மத்திய பிரதேசத்தில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உதவி செய்ய வேண்டி கலெக்டரிடம் உதவி கேட்டு மனு அளித்திருக்கிறார். மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை பாத்திமா பீவி.

மதுரை திருப்பரங்குன்றத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான பாத்திமா பீவி, டேபிள் டென்னிஸில் மாநில, தேசிய அளவில் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். கணவர் ஆதரவில்லாமல், பொருளாதரப் பின்னணியும் இல்லாமல் தன் குழந்தைகளுடன் கஷ்டத்தில் வாழ்ந்தபடி கடந்த 15 வருடங்களாக பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று டேபிள் டென்னிஸ், தட்டு எறிதல், ஈட்டி ஏறிதல் உள்ளிட்ட போட்டிகளில் பல்வேறு மாநிலங்களில் விளையாடி தங்கம், வெள்ளி பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில்தான் மத்திய பிரதேசத்தில் நடைபெறும் தேசியப் போட்டியில் கலந்துகொள்ள உதவ வேண்டும் என்று கலெகட்ரிடம் இன்று மனு கொடுத்தவர் பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "மார்ச் 12-ம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் வெற்றிபெற்றேன். அடுத்து ஏப்ரல் 27-ம் தேதி மத்தியபிரதேசம் இந்தூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளேன்.

அதில் கலந்துகொள்ள மாற்றுத்திறனளியான நான் 3 நாட்கள் ரயிலில் பயணம் செய்வது கடினமாக இருக்கும். அதே நேரம் விமானம் மூலம் செல்வதற்கும், போட்டியில் பங்கேற்கவும் உதவவேண்டும் என்று கலெக்டரிடம் தெரிவித்தேன். அவர் உதவுவதாகக் கூறியுள்ளார்" என்றார்.
தன் கோரிக்கையை முதலமைச்சரிடம் நேரில் தெரிவிக்க சென்னையில் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் திமுக முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து பாத்திமா பீவி முயன்றார். ஆனால், அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதனிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவிவில்லை. சோகத்தில் ஊர் திரும்பியவர் மதுரை கலெக்டரிடம் தன் பிரச்னையை தெரிவித்திருக்கிறார்.