Published:Updated:

ஒலிம்பிக், கால்பந்து டு ஃபார்முலா ஒன்... விளையாட்டு அரங்கில் ரஷ்யாவிற்குக் குவியும் நெருக்கடிகள்!

Russia

சர்வதேச ஜூடோ கூட்டமைப்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கௌரவத் தலைவர் பதவியிலிருந்து விலக்கியிருக்கிறது. அதேபோல ஃபார்முலா ஒன் நிர்வாகத்திடமிருந்தும் ரஷ்யா தப்பிக்கவில்லை.

ஒலிம்பிக், கால்பந்து டு ஃபார்முலா ஒன்... விளையாட்டு அரங்கில் ரஷ்யாவிற்குக் குவியும் நெருக்கடிகள்!

சர்வதேச ஜூடோ கூட்டமைப்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கௌரவத் தலைவர் பதவியிலிருந்து விலக்கியிருக்கிறது. அதேபோல ஃபார்முலா ஒன் நிர்வாகத்திடமிருந்தும் ரஷ்யா தப்பிக்கவில்லை.

Published:Updated:
Russia
இன்று உலக ஊடகங்கள் உற்றுநோக்கும் ஒரே தலைப்பு ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவும் போர்தான். அரசியல் வட்டாரத்தில் ரஷ்யா கடும் விமர்சனங்களை சந்தித்துவருகிறது. இதனிடையில் சர்வதேச விளையாட்டு அமைப்புகளும் பல்வேறு தரப்பிலிருந்து ரஷ்யாவைப் புறக்கணித்து வருகின்றன.

இந்தச் சூழல் தீவிரமடைவதற்கு முன்பாகவே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ரஷ்ய கொடியை ஏற்றுவது, ரஷ்ய நாட்டின் தேசிய கீதம் ஒலிப்பது என அனைத்தையும் தடை செய்து விட்டது. அதுமட்டுமல்லாமல், பெலாரசிய கொடியும் தடை செய்யப்பட்டது. உலக நாடுகள் பல ரஷ்யாவுக்கு எதிராக கண்டனங்களை முன்வைத்தாலும், பொருளாதார ரீதியாக எப்போதும் ரஷ்யாவுக்குத் துணை நிற்கிறது பெலாரஸ். அதனால், ரஷ்யா எதிர்கொள்ளும் எதிர்வினைகளில் பெலாரசும் பங்கிடுகிறது.

Russia Olympic Committee
Russia Olympic Committee

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து தங்கள் ரஷ்ய எதிர்ப்பைத் தெரிவித்துவரும் நிலையில், உக்ரைனின் டென்னிஸ் வீராங்கனை எலினா ஸ்விடோலினா இன்று ட்விட்டரில் செய்த பதிவு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. "சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செய்ததைப் போல, ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை டென்னிஸ் அமைப்புகள் புறக்கணிக்க வேண்டும். அதேசமயம், ரஷ்ய விளையாட்டு வீரர்கள் எவரையும் நான் குறை கூறவில்லை. எங்கள் தாய்நாட்டின் மீதான படையெடுப்பிற்கு அவர்கள் பொறுப்பல்ல" என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஸ்விடோலினா, ரஷ்ய வீராங்கனைக்கு எதிராக விளையாடுவதைத் தவிர்த்து மான்டேரி நகர டென்னிஸ் தொடரிலிருந்து விலகியிருக்கிறார்.

இந்தப் போர் சூழலைக் கருத்தில் கொண்டு , ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்ட ITF உலக டென்னிஸ் டூர் M15 நிகழ்வை ஒத்திவைத்துள்ளது சர்வதேச டென்னிஸ் கழகம். மேலும் ரஷ்யாவில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளையும் இடைநிறுத்தம் செய்திருக்கிறது. பெலாரசில் எந்தப் போட்டிகளும் திட்டமிடப்படாது என்றும் அறிவித்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டென்னிஸ் அரங்கில் வீரர்கள் ரஷ்ய படையெடுப்பு குறித்துப் பேசுவது இதுவொன்றும் புதிதல்ல. ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே ரூபலெவின் செயலும் அனைவராலும் பேசப்பட்டுவருகிறது. ரஷ்ய டென்னிஸ் வீரரான ஆண்ட்ரே ரூபலெவ், துபாயில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். வழக்கமாக வெற்றிக்குப் பிறகு வீரர்கள் கேமராவில் ஆட்டோகிராஃப் போடுவது வழக்கம். அப்போது, கையெழுத்திடமால் "நோ வார் ப்ளீஸ்" என்று எழுதினார் ரூபலெவ்.

STOP WAR
STOP WAR

கால்பந்து அரங்கிலோ மிகப்பெரிய விளைவுகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது ரஷ்யா. உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து, 2022 உலகக் கோப்பை தொடரிலிருந்து, காலவரையின்றி ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ளது. ரஷ்யா மட்டுமல்லாமல் ரஷ்ய கிளப்புகளும் கால்பந்து போட்டிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஃபிஃபா, UEFA கூட்டறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சனிக்கிழமையன்று ரஷ்யாவின் தேசிய கொடியும், தேசிய கீதமும் மட்டுமே தடை செய்யப்பட்டிருந்தது. ஃபுட்பால் யூனியன் ஆப் ரஷ்யா என்ற பெயரில் போட்டியிடலாம் என்று கூறியிருந்தது. ஆனால், போர்ச் சூழல் மோசமடைந்த நிலையில் திங்கட்கிழமை முழுமையாக ரஷ்யா அணிகளைப் புறக்கணித்தது ஃபிஃபா. உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் போலந்து அணியுடன் ரஷ்யா மோத இருந்த நிலையில், ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு தெரிவித்தது. ரஷ்யா அந்தப் போட்டியை வென்றிருந்தால், ஸ்வீடன் அல்லது செக் குடியரசை அடுத்த சுற்றில் எதிர்கொள்ளவேண்டியிருந்திருக்கும். போலந்து மட்டுமல்லாமல் அந்த அணிகளும்கூட ரஷ்யாவுடன் விளையாட மறுப்பு தெரிவித்திருந்தன. மே 28 நடக்கவிருந்த UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நகரிலிருந்து பாரிஸிற்கு மாறியிருக்கிறது.

Russian Football Team
Russian Football Team

ரஷ்ய செஸ் கிராண்ட் மாஸ்டர் கேரி காஸ்பரோவ், ரஷ்யா அதிபர் புதினைத் தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார். இப்போதென்று இல்லை. புதினை அவர் அடிக்கடி விமர்சிப்பதுண்டு. "உக்ரைனுக்கு எதிராக அவர் மேற்கொண்டிருக்கும் இந்தப் போர் நிறைவு பெறவேண்டும் என்றால், பிற நாடுகள் ஒன்றிணைந்து ரஷ்யாவை அனைத்து விதத்திலும் ஒதுக்கிடவேண்டும். போரை நிறுத்தும் வரையில் புறக்கணியுங்கள்" என்று தன் ட்வீட் செய்திருக்கிறார். இந்த ட்வீட் உலகளவில் வைரலாகியிருக்கிறது. மேலும், சர்வதேச செஸ் கூட்டமைப்பு ரஷ்யா, பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த ஸ்பான்சர்களைப் புறக்கணித்திருக்கிறது.

சர்வதேச ஜூடோ கூட்டமைப்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கௌரவத் தலைவர் பதவியிலிருந்து விலக்கியிருக்கிறது. அதேபோல ஃபார்முலா ஒன் நிர்வாகத்திடமிருந்தும் ரஷ்யா தப்பிக்கவில்லை. செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த ரஷ்ய கிராண்ட் ப்ரீ ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு, "இந்தச் சூழ்நிலை வருத்தத்துக்குரியது. ரஷ்ய கிராண்ட் ப்ரீ தடை செய்யப்படாவிட்டாலும், நான் அதில் பங்கேற்கப்போவதில்லை" என்று தெரிவித்திருந்தார் முன்னாள் உலக சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல்.

அதுமட்டுமல்லாமல், ரஷ்ய நிறுவனமான உரல்கலியின் ஸ்பான்சர்ஷிப்பைப் பெற்றிருக்கும் ஹாஸ் நிறுவனத்துக்குச் சில சிக்கல்கள் ஏற்படலாம். அந்த ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரஷ்ய டிரைவர் நிகிதா மேசபின் அந்த அணியில் இடம்பெற்றிருக்கிறார். ஒருவேளை ரஷ்ய கொடி தடைசெய்யப்பட்டாலோ, ஸ்பான்சர்ஷிப் விஷயத்தில் சிக்கல்கள் எழுந்தாலோ, ஹாஸ் அணிக்கே அது பிரச்னையாக அமையும். இதில் மிகப்பெரிய முரண் என்னவெனில் ஹாஸ் - அமெரிக்காவைச் சேர்ந்த அணி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism