கடந்த டிசம்பர் 30-ம் தேதி இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது கார் சாலைத் தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ரிஷப் பண்ட்டிற்கு மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், நெற்றியில் ஏற்பட்ட வெட்டுக்காயதிற்காக பிளாஸ்டிக் சர்ஜரியும், முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வரும் ரிஷப் பண்ட், விபத்துக்குப் பிறகு முதல் முறையாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், "நான் குணமடைய வேண்டி விருப்பம் தெரிவித்தவர்களுக்கும், எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளேன். எனது அறுவை சிகிச்சை வெற்றியடைந்ததை உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். காயங்களிலிருந்து மீள்வதற்கான பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். பிசிசிஐ, ஜெய் ஷா மற்றும் இதர அரசு அதிகாரிகளுக்கும், அவர்களது ஆதரவிற்கும் நன்றி.
ரசிகர்கள், சக வீரர்கள், டாக்டர்கள் ஆகியோருக்கும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் களத்தில் சந்திப்போம்"என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், "நான் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல முடியாது, அதேவேளை, விபத்தின் போது எனக்கு உதவி செய்த இரண்டு ஹீரோக்களான ரஜத் குமார் மற்றும் நிஷூ குமாருக்கு என்னென்றும் நன்றிக்கடன் பட்டவன்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.