Published:Updated:

பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்ற சுமித் அன்ட்டில்... ஒரே போட்டியில் ஹாட்ரிக் உலக சாதனைகள்!

மொத்தமாக 6 வாய்ப்புகளில் மூன்று உலக சாதனைகள். இப்படிப்பட்ட ஒருவர் தங்கம் வெல்லாவிட்டால்தான் ஆச்சர்யம். இந்தியாவைத் தாண்டி உலகமே இப்போது அவரை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியர்கள் ஒரு பதக்கத்துக்காக வருடக்கணக்கில் ஏங்கிக் கொண்டிருந்த காலத்தையெல்லாம் பாராலிம்பிக் வீரர்/வீராங்கனைகள் மலையேற வைத்துவிட்டனர். டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஒரே நாளில் இந்திய வீரர்/வீராங்கனைகள் ஐந்து பதக்கங்களை வென்றிருக்கின்றனர். அதில் இரண்டு தங்கம். அவனி துப்பாக்கிச்சுடுதலில் ஒரு தங்கத்தை வென்று கொடுக்க, சுமித் அன்ட்டில் ஈட்டி எறிதலில் ஒரு தங்கத்தை வென்று கொடுத்திருக்கிறார்.

சுமித் அன்ட்டில்
சுமித் அன்ட்டில்

23 வயதாகும் சுமித் அன்ட்டில் ஹரியானாவை சேர்ந்தவர். ஹரியானாவில் குழந்தைகள் நடை பயில்வதே மல்யுத்த களத்தில்தான். சுமித்தும் அப்படியே. மல்யுத்தத்தில் பயங்கர ஆர்வமாக இருந்த இவருக்கு சாமானிய ஹரியானாக்காரருக்கு இருப்பது போல ஒலிம்பிக் கனவும் இருந்ததில் ஆச்சர்யமில்லை. ஆனால், இடையில் நடந்த ஒரு விபத்து அவரின் வாழ்க்கையை தடம் புரள வைத்தது. ட்ராக்டர் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சுமித்துக்கு ஒரு காலை அகற்ற வேண்டிய இக்கட்டான சூழல் உருவானது. மல்யுத்தத்தில் இனி தீவிரமாக ஈடுபட முடியாத நிலை உருவானது. புற்றுநோயால் தந்தையும் மரணமடைந்தார். துயரம் மேல் துயரம்.

ஹரியானா விளையாட்டு வீரர்களின் பூமி. அங்கே யாரும் அவ்வளவு சீக்கிரமாக தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். துவண்டுவிட மாட்டார்கள். மல்யுத்தம் இல்லையென்றால் ஈட்டி எறிதலில் பங்கேற்கலாம் என்ற முடிவை எடுக்கிறார். அந்த ஒரு முடிவுதான் இந்தியாவுக்கு இப்போது தங்கத்தை வென்று கொடுப்பதற்கு அச்சாரமாக அமைந்தது.

சுமித் அன்ட்டில்
சுமித் அன்ட்டில்

ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுடன் இணைந்து பயிற்சி பெற்றிருக்கிறார். அவருடன் போட்டி போட்டிருக்கிறார். தொடர்ச்சியாக மிகச்சிறப்பாக பல தொடர்களிலும் வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேசிய அளவிலான கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் 66.95 மீட்டருக்கு வீசி உலக ரெக்கார்ட் வைத்தார். தேசிய போட்டி என்பதால் இந்த ரெக்கார்ட் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. அப்போதே சுமித்தின் பயிற்சியாளர் நாவல் சிங் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு சொல்லியிருந்தார். ''உலக சாதனை பரவாயில்லை. ஆனால், சுமித்தால் இன்னும் அதிகமாக வீச முடியும். அவருக்குள் இன்னும் அதிக திறன் ஒளிந்திருக்கிறது'' என சொல்லியிருந்தார். சுமித்தும் ஒலிம்பிக் அரங்கில் இன்னும் சிறப்பாக வீச முயற்சிப்பேன் என கூறியிருந்தார். இப்போது முடிவுகளை பார்க்கும் போது இவை வெறும் சொற்கள் அல்ல ஒரு சூளுரை என்பது புரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

F64 ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் சுமித் அன்ட்டிலும் சந்தீப் சௌத்ரியும் பங்கேற்றிருந்தனர். ஒருவருக்கு 6 வாய்ப்புகள் வழங்கப்படும். சுமித் அன்ட்டில் முதல் வாய்ப்பிலேயே பிரமாதப்படுத்திவிட்டார். 66.95 மீட்டருக்கு வீசி உலக சாதனைப் படைத்தார். அப்போதே ஏறக்குறைய தங்கம் உறுதியாகிவிட்டது. இரண்டாவது வாய்ப்புக்கு ஈட்டியை ஏந்தினார். முதல் வாய்ப்பை விட மிகச்சிறப்பாக இதில் 68.08 மீட்டருக்கு வீசினார். இன்னொரு உலக சாதனை.

முதல் இரண்டு வாய்ப்புகளிலும் இரண்டு புதிய உலக சாதனைகளைப் படைத்தார். பாராலிம்பிக்ஸில் எப்போதாவதே நடக்கும் அரிய நிகழ்வு இது. ஆனால், இத்தோடு நின்று விடவில்லை. ஐந்தாவது வாய்ப்பில் 68.55 மீட்டருக்கு வீசி மீண்டும் ஒரு புதிய உலக சாதனை படைத்தார். மொத்தமாக 6 வாய்ப்புகளில் மூன்று உலக சாதனைகள். இப்படிப்பட்ட ஒருவர் தங்கம் வெல்லாவிட்டால்தான் ஆச்சர்யம். இந்தியாவை தாண்டி உலகமே இப்போது அவரை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.

சுமித் அன்ட்டில்
சுமித் அன்ட்டில்
Joel Marklund for OIS

ஒரே நாளில் பாராலிம்பிக்ஸ் அரங்கில் இந்தியாவின் தேசிய கீதம் இரண்டாவது முறையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா இதுவரை அடைந்திடாத பெருமைகளை பாராலிம்பிக்ஸ் வீரர்/வீராங்கனைகள் அடைய வைத்திருக்கின்றனர். ஈட்டி எறிதலில் இன்றைய நாளில் மட்டும் மூன்று பதக்கங்கள். சில நாட்களுக்கு முன்புதான் நீரஜ் சோப்ரா வேறு தங்கம் வென்றிருந்தார். ஈட்டியை ஒரு தேசிய சின்னமாக அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு