
தான் ஓய்வுபெறுவதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஒரு இளமையான அணியைத் தயார்செய்துவிடவேண்டும் என நினைக்கிறார் தோனி
2020 ஐபிஎல் ஐக்கிய அரபு நாடுகளில் நடக்கும் என அறிவிப்பு வந்ததிலிருந்தே பல கேள்விகளும் குழப்பங்களும் தொடங்கிவிட்டன. சில கேள்விகளுக்கான பதில்கள் மட்டும் இங்கே!
சுரேஷ் ரெய்னா இல்லாமல் சிஎஸ்கே?!
கடந்த பத்தாண்டுகளாக சென்னை அணிக்காக விளையாடிவரும் சுரேஷ் ரெய்னா, அணிக்குள் எழுந்த சிறு ஈகோ மோதல், கொள்ளைக்காரர்களால் உறவினர்கள் உயிரிழப்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களில் சிலருக்குக் கொரோனா என எல்லாம் சூழ்ந்துகொள்ள, இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டை விட்டே விலகிவிட்டார். திரும்ப அணிக்குள் அவர் நுழைய விரும்பினாலும் அணி நிர்வாகம் அவர் இல்லாமல் இந்த ஐபிஎல்-லை சந்திக்கவே விரும்புகிறது. கடந்த ஆண்டு அவரின் சராசரி (24) குறைவு என்பதையும் அணி நிர்வாகம் அறியும்.

மார்ச்சில் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி சென்னையில் பயிற்சிகளில் ஈடுபட்டது. அப்போது ருத்துராஜ் கெய்க்வாடின் பர்பாமென்ஸ் தோனியை மிகவும் ஈர்த்திருக்கிறது. அதனால் நம்பர் 3 பொசிஷனில் ருத்துராஜ் கெய்க்வாடை வைத்தே போகலாம் என்பதுதான் தோனியின் பிளான். ஷேன் வாட்ஸன், டுப்ளெஸ்ஸி, கெய்க்வாட், ராயுடு என்பதுதான் சிஎஸ்கேவின் டாப் ஆர்டராக இருக்கும்.
ஹர்பஜன் சிங் விலகல் அணியில் ஆப் ஸ்பின்னருக்கான வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. ஸ்லோ பிட்ச்கள் கொண்ட யுஏஇ மைதானங்களில் இதுவொரு பிரச்னைதான். தோனி மேஜிக்தான் காப்பாற்ற வேண்டும்.

தோனியின் பிளான் என்ன?
தான் ஓய்வுபெறுவதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஒரு இளமையான அணியைத் தயார்செய்துவிடவேண்டும் என நினைக்கிறார் தோனி. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் ருத்துராஜ், சாம் கரண், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், லுங்கி எங்கிடி, ஜெகதீசன், சாய் கிஷோர் ஆகியோருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதேசமயம் சுரேஷ் ரெய்னாவுக்கான மாற்றுவீரரை சிஎஸ்கே இன்னும் அறிவிக்கவில்லை. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல்-லின் பிற்பகுதியில் சுரேஷ் ரெய்னா அணிக்குள் வந்தாலும் வரலாம்.

விறுவிறு, பரபர போட்டிகளை எதிர்பார்க்கலாமா?!
முன்பே சொன்னதுபோல அரபு பிட்ச்கள் அனைத்துமே ஸ்லோ ட்ராக். அதனால் 200 ரன் சேஸை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஸ்பின்னர்கள்தான் கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள். 100 ரன்களைக்கூட டிபெண்ட் செய்யக்கூடிய ஆட்டங்களை இந்த ஐபிஎல்-ல் காணலாம். பியுஷ் சாவ்லாவை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்கும்போது பெரிய எதிர்வினைகள் இருந்தது. இப்போது பியுஷ் சாவ்லாவின் இருப்பு சிஎஸ்கேவுக்கு மிக முக்கியமானதாக மாறியிருக்கிறது.
வீரர்கள் ஆறு மாதமாக விளையாடவே இல்லையே?!
கடந்த மார்ச்சில் நியூசிலாந்துடன் விளையாடியதுதான் இந்திய அணி வீரர்களுக்குக் கடைசிப்போட்டி. ஆறு மாத இடைவெளிக்குப்பின் தங்கள் பார்மை மீட்டெடுப்பது அவர்களுக்கு சிரமமாகவே இருக்கும். ஆனால், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தக் கொரோனாச் சூழலிலும் சர்வதேச கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். அவர்களில் பலர் நல்ல பார்மில் இருப்பதால் அவர்களின் பர்பாமென்ஸே இந்த ஐபிஎல்-லில் அணிகளைக் காப்பாற்றக்கூடும்.

போட்டிகள் நடக்கும்போது வீரர்களுக்குக் கொரோனாத் தொற்று வந்தால்?!
இப்போது எல்லா அணிகளுமே துபாய், அபுதாபியில் தனித்தனி ஹோட்டல்களில்தான் தங்கியிருக்கின்றன. பயிற்சிகள் தனியார் மையங்களில் நடந்து வருகிறது. முதல் போட்டி தொடங்கும் போதுதான் ஸ்டேடியங்களுக்குள் அணியினர் வருவார்கள். பயோ பபுள் என்று சொல்லப் படும் பாதுகாப்பு வளையத்துக்குள் வீரர்கள், பயிற்சியாளர்கள் வந்துவிட்ட பிறகு ஒவ்வொருவாரமும் வெள்ளிக்கிழமை எல்லோருக்குமே கொரோனா டெஸ்ட் எடுக்கப்படும். அப்படி எடுக்கும்போது வீரர்களுக்கு பாசிட்டிவ் வந்தால் அவர்கள் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்படுவர். நெகட்டிவ் ரிசல்ட் வந்த பிறகே அந்த வீரர் மீண்டும் பயோ வளையத்துக்குள் வருவார். அந்தக் குறிப்பிட்ட வீரரோடு தொடர்பில் இருந்த அணியின் மற்ற வீரர்களும் ஒருவாரம் தனிமைப்படுத்தப் படுவார்கள். நெகட்டிவ் ரிசல்ட் வருபவர்கள் மட்டுமே மீண்டும் விளையாட வரமுடியும்.

ரசிகர்களுக்கு இடம் உண்டா?!
அக்டோபருக்கு மேல் 30 சதவிகித பார்வையாளர்களை ஸ்டேடியத்துக்குள் அனுமதிக்கும் திட்டத்தில் இருக்கிறது பிசிசிஐ. அரபு அரசு ஒப்புக்கொண்டால் ரசிகர்கள் ஸ்டேடியங்களுக்குள் சமூக இடைவெளியுடன் மேட்ச் பார்க்கலாம்.
ஐரோப்பாவில் கால்பந்து லீக், அமெரிக்காவில் என்பிஏ ஆகியவற்றில் சில வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் சவால்களை சமாளித்து அத்தொடர்கள் நடந்து முடிந்திருக்கின்றன. அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட்டும் திட்டமிட்டப்படி சரியாக நடக்கும் என நம்புவோம். கிரிக்கெட் கொண்டாட்டத்துக்குத் தயாராவோம்!