ஆரம்பமே அசத்தல்:
பெண்களுக்கான ஐ.பி.எல் தொடரை நடத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து சமீபத்தில்தான் பிசிசிஐயும் பெண்கள் ஐ.பி.எல் -க்கு பச்சை கொடி காட்டியது. இந்நிலையில் பெண்கள் ஐ.பி.எல்-லின் முதல் 5 சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமையை 951 கோடி ரூபாய்க்கு வியாகாம் 18 நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதன்மூலம் பெண்களுக்கான ஒரு ஐ.பி.எல் போட்டி ஏறக்குறைய 7 கோடி ரூபாய் மதிப்பை பெறுகிறது.

WWE பாணியில் கிரிக்கெட்:
ஐ.பி.எல் போன்றே அரபு அமீரகத்தில் International League T20 என ஒரு ப்ரீமியர் லீக் போட்டி தொடங்கப்பட்டிருக்கிறது. உத்தப்பா போன்ற இந்திய வீரர்களும் இந்த லீகில் ஆடி வருகின்றனர். இதில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய அம்சம் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதாவது, ஐ.பி.எல்லில் அதிக ரன்களை எடுக்கும் வீரருக்கு ஆரஞ்சு தொப்பியும் அதிக விக்கெட்டுகளை எடுக்கும் வீரருக்கு பர்ப்பிள் நிற தொப்பியும் வழங்கப்படும். அதேமாதிரி, இந்த International League T20 யில் அதிக ரன்களை எடுக்கும் வீரருக்கு பச்சை நிற பெல்ட்டும் அதிக விக்கெட்டுகளை எடுக்கும் வீரருக்கு வெள்ளை நிற பெல்ட்டும் வழங்கப்படுகிறது. இந்த பெல்ட்டுகள் WWE இல் வழங்கப்படும் Championship பெல்ட்டுகளை போன்று இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அசரவைத்த ஹாக்கி:
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஓடிஐ போட்டியும் ஹாக்கியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய உலகக்கோப்பை போட்டியும் நடந்திருந்தது. திருவனந்தபுரத்தில் நடந்திருந்த கிரிக்கெட் போட்டியை வெறும் 20,000 ரசிகர்கள் மட்டுமே நேரில் கண்டுகளித்த நிலையில், ரூர்கேலாவில் நடந்த ஹாக்கி போட்டியை 21,800 ரசிகர்கள் நேரில் கண்டு களித்திருந்தனர். கிரிக்கெட்டை விட ஹாக்கிக்கு அதிகமாகக் கூட்டம் கூடியது பெரும் வியப்பை கொடுத்திருக்கிறது.
சேப்பாக்கத்தில் ரஞ்சி:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரஞ்சி போட்டிகள் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் அசாம் மோதும் போட்டிகள் இன்றும் தமிழ்நாடு மற்றும் சவுராஷ்ட்ரா மோதும் போட்டி 24-ம் தேதியும் தொடங்கவிருக்கிறது.

வெற்றியோடு தொடங்கிய நடால்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்னில் தொடங்கியிருக்கிறது. முதல் நாளிலேயே ரஃபேல் நடால் பிரிட்டனை சேர்ந்த ட்ரேப்பருக்கு எதிராக மோதியிருந்தார். இந்த போட்டியை நடால் 7-5, 2-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்றிருக்கிறார். கடந்த ஆஸ்திரேலிய ஓபனையும் நடால்தான் வென்றிருந்தார். இந்த முறையும் அவர் வெற்றியுடன் தொடங்கியிருப்பது ரசிகர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.