Published:Updated:

`ஜடேஜா ரன்அவுட் சர்ச்சை; ஃபீல்டிங்கில் 12வது ஆள்!' - சேப்பாக்கத்தில் 287 ரன்கள் சேர்த்த இந்திய அணி

ஸ்ரேயஸ் ஐயர் -ரிஷப் பன்ட்
ஸ்ரேயஸ் ஐயர் -ரிஷப் பன்ட்

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 288 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி .

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. டி-20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள் போட்டி தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடி வருகின்றன.

கோலி, பொல்லார்ட்
கோலி, பொல்லார்ட்

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட், பந்துவீச்சை தேர்வு செய்து ஆச்சர்யமளித்தார். சென்னை ஆடுகளம் பொதுவாக வேகமின்றி காணப்படும். சுழற்பந்துவீச்சுக்கு மிகவும் கைகொடுக்கும் ஐபிஎல் போட்டிகளிலே கடந்த சில வருடங்களாக நாம் பார்த்திருக்கிறோம். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக நடந்த 7 ஆட்டங்களில் 6 முறை முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இரவில் பனிபொழிவின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தொடங்குவதற்கு முன்பு பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி, ``முதலில் பேட் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பிட்ச்-சின் மேற்பரப்பு கடினமானதாக இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அபாயகரமான அணி, அவர்களை எளிதாக எடை போட்டுவிட மாட்டோம்'' என்றார். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லாட் பேசுகையில், ``பந்துவீச முடிவு செய்துள்ளோம். இந்த பிட்ச் எப்படி இருக்கும் எனத் தெரியாது'' என்றார்.

கே.எல்.ராகுல், ரோஹித்
கே.எல்.ராகுல், ரோஹித்

மோசமான தொடக்கம்

இந்தியா தரப்பில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் இருவரும் இன்னிங்ஸைத் தொடங்கினர். 6.2 ஓவர்களில் இந்திய அணி 21 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டைப் பறிகொடுத்தது. 6 ரன்கள் எடுத்த நிலையில் காட்ரெல் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். டி-20 போட்டியில் ரன் சேஸிங்கில் மிரட்டிய கோலியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. காட்ரெல் ஓவரில் ஒரு பவுண்டரி விளாசிய நிலையில் அதே ஓவரின் கடைசிப் பந்தில் கோலி ஆட்டமிழந்தார். காட்ரெல் மெதுவாக வீசிய பந்தை தேர்ட் மேன் திசையில் அடிக்க முயன்றார் கோலி. பந்து இன்சைடு எட்ஜாகி ஸ்டெம்பைப் பதம் பார்த்தது. ஒரு ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காட்ரெல், ராயல் சல்யூட் அடித்து கோலியை வழியனுப்பினார். கோலி அதிருப்தியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். ரோஹித் ஷர்மா - ஸ்ரேயஸ் ஐயர் இருவரும் பொறுமையாக விளையாடினர். இதன்காரணமாக 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணி 80 ரன்கள் எடுத்திருந்தபோது, 36 ரன்களில் ரோஹித் அவுட்டானார். ஜோசப் பந்துவீச்சில் பொல்லார்ட் வசம் கேட்சாகி ரோஹித் வெளியேறினார். இதையடுத்து ரிஷப் பன்ட் களமிறங்கினார். ரிஷப் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்தப்போட்டியில் அணியின் நிலைமையை உணர்ந்து பொறுப்புடன் ஆடினார் ரிஷப் பன்ட்.

ஸ்ரேயஸ் ஐயர்
ஸ்ரேயஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் - ரிஷப் கூட்டணி இந்தியாவைச் சரிவிலிருந்து மீட்டது. இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். அதேநேரத்தில் ரன் குவிப்பிலும் ஈடுபட்டனர். ஸ்ரேயஸ் ஐயர், ஆங்கர் இன்னிங்ஸ் விளையாட பன்ட் வழக்கமான பாணியில் அதிரடியில் இறங்கினார். மோசமான ஷாட் செலக்‌ஷனால் விமர்சிக்கப்படும் பன்ட், இந்தப்போட்டியில் அதுபோன்ற ரிஸ்கை எடுக்கவில்லை.

மைதானத்துக்குள் புகுந்த நாய்
மைதானத்துக்குள் புகுந்த நாய்
Twitter

ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பன்ட் ஆகியோர் பேட் செய்துகொண்டிருந்தபோது மைதானத்துக்குள் நாய் ஒன்று புகுந்தது. இதனால், சிறிதுநேரம் ஆட்டம் தடைபட்டது. அப்போது கமென்ட்ரியில் இருந்த சுனில் கவாஸ்கர், ``மைதானத்துக்குள் 12வது ஆள் இறங்கிவிட்டார்'' என்று விளையாட்டாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பன்ட் சர்வதே ஒருநாள் போட்டியில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர், 70 ரன்களில் அவுட்டானார். சிறிது நேரத்தில் 71 ரன்கள் எடுத்த நிலையில் பன்ட்டும் வெளியேறினார். இறுதியில் கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடினார். அவருக்கு ஜடேஜா சிறிதுநேரம் ஒத்துழைப்பு வழங்கினார்.

ரிஷப் பன்ட்
ரிஷப் பன்ட்

கேதர் ஜாதவ் 40 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா மிரட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 20 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். போட்டியின் 48வது ஓவரின்போது ஒரு ரன் எடுக்க ஜடேஜா ஓடியபோது, கீமோ பாலின் டைரட்க் த்ரோவில் ரன் அவுட் செய்யப்பட்டார். கள நடுவர் அவுட் கொடுக்காத நிலையில், டிவி ரீப்ளேயில் அவுட் என்பது தெளிவாகத் தெரிந்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட், நடுவரிடம் முறையிட்டார். இதைத் தொடர்ந்து மூன்றாவது நடுவரின் ரிவ்யூவுக்குச் சென்று, பின்னர் அவுட் கொடுக்கப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் காட்ரெல், பவுல், ஜோசப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அடுத்த கட்டுரைக்கு