சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“கம்ப்யூட்டருடன் செஸ் விளையாடுவதைப் பார்வையாளர்கள் விரும்புவதில்லை!”

விஸ்வநாதன் ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
விஸ்வநாதன் ஆனந்த்

20 வயசுல ஒண்ணுமே தெரியாம அப்பாவியா இருந்த பால்ய காலம் எல்லாம் நினைவுக்கு வந்தது. இப்ப சினிமாவுக்காக, அதையெல்லாம் மறுபடியும் யோசிக்கணும்.

அட... இவருக்கு வயசே ஆகாதா’ என நாம் நினைக்கும் மனிதர்களில் விஸ்வநாதன் ஆனந்த் முக்கியமானவர். கறுப்பு ஃப்ரேம் கண்ணாடி, கள்ளமில்லாத சிரிப்பு என இப்போதும் அதே ஆனந்த். சதுரங்கக் கட்டங்கள் வழி உலகைச் சுற்றி வந்தவரை, கொரோனா காலம் வீட்டுக்குள் பூட்டி வைத்திருக்கிறது. 51வது பிறந்தநாளை சென்னை வீட்டில் மனைவி, மகனுடன் கொண்டாடிய ஆனந்துடன் ஒரு க்விக் சாட்.
“கம்ப்யூட்டருடன் செஸ் விளையாடுவதைப் பார்வையாளர்கள் விரும்புவதில்லை!”

``நியூ நார்மல் வாழ்க்கை எப்படியிருக்கிறது?’’

“வித்தியாசமா இருக்கு. ஏழு மாசம் தொடர்ந்து இப்படி நான் வீட்டுலயே இருந்து 45 வருஷம் ஆகியிருக்கும். ஏழு வயசுல இருந்து எங்காவது டோர்னமென்ட்ஸ் போயிட்டுதான் இருந்திருக்கேன். லாக்டெளன்ல சில புது முயற்சிகள் ஆரம்பிச்சிருக்கேன். ஆனந்த் - வெஸ்ட்பிரிட்ஜ் செஸ் அகாடமின்னு வளரும் செஸ் வீரர்களுக்கு கோச்சிங் செய்யறேன். Graphy app மூலமா நானும், என் மனைவி அருணாவும் ஒவ்வொரு வாரமும் செஸ் சொல்லித் தர்றோம். ஏதாவது செஞ்சு என்னை நானே பிஸியா வெச்சிருக்க முயற்சி பண்றேன்.”

``இத்தனை வருஷம் கழிச்சு பயோபிக். என்ன பிளான் பண்ணியிருக்கீங்க?’’

“2019-ல என்னோட MindMaster புத்தகத்துக்காக பழசையெல்லாம் யோசிச்சிட்டு இருந்தேன். 20 வயசுல ஒண்ணுமே தெரியாம அப்பாவியா இருந்த பால்ய காலம் எல்லாம் நினைவுக்கு வந்தது. இப்ப சினிமாவுக்காக, அதையெல்லாம் மறுபடியும் யோசிக்கணும். எனக்கு ரொம்பவே புதிய அனுபவமா இருக்கு. ஆனந்த் என்றாலே செஸ் மட்டும்தான்னு ஒரு பிம்பம் இருக்கு. விளம்பரங்கள்ல வந்தது தாண்டி பெருசா என்னோட வீடியோக்கள்னு எதுவும் இல்லை. இந்த பயோபிக் அதையெல்லாம் மாத்தும்னு நம்பறேன். புத்தகத்தில் சொல்லாத சில விஷயங்கள் இதுல இருக்கும். யார் நடிக்கப் போறாங்கன்னு நானுமே தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன். ஆனந்த் எல் ராய் இயக்கின படங்களும் பெருசா பார்த்ததில்லை. அதே சமயம், பயோபிக் மூலமா, ஒருத்தர் என்ன தெரிஞ்சுக்கறாங்கங்கறது முக்கியம்னு நினைக்கறேன். சமீபத்துல மைக்கேல் ஜோர்டானோட பயோபிக்கான The Last Dance பார்த்தேன். அது டாக்குமென்டரிங்கறதால பெரும்பாலும், அவரோட காட்சிகள்தான் இருந்துச்சு. அப்படியில்லாம, ஒரு கதை, வெவ்வேறு இடங்கள்ல வாழ்ந்தது எல்லாம் சேர்ந்து ஒரு சினிமாவா இருக்கும்னு நம்பறேன்”

“கம்ப்யூட்டருடன் செஸ் விளையாடுவதைப் பார்வையாளர்கள் விரும்புவதில்லை!”

``செஸ் பயிற்சியில செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) வளர்ச்சியை எப்படிப் பார்க்கறீங்க?’’

“இப்ப எல்லாருடைய பயிற்சிக்கும் அது அதிகமா தேவைப்படுது. 20 வருஷத்துக்கு முன்னாடி இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைச்சதில்ல. சில ஓப்பனிங்ஸ், வேரியேஷன்ஸ் எல்லாத்தையும் வேறு விதமா மாத்திக் காட்டுது AI. இதுதான் முடிவுன்னு நினைச்ச எத்தனையோ போட்டிகளை மறுபரீசிலனை செய்ய வைக்குது. சின்ன வயசுல பண்ணின அதே அளவு இப்பவும் பயிற்சி எடுக்கறேனான்னு தெரியல. ஆனா, என்ன பண்றோம்ங்கறதவிட எப்படிப் பண்றோம்ங்கறது முக்கியம்னு நினைக்கறேன். பயிற்சிகள்ல இப்பவெல்லாம் AI பங்கு ரொம்பவே அதிகமா இருக்கு. அத வச்சு நான் என்னை எப்படி மேம்படுத்திக்கணும்னுதான் பாத்துட்டு வர்றேன். ஆனா, இப்ப எந்த டோர்னமென்டும் இல்லாததால, இலக்கில்லாம ஓடற மாதிரியிருக்கு. சீக்கிரமே எல்லாம் சகஜமாகணும்னு விரும்பறேன்.”

``மனுஷனுக்கும் மெஷினுக்கும் நடக்கற செஸ் போட்டிகள் இப்ப அதிகமாகுதே?’’

“கம்ப்யூட்டர்கூட மனுஷன ஆட வச்சு எந்தப் பிரயோஜனமும் இல்லை. நாளுக்கு நாள் கம்ப்யூட்டர் அதோட பெர்பாமன்ஸ அதிகரிச்சுக்கிட்டே தான் இருக்கும். முன்னாடி தோத்துடுவோம்னு தெரியாம தோத்தோம். இப்ப நமக்கே தோத்துடுவோம்னு தெரியும். என்னைக் கேட்டால், கம்ப்யூட்டர்கூட விளையாடுறது, ஒரு கார்கூட ஓட்டப்பந்தயம் நடத்துற மாதிரி. கார்கூட நாம ஆசைக்கு ஓடிப் பார்க்கலாம். ஆனா, கடைசியா கார்தான் ஜெயிக்கப் போகுது. அது 1960-ல வந்த காரா இருந்தா என்ன, இப்ப வர்ற மாடலா இருந்தா என்ன? மனுஷனும் மனுஷனும் மோதிக்கறத பார்க்கத்தான் பார்வையாளர்களுக்குமே விருப்பம் இருக்கும். இப்பவரைக்கும் பார்வையாளர்கள் அதைத்தான் விரும்பறாங்க. அடுத்து நடக்கறத அப்ப பார்த்துக்கலாம்.”

``Queen’s Gambit தொடருக்கான வரவேற்பு, செஸ்ஸை இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கு. ஒரு தொடரால் இதெல்லாம் சாத்தியமாகும்னு நம்புனீங்களா?’’

“எல்லோரும் வீட்டுல இருந்த நேரத்துல, செஸ்ஸுக்கான தேவை இன்னும் அதிகமா இருந்துச்சு. ஆனா, அதையெல்லாம் தாண்டி நெட்ஃப்ளிக்ஸ்ல வெளியான ‘குயின்ஸ் கேம்பிட்’ தொடர், செஸ்ஸுக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்ப கொடுத்திருக்குதான். Chess.com தளத்துல 50 மில்லியன் நபர்கள் அதிகமா விளையாடியிருக்காங்க. முழுக்க முழுக்கவே அந்தத் தொடர் ஒரு புனைவு. சில விஷயங்கள் எனக்கு இப்படியெல்லாம் பண்ண மாட்டோம்னுகூட தோணுச்சு. ஆனா, அதானே சினிமா. ஒரு தொடர் மூலமா செஸ்ஸுக்கு நல்லது நடக்குதுன்னா, அதை எல்லோரும் பகிர்ந்துக்க வேண்டியதுதான்.”

“கம்ப்யூட்டருடன் செஸ் விளையாடுவதைப் பார்வையாளர்கள் விரும்புவதில்லை!”

``இரண்டு செஸ் போர்டுல ஒரே சமயம் ஆடறது மாதிரி (Bughouse Chess) நிறைய வேரியேஷன்ஸ் செஸ்ல உள்ள வருதே?’’

“என்ன சொல்றதுன்னு தெரியல. எல்லோருமே ரெண்டு போர்டு வச்சு விளையாடறாங்க. கார்ல்சன், பிரெஞ்சு வீரரான MVL ரெண்டு பேருமே இப்படி விளையாடிப் பார்த்திருக்கிறேன். என்னால் இன்னும் அதைப் புரிஞ்சுக்கமுடியலை. எப்படி ஒரு போர்டில இருக்குற காயின்ஸ வச்சு இன்னொண்ணுல விளையாட வைக்க முடியும்? உண்மைய சொல்லணும்னா, என்னால அவங்க வேகத்துக்கு இதெல்லாம் விளையாட முடியலை. இதுல என்ன கிரியேட்டிவிட்டி இருக்குன்னும் தெரியல. எப்பவும் செஸ்ஸுக்கு புத்தகங்கள வச்சு பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்கறது போரடிக்கும்னு நினைக்கறவங்க இதெல்லாம் பண்ணலாம். இந்த ரெண்டு செஸ் போர்டு, குதிரைக்கு மந்திரியோட பவர வச்சுட்டு விளையாடறது இதெல்லாம் அடுத்த லெவல் போகல. அதுவரைக்கும் சந்தோஷம். அதே மாதிரி நான் ரேபிட் ஃபயருக்கோ, பிலிட்ஸ் மாதிரியான செஸ் போட்டிகளுக்கோ எதிரி இல்ல. எனக்கு கிளாசிக்கல் செஸ்தான் பிடிச்சிருக்கு. கிரிக்கெட்ல டி20, டெஸ்ட் ரெண்டுமே நடக்குதே. அந்த மாதிரிதான் இதையும் எடுத்துக்கறேன்.”

``இந்தியாவோட முதல் கிராண்ட் மாஸ்டர் நீங்கதான். இப்ப 67 கிராண்ட் மாஸ்டர்கள் வந்துட்டாங்க. இன்னுமே, இந்தியாவால ஆனந்த்துக்கு நிகரா ஒரு செஸ் பிளேயரை உருவாக்க முடியல. எங்க நாம பின் தங்கியிருக்கிறோம்?’’

“பின்தங்கிட்டோம்னு எடுத்துக்க முடியாது. நிறைய கிராண்ட் மாஸ்டர்ஸ் இருக்காங்க. அதுல நிறைய சின்னப் பசங்க இருக்காங்க. அவங்கள இன்னமும் எப்படி பலப்படுத்தணும்னுதான் யோசிக்கணும். 2019-ல யதேச்சையா சந்தீப் சிங்கல்கூட பேசிக்கிட்டு இருக்கும்போது, அகாடமி பத்திப் பேச்சு வந்துச்சு. அப்புறம் கொரோனாவால தள்ளிப்போயி, போன டிசம்பர்ல வெஸ்ட்பிரிஜ் - ஆனந்த் செஸ் அகாடமியை ஆரம்பிச்சிருக்கோம். முதல் செட்ல பிரக்யானந்தா, நிஹல் சரின், சத்வானி, குகேஷ், வைஷாலி இவங்க அஞ்சு பேரையும் டிரெய்ன் பண்றோம். எல்லோருக்குமே நாம கோச்சிங் கொடுக்கலாம், என்னோட பழைய போட்டிகள், அனுபவங்கள் பத்தி சொல்லலாம். ஆனா, அந்த நாள், அந்தப் போட்டில அவங்கதான் விளையாடணும். கண்டிப்பா சீக்கிரம், உங்க கேள்விக்கான பதில் கிடைக்கும்.”