Published:Updated:

அழகாய் இருக்கிறேனா...? பயமாய் இருக்கிறது!

ஃபோபியா
பிரீமியம் ஸ்டோரி
ஃபோபியா

இந்த ஃபோபியா உள்ளவர்கள் அதிக எடையில் இருக்கிறோம், பார்க்க நல்ல தோற்றம் இல்லை, ஃபிட்டாக இல்லை, நம்மை எல்லாரும் கேலி செய்வார்கள் என்பது போன்ற எண்ணங்களுடன் இருப்பார்கள்.

அழகாய் இருக்கிறேனா...? பயமாய் இருக்கிறது!

இந்த ஃபோபியா உள்ளவர்கள் அதிக எடையில் இருக்கிறோம், பார்க்க நல்ல தோற்றம் இல்லை, ஃபிட்டாக இல்லை, நம்மை எல்லாரும் கேலி செய்வார்கள் என்பது போன்ற எண்ணங்களுடன் இருப்பார்கள்.

Published:Updated:
ஃபோபியா
பிரீமியம் ஸ்டோரி
ஃபோபியா

“எல்லாம் சிவமயம் என்று சொல்லுவினம்... ஆனால், எனக்கு எல்லாம் பய மயம்” கமலின் ‘தெனாலி’ படத்தில் மருத்துவ உலகில் ஃபோபியா (Phobia) என்று அழைக்கப்படுவதைத்தான் வசனங்களில் கோத்திருப்பார் கிரேஸி மோகன். உலகில் இதுவரை எத்தனை ஃபோபியாக்கள் உள்ளன என்பது இன்னும் வரையறுக்கப்படவில்லை.

தோற்றம் தொடர்பான சில ஃபோபியாக்கள் பெண்களிடம் அதிகம் காணப்படுகின்றன. ஃபோபியா என்பது சங்கிலித் தொடர் போல பல்வேறு பிரச்னைகளை ஏற் படுத்திக்கொண்டே செல்லும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

எம்.கவிதா
எம்.கவிதா

பெண்களிடம் அதிகம் காணப் படும் ஃபோபியாக்கள், அவற்றுக்கான காரணங்கள், எப்படிக் கண்டறிந்து தீர்வு காண்பது என்பது பற்றிப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் எம்.கவிதா.

“உடல் எடை அதிகரித்துவிடும் அல்லது அதிக உடல் எடை இருக் கிறது என்ற பயத்தால் ஏற்படுவது ஒபிசோஃபோபியா (Obesophobia). மனப்பதற்ற குறைபாடுகளின் கீழ் இந்த ஃபோபியா வகைப்படுத்தப் படுகிறது.

இந்த ஃபோபியா உள்ளவர்கள் அதிக எடையில் இருக்கிறோம், பார்க்க நல்ல தோற்றம் இல்லை, ஃபிட்டாக இல்லை, நம்மை எல்லாரும் கேலி செய்வார்கள் என்பது போன்ற எண்ணங்களுடன் இருப்பார்கள். எடையைச் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற மனப்பதற்றம் ஏற்படும், பொது இடங்களுக்குப் போவதைத் தவிர்ப்பார்கள். இந்தப் பிரச்னை அடுத்தகட்டத்துக்குப் போகும்போது சமூக மனப்பதற்ற குறைபாடு (Soical Anxiety disorder) ஏற்படலாம். எல்லோரிடமிருந்தும் தனியாக இருக்கவே விரும்புவார்கள்.

வருத்திக்கொள்வார்கள்!

சாப்பிடுவதால்தான் எடை அதிகரிக்கிறது என்று நினைத்து சாப்பாட்டைக் குறைக்க ஆரம்பிப் பார்கள். அதீத உடற்பயிற்சி, சாப் பிட்ட உணவை உடனே வெளியேற்ற மாத்திரை போட்டுக்கொள்வது, கைகளை வாய்க்குள் நுழைத்து வாந்தி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இது உணவைத் தவிர்க்கும், உணவை வெறுக்கும் குறைபாடு (Anorexia Nervosa) அல்லது தீவிர உணவு உட்கொள்ளும் குறை பாட்டை (Bulimia Nervosa) உருவாக்கலாம். ‘புலிமியா நெர்வோசா’ குறைபாடுடையவர்கள் கொஞ்ச மாகச் சாப்பிட்டால் உடல் மெலிவோம் என்று நினைத்து, குறைவாகச் சாப்பிடுவார்கள். ஆனால், மூன்று வேளை என்பதை ஐந்துவேளை, ஆறுவேளை என்று சாப்பிடுவார்கள். காலையில் 8 மணிக்குச் சாப்பிட்டால் அடுத்து 11 மணி, 1 மணி, 3 மணி எனக் குறிப் பிட்ட இடைவெளியில் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால், வழக்கத்தைவிட அதிகமாகவே சாப்பிடுவார்கள். இதன் காரணமாக எடை கூடத்தான் செய்யும்.

சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் பசியெடுக்கத் தொடங்கும் என்பதால் மீண்டும் மீண்டும் சாப்பிடுவார்கள். சாப்பிடுவது வெளியில் தெரியக் கூடாது என்று நொறுக்குத்தீனி, சாக்லேட் போன்றவற்றை மறைத்து வைத்துச் சாப்பிடுவார்கள். இவர் களும் உணவை வெளியேற்றும் செயல்களில் ஈடுபடுவார்கள். அதீத அழகுணர்வு, ஒல்லியான தோற்றத் தைப் பெற விரும்புபவர்கள், அடுத்த வரை கவர நினைப்பது, கல்லூரிக்குள் நுழைவது போன்ற காரணங்களால் இளம் பெண்களிடம் இந்தப் பிரச்னை அதிகம் காணப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு, உடல் எடை அதிகரிப்பவர்களுக்கும் இந்த ஃபோபியா ஏற்படலாம்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

திடீரென்று எரிச்சலடைவது, அழுகை, சந்தோஷம், கோபம் என மனநிலையில் மாற்றம் (Mood swings) ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதிகமாகச் சாப்பிடுவது அல்லது சாப்பாட்டைத் தவிர்ப்பது, அதீத உடற்பயிற்சி, பிறருடன் பேசுவதைத் தவிர்ப்பது, குடும்ப நிகழ்வுகளைத் தவிர்ப்பது, அழகாக, ஒல்லியாக இல்லை என்பது போன்ற எதிர்மறை சிந்தனைகள் போன்றவை தென்படும்.

கண்டறியத் தவறினால் பிரச்னை தீவிரமாகி வேறு மனநல நோய்களுக்கு இட்டுச் செல்லும். தீவிர மனஅழுத்தம் ஏற்படும்பட்சத்தில் தற்கொலை எண்ணம்கூட எழலாம்.

அழகாய் இருக்கிறேனா...? பயமாய் இருக்கிறது!

யாரை அணுகுவது?

முதலில் பொது மருத்துவர், மகப்பேறு மருத்துவர், நாளமில்லா சுரப்பிகள் மருத்துவரை அணுகி உடல்ரீதியாக ஏதேனும் பிரச்னை உள்ளதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். ஃபோபியா தீவிரமாகி உணவு உட்கொள்ளும் குறைபாடுகள் ஏற்பட்டால் மனநல மருத்துவரை அணுக வேண்டும்.

சிகிச்சை எப்படியிருக்கும்?

உடல்ரீதியான பிரச்னை இருந்தால் அதற்கான சிகிச்சைகளும் மனரீதியான பிரச்னைகளுக்கு `சைக்கோதெரபி' என்ற அறிவாற்றல் நடத்தை சிகிச்சையும் அளிக்கப்படும். நேர்மறையாகச் சிந்திப்பது எப்படி, சிந்திக்கும் வகையை மாற்றுவது என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். தேவைப்பட்டால் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். உடற்பயிற்சி, டயட்டுக் கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

Body Dysmorphic Disorder (BDD)

தான் அழகாக இல்லை, தன் மூக்கு இப்படி இருந்தால் நன்றாக இருக்கும், உதடு இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக அறுவைசிகிச்சைகூட செய்துகொள்வார்கள். தன்னைச் சுற்றி யுள்ளவர்களைவிட தான் அழகு குறைவாக இருப்பதாக தாழ்வுமனப்பான்மை ஏற்படும். மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தப் பிரச்னையிருப்பவர்கள் தாங்களாகவே அடிக்கடி குறைபாடுகளைப் பற்றிப் பேச ஆரம்பிப்பார்கள். இதுவும் மனப்பதற்ற குறைபாடுகளில் ஒன்றுதான். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்யாவிட்டால் தீவிர மனநலப் பிரச்னையாக முடிய வாய்ப்புள்ளது.

ஃபேட் ஃபோபியா (Fat phobia)

இது மற்ற இரண்டு பிரச்னைகளைக் காட்டிலும் சற்று வேறுபட்டது. உடல் பருமனாக இருப்பவர்களைக் கண்டு பயப்படுவதுதான் இந்தப் பிரச்னை. குழந்தைப் பருவத்தில் உடன் படிக்கும் உடல்பருமனான ஒரு குழந்தை மோசமாக கேலி செய்திருக்கலாம் அல்லது தாக்கியிருக்கலாம். உடல் பருமனான நபர்களால் சிறார்வதை, மனதை பாதிக்கும் நிகழ்வு நடந்திருக்கலாம். அதனால் உடல் பருமனானவர்களைக் கண்டாலே அவர்களுக் குப் பிடிக்காது, பயப்படுவார்கள், படபடப்பு, கைகால்கள் நடுங்கி `பேனிக் அட்டாக்' ஏற்படலாம். இந்த ஃபோபியாவைப் பொறுத்த வரை பாதிக்கப்பட்டவர்கள் வெளியே சொன்னால்தான் கண்டுபிடிக்க முடியும். அதன் அடிப்படையில் மனநல மருத்துவர்கள் சிகிச்சையளிப்பார்கள்” என்கிறார்.

குடும்பமாகட்டும் குடும்பங்களின் கூட்டமைப்பான சமூகமாகட்டும் இரண்டும் தனிப்பட்ட நபரின் மனநலத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்த்துகின்றன இந்த ஃபோபியாக்கள். தோற்றம், எடை, நிறம் ஆகியவற்றைக் கடந்து இதயங்களை நேசிக்கத் தொடங்குவோம்!

பெண்களுக்கு ஏன் அதிகம்?

அழகு என்று குறிப்பிடும்போதே பெண்களை மையப்படுத்திதான் சமூகம் பார்க்கிறது. பெண் களுக்கு நடத்தப்படும் அழகிப் போட்டிகள் ஹைலைட் ஆவதைப்போல ஆண்களுக்கான போட்டிகள் பிரபலமாவதில்லை. எந்த அழகு சாதனப் பொருளாக இருந்தாலும் பெண்களை மையப்படுத்திதான் விளம்பரப்படுத்தப் படுகிறது. பெண்கள் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது பொதுப்புத்தியில் ஊறியிருக்கிறது. இதனால் பெண்களும் தாங்கள் அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றனர். இதனா லேயே பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சமூகத்தின் தாக்கம்!

குழந்தைகளை உருவம், நிறம், தோற்றத்தை வைத்து கேலி செய்வது, விமர்சிப்பதைக் குடும்பத்தினர், சமூகம் தவிர்க்க வேண்டும்.

‘நீ வெயிட் போட்டுட்டே போற... எப்போ பாத்தாலும் சாப்பிட்டுட்டே இருக்க’ போன்ற வார்த்தைகள் அவர்களைக் கூடுதலாக பாதிக்கும். திருமணமானவர்கள் என்றால் கணவரின் வார்த் தைகள் அதிகம் பாதிக்கும். ‘டாக்டர், பிளேட்ல கைய வைக்கும்போதெல்லாம் என் வீட்டுக்காரர் எப்ப பார்த்தாலும் இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு தான் குண்டாயிருக்க’ன்னு சொல்றாரு’ என்று பல நோயாளிகள் சொல்வதைக் கேட்கிறேன்.