Published:Updated:

`இத்தன வருஷம் கழிச்சு அதை ஞாபகம் வெச்சுருப்பாருனு நினைக்கல!’ - நெகிழும் சச்சின் தேடிய ஊழியர்

குருபிரசாத் - சச்சின்
குருபிரசாத் - சச்சின்

முதலில் அவரிடம் கூறியதை நானும் பெரிதாக யாரிடமும் கூறவில்லை. என் குடும்பம் பற்றும் சில நண்பர்களிடம் மட்டும் சச்சினைச் சந்தித்த மகிழ்ச்சியான விஷயத்தைப் பகிர்ந்துகொண்டேன்.

கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சென்னை வந்திருந்தபோது அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர் சொன்ன ஆலோசனையைக் கேட்டு அவரது கிரிக்கெட் எல்போ கார்டில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளார். என்னதான் ஜாம்பவானாக இருந்தாலும் தன் ரசிகர் சொன்னதைக் கேட்டு நடப்பது பெரிய விஷயம். பல வருடங்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்திருந்தாலும் அந்த ஊழியரைப் பார்க்க வேண்டும் எனத் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளார் சச்சின்.

சச்சின்
சச்சின்

சச்சின் தேடும் அந்த ஊழியர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலே அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் பலருக்கு இருக்கும் அதிலும் அவர் நம் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றால் சொல்லவா வேண்டும். நேற்று முதல் தமிழகம் முழுவதும் சல்லடை போட்டு அந்த ஊழியரைத் தேடி வந்துள்ளனர் சச்சினின் ரசிகர்கள். 24 மணி நேரம் முடியும் முன்பே ஒருவழியாக அவர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

சென்னையை அடுத்துள்ள பெரம்பூரைச் சேர்ந்த குருபிரசாத்தான் அவர். நாம் அவரை தொடர்பு கொண்டு பேசினோம். பதற்றமாக போனை எடுத்த அவர் நம் விவரங்களை அறிந்ததும், “இன்னும் கொஞ்ச நேரத்துல சச்சின் சார் ஆபீஸ்ல இருந்து போன் பண்றதா சொல்லி இருக்காங்க. அவங்ககிட்ட பேசிட்டு உங்களை கூப்பிடுகிறேன்” எனக் கூறி சில விநாடிகளில் இணைப்பைத் துண்டித்தார்.

சச்சின்
சச்சின்

அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு நம்மிடம் பேசிய குரு பிரசாத், “நான் பெரம்பூரைச் சேர்ந்த மிகவும் சாதாரண மனிதன். சச்சின் சார் சொன்ன சம்பவம் 2001-ம் ஆண்டு நடந்தது. தற்போது ஹோட்டல் வேலையை விடுத்து ஷேர்மார்கெட் ஆலோசகராக வேலை செய்து வருகிறேன். ஊரில் என் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன்” எனத் தன் விவரங்களைத் தெரிவித்தார். பின்னர் சச்சினுடனான சந்திப்பு பற்றிய பேச்சைத் தொடங்கியதும் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை அதே உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார்.

`அவர் மட்டும்தான் அதைக் கண்டுபிடித்தார்!’ - சென்னை ஹோட்டல் ஊழியரைத் தேடும் சச்சின்

“2001-ம் ஆண்டு ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் கான்ட்ராக்ட் ஊழியராக, சென்னை தாஜ் ஹோட்டலில் நான் வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போது இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியை முடித்துவிட்டு, இங்கு நடந்த பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அந்த ஹோட்டலில் தங்கியிருந்தார். அவர் இருந்த 2 -வது தளத்தில் நான்தான் கண்காணிப்பாளராக இருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாக சச்சின் தன் ரூமை விட்டு வெளியில் வரும்போது அவரைச் சந்தித்தேன்.

சச்சினின் ஆட்டோகிராஃப்
சச்சினின் ஆட்டோகிராஃப்

அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதற்குக் கூட கையில் எதுவும் இல்லாமல் வெறும் ஹோட்டல் நோட்டுடன் நின்றுகொண்டிருந்தேன். அவரை பார்த்ததும் அருகில் சென்று அதே நோட்டில் ஆட்டோகிராஃப் வாங்கினேன். எனக்கு பொதுவாகவே கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் அதிகம். அதனால் கிரிக்கெட்டில் இருக்கும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். வீரர்கள் விளையாடுவதைப் பார்க்கும் போதே அவர்களின் நிலை பற்றி என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.

சச்சினைப் பொறுத்தவரை அவரது ஆட்டம் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது. ஆனால், ஏதோ ஒன்று அவரை தடுப்பதாகத் தோன்றியது. பின்னர்தான் சச்சினின் எல்போ கார்டு அவரை தொந்தரவு செய்வதாக உணர்ந்தேன். அன்று தற்செயலாக நான் சச்சினைச் சந்தித்தபோது, ‘முதலில் சார் நான் உங்களிடம் ஒரு ஆலோசனை கூறலாமா?’ என்றுதான் ஆரம்பித்தேன். அவர் மிகவும் சாதாரணமாகக் கூறுங்கள் என்றார். அப்போதுதான் எல்போ கார்டு தொடர்பான விஷயத்தைக் கூறினேன்.

குருபிரசாத்
குருபிரசாத்

உடனடியாக நான் இதை நிச்சயம் எடுத்துக்கொள்கிறேன் எனக் கூறினார். எப்படி இதைக் கவனித்தீர்கள் எனக் கேள்வி கேட்டார். ‘நீங்கள் விளையாடுவதைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். உங்கள் மேட்ச், பேட்டிங் போன்றவற்றை டி.வியில் பார்த்துதான் நான் கிரிக்கெட் கற்றுக்கொண்டேன். அப்படிதான் இதையும் கவனித்தேன்’ என்று கூறினேன். அப்போது எதுவும் சொல்லாமல் கடந்து சென்றுவிட்டார். நானும் பெரிதாக இதைப் பற்றி யாரிடமும் கூறவில்லை. என் குடும்பம் மற்றும் சில நண்பர்களிடம் மட்டும் சச்சினைச் சந்தித்த மகிழ்ச்சியான விஷயத்தைப் பகிர்ந்துகொண்டேன்.

ஆனால் அவர், நான் சொன்னதைச் சாதாரணமாகக் கடந்து போகாமல் பெரிய மனிதராக இருந்தாலும் அதைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தினார். அதுமட்டுமல்லாது இத்தனை வருடங்கள் கழித்து அதை இன்னும் நினைவில் வைத்திருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் சொன்னதைக் கேட்டு சச்சின் தன் எல்போ கார்டில் மாற்றம் செய்திருப்பதையும் டிவியில் தான் பார்த்து தெரிந்துகொண்டேன். அன்று அவரை பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

சச்சின் சந்திக்க விரும்பிய நபர்
சச்சின் சந்திக்க விரும்பிய நபர்

இவ்வளவு நாள் கழித்து சச்சின் என்னிடம் பேசவேண்டும் எனக் கூறிய விஷயம் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. முதலில் அதைப்பற்றி எதுவும் எனக்குத் தெரியாது. என் அக்கா மகன்தான் கூறினான். நிறையவே சந்தோஷமாக உள்ளது. சச்சின் என்னைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘உலகத்தில் யாருமே இதைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை. ஆனால் அவர் சொன்னார்’ என்று கூறினார். இந்த பாக்கியம் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. உலகத்தில் வேறு யாரும் சொல்லாததை என் மூலம் கடவுள் அவருக்குச் சொல்ல வைத்துள்ளார் என்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” எனக் கூறினார்.

உங்களை கண்டுபிடித்தாகிவிட்டது சச்சினின் அலுவலகத்திலிருந்து போன் வந்ததா அவரிடம் உரையாடினீர்களா என்று கேட்டோம். ‘இன்னும் இல்லை, சிலர் மூலம் சச்சின் என் போன் நம்பரை வாங்கியுள்ளார் என்ற செய்தி மட்டும் கிடைத்தது. இன்னும் அவரோ அவரது அலுவலகத்தில் இருந்தோ போன் வரவில்லை. அதற்காகத்தான் காத்திருக்கிறேன்” என சச்சினுடன் மீண்டும் பேசும் ஆர்வத்தில் விரைந்து நம் போனைத் துண்டித்தார் குருபிரசாத்.

அடுத்த கட்டுரைக்கு