Published:Updated:

5 கி.மீ ரேஸில் பாதைமாறிய 9 வயது சிறுவன்! - 10.கி.மீ ரேஸில் வென்று அசத்தல்

5 கி.மீ ரேஸில் கலந்து கொண்ட சிறுவன் பாதை மாறி ஓடி 10 கி.மீ ரேஸில் வெற்றி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.

Kade Lovell
Kade Lovell

அமெரிக்காவில் உள்ள மின்னிசொடா நகரத்தின் செயின்ட் பிரான்ஸிஸ் மேம்பாலம் ஓட்டப்பயந்தங்களுக்கு பெயர்போனது. இங்கு நடக்கும் 10 கிமீ ஓட்டப்பந்தயங்களை வெல்வதற்கு அனுபவமுள்ள போட்டியாளர்களே திணறிப்போவார்களாம். ஆனால், இந்த வருடம் நடந்தப் போட்டியில் 9 வயது சிறுவன் வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அதிலும் அவனது வெற்றி எதிர்பாராதவிதமாக நடந்ததுதான் ஆச்சரியம். ஆம், 5 கி.மீ ரேஸில் ஓடிக்கொண்டிருந்த சிறுவன் பாதை மாறி ஓடியதால் 10 கி.மீ ரேஸில் வென்றிருக்கிறார்.

Kade Lovell
Kade Lovell

கேட் லோவல் என்கிற அந்த சிறுவன் தற்போது 4ம் வகுப்பு படித்து வருகிறார். ஓட்டப்பந்தையங்கள் என்றால் கொள்ளைப் பிரியம் கொள்ளும் அவர், தன் ஒன்றரை வயதாக இருக்கும்போதே முதல் வெற்றியை ருசித்திருக்கிறாராம். 5 கிமீ ரேஸில் ஓடிக்கொண்டிருந்த அச்சிறுவனிடம் தன்னார்வலர் ஒருவர் பாதையைத் தவறாகக் கூறியதால், வழிமாறி 10 கி.மீ ரேஸுக்கான தடத்தில் இணைந்திருக்கிறார். ஓட்டத்தின் இறுதியில்தான் வேறுபாதையில் சென்று கொண்டிருப்பதையே அவர் உணர்ந்திருக்கிறார்.

`உதவ நினைத்தேன்; அவ்வளவுதான்!'- மூழ்கிய பாலத்தில் ஆம்புலன்ஸை வழிநடத்திய சிறுவன்

``பந்தயத்தின் கடைசித் திருப்பத்தில் மாட்டியிருந்த பலகையில் 10 கி.மீ போட்டி என்றிருந்தது. `அச்சோ, இது 5 கி.மீ ரேஸ் பாதையில்லை' என அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அம்மாவிடம் நிச்சயம் திட்டு வாங்கப் போறோம்னு பயந்தேன்" என்கிறார் இந்த இளம் வெற்றியாளர்.10 கி.மீ தூரத்தை 48 நிமிடங்களில் அவர் கடந்தது அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Kade Lovell
Kade Lovell

5 கி.மீ ரேஸின் இறுதிப்பாதையில் தன் மகனுக்காகக் காத்திருந்த கேட் லோவலின் தாய் மற்ற போட்டியாளர்களெல்லாம் இலக்கை அடைந்தும், தன் மகன் வராததால் ஏமாற்றமடைந்திருக்கிறார். கேட் மிக வேகமாக ஓடக்கூடியவன் என்பதாலும் கடைசி மூன்று வாரங்களாக அவன் நன்றாகவே பயிற்சி எடுத்திருந்தான் என்பதாலும் நேரம் செல்ல செல்ல அவரின் கவலை இன்னும் அதிகரித்திருக்கிறது. பின்னர்தான் லோவலை 10 கி.மீ பந்தயம் நடைபெறும் பாதையில் பார்த்ததாகச் சொல்லவும் அங்கு சென்று பார்த்த அவரது தாய்க்கு இன்பஅதிர்ச்சி காந்திருந்தது.

``இந்த அளவுக்கு நான் என் வாழ்வில் பயந்ததே இல்லை. அவனை எதிர்பார்த்து காத்திருந்தேன். அவன் வரவேயில்லை. கேட் தொலைந்து போய்விட்டான் என நினைத்தேன். இல்லை ஒருவேளை அவன் ஓடமுடியாமல் பயந்து எங்கேயோ அமர்ந்திருக்கக்கூடும் எனப் பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தேன். பிறகுதான் அவன் 5 கி.மீக்கான ஓட்டப்பந்தய வளைவில் திரும்ப மறந்துபோய் 10 கி.மீ தடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறான் என அறிந்தோம். அவனருகே யாருமே இல்லை. கடைசியாக வரப்போகிறான் என நினைத்த எனக்கு அவன் முதலாவதாக வந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

Kade Lovell
Kade Lovell

பயத்தோடும் கவலையோடும் அங்கு சென்ற என்னை அவனின் வெற்றி உச்சக்கட்ட சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டது. சாதாரணமாக ஓடுவதை விட பயம் அவனை இன்னும் அதிக வேகத்தில் ஓட வைத்திருக்கிறது" எனத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்திருக்கிறார் கேட் லோவலின் தாய்.