Published:Updated:

`தோனி இதைத்தான் செய்துகாட்டினார்; கவனம் ரிஷப் பன்ட்!' - கம்பீர் அட்வைஸ்

ரிஷப் பன்ட், ஸ்ரேயஸ் ஐயர் செயல்பாடு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் எம்.பியுமான கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.

ரிஷப் பன்ட்
ரிஷப் பன்ட்

ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இளம்வீரர் ரிஷப் பன்ட். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட், மீது இந்திய கிரிக்கெட் வாரியம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. தோனிக்குப் பிறகு ஏற்படும் வெற்றிடத்தை ரிஷப் மூலம் சரிகட்ட முயற்சி செய்கிறது பிசிசிஐ. உலகக்கோப்பை தொடருக்கு அதிரடியாக அழைத்து வரப்பட்டார் பன்ட். உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, தோனி விளையாடாததால் ரிஷப் விளையாடி வருகிறார். தேவையில்லாத ஷாட்கள் தேர்வு செய்து அடிக்கடி அவுட்டாகிறார் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்திய ரசிகர்களும் தோனி மீதான பிரியத்தில், களத்தில் ரிஷப் சிறிய தவறுகளைச் செய்தாலும் தோனி... தோனி... என கோஷம் எழுப்புகின்றனர். இது ரிஷப் பன்ட்-க்கு மேலும் அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது.

ஸ்ரேயஸ் ஐயர் -ரிஷப் பன்ட்
ஸ்ரேயஸ் ஐயர் -ரிஷப் பன்ட்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, `ரசிகர்கள் ரிஷப்-க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. தொடக்க வீரர்கள் ஏமாற்றமளிக்க இந்திய அணி 80 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது. அப்போது களமிறங்கிய ரிஷப் பன்ட், ஸ்ரேயஸ் ஐயருடன் கூட்டணி அமைத்து அணியைச் சரிவிலிருந்து மீட்டார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் 70 ரன்களிலும், ரிஷப் பன்ட் 71 ரன்களிலும் அவுட்டானார்கள். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தனர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 287 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் ஹெட்மயர், ஹோப் அதிரடி சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

`பன்ட்... நீ கலக்கு;  நாங்க இருக்கோம்!’ - மெய்சிலிர்க்க வைத்த சிஎஸ்கே ரசிகர்கள்

இந்நிலையில் ரிஷப், ஸ்ரேயஸ் ஐயர் செயல்பாடு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார். ``ரிஷப் பன்ட், சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அவர் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறார். டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்றாலும் அணியில் ஒரு நபராக இருக்கிறார். இது அணி நிர்வாகத்தின் நம்பிக்கையைக் காட்டுகிறது. அவர், தனது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும். இந்த 60 - 70 ரன்களை சதங்களாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். தோனி இதைத்தான் செய்துகாட்டினார்.

கௌதம் கம்பீர்!
கௌதம் கம்பீர்!

ஸ்ரேயஸ் ஐயர் நீண்ட நாள்களாக வாய்ப்புக்காகக் காத்திருந்தார். தற்போது அவர் பெரிய ஷாட்டுகளை ஆட வந்திருக்கிறார். அவரும் 60-70களை சதங்களாக மாற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். அதுவே அவரை மற்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும். இதனைத்தான் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் செய்கிறார்கள். ஸ்ரேயஸ் ஐயரும் அதைச் செய்ய வேண்டும். அவர் 3-4 அரைசதங்களை விளாசியுள்ளார். ஆனால் அதைச் சதங்களாக மாற்றத் தவறிவிட்டார். சர்வதேச அரங்கில் ஒரு சதத்தைப் பதிவு செய்தால்தான், நீங்கள் அதன் வேகத்தை உணரத் தொடங்குவீர்கள். நாட்டுக்காக சதம் அடிக்கும்போது அந்த உணர்வுகள் எப்படி இருக்கும் என உங்களுக்கு தெரியும்” என கூறியுள்ளார்.