Published:Updated:

`எங்கள் வீரர்களைவிட வேறு எதுவும் முக்கியமில்லை!’ - ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகிய கனடா

ஒலிம்பிக்
ஒலிம்பிக்

'டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில், தங்கள் நாடு கலந்துகொள்ளப்போவதில்லை' என கனடா அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

‘கொரோனா’ - இந்த நொடியில் உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு பெயர். கடந்த மூன்று மாதங்களாக மொத்த உலகமும் இந்தப் பெயரைக் கேட்டு நடுங்கிக்கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,38,724 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,687 ஆகவும் உள்ளது.

கொரோனா
கொரோனா

பெரும் வல்லரசு நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள், ஏழ்மையான நாடுகள் என அனைத்து தரப்பினரும் வைரஸைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். ஊரடங்கு உத்தரவு, எல்லைகள் மூடல், போக்குவரத்து ரத்து எனப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வைரஸ் பரவலினால் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியையும் ஒத்திவைக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

5 முறை உலக சாம்பியன், 25 தங்கப் பதக்கம்,`சிறந்த ஒலிம்பிக் வீராங்கனை' - யார் இந்த சிமோன் பைல்ஸ்?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளன. தற்போது, அனைத்து நாடுகளும் வைரஸ் பிடியில் சிக்கியுள்ளதால், தங்கள் நாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, இந்தப் போட்டியை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டுமென அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

ஜப்பான் பிரதமர்
ஜப்பான் பிரதமர்

இது பற்றிப் பேசியுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, “ஜப்பான் முழு நிறைவான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவே விரும்புகிறது. ஆனால், தற்போது உலக நாடுகள் உள்ள சூழலில் அது கடினமானது எனத் தோன்றுகிறது. நாம் முதலில் விளையாட்டு வீரர்களின் உடல் நலம் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்தச் சூழலில் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாததாகவே கருதப்படுகிறது. இருந்தும் முழுப் போட்டிகளையும் ரத்துசெய்வது சாத்தியமில்லாதது” என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலக நாடுகள் உள்ள கடினமான சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடப்பது சந்தேகம். எனவே, 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராகும்படி ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி தங்கள் நாட்டு வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், இவை அனைத்துக்கும் மேலாக ஒலிம்பிக் போட்டியிலிருந்து தங்கள் நாடு விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது கனடா. கொரோனா அச்சம் முற்றிலும் மறையும் வரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டாம் என்ற கோரிக்கையுடன் கனடா விலகியுள்ளது.

கனடா
கனடா

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒலிம்பிக் போட்டிகளைவிட்டு விலகுவதில் இருக்கும் உள்ளார்ந்த சிக்கல்களை ஆராயும்போது, எங்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் உலக சமூகத்தின் ஆரோக்கியம், பாதுகாப்பைவிட வேறு எதுவும் எங்களுக்கு முக்கியமில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள முதல் நாடு கனடா. அந்நாட்டின் ஒலிம்பிக் கமிட்டி, பாராலிம்பிக் கமிட்டி, மற்ற விளையாட்டுக் குழுக்கள், வீரர், வீராங்கனைகள் மற்றும் கனடா அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பிறகே இந்தக் கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழல் தொடர்பாக சர்வதேச ஒலிம்க் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் (Thomas Bach) பிற நாட்டு வீரர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ``விளையாட்டுகளை நடத்துவது உள்பட அனைத்தை விடவும் மனித வாழ்க்கை மிக முக்கியமானது. இந்த இருண்ட சுரங்கப்பாதையில் நாம் அனைவரும் ஒன்றாக சென்றுகொண்டிருக்கிறோம். இன்னும் எவ்வளவு நேரம் செல்ல வேண்டும் எனத் தெரியவில்லை. ஆனால், ஒலிம்பிக் சுடர் இந்த சுரங்கப்பாதையின் முடிவில் பிரகாசமான வெளிச்சமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தாமஸ் இவ்வாறு கூறியிருந்தாலும் போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பாக இன்னும் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு