Election bannerElection banner
Published:Updated:

டோக்கியோவில் லாக்டௌன்... இந்த வருடமாவது ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா?!

Tokyo Olympics
Tokyo Olympics

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், டோக்கியோ உள்பட மேலும் மூன்று நகரங்களில் அவசரநிலை அறிவிக்கப்படுவதாகவும் இது வரும் மே 11 வரை கடைபிடிக்கப்படும் என்றும் அந்நாட்டின் பிரதமர் யோசிஹிடே ஸுகா அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தற்போது இந்தியாவில் மிக அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அவ்வைரஸின் தாக்கம் உலக நாடுகளில் வெகுவாகக் குறைந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவான ஒலிம்பிக் சென்ற வருடம் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வருடம் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் நடைபெறும் என அறிவித்திருந்தது ஜப்பான் அரசு. இந்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் அதிகரிப்பு காரணமாக அப்போட்டிகள் நடைபெறும் டோக்கியோவில் இப்போது அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஒலிம்பிக் தொடர் திட்டமிட்டபடி தொடங்கப்படுமா என ஐயம் எழுந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், டோக்கியோ உள்பட மேலும் மூன்று நகரங்களில் அவசரநிலை அறிவிக்கப்படுவதாகவும் இந்நிலை வரும் மே 11 வரை கடைபிடிக்கப்படும் என்றும் அந்நாட்டின் பிரதமர் யோசிஹிடே ஸுகா அறிவித்துள்ளார். பிறநாடுகளை ஒப்பிடுகையில் ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக சிறிய அளவே என்றாலும் தற்போது நோயால் பாதிப்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணியும் மெதுவாகவே நடைபெறுகிறது. இதுவரை ஒன்பது லட்சத்திற்கும் குறைவானவர்களுக்கே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Life in Tokyo
Life in Tokyo
AP

டோக்கியோவில் ஒருநாள் பாதிப்பு 700-ஐ தாண்டியுள்ள நிலையில் போட்டிகளை எந்தச் சிக்கலுமின்றி நடத்துவதில் மிகப்பெரிய சவால் காத்திருகிறது என அந்நகரின் மருத்துவக் குழு தலைவர் ஹருவோ ஒசாகி கவலை தெரிவித்துள்ளார். மேலும் போட்டிகளை பார்வையாளர்கள் யாருமின்றி நடத்தினாலும் பல்வேறு நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் வர இருப்பதால் கொரோனாவின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார் அவர். சமீபத்தில் நடைபெற்ற மருத்துவக் குழுவினர் சந்திப்பில் மே மாதத்தில் நோய் பாதிப்போரின் எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டும் என எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் நோய் தடுப்பு நிபுணர்களுள் ஒருவரான மருத்துவர் நோரியோ சுகாயா கூறுகையில், “தற்போதைய சூழ்நிலையில் ஜப்பான் நிச்சயமாக பாதுகாப்பான நிலையில் இல்லை. என்னை பொறுத்தவரையில் ஒலிம்பிக் போட்டிகளைத் தற்போதைக்கு நடத்தாமல் இருப்பதே சிறந்தது. ஏனென்றால் 1%-க்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் சுமார் 50-70% வரை செலுத்தப்பட்டால்தான் ஓரளவுக்காவது பாதுகாப்பாக உணரமுடியும் என்று கருதுகிறேன். மேலும் போட்டிகள் தொடங்க இன்னும் குறைந்த நாள்களே இருப்பதால் நான் கூறிய தடுப்பூசி சதவிகிதத்தை எட்டுவது என்பது மிக கடினமான காரியம்” எனக் கூறியுள்ளார்.

ஜப்பானிற்கு வரவிருக்கும் போட்டியாளர்கள் அனைவரையும் அந்நாட்டு அரசு தடுப்பூசி செலுத்த அறியுறுத்தியுள்ள நிலையில் அது எந்த அளவிற்கு பாதுகாப்பை உறுதிசெய்யும் என்பது சந்தேகமே. சுமார் 90,000 வெளிநாட்டவர் இப்போட்டிக்காக ஜப்பானிற்குள் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒலிம்பிக், கொரோனா
ஒலிம்பிக், கொரோனா

ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இத்தனை சவால்கள் மற்றும் பாதுகாப்பின்மை இருப்பினும் ஜப்பான் நாட்டு அரசும் ஒலிம்பிக் நிர்வாக குழுவும் போட்டிகளை நடத்துவதில் உறுதியாக இருக்கின்றன. இப்போட்டிகளுக்காக இதுவரை சுமார் 15.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது அந்நாட்டு அரசு. இது இந்திய மதிப்பில் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் ஆகும். இதில் சுமார் 6.7 பில்லியன் டாலர்வரை மக்களின் வரிப்பணம் ஆகும்.

போட்டிகள் நடத்துவது குறித்து பொதுவாக்கெடுப்பு நடைபெற்றதில் பெரும்பான்மையான மக்கள் வரும் ஜூலையில் தொடங்க இருக்கும் ஒலிம்பிக்கை ஒத்திவைக்கும்படியே வாக்களித்துள்ளனர். ஆனால், அதற்கு அரசு செவிசாய்த்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் கொரோனா பரவலும் தற்போது அதிகரித்து வருவதால் ஜப்பான் அரசு என்ன செய்யப்போகிறது தெரியவில்லை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு