமிறக்குவது என்பது சாத்தியமில்லை. அப்படியிருக்கையில் எந்த இந்திய வீரரை அந்த அணி வாங்க முடியும்?

hanuma vihari
hanuma vihari
AP

தீபக் ஹூடாவை குறைந்த விலைக்கு மீண்டும் வாங்கும் திட்டத்தில்கூட அவரை விடுவித்திருக்கலாம். உள்ளூர் வீரர் ஹனுமா விஹாரி, மீண்டும் ஹைதரபாத் அணியில் இணையும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. தமிழக வீரர் ஷாரூக் கான், கர்நாடக பேட்ஸ்மேன் ரோஹன் கடம் போன்றவர்களும் நல்ல சாய்ஸாக இருப்பார்கள். இரண்டு வெளிநாட்டு வீரர்களுக்கான இடம் காலியாக இருக்கிறது. குறிப்பாக, ஷகிப்பின் இடம். ஸ்டாய்னிஸ், கிராந்தோம் போன்றவர்களைக்கொண்டு அந்த இடத்தை நிரப்ப முயற்சி செய்யலாம். இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஒருவரை வாங்கி வைப்பதும் நல்லது.