Published:Updated:

`இனி ஒருபோதும் விளையாட மாட்டார்!'- தோனி குறித்து ஹர்பஜன் சொன்னது என்ன?

தோனி - ஹர்பஜன்
தோனி - ஹர்பஜன்

தோனி ஓய்வு முடிவை அறிவிக்கும் முன்பே ஒப்பந்தப் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பின்னர் தோனி, இந்திய அணியில் இடம்பெறவில்லை. அதன்பின்னர், பல்வேறு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி பங்கேற்றும், வீரர்கள் பட்டியலில் தோனியின் பெயர் இல்லை. இதனால், தோனி ஓய்வு முடிவை அறிவிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து பிசிசிஐ தரப்பிலோ தோனி தரப்பிலோ எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை.

தோனி
தோனி
ICC

இந்த நிலையில், பிசிசிஐ ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளின்கீழ் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பட்டியலை வெளியிட்டுள்ளது. வருடாந்தர ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திரசிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. தோனி ஓய்வு முடிவை அறிவிக்கும் முன்பே ஒப்பந்தப் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையே, தோனி குறித்து சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். இந்தியா டுடேவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``ஓய்வு குறித்து அறிவிக்கும் முன்பே தோனி தனது கடைசி ஆட்டத்தில் விளையாடிவிட்டார் என்பது உறுதி. எம்.எஸ்.தோனி சாலையின் முடிவாக இருக்கலாம். நான் கேள்விப்பட்ட வரையில் உலகக்கோப்பையே தோனி இந்தியாவுக்காகப் பங்கேற்ற கடைசி ஆட்டமாக இருக்கலாம். அதன்பிறகு, அவர் மீண்டும் இந்தியாவுக்காக விளையாட மாட்டார்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

நீண்ட நாள்களுக்கு முன்பே அதற்கேற்றாற்போல் தன் மனதை மாற்றி அமைத்துக்கொண்டார். அதனால்தான், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. என்றாலும், தோனியைப் பற்றி எனக்குத் தெரிந்தவரை அவருக்கு இந்த வருடம் சிறந்த ஐபிஎல்-லாக இருக்கிறது. எனினும், மீண்டும் இந்தியாவுக்காக தோனி விளையாட மாட்டார்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு