Published:Updated:

பந்தை கடிச்சீங்களே... மேட்ச் ஜெயிச்சீங்களா? - பாகிஸ்தான் கிரிக்கெட் பரிதாபங்கள்!

பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணி

'இந்தியாவுல இருக்கிறவங்கள்லாம் நம்ம பெரியம்மா பசங்கதானே'னு பாகிஸ்தான் ரசிகர்களும், 'பாகிஸ்தான்ல இருக்கிறவங்க நம்ம சித்தி பசங்கதானே'னு இந்திய ரசிகர்களும் செல்லமா சண்டை போட்டுப்பாங்க.

இந்தியா, பாகிஸ்தான் மேட்ச் நடக்கப்போகுதுனாலே ஒரு போர் நடக்குற ஃபீல் இருக்கும். ஃபீல்டுல உள்ள பிளேயர்ஸ் எவ்வளவு வெறியோட விளையாடுறாங்களோ அதவிட பல மடங்கு வெறியில இரண்டு நாட்டு ரசிகர்களும் ஆன்லைன்ல அடிச்சுப்பாங்க. 'தமிழ்ப் படம் 2'-ல 'மிர்ச்சி' சிவா சொல்ற மாதிரி 'இந்தியாவுல இருக்கிறவங்கள்லாம் பெரியம்மா பசங்கதானே'னு பாகிஸ்தான் ரசிகர்களும், 'பாகிஸ்தான்ல இருக்கிறவங்க நம்ம சித்தி பசங்கதானே'னு இந்திய ரசிகர்களும் செல்லமா சண்டை போட்டுப்பாங்க.

இந்தியா vs பாகிஸ்தான்
இந்தியா vs பாகிஸ்தான்

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு, இந்திய வீரர்கள் எப்பவாதுதான் மீம் கன்டென்ட் கொடுப்பாங்க. ஆனா பாகிஸ்தான் வீரர்கள், நம்ம இந்திய ரசிகர்களுக்கு எப்பவுமே மீம் கன்டென்ட் கொடுப்பாங்க. அதனால, ஆன்லைன்ல நம்ம கைகள் ஓங்கியே இருக்கும். நம்ம நெட்டிசன்களுக்கு கன்டென்ட் கொடுக்குற மாதிரி பாகிஸ்தான் அணி வீரர்கள் செஞ்ச சில விசித்திர சம்பவங்களத்தான் இங்க பார்க்கப்போறோம்.

இன்சமாம் உல் ஹக்

பிப்ரவரி 6, 2006. இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச். இப்ப மலையாள சினிமாவுல சூப்பர் ஸ்டாரா இருக்கிற பிக்பாஸ் புகழ் ஶ்ரீசாந்த், இந்தியன் டீம்ல இருந்த காலத்துல நடந்த மேட்ச் அது. அவர், வேகமா ஓடி வந்து போட்ட பந்தை, இறங்கி வந்து மிட் ஆஃப்ல அடிச்சாரு இன்சமாம் உல் ஹக். அதப் பிடிச்ச நம்ம சி.எஸ்.கே ஸ்டார் ரெய்னா, ஸ்டம்ப்பை டார்கெட் பண்ணி எறிஞ்சாரு. இன்சமாம் என்ன ஞாபகத்துல இருந்தாரோ தெரியல. ஃபீல்டர் த்ரோ பண்ண பந்தை டிஃபன்ஸ் ஆடிட்டாரு. இதப் பாத்த நம்ம அம்பயர் சைமன் டெளஃபல் 'Obstructing The field' முறையில அவுட் கொடுத்துட்டாரு. "ஏன்யா பௌலர் போடுற பந்தை அடிக்கச் சொன்னா, ஃபீல்டர் போடுற பந்தை அடிச்சு ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடிட்டிருக்கீங்களேய்யா''னு பாகிஸ்தான் ரசிகர்கள் கழுவி ஊத்திய வலி, இன்சமாமுக்கு மட்டுமே தெரியும்.

இன்சமாம் உல் ஹக்
இன்சமாம் உல் ஹக்

ஆகஸ்ட் 4, 2006. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மேட்ச்ல ஸ்வீப் ஷாட் ஆடுறேன்னு ஸ்டம்ப்புக்கு மேல எகிறிக் குதிச்சு லாங் ஜம்ப் பண்ணி, கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்ஸா மாத்திட்டாரு இன்சமாம். இந்தச் சம்பவத்துக்கு அப்புறம், "கேம் சேஞ்சர் பாத்திருப்பீங்க, கேமையே சேஞ்ச் பண்ணவரை பாத்திருக்கீங்களா"னு ஏரியாவுக்குள்ள கெத்தாயிட்டாரு இன்சமாம்.

இன்சமாம் உல் ஹக்
இன்சமாம் உல் ஹக்
ESPN
"ஏன்யா பௌலர் போடுற பந்தை அடிக்கச் சொன்னா, ஃபீல்டர் போடுற பந்தை அடிச்சு ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடிட்டிருக்கீங்களேய்யா!''

சயித் அஜ்மல் & சோயிப் மாலிக்

கேட்ச்சுக்கும் பாகிஸ்தானுக்கும் எப்பவுமே செட் ஆவாது. கல்லூரி பட காமெடியன்கள் கணக்கா, 'ஏன் நீங்க பிடிங்களேன்... ஏன் நீங்க பிடிக்கிறது'னு பல கேட்ச்சுகளை கோட்டைவிட்டு, ரசிகர்களை சிரிக்க வைச்சிருந்தாலும், அஜ்மல், மாலிக் கூட்டணி செஞ்ச சம்பவம்தான் சிறப்பானது.

சயித் அஜ்மல் & சோயிப் மாலிக்
சயித் அஜ்மல் & சோயிப் மாலிக்

2008-ல வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்த போட்டியில, கெய்ல் தூக்கி அடிச்ச பந்தை, அஜ்மல் பிடிக்கிற மாதிரியே ஓடி வந்து கேட்ச்சை விட்டுட்டு மாலிக் கிட்ட உன் கேட்ச் இதுனு சொல்லி முறைச்சதுலாம் வேற லெவல். அதுக்கு மாலிக், "யோவ் நான் லெஜென்ட்யா"னு அமைதியா போனது அதுக்கும் அடுத்த லெவல்!

அகமத் ஷேசாத்

ஜூலை 22, 2015. இலங்கைக்கு எதிரான போட்டியில கஷ்டமான கேட்ச்சை ஓடிவந்து விழுந்து புரண்டு பிடிச்சு, சீன் காட்டுனாரு அகமத் ஷேசாத். விழுந்து புரண்டு பிடிச்சிருக்காரேன்னு ரீப்ளே போட்டுப் பாத்தா, பந்த கீழ போட்டுட்டு புரண்டு எந்திரிக்கும் போது கையில எடுத்துட்டு கேட்ச் பிடிச்ச மாதிரி சீன் போட்டுருக்காருனு அப்பதான் தெரிஞ்சது.

அகமத் ஷேசாத்
அகமத் ஷேசாத்

"நீங்க சீன் போட்டதைக்கூட ஏத்துக்கலாம் பாஸு... ஆனா, பிடிச்சுட்டு வந்து வெட்கமே இல்லாம எங்க கிட்ட 'எப்படி பிடிச்சேன் பாத்தல்ல'னு ஹைஃபை பண்ணீங்க பாருங்க... அத மட்டும் ஏத்துக்கவே மாட்டோம்"னு டிரெஸ்ஸிங் ரூம்ல பாகிஸ்தான் ப்ளேயர்ஸே வச்சு செஞ்சதெல்லாம் ஒரு வரலாறு.

முகமது ஷமி & அப்துர் ரகுமான்

ஓவருக்கு 6 பால்தான்னு அம்பயர் அவ்ளோ சொல்லியும் கேட்காம, 17 பால் போட்டு மாஸ் காட்டுனாரு முகமது ஷமி. முகமது ஷமினா நம்ம ஷமி இல்லைங்க... பாகிஸ்தான் பெளலர் முகமது ஷமி. 2004 ஆசியக் கோப்பை போட்டியில வங்கதேசத்துக்கு எதிரா, ஒரே ஓவர்ல 7 வைட், 4 நோ பால்னு 22 ரன்கள் வாரி வழங்கினாரு. இவருதான் இப்படினு பாத்தா, 2014 ஆசியக் கோப்பையில அதே வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில பாகிஸ்தான் பெளலர் அப்துர் ரகுமான் பந்தே போடாம 8 ரன் கொடுத்து, ஷமிக்கே டஃப் கொடுத்தாரு.

முகமது ஷமி
முகமது ஷமி

அந்த ஓவர்ல அவர் போட்ட முதல் பந்து, பிட்ச்சே ஆகாம, கீப்பரே குதிச்சு பிடிக்கிற அளவுக்கு ஒரு பீமர். வேகப்பந்து வீச்சாளர்களே இப்படி ஒரு பீமர போட்டுருக்கமாட்டாங்க, அப்படி ஒரு பீமர் அது. இரண்டாவது பந்து இடுப்புக்கு மேல ஃபுல் டாஸ். அதுவும் பீமர். ரெண்டு நோ பால். ரெண்டு ரன். எப்பவும் வேகப்பந்து வீச்சாளர் ரெண்டு பீமர் போட்டா பௌலிங் போட விடமாட்டாங்க. ஆனா, ஸ்பின்னரே பீமர் போட்டதால, அம்பயரே கன்ஃபியூஸ் ஆகி தேர்டு அம்பயர்ட்ட கேட்க, அவரும் பாவம் பாத்து ஒரு சான்ஸ் கொடுக்க, அந்தப் பந்தையும் இடுப்புக்கு மேல போட்டு அம்பயரையே காண்டாக்கிட்டாரு ரகுமான். அந்தப் பந்துல சிக்ஸ் அடிச்சு உயிர காப்பத்திக்கிட்டாரு வங்கதேச பேட்ஸ்மேன்.

"நான் ஒரு பால் பீமர் போட்டு வெளிய போகலடா... நான் போட்ட மூணு பாலுமே பீமர்தான்டா"னு பந்தை அம்பயர் கையில கொடுத்துட்டு கெத்தா வெளியேறுனாரு அப்துர் ரகுமான்.

ஷாகித் அஃப்ரிடி

2k கிட்ஸுக்கெல்லாம் பால் டேம்பரிங்னு (Ball Tampering) சொன்னதும் டேவிட் வார்னரும் ஸ்டீவ் ஸ்மித்தும்தான் ஞாபகத்துக்கு வருவாங்க. ஆனா, பந்த கடிச்சே துவம்சம் பண்ணதுல 'கிங்'குனா அது நம்ம அஃப்ரிடிதான்.

ஷாகித் அஃப்ரிதி
ஷாகித் அஃப்ரிதி

ஜனவரி 31, 2010-ல நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில, சும்மா கொய்யா பழத்த கடிக்கிற மாதிரி கடிச்சு பாதி பந்தையே வெளியே எடுத்து மாட்டிக்கிட்டதெல்லாம் அல்டி ரகம்!

"பந்தை கடிச்சியே... மேட்ச்சை ஜெயிச்சியானு" பாகிஸ்தான் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாம திக்குமுக்காடிட்டார் மனுஷன்.

பாகிஸ்தான் அணி

தனித் தனியா மட்டுமில்ல, கூட்டமாவும் சில சம்பவங்கள செஞ்சிருக்காங்க பாகிஸ்தான் டீம். 2015 உலகக் கோப்பையில வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில, 311 ரன் டார்க்கெட்டை வெச்சுக்கிட்டு, 1 ரன் அடிக்கிறத்துக்குள்ள 4 பேர் பெவிலியனுக்கு போனதெல்லாம் ரெக்கார்டோட உச்சம். இன்னொரு ரெக்கார்டு, 35 பைஸ், 26 லெக் பைஸ், 15 நோ பால்னு ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ்ல 76 எக்ஸ்ட்ராஸ் கொடுத்து சாதனை படைச்சாங்க. 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியிலதான் இந்தச் சம்பவத்தை செஞ்சாங்க.

இந்த 2019 உலகக் கோப்பையிலகூட ஒரு ஆகச் சிறந்த நகைச்சுவை பண்ணாரு பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ். “500 ரன்களுக்கு மேல் குவித்து, வங்கதேசத்தை 50 ரன்களுக்குள் சுருட்ட முயற்சிப்போம்”னு சொன்னதுதான் அந்த நகைச்சுவை.

ஃபீல்டர்கள தொந்தரவு செஞ்சு, 'Obstructing The field' முறையில அதிக முறை அவுட்டானதும் நம்ம பாகிஸ்தான் பங்காளிங்கதான். ரமீஸ் ராஜா, இன்சமாம் உல் ஹக், முகமது ஹஃபீஸ், அன்வர் அலினு 4 பேர் இந்த முறையில அவுட்டாகி இருக்காங்க. இந்த மாதிரி பாகிஸ்தான் அணியோட சாதனைகளை சொல்லிக்கிட்டே போலாம்... அதுக்கு ஒரு ஆர்டிகள் பத்தாது. ஸோ, பார்ட் 2-ல சந்திப்போம்.

பின் செல்ல