Published:Updated:

பிரனதி நாயக்கின் ஜிம்னாஸ்டிக் கனவுகள்... ஒலிம்பிக்கில் அசத்தப்போகும் பேருந்து ஓட்டுநரின் மகள்!

மேற்குவங்க மாநிலத்தின் ஜர்காமை சேர்ந்த பிரனதி மிகவும் சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்டவர். அவரின் தந்தை பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தன் கனவுகளைத் துரத்தத் தொடங்கிய முதல் நாளில் இருந்தே பணம் என்பது அவருக்கும் அவரின் குடும்பத்துக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்துகொள்ளத் தேர்வாகியுள்ளார் பிரனதி நாயக். 26 வயது நிரம்பிய பிரனதிதான் ஒலிம்பிக் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக்ஸில் கலந்துகொள்ளவிருக்கும் இரண்டாவது இந்தியர். இதற்கு முன்னர் 2016-ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் தீபா கர்மாகர் முதன்முறையாக இந்தியா சார்பாக ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பங்கேற்றிருந்தார்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே பிரனதியின் தேர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுமின்றி குழப்பம் நீடித்துவந்த நிலையில் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதி போட்டியாக நடைபெறவிருந்த ஆசிய ஜிம்னாஸ்டிக் (Asian artistic gymnastics championships) போட்டிகள் கொரோனா பரவலின் அச்சம் காரணமாக சமீபத்தில் ரத்து செய்யப்பட்டன. அதற்குப்பதிலாக 2019-ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் ஒலிம்பிக்கிற்கான தகுதியாக எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றன. இதில் பிரனதி நாயக் மிக சிறப்பாக செயல்பட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்ததால் தற்போது அவரின் ஒலிம்பிக் கனவு எதிர்பாராதவிதமாக மெய்படவுள்ளது.

Pranati Nayak
Pranati Nayak

மேற்குவங்க மாநிலம், ஜர்காமை சேர்ந்த பிரனதி மிகவும் சாதாரண குடும்பப் பின்னணியை கொண்டவர். அவரின் தந்தை பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தனது ஒன்பதாவது வயதில் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியை தொடங்கினார். தன் கனவுகளைத் துரத்தத் தொடங்கிய முதல் நாளில் இருந்தே பணம் என்பது அவருக்கும் அவரின் குடும்பத்துக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. பிரனதியின் பயிற்சிக்காக மொத்த குடும்பமும் கொல்கத்தாவிற்கு குடிபெயர்ந்ததுதான் அவரது வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அங்கு அவர் மினரா பேகம் என்ற பயிற்சியாளரை சந்தித்தது, ஜிம்னாஸ்டிக்ஸில் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டு இன்று ஒலிம்பிக் வரை தகுதி பெற்றதற்கான தொடக்கப்புள்ளி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பயிற்சியாளர் பேகம், பிரனதிக்கு மிகச்சிறந்த பயிற்சியை மட்டும் அளித்திடாமல் அவருக்கு முழுமையான பொருளாதார வசதிகளையும் வழங்கினார். அவரின் கனவுகளுக்கு பணம் என்பது எந்த ஒரு வகையிலும் தடையாக இருந்துவிடாமல் தங்குமிடம், உணவு, செலவுக்கு பணம் என அனைத்தையும் பேகமே பார்த்துக்கொண்டார். பிரனதியும் அதற்கேற்றவாறு மிக விரைவிலேயே இந்திய அளவிலான போட்டிகளில் தன்னை நிரூபித்தார். இதற்குப் பலனாக இந்திய ரயில்வேதுறையில் அவருக்கு பணியும் கிடைத்தது. இப்படியாக இருந்த பிரனதியின் வாழ்கையை மொத்தமாக புரட்டிபோட்டது 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள். மங்கோலிய தலைநகரில் நடைபெற்ற அப்போட்டிகளில் அவரின் சிறந்த செயல்பாடுகள்தான் இன்று ஒலிம்பிக் அவரின் கதவை தட்டக் காரணம்.

Pranati Nayak
Pranati Nayak

“2019-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற தேவையான புள்ளிகளை பெறாமல் போனது மிகவும் வருத்தமளித்தது. மேலும் தற்போது நடக்கவிருந்த தகுதி போட்டிகளும் கொரோனா காரணமாக ரத்து செய்யபட்டுள்ள நிலையில் நான் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவேன் என்பதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எனது கனவு நனவாகிய தருணம் இது” என்கிறார் பிரனதி.

பொதுவாகவே கிரிக்கெட்டை மதமாக வழிபடும் மக்கள் வாழும் இந்தியாவில் வேறு எந்தவொரு விளையாட்டின் மீதும் அதிக கவனமும் கிடைக்காது. அவ்விளையாட்டிற்கான வசதிகளும் இருக்காது. இதில் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவையெல்லாம் மிகவும் அந்நியமாகவே பார்க்கப்படும். இதற்கு முன்னர் தீபா கர்மாகர் முதல்முறையாக ரியோ ஒலிம்பிக்கில் கலந்துக்கொண்டபோதுதான் இந்த விளையாட்டு கொஞ்சம் கவனம் பெற்றது. இருந்தாலும் தீபா கர்மாகர் மீதுதான் அதிக மீடியா வெளிச்சம் பரவியது. ஜிம்னாஸ்டிக்ஸ் மீதல்ல.

ஆனால் தற்போது பிரனதி டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்வது, ஜிம்னாஸ்டிக் மீது இன்னும் அதிக கவனம் செலுத்தவைக்கும். அன்று தீபா கர்மாகர் ரியோவில் போட்டியிட்டபோது இந்தியாவில் ஜிம்னாஸ்டிக்ஸா என்று கேட்ட நிலை மாறி டோக்கியோவில் பிரனதி மிக சிறப்பாக செயல்படும்பட்சத்தில் இந்தியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் புதியதொரு எழுச்சியை பெற்று பல தீபாக்களும், பிரனதிக்களும் நிச்சயம் உருவாவார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு