மகளிர் தினத்தை முன்னிட்டு ‘We are for Hockey Trophy’ என்ற பெண்களுக்கான ஹாக்கி தொடர் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது ‘We are for Hockey’ கிளப். எந்த ஒரு மகத்தான மாற்றமும் சிறு புள்ளியில் இருந்துதானே தொடங்குகிறது. கடந்தாண்டு ஒலிம்பிக் தொடரில் ஆஸ்திரேலியா தோற்கடித்து வரலாறு படைத்தது, ஆசிய ஹாக்கி தொடரில் வெண்கலம் வென்றது என சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர் இந்திய பெண்கள்.
இந்நிலையில் தமிழக அளவில் பெண்கள் ஹாக்கியை முன்னெடுத்து செல்வதற்காக இந்த ஹாக்கி தொடர் நடத்தப்படுகிறது. வரும் மார்ச் 12, 13 தேதிகளில் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் நடைபெறவிருக்கும் இத்தொடரில் சுமார் 17 அணிகள் வரை பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அளவிலான 15 முன்னாள் வீரர்களின் துணையுடன் தொடங்கப்பட்டதே இந்த ‘We are for Hockey’ கிளப். தற்போது இதன் வீரர்கள் பலரும் சர்வதேச அளவிலான மாஸ்டர்ஸ் பிரிவில் ஆடிவருகிறார்கள். 2019-ம் ஆண்டு டேராடூனில் நடைபெற்ற தேச மாஸ்டர்ஸ் தொடரில் தங்கம் வென்றது, அதே ஆண்டு ஐரோப்பா மாஸ்டர்ஸில் வெண்கலம், ஆஸ்திரேலியன் மாஸ்டர்ஸில் வெள்ளி வென்றது ஆகியவை இக்கிளப்பின் குறிப்பிடத்தக்க வெற்றிகள்.
சென்னையில் சிறந்த முறையில் ஹாக்கி பயிற்சி மையம் அமைத்து புதிய தலைமுறை வீராங்கனைகள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னகர்த்தி செல்வதே இவர்களின் எதிர்கால திட்டம்.