Published:Updated:

`கங்குலியின் உணவு.. ஷார்ஜா கொண்டாட்டம்!’-இந்தியத் தொடர்கள் மூலம் கனேரியாவுக்குப் பதிலளித்த இன்சமாம்

``இந்தியாவிலும் எங்களுக்கு அதேபோன்ற வரவேற்பும் அனுபவமும்தான் கிடைத்தது. எங்களை இந்தியர்கள் விருந்தினரைப் போல கவனித்தனர். எங்களுக்கு உணவளித்தனர். நாங்கள் ஷாப்பிங் போனபோது எங்களிடம் பணம் வாங்கவில்லை" - இன்சமாம்

இன்சமாம் உல் ஹக்
இன்சமாம் உல் ஹக்

பாகிஸ்தான் அணியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் தானிஷ் கனேரியா. தன் திறமை மூலம் பாகிஸ்தான் அணிக்குப் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். ஆனால், அணியில் அவர் இருந்தபோது மதம் ரீதியாக அவர் பல இன்னல்களைச் சந்தித்ததாகத் தெரிவித்த கருத்து பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையானது.

தானிஷ் கனேரியா
தானிஷ் கனேரியா
ANI

முதலில் இந்த விஷயத்தை வெளியே சொன்னது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அக்தர். டிவி பேட்டி ஒன்றில், ``இந்து மதத்தைப் பின்பற்றும் ஒருவர் அணியிலிருந்து, அவர் சிறப்பாகச் செயல்பட்டால்தான் என்ன பிரச்னை? ஒரு சிலர், `தானிஷ் கனேரியா எப்படி இங்கிருந்து உணவை எடுக்கலாம்’ எனக் கேள்வி எழுப்புவது உண்டு. அதே இந்து மதத்தைச் சேர்ந்த கனேரியாதான் இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியை வெல்ல காரணமாக இருந்தார். பாகிஸ்தான் அணிக்காக அவர் நிறைய விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அணிக்காகத் தொடர்ந்து விளையாட அவரை அனுமதிக்க வேண்டும். அன்று கனேரியாவின் முயற்சி இல்லாமல் சில தொடர்களை வென்றிருக்க முடியாது. ஆனால், அதற்கான கிரெடிட்டை அணியில் இருக்கும் பலரும் அவருக்கு வழங்கியது கிடையாது” என்றார் அதிரடியாக.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய கனேரியா, ``அக்தர் சொன்னது உண்மைதான். உண்மையைச் சொன்னதுக்காக அவருக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். நான் இந்து என்பதால் என்னை ஒதுக்கிய பாகிஸ்தான் வீரர்களின் பெயர்களை விரைவில் அறிவிப்பேன்” என எரியும் விவகாரத்தில் எண்ணெய் ஊற்றினார். எனினும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தனர்.

இன்சமாம் உல் ஹக்
இன்சமாம் உல் ஹக்

இந்நிலையில் யூ டியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் கனேரியாவின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். ”கனேரியா பெரும்பாலும் எனது தலைமையில்தான் பாகிஸ்தான் அணியில் விளையாடினார். மற்ற வீரர்கள் கனேரியா இஸ்லாமியர் இல்லை என்பதானல் அவரை ஒதுக்கியதாக எனக்கு தெரியவில்லை. நான் அணியில் இருந்த வரை அப்படி ஒரு சம்பவம் கூட நடக்கவில்லை.

யூசஃப் அணியில் சேரும் போது இஸ்லாமியர் கிடையாது. அதன் பின்னர் அவர் கடவுளின் அருளால் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். அவர் மதம் மாறுவதற்கு முன்னதாகவோ பிறகோ எந்த வேறுபாட்டையும் உணரவில்லை. பாகிஸ்தானியர்கள் சிறிய இதயம் கொண்டவர்கள் என்னும் விமர்சனத்தை நான் ஏற்க மாட்டேன். நாங்கள் பெரிய இதயம் கொண்டவர்கள். அனைவரையும் ஏற்கும் மனம் எங்களிடம் இருக்கிறது.

கங்குலி
கங்குலி

2004 -ம் ஆண்டு இந்திய அணி 15 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் சுற்றுப்பயணம் வந்தது, அவர்களை நாங்கள் திறந்த மனதுடன் வரவேற்றோம். இந்தியர்கள் உணவு உண்ண வேண்டும் என்கிறபோதும், காரில் பயணமாகும் போதும் யாருமே இந்திய வீரர்களிடமிருந்து பணம் வாங்கவில்லை.

ஓராண்டு கழித்து நாங்கள் இந்தியாவுக்குப் பயணமானோம். இந்த இரு தொடர்களின் போதும் நான்தான் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்தேன். இந்தியாவிலும் எங்களுக்கு அதே போன்ற வரவேற்பும் அனுபவமும்தான் கிடைத்தது. எங்களை இந்தியர்கள் விருந்தினரைப் போலக் கவனித்தனர். எங்களுக்கு உணவளித்தனர். நாங்கள் ஷாப்பிங் போனபோது எங்களிடம் பணம் வாங்கவில்லை.

சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி

நாங்கள் கனேரியாவுடன் அமர்ந்து சாப்பிடுவதில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. 2005 -ம் ஆண்டு இந்தியா சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக ஒரு ஷூட் க்காக நான் கொல்கத்தா சென்றிருந்தேன். அப்போது கங்குலி அங்கு ஓர் உணவகத்தைத் திறந்திருந்தார். அதனை நானும் சச்சினும் இணைந்து திறந்து வைத்தோம். கங்குலி அந்த உணவகத்திலிருந்து எனக்காக உணவுகள் அனுப்புவார். அதனை நான் சாப்பிடுவது வழக்கம். ஷார்ஜாவில் தொடர்கள் நடக்கும் போது ஒரே ஹோட்டலில் உணவு உண்போம். அப்போது எல்லாம் ஜாலியாகப் பேசிக்கொண்டே சாப்பிடுவோம்.

ஒருமுறை பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் முஷரப் எங்களுக்கு விருந்து அளித்தார். அப்போது என்னிடம் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் இருந்தனர். அவர் என்னிடம், `நீங்கள் தொழுகை செய்யும் வீரர்களை மட்டும் தேர்ந்தெடுப்பதாக ஒரு கருத்து உள்ளதே. ஏன் அது குறித்து அமைதியாக இருக்குறீர்கள்’ என்று கேட்டார்.

முஷரப்
முஷரப்

அவர் கேட்டதும் எனக்கு சிரிப்புதான் வந்தது. அவரிடம் நான் சொன்னேன், மதங்களுக்கு என்று தனியாக இடங்கள் இருக்கின்றன. கிரிக்கெட்டுக்கு என்று தனியாக இருக்கிறது. இரண்டையும் சேர்க்கக் கூடாது. அதில் எனக்கு நம்பிக்கையும் கிடையாது’ என்றேன்” என்றார். கனேரியா குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இன்சமாம் இந்தியத் தொடர்களுடனான நாஸ்டால்ஜியாவோடு பதிலளித்துள்ளார்.