
ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அதே சமயம் இதெல்லாம் ஆன்லைன் ரேபிட் போட்டி தான். அதுவொரு நல்ல கேம்.
அடுத்த மாதம் மகாபலிபுரத்தில் கோலாகலமாகத் தொடங்கவிருக்கிறது சர்வதேச செஸ் ஒலிம்பியாட். இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா சார்பில் இந்த முறை 20 பேர் கலந்துகொள்கிறார்கள். மகாபலிபுரத்தில் 13 நாள்கள் நடக்கும் இந்தப் பெரிய திருவிழாவில் வெற்றி பெற பல்வேறு நாடுகளும், தங்கள் அணியைத் தயார்படுத்திவருகிறார்கள். இத்தனை சுவாரஸ்யங்களுக்கு மத்தியில், எல்லோரையும் முந்திக்கொண்டு குட்டி ராஜாவாக உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் பிரக்யானந்தா. மூன்று மாத இடைவெளியில் இரண்டு முறை உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வென்று சரித்திரம் படைத்திருக்கிறார் இவர். இவருடன் போட்டியில் பலர் திணறுவதைப் போலவே, ஆங்கிலத்தில் இவர் பெயரைப் படிக்கவும் சிரமப்பட, தற்போது குட்டியாக பிரக் எனத் தன் பெயரைச் சுருக்கியிருக்கிறார். அதிலும் மே மாத இறுதியில் பொதுத்தேர்வுகளை எழுதிக்கொண்டே செஸ்ஸபிள் தொடரில் இரண்டாம் பரிசை இவர் தட்டிச்சென்றது சதுரங்கக் கட்டங்களுக்குள் அடக்கமுடியாத ஆச்சரியம். செஸ் ஒலிம்பியாடுக்கு முன்னர், நார்வேக்குப் பறக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்த பிரக்கிடம் பேச, சில நிமிடங்களே கிடைத்தன.

``எப்படி எல்லாவற்றுக்கும் நேரத்தை ஒதுக்குகிறீர்கள்?’’
“உண்மையிலேயே கஷ்டமாகத்தான் இருக்கிறது. மற்ற தேர்வுகள்னா பிரச்னை இல்லை, இது பொதுத் தேர்வு. அதனால மிஸ் பண்ணவும் முடியாது. ஒவ்வொரு நாளும் 2 மணிக்குத் தூங்கி, அதுக்கு அப்புறம் படிச்சுட்டுப் போய் பரீட்சை எழுதணும்.”
``ஒரே ஆண்டில் கார்ல்சனை இரண்டுமுறை வென்றது எப்படி?’’
“ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அதே சமயம் இதெல்லாம் ஆன்லைன் ரேபிட் போட்டி தான். அதுவொரு நல்ல கேம். அப்படித்தான் நான் அதைப் பார்க்கறேன். நான் இன்னமும் நிறைய இம்ப்ரூவ் பண்ண வேண்டியிருக்கு.”
``விர்ச்சுவல் போட்டிகள் எல்லாம் முடிஞ்சு நார்மல் போட்டிகள் ஆரம்பிக்கப்போகுது. செஸ் ஒலிம்பியாடுக்கு எப்படித் தயார் ஆகிட்டு வர்றீங்க?’’
“விர்ச்சுவல் போட்டிகளுக்காக என் லைப்ஸ்டைலையே மாத்திக்கிட்டேன். நைட் ரெண்டு மணி வரைக்கும் விளையாடிட்டு அதுக்கு அப்புறம் தூங்கி, காலைல போய் பரீட்சை எழுதிட்டு, மறுபடியும் பிராக்டீஸ் பண்ணணும். எனக்கு இப்படினா, சீனாவைச் சேர்ந்த டிங் லைரன் காலை ஐந்து மணி வரை (அவர்கள் நேரப்படி) போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்தார். நம்ம ஊர்ல ஒலிம்பியாட் நடக்குதுங்கிறதே பெருமையா இருக்கு. தமிழக முதல்வர் ஸ்டாலின் சாருக்கும், AICF-க்கும் நன்றி.”


``நீங்க நார்வே, உங்க அக்கா ஆஸ்திரியா. குடும்பமே எப்படி செஸ்ல மூழ்கியிருக்கீங்க?’’
“அக்காவைப் பார்த்துதான் நான் செஸ் விளையாட வந்தேன். ஆறு வயசா இருக்கறப்போ, அக்காவுக்கு முதல்ல செஸ் விளையாடச் சொல்லிக் கற்றுக்கொடுத்தாங்க. அப்ப நான் சும்மா செஸ் பீஸ் வச்சு விளையாடிட்டு இருப்பேன். அப்புறம் எனக்கே தனியா போர்டெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. அக்கா வைஷாலியும் இந்த ஒலிம்பியாட்ல இருக்காங்க. அவங்களும் நிறைய போட்டிகள் விளையாடிக்கிட்டு இருக்காங்க.”
``உங்கள் வளர்ச்சியில் ஆனந்த் எவ்வளவு உதவியாக இருந்திருக்கிறார்?’’
“இந்த ஒலிம்பியாடுக்கு அவர் கோச்சாக இருக்கப்போறதே எங்களுக்கெல்லாம் பெரிய விஷயம். ஆனந்த் சாரிடம் நான் நிறைய கற்றிருக்கிறேன். அவரோட வெஸ்ட்பிரிஜ் ஆனந்த் செஸ் அகாடமியிலும் என்னைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.”

``ஒரு 16 வயசுப் பையனா எதெல்லாம் மிஸ் பண்றீங்க?’’
“முன்னாடியெல்லாம் செஸ் போர்டை வச்சுப் பயிற்சி எடுப்பாங்க. இப்ப எங்க செட்ல எல்லாமே கம்ப்யூட்டர்தான். தமிழ்ப் படங்கள் பார்ப்பேன். மத்தபடி இந்த வெப்சீரிஸ், கிரிக்கெட் எல்லாம் பார்க்கறதில்ல. இப்போதைக்கு எல்லாமே செஸ் தான். எதையும் மிஸ் பண்ணலை. அதையெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம்தானே?”