Published:Updated:

`இதுபோன்ற விஷயங்கள் கவனிக்கப்படாமல் போகும்!’ - அஷ்வினைப் பாராட்டிய கங்குலி

அஷ்வினின் இந்தச் சாதனை பெரிய அளவில் கண்டுகொள்ளவுமில்லை, கொண்டாடப்படவுமில்லை என வேதனை தெரிவித்து வந்தனர் சில இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.

கங்குலி
கங்குலி

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின். 2010 -ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அஷ்வினின் ஆதிக்கம் இருக்கும்.

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் அஷ்வின்!
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் அஷ்வின்!

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அஷ்வின் ஒருநாள், மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. எனினும் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்து இந்திய அணியின் வெற்றியில் பங்காற்றி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் அஷ்வின். இவர் கடந்த 10 ஆண்டுகளில் 564 சர்வதேச விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் மற்றும் பிராட் ஆகியோர் முறையே 535 மற்றும் 525 ஆகிய விக்கெட்டுகளுடன் உள்ளனர். இந்தப் பட்டியலில் டாப் 5 -ல் இடம்பிடித்த ஒரே ஸ்பின்னர் அஷ்வின்தான்.

அஷ்வினின் இந்தச் சாதனை பெரிய அளவில் கண்டுகொள்ளவுமில்லை, கொண்டாடட்படவுமில்லை என வேதனை தெரிவித்து வந்தனர் சில இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். இந்த நிலையில், பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலி, அஷ்வினின் இந்தச் சாதனையைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில் கங்குலி, ``கடந்த 10 ஆண்டுகளில் அதிக சர்வதேச விக்கெட்டுகள். சில நேரங்களில் இதுபோன்ற விஷயங்கள் கவனிக்கப்படுவதில்லை.. சிறப்பு” என அஷ்வினைப் பாராட்டியுள்ளார் கங்குலி. இதற்கு அஷ்வினும் `நன்றி தாதா’ எனப் பதிவிட்டுள்ளார்.