சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

கறுப்பு வெள்ளைக் கதைகள்

டான் பிராட்மேன்
பிரீமியம் ஸ்டோரி
News
டான் பிராட்மேன்

விளையாட்டு

எங்கே, எப்படி, எப்போது, யார் ஆரம்பித்தது..? எதுவும் தெரியாது. கிரிக்கெட் பிறந்த வரலாற்றுக்கு ஆதாரங்கள் எதுவும் கிடையாது. சில நிகழ்வுகள் உண்மையாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றன. அதாவது, தென்கிழக்கு இங்கிலாந்தின் சஸக்ஸ் (Sussex), கென்ட் (Kent) பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி இனக் குழந்தைகள், கிரிக்கெட்டையொத்த ஏதோ ஒரு விளையாட்டை விளையாடியிருக்கிறார்கள். காலங்காலமாக விளையாடப்பட்டுவந்த அதைப் பதினேழாம் நூற்றாண்டில் பெரியவர்களும் விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக, கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, பொழுதுபோக்குக்காக கிரிக்கெட் மாதிரியான ஒன்றை விளையாடியிருக்கிறார்கள். பௌல்ஸ் (Bowls) என்ற விளையாட்டைப்போல.

தென்ன... மரத்தாலான அல்லது ஆட்டுத்தோலைச் சுருட்டி உருவாக்கிய பந்து ஒன்றை, ஒருவர் இலக்கை நோக்கி வேகமாக உருட்டிவிடுவார். `இலக்கு’ என்றால், ஸ்டம்ப்பைப் போன்ற ஒன்று. அது இலக்கை அடைவதற்குள் இன்னொருவர் புகுந்து மரக்கட்டையால் தடுப்பார். இதுதான், கிரிக்கெட்டுக்கு ஐரோப்பிய மூதாதையர்கள் கொடுத்த ஆதி வடிவம். `கிரிக்கெட்’ என்ற பெயர் எப்படி வந்தது? டச்சு மொழிக்கு தங்கச்சி மொழி ஃப்ளெமிஷ் (Flemish). பெல்ஜியத்தின் பழைய மொழிகளுள் ஒன்று. அதிலுள்ள ஒரு வார்த்தை `Krick.’ அதாவது, `மரக்கட்டை’ என்று அர்த்தம். இன்னொரு வார்த்தை `Ket.’ `துரத்து’ என்று பொருள். இந்த வார்த்தைகளே ஆங்கிலத்தில் `Cricket’ஆக மாறியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கி.பி. 1611-ம் ஆண்டில் முதன்முதலில் கிரிக்கெட் குறித்த ஒரு செய்தி வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. அதாவது, சஸக்ஸில் இரண்டு இளைஞர்கள் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த குற்றம், ஞாயிறு அன்று இருவரும் சர்ச்சுக்குச் செல்லாமல் கிரிக்கெட் விளையாடப் போய்விட்டதுதான்.

கிரிக்கெட்
கிரிக்கெட்

அன்றைய லாலா அமர்நாத், பட்டோடி முதல் இன்றைய விராட், பும்ரா வரை கிழக்கிந்திய கம்பெனிக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள். காரணம், இந்தியாவுக்குள் கிரிக்கெட்டை நுழைத்தவர்கள் கும்பெனியாரே. பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கு நுழைந்த அவர்கள் சென்னை, பம்பாய், கல்கத்தா என்று வேர்விட்டுக் கிளைபரப்பினார்கள். கூடவே கிரிக்கெட்டையும் அறிமுகப்படுத்தினார்கள். ‘சீமைக்காரன் ஏதோ புதுசா விளையாடுறான். வா பார்க்கலாம்!’ என்று ஆரம்பத்தில் வேடிக்கை மட்டும் பார்த்தார்கள் இந்தியர்கள்.

இந்தியாவில் கம்பெனிக்காரர்கள் விளையாடிய முதல் ‘மேட்ச்,’ 1721-ம் ஆண்டில் பரோடாவுக்கு அருகில் காம்பேயில் நடந்தது. ‘வேலைகளுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் நாங்கள் கிரிக்கெட்டும் மற்ற விளையாட்டுகளும் விளையாடுவோம்...’ என்ற கம்பெனியாரின் குறிப்புகளும் காணக் கிடைக்கின்றன.

லாலா அமர்நாத்
லாலா அமர்நாத்

1751-ம் ஆண்டில் பிரிட்டிஷ் ராணுவத்தினருக்கும் மற்ற ஐரோப்பியர்களுக்கும் இடையே ஒரு மேட்ச் நடந்ததாகத் தெரிகிறது. அதில் யார் டாஸ் ஜெயித்தார்கள், எத்தனை நாள்கள் ஆட்டம், டார்கெட் எவ்வளவு, மழையால் ஆட்டம் தடைப்பட்டதா போன்ற விவரங்களெல்லாம் தெரியவில்லை. 1787-ம் ஆண்டில் உலகின் முதல் கிரிக்கெட் கிளப் லண்டனில், லார்ட்ஸ் மைதானத்துக்கு மிக அருகில் ஆரம்பிக்கப்பட்டது, Marylebone Cricket Club (MCC). 1792-ம் ஆண்டில் கல்கத்தாவில் கிரிக்கெட், ஃபுட்பாலுக்கு என கிளப் ஒன்று கம்பெனியாரால் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கிரிக்கெட் கிளப் அதுதான்.

இங்கிலாந்து, பெர்க்‌ஷையர் (Berkshire ) எட்டோன் (Eton) காலேஜின் பழைய மாணவர்கள் அடங்கிய கிரிக்கெட் அணி ஒன்று, 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவுக்கு வந்துள்ளது. எட்டோனியன்ஸுக்கும் கல்கத்தா கிளப்காரர்களுக்கும் இடையே மேட்ச். அதில் எட்டோனியனின் ராபர்ட் என்ற வீரர் சதம் அடித்திருக்கிறார். இந்திய மண்ணில் அடிக்கப்பட்ட முதல் சதமாக இது பதிவாகியிருக்கிறது.

அதற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் கல்கத்தா, சென்னை, பம்பாயில் அவ்வப்போது மேட்ச் ஆட ஆரம்பித்திருக்கிறார்கள். காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இந்தியர்களுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் பிறந்திருக்கிறது. குறிப்பாக, பார்சி இனத்தவர்களுக்கு. பம்பாயில் அவர்கள், `ஓரியன்டல் கிரிக்கெட் கிளப்’ என்று ஆரம்பித்து (1848) விளையாட ஆரம்பித்தார்கள். பிறகு, இந்துக்களின் `ஜிம்கானா கிளப்’ ஆரம்பிக்கப்பட்டது(1866). ஆட்டங்கள் பெருகின.

ரஞ்சித் சிங்
ரஞ்சித் சிங்

சிலோனிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் அணிதிரட்டி வந்து (1884) கல்கத்தாவில் விளையாடிவிட்டுப் போனார்கள். சர்வதேச கிரிக்கெட் வாசம் இந்தியாவில் வீச ஆரம்பித்தது. `நாமும் அயல்மண்ணுக்குச் சென்று விளையாடலாமே...’ என்று யோசித்த பார்சி வீரர்கள், 1886-ம் ஆண்டில் இங்கிலாந்துக்குக் கிளம்பினார்கள். கேப்டனாகச் சென்றவர் பெயர் டாக்டர் டி.ஹெச்.பட்டேல். முதல் சுற்றுப்பயணத்தில் மீசையில் மண் எக்கச்சக்கம். இரண்டு வருடங்களில் அடுத்த டூருக்குக் கிளம்பினார்கள். நீண்டநாள்கள் தங்கி நிறையவே விளையாடினார்கள். 12 டிரா, 11 தோல்வி, 8 வெற்றி.

1890-ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ஓர் அணி கிளம்பி இந்தியாவுக்கு வந்தது. நோக்கம், இந்தியவாழ் பிரிட்டிஷ் வீரர்களை எதிர்த்து ஆடுவது. அப்படியே, பார்சி அணியினருடன் ஒரு மேட்ச் ஆடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மேட்சில், பார்சி வீரர்கள், நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியைத் தோற்கடித்தார்கள். அவ்வளவுதான். பிரிட்டிஷாரின் முகமெல்லாம் கோபத்தில் சிவந்துவிட்டன. 1857, சிப்பாய்க் கலகத்துக்குப் பின்னர், தங்களுக்கு நேர்ந்த பெரும் அவமானமாக, தோல்வியாக பிரிட்டிஷார் கருதியது இதைத்தான்.

இந்திய கிரிக்கெட் வரலாறு என்று சொன்னால் ‘ரஞ்சி’ என்ற பெயர் தவிர்க்க முடியாதல்லவா... ரஞ்சித் சிங், கிரிக்கெட்டில் புகழ்பெற்ற முதல் இந்தியர். ராஜகுடும்பத்தில் பிறந்தவர், நவாநகர் மகாராஜா ரன்மால்ஜி என்பவரால் வாரிசாகத் தத்தெடுக்கப்பட்டவர். சிறுவயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம்கொண்டிருந்த ரஞ்சி, லண்டன் கேம்பிரிட்ஜில் படிக்கும்போது (1892) அந்த அணிக்காக விளையாட ஆரம்பித்தார். பின்பு டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். டிரினிட்டிக்காக அவர் ஆட்டத்தைப் பார்த்து அசந்துபோன ஐரோப்பியர்கள், சஸக்ஸ் அணியில் சேர்த்துக்கொண்டார்கள்.

சஸக்ஸ் அணிக்காக முதல்தர மேட்சுகள் ஆட ஆரம்பித்த ரஞ்சி, அதன் கேப்டனாக உயர்ந்தார். ஐந்து ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தபடியே அடித்து ஆடினார். 1897-ம் ஆண்டில் மட்டும் அவர் சேகரித்த மொத்த ரன்கள் 1940. அந்த ஆண்டின் `டாப் 5’ கிரிக்கெட்டர்களில் ரஞ்சியும் ஒருவர்.

1899-ம் ஆண்டில், `ஒரே ஆண்டில் 3,000 ரன்களைக் குவித்த முதல் வீரர்’ என்ற புதிய சாதனை படைத்தார். 1895 முதல் 1904 வரை ஒவ்வொரு வருடமும் 1,000 ரன்களுக்குக் குறையாமல் குவித்தார் ரஞ்சி. அவற்றில் 2,000 ரன்களுக்கு மேல் மூன்று முறை. 3,000 ரன்களுக்கு மேல் இருமுறை.

இளவரசர் ரஞ்சியின் மணிக்கட்டு அசைவில் மட்டை சுழலும் லாகவத்தை ரசிக்க அவருக்கு ஏராளமான ஐரோப்பிய ரசிகர்கள், குறிப்பாக ரசிகைகள் உண்டு. லெக்-கிளான்ஸ் என்ற வகை ஷாட்டை அறிமுகப்படுத்தியவர் ரஞ்சி. இப்படி ரஞ்சி, கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்திய விஷயங்கள், சாதனைகள் நிறைய. ரஞ்சியின் கூர்மையான பார்வைக்கு முன் சீறிவரும் பந்து தப்பிக்கவே முடியாது. எந்த ஒரு ஃபாஸ்ட் பௌலருக்கும் ரஞ்சியின் ஸ்டம்பைத் தகர்ப்பதென்பது கடினமான காரியமே.

பூபிந்தர் சிங்
பூபிந்தர் சிங்

டெஸ்ட் மேட்ச் ஆடிய முதல் இந்தியர் ரஞ்சிதான். ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட்டில் அவர் அடித்த ரன்கள் 62 மற்றும் 154. இது இங்கிலாந்தில் நடந்த ஆட்டம். ஆஸ்திரேலியாவுக்கு அவர் சென்று விளையாடிய முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலேயே ரஞ்சி அடித்த ரன்கள் 175. அவ்வளவு அதிகம் ஸ்கோர் செய்த முதல் வீரர் ரஞ்சியே. முதல்தர மேட்சுகளில் அவர் அடித்த செஞ்சுரியின் எண்ணிக்கை 72. இப்படி ரஞ்சியின் சாதனைப் புள்ளிவிவரங்களை அடுக்கிக்கொண்டே போனால் திகட்டிவிடும். ஆகவே...

1907-ம் ஆண்டு நவாநகர் மகாராஜாவானார் ரஞ்சி. சில காலம் தன் சமஸ்தானப் பொறுப்புகளுக்காக சஸக்ஸ் அணியிலிருந்து ஒதுங்கியிருந்தார். 1915-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் ரஞ்சியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைத்தது. அப்போது யார்க்‌ஷையருக்குச் சென்றிருந்த ரஞ்சி, நண்பர்களோடு வேட்டைக்குக் கிளம்பினார். கடும் போதையில் துப்பாக்கியைத் தூக்கிய ஒரு நண்பர், இஷ்டம்போலச் சுட ஆரம்பித்தார். யாராலும் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவருடைய துப்பாக்கியிலிருந்து கிளம்பிவந்த குண்டு ஒன்று, ரஞ்சியின் முகத்தில் இறங்கியது.

மயக்கத்திலிருந்து தெளிந்த ரஞ்சியிடம் டாக்டர், ‘சாரி மிஸ்டர் ரஞ்சி, உங்கள் வலது கண்ணை எடுக்க வேண்டிய நிர்பந்தம்’ என்றார் சோகமாக. ‘நான் அதிர்ஷ்டம் கெட்டவன்’ என்றார் ரஞ்சி விரக்தியாக. அந்த விபத்துக்குப் பிறகு அதிக நேரம் படுக்கையில் இருந்ததால், அவர் உடல் அதிக எடைபோட்டுவிட்டது. அதன் பின்னரும் ரஞ்சி சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் கிரிக்கெட் பயிற்சி எடுக்கவே செய்தார். 1920-ம் ஆண்டில், தனது 48-வது வயதில் மீண்டும் சஸக்ஸுக்காக விளையாடக் களமிறங்கினார். ஒற்றைக்கண் பார்வை, பருமனான உடல்... விளையாட இயலவில்லை. ரஞ்சியின் அதிகாரபூர்வ கிரிக்கெட் வாழ்க்கை அதோடு முடிந்துபோனது. அவருடைய வாழ்க்கை 1933-ம் ஆண்டு முடிந்துபோனது.

பூபிந்தர் சிங்குடன் இந்திய கிரிக்கெட் டீம்
பூபிந்தர் சிங்குடன் இந்திய கிரிக்கெட் டீம்

உலக அளவில் புகழ்பெற்ற முதல் வீரராக ரஞ்சி இருந்தாலும், அவர் இங்கிலாந்து அணிகளின் கிரிக்கெட் வீரராகத்தான் அறியப்பட்டார். இந்திய அணிகள் எதற்காகவும் ஆடவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்கென்று எதுவும் செய்யவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட்டின் வளர்ப்புத்தாய் என்றால், அது பாட்டியாலாதான். கிரிக்கெட்டில் இந்தியர்களை சர்வதேச அளவில் கொண்டுசெல்லப் பெருமுயற்சிகள் செய்ததும் பாட்டியாலா ராஜகுடும்பத்தினர்தாம். இன்றைக்கும் ரஞ்சி நம் நினைவில் இருக்கக் காரணம், அவருடைய பெயரில் அமைந்த கோப்பை. அதைக்கொண்டு வந்தவர் பாட்டியாலா சமஸ்தான மகாராஜா பூபிந்தர் சிங். 1934-ம் ஆண்டு, ரஞ்சியின் பெயரில் இந்திய உள்ளூர் அணிகளுக்கிடையே போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்தார் பூபிந்தர் சிங். அதற்காகத் தன் சொந்தச் செலவில் தங்கக்கோப்பை ஒன்றையும் உருவாக்கிக் கொடுத்தார்.

பாட்டியாலாவுக்குள் கிரிக்கெட்டைக் கொண்டு வந்தவர் பூபிந்தரின் தந்தையான மகாராஜா ராஜேந்தர் சிங். அதன் பின்னணியில் ஒரு வலுவான காரணமும் இருந்தது. கிரிக்கெட், பிரிட்டிஷாருக்குப் பிடித்த விளையாட்டு... பிரிட்டிஷாரின் கௌரவச் சின்னம். பாட்டியாலாவின் ஸ்டேட்டஸும் பிரிட்டிஷார் மத்தியில் உயர வேண்டுமென்றால் கிரிக்கெட் அவசியம். மக்களே, மட்டையைத் தூக்குங்கள்!

ஆனால், ராஜேந்தர் சிங் டாஸ் போட்டு, பேடு கட்டி, பிட்ச் ரிப்போர்ட் எல்லாம் ஆராய்ந்து, மிட்-ஆன், மிட்-ஆஃப் சமாசாரங்களையெல்லாம் முறையாகக் கடைப்பிடித்து கிரிக்கெட் விளையாடியதில்லை. `யாரங்கே... நடுவே மூன்று குச்சியை நடுங்கள்!’, `எவரங்கே... ஓடிவந்து பந்தைப் போடு!’ மடார்!

ஜர்டைன்
ஜர்டைன்

அதுவும் சய்ல் மலைப்பிரதேசத்தில் அவர் கட்டிய உலகின் மிக உயரமான கிரிக்கெட் மைதானத்தில் அடிக்காத கூத்துகளே இல்லை. ‘நாளை மேட்ச். யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். ஒரே ஒரு நிபந்தனை. யாரும் கிரிக்கெட்டுக்கான உடை அணிந்து வரக் கூடாது. மாறுவேடமணிந்து வருபவர்கள் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவர்’ என்று கட்டளையிடுவார். அப்படி ராஜேந்தர் சிங் நடத்திய ஃபேன்ஸி டிரெஸ் கிரிக்கெட் போட்டியில், ரஞ்சியும் ஐரோப்பிய ராணிபோல உடையணிந்து விளையாடியிருக்கிறார்.

இளவரசர் பூபிந்தர் சிங், தந்தையைப்போல கிரிக்கெட்டைக் கேலிக்கூத்தாகப் பார்க்கவில்லை. சிறு வயது முதலே தகுதி வாய்ந்த கோச்சுகளிடம் முறைப்படி கிரிக்கெட் கற்றுக்கொண்டார். சய்ல் மைதானத்தில் அவர் சிக்ஸரும் ஃபோரும் அடிப்பதற்காக யாரும் மெதுவாகப் பந்து வீசவில்லை. வீசப்படும் பந்துகளையெல்லாம் வெளுத்துவாங்கும் வித்தையில் ஓரளவு தேர்ச்சிபெற்றிருந்தார். மகாராஜாவான பின்னர் பூபிந்தர் செய்த முதல் காரியங்களுள் ஒன்று, பாட்டியாலாவிலிருந்த கிரிக்கெட் அணியை வலுவாக்கியது. அதற்காகவே ஐரோப்பிய கோச்சுகளை வரவழைத்து, சிறப்புப் பயிற்சிகள் கொடுத்தார்.

1911-ம் ஆண்டில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்வதற்காக, இந்தியர்களை மட்டும்கொண்ட கிரிக்கெட் அணி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. பூபிந்தர் சிங்தான் அதற்கு கேப்டன். சுற்றுப் பயணத்துக்கான ஒரே ஸ்பான்சரும் பூபிந்தரே. உலகின் ஆதி கிரிக்கெட் கிளப்பான MCC-யில் பூபிந்தர் சிங்கும் உறுப்பினர். அவ்வப்போது அதற்காக மட்டை பிடித்திருக்கிறார்; பந்தும் வீசியிருக்கிறார். முதல் ஐரோப்பிய கிரிக்கெட் சுற்றுப்பயணத்துக்குப் பின், MCC அணியை இந்தியாவுக்கு அழைத்துவந்து விளையாடவைக்கப் பெருமுயற்சிகள் எடுத்தார் பூபிந்தர் சிங். அது உடனடியாக நடக்கவில்லை. முதல் உலக யுத்தம் வேறு ஆரம்பித்து பூபிந்தரின் ஆசையில் குண்டு போட்டது.

இங்கிலாந்துச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் இந்திய அணி
இங்கிலாந்துச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் இந்திய அணி

அந்த ஆசை 1926-ம் ஆண்டில்தான் நிறைவேறியது. கில்லிகன் என்பவரின் தலைமையில் MCC அணி இந்தியாவுக்கு வந்தது. லோக்கல் இந்திய அணிகள் சிலவற்றுடன் MCC அணி மோதியது. அதில் ஒரு லோக்கல் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்ற பூபிந்தர் சிங், MCC-க்கு எதிராக விளையாடினார். அடுத்த மேட்சிலேயே MCC-ன் உறுப்பினராக, அந்த அணி சார்பாகவும் விளையாடினார். அகில பிரபஞ்ச கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரே சீரிஸில் டபுள் கேம் ஆடிய ஒரே வீரர் பூபிந்தரே. டக்ளஸ் ராபர்ட் ஜர்டைன், அப்போதைய இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன். வலதுகை ஆட்டக்காரர். கொஞ்சம் பயங்கரமான ஆள்தான். 1932-ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஜர்டைன் தலைமையில் ஆஸ்திரேலிய டூருக்குச் சென்றது. ஐந்து டெஸ்ட் மேட்சுகள். சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, 4-1 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியது. காரணம்... மைதானத்தில் ஜர்டைன் நிகழ்த்திய அடாவடிகள்.

`பந்தைப் போடாதே. வீசி எறி. அது பேட்ஸ்மேனின் உடலைப் பதம் பார்க்க வேண்டும்’ என்று தனது அணி பௌலர்களை உசுப்பேற்றி, முடுக்கிவிட்டு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை நிலைகுலையவைத்தார். பேட்ஸ்மேன்களுக்கு ரத்த அழுத்தம் எகிறும்படி வார்த்தைகளை விடுவது, ஃபீல்டர்களை மிகவும் நெருக்கமாக நிற்கவைத்து மிரளவைப்பது... இப்படிப்பட்ட அடாவடி நடவடிக்கைகளால் ஜர்டைன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் கடும் கண்டனத்துக்கு ஆளானார். அந்த சீரிஸில் ஜர்டைனால் கடுமையாக பாதிக்கப்பட்ட முக்கியமான நபர், கிரிக்கெட்டின் பிதாமகனான டான் பிராட்மேன். அந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த பிராட்மேனால், நான்கு மேட்சுகளில் 396 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சராசரி வெறும் 56.57. ரன் ஃபேக்டரியாக வாழ்ந்த பிராட்மேனின் கரியர் சராசரி நூறைவிடக் குறைவானதற்கு (99.94) காரணம் இந்தத் தொடர்தான்.

டான் பிராட்மேன்
டான் பிராட்மேன்

அப்படிப்பட்ட முரட்டு கேப்டன் ஜர்டைன், அதே வருடத்தில் இங்கிலாந்து வீரர்களுடன் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்தார். இந்தியா - இங்கிலாந்து... மூன்று டெஸ்ட் மேட்சுகள். அப்படியே MCC அணிக்கும் இந்தியாவிலுள்ள கிளப் அணிகளுக்கும் முதல்தர மேட்சுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நவம்பர் 12-15 நாள்களில் பாட்டியாலாவில்வைத்து பாட்டியாலா அணியுடன் நான்கு நாள்கள் மேட்ச். அதற்கு முன்பாக அமிர்தசரஸில் தெற்கு பஞ்சாப் அணிக்கும் MCC-க்கும் மூன்று நாள்கள் மேட்ச்.

இரண்டு அணிக்குமே கேப்டன், பூபிந்தர் சிங்தான். நாள் நெருங்க நெருங்க அவருக்குள் படபடப்பு. `ஐயோ, அந்த ஜர்டைன் எம்டன் ஆயிற்றே. உள்ளூரில் வெள்ளைக்காரனிடம் தோற்றால் மானம், மரியாதை, கௌரவம் எல்லாம் கவிழ்ந்துவிடுமே. வெற்றிக்கு வாய்ப்பில்லையென்றாலும் டிராவாவது செய்ய வேண்டுமே! எப்படி?’

அமிர்தசரஸில் மூன்று நாள்கள் மேட்ச் ஆரம்பமானது. பூபிந்தர்தான் டாஸ் ஜெயித்தார். ‘பேட்டிங்’ என்றார். முதல் சில நிமிடங்களிலேயே முதல் விக்கெட். ஆனால், மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய லாலா அமர்நாத், செஞ்சுரி போட்டார். இன்னொரு பக்கம், பூபிந்தர் சிங்கின் புதல்வர், பாட்டியாலா இளவரசர் யத்விந்த்ர சிங், நிதானமாக ஆடி 66 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பிறகு இறங்கிய கேப்டன் மகாராஜா, ஓரளவு சமாளித்து ஆடினார். உதிரிகளாக ரன்கள் சேர்ந்தன. 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவசரப்பட்டு ஓட நினைத்து (அந்தத் தள்ளாத நாற்பது வயதில்) ரன்-அவுட் ஆனார். முதல் நாள் ஆட்ட முடிவில் தெற்கு பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்திருந்தது.

நைனிட்டாலில் நடந்த கிரிக்கெட் மேட்ச் (1885)
நைனிட்டாலில் நடந்த கிரிக்கெட் மேட்ச் (1885)

முழுதாக மூன்று நாள்கள் நடந்த அந்த மேட்ச் டிராவில் முடிந்தது. அடுத்தது பாட்டியாலாவில் மேட்ச். ஜர்டைனும் அணியினரும் பாட்டியாலாவுக்குச் சென்று இறங்கியிருந்தார்கள். ‘நம் அணியின் பந்துவீச்சு பலமாக இல்லை. ஆனால் ஜர்டைனின் பௌலர்கள் முரட்டுத்தனமாக வீசினால், நம் அணியினர் தாங்க மாட்டார்களே...’ - ஆழ்ந்த யோசனையில் இருந்தார் பூபிந்தர் சிங். நீண்ட நேரம் கழித்து முகத்தில் தெளிவு உண்டானது. ‘இன்று இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஆல்கஹால் அமிர்தங்களுடன் இதர சமாசாரங்களும் களைகட்ட வேண்டும்’ – கண்ணடித்தார் பூபிந்தர் சிங்.

மகாராஜாவின் அழைப்பின் பெயரில், ஜர்டைனும் இதர MCC வீரர்களும் மோதி பாக் அரண்மனைக்கு இரவு விருந்துக்கு வந்தார்கள். பூபிந்தரின் கட்டளைப்படி ஒரு லார்ஜ் பெக், 100 மில்லியாக உயர்த்தப்பட்டிருந்தது. கூடவே ரகசியமாக ஒரு கட்டளையும் இட்டிருந்தார். ‘ஐரோப்பிய விருந்தினர்களுக்கு ஊற்றிக் கொடுத்துக்கொண்டே இருங்கள். முடிந்தவரை. இடைவிடாமல். அவர்கள் மயங்கிச் சரியும்வரை.’ பாட்டியாலா அணி வீரர்களுக்கும் ரகசியச் செய்தி சொல்லப்பட்டிருந்தது. ‘நீங்களும் மதுக் கோப்பையைக் கையில் எடுக்கலாம். ஆனால், மறந்தும் வாயில் வைக்கக் கூடாது.’

‘மகாராஜா, என்ன இது, பெக் அளவு அதிகமாக இருக்கிறதே?’ - கேட்டார் ஜர்டைனின் அணி வீரர் ஒருவர். ‘பாட்டியாலா பெக். அப்படித்தான் இருக்கும்’ சிரித்தார் பூபிந்தர். நெப்போலியனும் இன்னபிற சகாக்களும் களமிறங்கி விளையாட ஆரம்பித்தார்கள். MCC வீரர்கள் சரணடைந்தார்கள்.

பிரதாப் சிங்
பிரதாப் சிங்

விடிந்தது. MCC வீரர்கள் அரை போதையுடன் துருவே பண்டோவ் மைதானத்துக்கு வந்து சேரும்போது, பூபிந்தரும் ஏனைய வீரர்களும் நல்ல பிள்ளைகள்போல பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

நாணயம் சுழன்றபடி பறந்தது. டாஸ் MCC-க்குச் சாதகமாக அமைந்தது. பேட்டிங். அவர்களால் அதிரடியாக ஆட முடியவில்லை. நாளெல்லாம் ஆடி நத்தை வேகத்தில் ரன் சேர்த்தார்கள். 204/4. அதில் கேப்டன் ஜர்டைன் மட்டும் நிதானமாக ஆடி 80 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அன்றைக்கு இரவிலும் மகாராஜாவின் அன்புக் கட்டளையால் அரண்மனை விருந்தில் MCC வீரர்கள் கலந்துகொண்டார்கள். அன்றும் ‘பாட்டியாலா பெக்’ விளையாடியது. ஒதுங்க நினைத்த வீரர்களை வஞ்சிகள் கொஞ்சிக் கொஞ்சிக் கவிழ்த்தார்கள்.

இரண்டாவது நாள் மேட்ச் ஆரம்பமானது. ஆஸ்திரேலியப் பந்து வீச்சாளர் டாரண்ட், MCC-யின் விக்கெட்டுகளை எளிதாகக் கழற்றினார். 330-க்கு ஆல்-அவுட். பாட்டியாலா அணி ஆடத் தொடங்கியது. அமர்நாத் அரைசதம் அடித்து அவுட் ஆனார். இரண்டாவது நாளின் இறுதியில் பாட்டியாலா 91/2.

அந்த இரவிலும் அதே விருந்தோம்பல் தொடர்ந்தது. மூன்றாவது நாளின் ஆட்டத்தில் வாஸிர் அலி மட்டும் வெளுத்து வாங்கினார். 156 ரன்கள். இளவரசர் யத்விந்தர சிங் 37. கொஞ்சம் டென்ஷனாக இருந்ததால் மகாராஜா களமிறங்கவில்லை. மூன்றாவது நாள் ஆட்டத்திலும் ஜர்டைனின் முரட்டு பௌலர்களால் சாதுவாகவே பந்துவீச முடிந்தது. ரசிகர்களின் கொட்டாவிகளுக்கிடையே நகர்ந்த அன்றைய ஆட்டத்தின் முடிவில் பாட்டியாலா 269/4.

இறுதி நாள். பாட்டியாலா 6 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் எட்டியது. டிக்ளேர் செய்வதாக மகாராஜா அறிவித்தார். அப்படியே ஜர்டைனுடன் பேச்சுவார்த்தை நடத்தி மேட்சையும் முடித்துக்கொண்டார். டிரா. சொந்த மண்ணில் தோல்வியில்லை. தன்மானம் தப்பித்தது. ஆனாலும் பாட்டியாலா முதல் இன்னிங்ஸில் MCC-யின் ஸ்கோரைக் கடந்ததையே பெரும் வெற்றியாகக் கொண்டாட ஆரம்பித்தார் பூபிந்தர் சிங். மைதானத்தில் காத்திருந்த பேண்டு வாத்தியக்காரர்கள் அதிர அதிர வாசிக்க, போதையேற்றிக்கொண்டு மைதானமெங்கும் சுற்றிச் சுற்றி வந்து ஆடித் தீர்த்தார் மகாராஜா.

பூபிந்தர் சிங் வளர்த்துவிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் உண்டு. முக்கியமானவர் லாலா அமர்நாத். டெஸ்ட் மேட்சில் சதமடித்த முதல் இந்திய வீரர். 1933, டிசம்பர் 17-ல் பம்பாயில் ஜர்டைனின் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் இந்தச் சாதனையைச் செய்தார். ‘மகாராஜா பூபிந்தர் சிங் மட்டும் இல்லையென்றால் நான் கிடையாது. அவர் என் வணக்கத்துக்குரியவர்’ - பாட்டியாலா சமஸ்தானத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய லாலா அமர்நாத்தின் வார்த்தைகள் இவை.

முகமத் நிஸார். இந்திய அணியின் ஆரம்பகால ஃபாஸ்ட் பௌலர்களுள் ஒருவர். பூபிந்தர் சிங்கின் பாசத்துக்குரியவர். ஒருநாள் மோதி பாக் அரண்மனை மைதானத்தில் லாலா அமர்நாத் பேட் செய்துகொண்டிருக்க, நிஸார் பந்துவீசத் தயாராக இருந்தார். `சோக்ரா’ (பையன்) என்று லாலாவைப் பிரியமாக அழைக்கும் மகாராஜா மைதானத்துக்கு வந்தார். ‘நிஸார், நீ இப்போது பவுன்ஸ் வீசி சோக்ராவின் மண்டையை உடைக்க வேண்டும். செய்துவிட்டால் உனக்கு ஒரு கிராமத்தையே பரிசாகத் தருகிறேன்’ என்றார். சீறிவந்த பந்தை, லாலா லாகவமாகத் தடுக்க, நிஸாரின் கிராமக்கனவு பறிபோனது.

இன்னொரு சமயம், லாலாவுக்கு ஒரு வாக்குக்கொடுத்தார் பூபிந்தர். ‘நீ அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ஒரு தங்கக்காசு.’ அந்த மேட்சில் லாலா சதமடித்து, தங்கத்தை அள்ளினார். இப்படி பூபிந்தரின் பிரிய வட்டத்துக்குள் இருந்த கிரிக்கெட் வீரர்கள் நிறைய. ஆனால் பூபிந்தரின் கோபத்தால் தனது கிரிக்கெட் வாழ்வையே தொலைத்த ஒரு வீரரும் உண்டு.

1930-களில் முகமத் நிஸார்போலவே இந்தியாவின் சூப்பர் ஃபாஸ்ட் பௌலராகத் திகழ்ந்த மற்றொருவர் எல்.ராம்ஜி. இந்தியா சர்வதேச அளவில் டெஸ்ட் மேட்ச் ஆடத் தகுதிபெறும் நிலையில், அணியில் கண்டிப்பாக இடம்பெறக்கூடிய தகுதியில் இந்த இருவரும் இருந்தார்கள். அப்போது ஒரு லோக்கல் மேட்சில் ராம்ஜி பந்து வீசத் தயாரானார். பேட் செய்துகொண்டிருந்தவர் பூபிந்தர் சிங். வேகமாகக் கடந்து சென்ற அந்தப் பந்தை பூபிந்தரால் தொட முடியவில்லை. அடுத்த பந்து, மகாராஜாவின் வலது கால் முட்டியில்பட்டது.

‘Howzzat...’

குதித்தபடியே அம்பயரிடம் சத்தம்போட்டு முறையிட்டார் ராம்ஜி. ஆனால், அம்பயர் எல்பிடபிள்யூ கொடுக்கவில்லை. கோபத்தில் ராம்ஜி, மகாராஜாவைத் திரும்பிப் பார்த்தார். அவரது முகத்தில் சிரிப்பு. தன் எல்லைவரை சென்ற ராம்ஜி, அடுத்த பந்தை வீச ஆக்ரோஷமாக ஓடிவந்தார். ஷாட் பிச் ஆகி வந்த பந்து, விர்ரெனப் பாய்ந்து சென்று மகாராஜாவின் வலது தோள்பட்டையைத் தாக்கியது. நிலைகுலைந்து கீழே விழுந்தார் அவர். மற்ற வீரர்கள் சூழ்ந்துகொண்டார்கள். மகாராஜாவின் உதவியாளர்கள், மருத்துவர் எல்லோரும் மைதானத்துக்குள் விரைந்தார்கள். சில நிமிடங்கள் கழித்துத் தன்னிலை அடைந்தார் மகாராஜா.

மறுநாள் ராம்ஜி அங்கு இல்லை. ஊரைவிட்டே ஓடிப்போயிருந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையிலும் ஏகப்பட்ட சிக்கல்கள். உருவாக்கியது பூபிந்தர் சிங்தான். சரி, ஒருவரது கிரிக்கெட் வாழ்க்கையையே சீர்குலைக்கும் அளவுக்கு பூபிந்தருக்கு என்ன அதிகாரம் இருந்தது?

1927-ம் ஆண்டு டெல்லி ரோஸனரா கிளப்பில் பூபிந்தர் சிங், அப்போதைய MCC கேப்டன் கில்லிகனைச் (Arthur Gilligan) சந்தித்தார். கிராண்ட் கோவன் என்ற ஐரோப்பியத் தொழிலதிபரும் அண்டோனி மெல்லோ என்பவரும் அங்கிருந்தார்கள். இந்தியாவுக்கென கிரிக்கெட் போர்டு ஒன்றை உருவாக்குவதே சந்திப்பின் நோக்கம். அப்படி ஒரு போர்டு உருவானால் இந்திய அணிக்கு International Cricket Council-ன் அங்கீகாரம் கிடைக்கும் என்பது பூபிந்தர் சிங்கின் ஆசை.

பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு 1928-ம் ஆண்டு Board of Control for Cricket in India (BCCI) உருவாக்கப்பட்டது. கிராண்ட் கோவன் அதன் முதல் பிரசிடென்ட். மெல்லோ முதல் தலைவர். போர்டை உருவாக்கப் பலவகைகளில் பின்புலமாக இருந்தவர் பூபிந்தர் சிங். ஆகவே, அப்போது அவருடைய வார்த்தைகள் இந்திய கிரிக்கெட் உலகில் கட்டளைகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒரு கிரிக்கெட் தாதாவாக வலம்வந்த பூபிந்தர் சிங், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத மாபெரும் ஆளுமை. அப்படியே ஒரு கிரிக்கெட் கோமாளி குறித்தும் தெரிந்துகொள்வோமா?

ஜம்மு - காஷ்மீர் சமஸ்தான மகாராஜாவாக நாற்பது ஆண்டுகள் (1885 - 1925) ஆட்சி செய்தவர் பிரதாப் சிங். எதிலும் தனக்குத்தான் வெற்றிகிட்ட வேண்டும். எங்கும் தனக்கே முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்பதில் பிரதாப் சிங் படு உஷார். அதற்காக அவர் செய்த கோமாளித்தனங்கள் எக்கச்சக்கம்.

பிரதாப் சிங், ஆள் படுகுள்ளம். பெரும்பாலும் தொளதொள பைஜாமா ஜிப்பாதான் அணிவார். தலைக்குமேல் ஓரடி உயரத்தில் அடர்த்தியான தலைப்பாகை. காதுகளில் எப்போதும் வைரத்தோடுகள். கிரிக்கெட் ஆடவும் இதே கெட்-அப்தான். கைகால்களில் பேடு, வேறு பாதுகாப்பு உபகரணங்கள் எல்லாம் அணிந்துகொள்ளவே மாட்டார்.

கிரிக்கெட்
கிரிக்கெட்

பென்ஷன் வாங்கிக்கொண்டு பெட் ரெஸ்ட்டில் இருக்கவேண்டிய காலத்திலும் ‘பேட் பிடிக்கப்போகிறேன், வா, வந்து பந்துவீசு’ எனப் படுத்தியெடுத்தார். ஆனால், மட்டையைச் சரியாகப் பிடிக்கக்கூடத் தெரியாது. நினைப்பு மட்டும், `அடிச்சா சிக்ஸர், நின்னா செஞ்சுரி!’ அந்த நினைப்புக்குப் பங்கம் வராமல் பௌலர்கள் பந்துவீசக் கடமைப்பட்டவர்கள்.

காற்றுக்கு வலிக்காத வேகத்தில் வரும் பந்தை பிரதாப் சிங், ஒப்புக்குத் தட்டிவிடுவார். அடுத்து ஃபீல்டர்களின் வேலை ஆரம்பமாகும். அவர்கள் மறந்தும் தங்கள் கைகளால் பந்தைத் தொட்டுவிடக் கூடாது. ஜீவனின்றி உருண்டுவரும் கிரிக்கெட் பந்தை ஃபுட்பாலாக பாவித்துக் கொண்டு காலால் உதைக்க வேண்டும், பவுண்டரி லைனை நோக்கி. அந்தப் பந்து எல்லைக்கோட்டைத் தாண்டும்வரை துரத்திச் சென்று உதைத்துவிட்டு வர வேண்டும். ஒவ்வொரு பந்து போட்ட பிறகும் அம்பயர் தயாராக இருப்பார், `ஃபோர்’ என்று சைகை காட்ட.

ஒரு பந்தை மகாராஜா பேட்டால் தட்டத் தவறிவிட்டால், அது சரியான பந்து என்றாலும் அம்பயரின் கைகள் வைடாக நீண்டுகொண்டிருக்கும். பௌலர்கள் ஒவ்வொரு பந்தையும் ஸ்டம்பை விட்டுத் தள்ளியே வீச வேண்டும். ஏதாவது ஒரு பந்து தப்பித்தவறி, ஸ்டம்பைக் கவிழ்த்திவிட்டால், அம்பயர் கடமை தவறாமல் கத்துவார் ‘நோ பால்!’ அந்தப் பந்தை வீசிய புண்ணியவானுக்கு ஆட்டம் முடிந்த பிறகு ‘தக்க சன்மானம்’ கிடைக்கும்.

எல்லா ஆட்டங்களிலும் பிரதாப் சிங்தான் முதலில் பேட் பிடிப்பார். அவர் மனம் விரும்பும் ரன் எடுக்கும்வரை களத்தில் இருப்பார். விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன் சேர்க்கவெல்லாம் மாட்டார். அடித்தால் ஃபோர். எப்போதாவது சற்றே முயற்சி எடுத்துத் தூக்கி அடிப்பார். எல்லைக்கோடுகள் மாற்றியமைக்கப்படும். அது ‘சிக்ஸர்’ என்று பிரகடனப்படுத்தப்படும். பிரதாப் சிங்குக்குப் பின் களமிறங்கும் யாரும் அவரது ஸ்கோரைத் தொட முயற்சிசெய்யக் கூடாது. அவுட் ஆகிவிட வேண்டும். அல்லது, அம்பயர் பார்த்துக்கொள்வார்.

இப்படியாக கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த காமெடியனாக விளங்கிய பிரதாப் சிங், ஒவ்வொரு மேட்சிலும் தன்னையே ‘மேன் ஆஃப் தி மேட்ச்!’ ஆக அறிவித்துக்கொள்ளவும் தவறவில்லை. அதற்கான விருதைத் தனக்குத் தானே வழங்கிக்கொண்டு பெருமையும்பட்டுக் கொண்டார்.