Published:Updated:

செர்பிய நடிகையோடு திருமண நிச்சயதார்த்தம்! - இன்ஸ்டாவில் அறிவித்த ஹர்திக் பாண்டியா

செர்பிய மாடல் அழகியும் நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக்குடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட்டர் ஹர்திக் பாண்டியா அறிவித்திருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா ( Instagram )

பிரபல டிவி டான்ஸ் ஷோவான Nach baliya - 9 நிகழ்ச்சி மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் செர்பியாவைச் சேர்ந்த நடாஷா. அதையடுத்து பல்வேறு பாலிவுட் பாடல்களிலும் மியூசிக் வீடியோக்களிலும் நடித்திருக்கிறார் அவர். ஹர்திக் பாண்டியாவும் நடஷாவும் காதலிப்பதாக செய்திகள் பரவின. இந்த விவகாரம் குறித்து இருவரும் வாய்திறக்காத நிலையில், ஹர்திக் பாண்டியாவின் பிறந்த நாளான கடந்த அக்டோபர் 11ம் தேதி அவருக்கு நடாஷா வாழ்த்துப் பதிவு செய்தது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தநிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தனக்கும் நடாஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக இன்ஸ்டாவில் அறிவித்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா. படகு ஒன்றில் நடாஷாவுக்கு மோதிரம் அணிவிக்கும் வீடியோ ஒன்றையும் ஹர்திக் பதிவிட்டிருக்கிறார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, குல்தீப் யாதவ் உள்ளிட்டோரும் வாழ்த்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பரில் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி20 போட்டிக்குப் பின்னர் ஹர்திக் பாண்டியா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சமீபத்தில் முடிந்த வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கெதிரான தொடர்களில் அவர் விளையாடவில்லை.

அதேபோல், இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கெதிரான தொடர்களிலும் அவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளூம் இந்திய ஏ அணியில் அவர் இடம்பெற்றிருக்கிறார்.