Published:Updated:

குடிசை வீடு... 7 வயது... ஆனால் ஹாக்கி கனவு! - இது கேப்டன் ராணி ராம்பாலின் கதை!

ராணி ராம்பால்

ஏழு வயதில் ஹாக்கி ஸ்டிக்கை ஏந்தி களத்துக்கு வருகிறாள் அவள். தன் கனவுகளுக்காக ஒவ்வொரு நாளும் போராடியவள், இப்போது இந்திய அணியின் கனவை நனவாக்கியிருக்கிறாள். ராணி ராம்பால் - இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நிகரில்லா சூப்பர் ஸ்டார்!

குடிசை வீடு... 7 வயது... ஆனால் ஹாக்கி கனவு! - இது கேப்டன் ராணி ராம்பாலின் கதை!

ஏழு வயதில் ஹாக்கி ஸ்டிக்கை ஏந்தி களத்துக்கு வருகிறாள் அவள். தன் கனவுகளுக்காக ஒவ்வொரு நாளும் போராடியவள், இப்போது இந்திய அணியின் கனவை நனவாக்கியிருக்கிறாள். ராணி ராம்பால் - இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நிகரில்லா சூப்பர் ஸ்டார்!

Published:Updated:
ராணி ராம்பால்

``ஆசப்பட்டா மட்டும் பத்தாது அடம் பிடிக்கத் தெரியணும்" - `கனா' படத்தில் வரும் இந்த வசனம் அந்தச் சிறுமிக்கும் பொருந்தும். இந்த மாதிரி ஆசைப்பட்டு, பல மாதங்கள் அடமும் பிடித்து, ஏழு வயதில் ஹாக்கி ஸ்டிக்கை ஏந்தி களத்துக்கு வருகிறாள் அவள். தன் கனவுகளுக்காக ஒவ்வொரு நாளும் போராடியவள், இப்போது இந்திய அணியின் கனவை நனவாக்கியிருக்கிறாள். ராணி ராம்பால்... இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நிகரில்லா சூப்பர் ஸ்டார்!

Indian women hockey team
Indian women hockey team

கடந்த வாரம் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள், ஒலிம்பிக் தகுதிச் சுற்றுகளை வென்று, டோக்கியோவுக்கு டிக்கெட் போட்டுவிட்டனர். இதில் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் வெற்றி `சக் தே' படத்துக்கு நிகராக பரபரப்பாக இருந்தது. அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா இரண்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அதிக கோல்கள் அடிக்கும் அணி ஒலிம்பிக் வாய்ப்பைப் பெறும்.

முதல் போட்டியில் 5 -1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்த இந்தியா, இரண்டாம் போட்டியில் நம்பிக்கையோடு களம் இறங்கியது. ஆனால், 28 நிமிடங்களின் முடிவில் அமெரிக்க அணி 4 கோல்களை அடித்து இந்திய அணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. முதல் பாதியின் முடிவில் இந்தியப் பெண்கள் அணி துவண்டிருந்ததைக் கண்டு, இந்திய அணியின் பயிற்சியாளர், மரினே ``இப்போது ஸ்கோர் 0-0. இது உங்கள் தருணம். தலைநிமிர்ந்து செல்லுங்கள்" என்று ஊக்கப்படுத்தி அனுப்பி வைத்தார். 11 நிமிடங்கள் கழித்து, கோல்! இந்திய அணியின் கோல்! ஒடிசாவின் கலிங்கா அரங்கத்தில் ஆரவாரம் ஒலித்தது. இந்திய அணி 6-5 என்ற மொத்த கோல் கணக்கில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றது. இந்திய பெண்கள் அணியை மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கிற்கு எடுத்துச் சென்ற அந்த கோலை அடித்தவர் அணியின் கேப்டன் ராணி ராம்பால். அன்று அடம்பிடித்த அந்தச் சிறுமி!

Rani Rampal
Rani Rampal

24 வயதில் இந்திய ஹாக்கியின் முடிசூடா அரசியாக வளம்வரும் ராணி ராம்பாலின் கதை நெகிழ்ச்சியானது. ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில், ஷாபாத் என்று ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தில் வண்டி இழுத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார் ஒருவர். அவர் தன்னுடைய மனைவி, இரண்டு மகன்கள், மருமகள்கள், மகள் ஆகியோருடன் மழைக்காலத்தில் ஒழுகும் வீட்டில் வாழ்ந்து வந்தார். திடீரென ஒருநாள், அவருடைய மகள் ராணி, தான் ஹாக்கி விளையாட வேண்டும் என்று ஆசைப்படுவதாகக் கூறுகிறாள். உறவினரும் நண்பர்களும் பெண்கள் ஹாக்கி விளையாடினால் குடும்ப மானம் கெட்டுப் போகும் என்று பயமுறுத்த, கற்றறியாத தந்தையும் தாயும் மகளின் ஆசையில் உடன்பாடு இல்லை என்று கூறிவிட்டனர். ராணியோ அடம்பிடித்து போராடி ஹாக்கி பயிற்சியில் ஒருவழியாகச் சேருகிறாள்.

ஆனால் குடும்ப சூழலில் எந்த உயர்வும் ஏற்படவில்லை. ராணி, காலை 5 மணிக்குப் பயிற்சிக்கு செல்ல அவருடைய அம்மா தூங்காமல் விழித்திருப்பாராம். ஏனெனில், அவர்கள் வீட்டில் கடிகாரம் வாங்கக் கூட வசதி இல்லை. அம்மா தூங்காமல் இருப்பதைப் பார்த்து வருத்தப்பட்ட ராணி, பள்ளியில் நடைபெற்ற கையெழுத்துப் போட்டியில் வென்றால் கடிகாரம் பரிசு தருவார்கள் என்று அறிந்தவுடன், கடினமாக பயிற்சி எடுத்து அப்போட்டியில் வென்று, கடிகாரத்தை அம்மாவுக்குப் பரிசளித்தார்.

Rani Rampal
Rani Rampal

முதல் பயிற்சியாளரான சர்தார் பல்தேவை, ``அவர் எனக்கு கடவுள் போன்றவர்" என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார் ராணி. முதலில் ராணியை மாணவராக எடுக்க மறுத்த பல்தேவ், அவரது சுறுசுறுப்பைக் கண்டு வியந்து சேர்த்துக் கொண்டார். அவர் முதல் கோல் அடித்த போது, பத்து ரூபாய் நோட்டில் பல்தேவ் கையொப்பம் இட்டு பரிசளித்திருக்கிறார். ஆனால், அதையும்கூட வறுமை காரணமாக ராணி பயன்படுத்த நேரிட்டது. அதுதான் அவர்களின் குடும்ப நிலை.

ஏழு வயதில் ஹாக்கி ஆடத் தொடங்கிய ராணி, தன்னுடைய கடின உழைப்பால் 15 வயதில் உலகக்கோப்பைத் தொடரில் (2010) இந்திய அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அந்தத் தொடரில் 7 கோல்களை அடித்து சிறந்த இளம் வீராங்கனைப் பட்டத்தை வென்றார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம், 2016-ல் அர்ஜுனா விருது, நடந்து முடிந்த FIH ஹிரோஷிமா போட்டியில் சிறந்த வீரருக்கான விருது என்று பலவற்றை வென்றுள்ளார். ஆனால் அவர் பெரிதாகக் கருதுவது, இந்திய அணியின் கேப்டன் பதவியைத்தான்.

ராணி ராம்பால்
ராணி ராம்பால்

ராணி, ஹாக்கியில் முழு கவனம் செலுத்தினாலும், தற்போது முதுகலை ஆங்கிலமும் படித்து வருகிறார். 2016-ம் ஆண்டு, 36 வருடங்கள் கழித்து, ஒலிம்பிக்கிற்குச் சென்றது இந்திய பெண்கள் அணி. அப்போது ஹரியானா மாநிலம் அளித்த பரிசுத் தொகையை வைத்து தன் பெற்றோருக்கு வீடு கட்டி கொடுத்ததே தன்னுடைய பெரிய சாதனையாகக் கருதுவதாக ராணி ராம்பால் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

``பெண்களுக்குத் தன்னம்பிக்கை அவசியமாக உள்ளது. ஒரு சமூகமாக நாம் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுடைய கனவுகளை நோக்கிச் செல்ல ஊக்குவிக்க வேண்டும். பெண்களுக்கு நான் சொல்வது இதுதான் - உங்களை யாரைவிடவும் தாழ்ந்தவர் என்று கருதாதீர்கள். உங்களுடைய குறிக்கோளை நீங்களே தீர்மானித்து அதற்காக உறுதியோடு பின் தொடருங்கள். உங்களால் எதையும் சாதிக்க முடியும். நாம் நம் மீது நம்பிக்கை வைத்தால்தான் மற்றவர் நம்மை நம்புவார்கள்'' எனப் பெண்களுக்கு நம்பிக்கைக் கனவுகளை விதைக்கிறார் ராணி ராம்பால்.