இந்திய-வங்கதேச அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டம், இன்று மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் பிரபலமான ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்கும் முன்பு வரை ரெட் பால் போட்டியாக இருந்த ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டி, கங்குலியின் வருகைக்குப் பின்னர் பிங்க் பால் போட்டியாக மாறியது.
முதலில் இந்த விஷயத்தை, இந்திய கிரிக்கெட் சங்க உறுப்பினர்களை ஏற்க வைத்த கங்குலி, அடுத்ததாக வங்கதேச கிரிக்கெட் சங்கத்தையும் பேசி ஏற்கவைத்தார். இரு அணிகளும் விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுவாகும். இதனால் இந்த டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி, தனது முதலாவது பகலிரவு ஆட்டத்தை சொந்த மண்ணில் விளையாடுவதில் கங்குலியின் பங்கு மிக முக்கியமானது. இந்த டெஸ்ட் போட்டி தொடர்பான ஃபீவர் கொல்கத்தா நகர் முழுவதும் பரவியுள்ளது. கொல்கத்தாவில் வெளியாகும் நாளிதழ் ஒன்று, பிங்க் நிறத்தில் தனது பத்திரிகையை வெளியிட்டுள்ளது.
மேலும், கொல்கத்தா நகரின் முக்கியப் பகுதிகள் எல்லாம் பிங்க் நிறத்தில் ஜொலிக்கின்றன. பல மிட்டாய் கடைகளில் பிங்க் நிறத்தில் ஸ்வீட்டுகள் விற்கப்படுகின்றன. இது தொடர்பான புகைப்படங்களை கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டி தொடர்பாக, போட்டியை ஒளிபரப்பு செய்யும் நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு பேட்டி அளித்த கங்குலி, ``இந்தப் போட்டியின் போது, மொத்த மைதானத்திலும் பல மாற்றங்களைக் காணலாம். சிறப்புமிக்க பலர் இந்தப் போட்டியைக் காண வருகிறார்கள். 2000 -வது ஆண்டில், இந்திய வங்கதேச அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடிய வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

பல முன்னாள் கேப்டன்கள் மைதானத்தை அலங்கரிக்க உள்ளனர். வங்கதேச பிரதமரும் மேற்கு வங்க முதல்வரும் கலந்துகொள்ள உள்ளனர்” என்றார். வங்கதேச பிரதமரும் மேற்கு வங்க முதல்வரும் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியைத் தொடங்கிவைப்பார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து பேசிய கங்குலி, ``விளையாட்டுத்துறையில் சாதித்த மேரி கோம், பி.வி. சிந்து, அபினவ் பிந்த்ரா, சானியா மிர்சா, கோபிசந்த், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோரும் டெஸ்ட் போட்டியைக் காண வருகை தர உள்ளனர். ஒட்டுமொத்த கொல்கத்தா நகரமே பிங்க் நிறத்தில் ஜொலிக்கிறது. மைதானத்தைச் சுற்றி இருக்கும் பெரும்பாலான கட்டடங்கள் பிங்க் மயமாக உள்ளன. மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.