கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

2021 ஃபார்முலா 1 சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்!

கொண்டாட்டத்தில் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்
பிரீமியம் ஸ்டோரி
News
கொண்டாட்டத்தில் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்

இளம் சாம்பியனே வருக வருக! கார் ரேஸ் / பார்முலா 1

2021 ஃபார்முலா 1 சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்!
2021 ஃபார்முலா 1 சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்!

12.12.2021 - இந்த ஐகானிக் நாளில் அபுதாபியில் அரங்கேறிய ஐகானிக் ரேஸை நிச்சயம் யாராலும் மறந்திட முடியாது. சர்ச்சைகளுக்கும் டிராமாக்களுக்கும் நடுவே நடந்து முடிந்த அந்தப் பந்தயம் ஒரு புதிய சாம்பியனைப் பரிசளித்திருக்கிறது. ஃபார்முலா 1 ட்ராக்குகளின் புதிய அரசனாக மகுடம் சூடியிருக்கிறார் மேக்ஸ் வெர்ஸ்டப்பன். 2021 சீஸனின் கடைசி ரேஸில், கடைசி லேப்பில் லூயிஸ் ஹாமில்ட்டனை முந்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் இந்த இளம் டிரைவர்!

2015-ம் ஆண்டு 17 வயது சிறுவனாக ஃபார்முலா ஒன் உலகத்துக்குள் நுழைந்தார் மேக்ஸ். அப்போது முதல் சாதனைப் புத்தகத்தைப் புரட்டிப் போடுவதே இவரது பிரதான வேலையாக இருக்கிறது. மிக இளம் வயதில் ரேஸில் பங்கேற்றவர் என்ற சாதனையில் தொடங்கியவர், இப்போது ஒரே சீஸனில் அதிக முறை போடியம் ஏறியவர் (18) என்ற சாதனையோடு பட்டம் வென்றிருக்கிறார்.

ஒரு 24 வயது வீரர் சாம்பியனாகியிருக்கிறார் என்று சொல்லும்போது, இவரது அருமை தெரிந்துவிட வாய்ப்பில்லை. ஆனால், அந்த 24 வயது வீரருக்கு 7 வருட ஃபார்முலா ஒன் அனுபவம் இருக்கிறது என்றால், எல்லோரும் உறைந்து விடுவார்கள். 18 வயது நிரம்பி அரசாங்கத்திடம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பே, ஃபார்முலா ஒன் லைசன்ஸ் வாங்கியவர் இவர். இவர் தவழ்ந்து பழகியதும் நடந்து பழகியதும் ரேஸ் ட்ராக்கில் எனும்போது, இதுவே சிலருக்கு ஆச்சர்யமாக இருக்காது.

மேக்ஸின் தந்தை ஜோஸ் ஃபார்முலா ஒன் ரேஸர். அம்மா சோஃபியும் கார்டிங் சர்கியூட்டில் ரேஸ் செய்தவர். ரத்தத்திலேயே ரேஸிங் ஊறிப்போனவர், ட்ராக்கில் கால் பதிக்காமல் போனால்தான் ஆச்சர்யம். ஆனால், கால் பதித்ததோடு நிற்காமல், தன் பெயர் சொல்லும் அளவுக்குத் தடம் பதித்திருக்கிறார் மேக்ஸ்.

2021 ஃபார்முலா 1 சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பன்!

ஃபார்முலா ஒன் பட்டம் வெல்லும் நான்காவது இளம் வீரர் என்ற சாதனை படைத்திருக்கும் மேக்ஸ், இனி தன்னிச்சையான ராஜ்ஜியம் நடத்துவதற்கும் வாய்ப்பிருக்கிறது. இந்த சீஸனில் ஒட்டுமொத்தமாக சில அசம்பாவிதங்கள் நடந்திருந்தாலும், ஒரு சில சம்பவங்களைப் பார்த்தால், வெர்ஸ்டப்பனே பெருமளவு ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார் என்று விளங்கும். பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரீயில் ஹாமில்ட்டனின் கார் பட்டு வெளியே சென்றவர், அஜெர்பெய்ஜானின் பஞ்சரால் வெற்றியைத் தவறவிட வேண்டியதானது. அந்த இரு ரேஸ்களிலும் சேர்த்து குறைந்தபட்சம் 40 புள்ளிகளாவது அவருக்குக் கிடைத்திருக்கும்.

பிரேஸில் ரேஸ் தொடங்குவதற்கு முன்பு கிட்டத்தட்ட எல்லோரும் மேக்ஸ்தான் சாம்பியன் என்று உறுதி செய்துவிட்டார்கள். ஆனால், லூயிஸ் தன் திறமையைக் காட்ட, கடைசி ரேஸ் வரை வந்தது இந்தப் போட்டி. ஃபார்முலா ஒன் வரலாற்றில் ஆகச் சிறந்த சீஸன்களில் ஒன்றான இதன் முடிவுதான் இப்போது பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

அபுதாபி ரேஸ் எப்போதும் கொண்டாட்டம் நிறைந்ததாகவே இருந்திருக் கிறது. கடந்த சில ஆண்டுகளாக, ஃபார்முலா ஒன் சீஸன் இங்குதான் நிறைவுற்றுக் கொண்டிருக்கிறது. அதனால், வெற்றியாளர்களின் களிப்பு, ஓய்வு பெறுபவர்களின் குட்பை என நெகிழ்வான ஓர் இடமாகவே இருந்திருக்கிறது யாஸ் மெரினா சர்க்யூட். ஆனால், இம்முறை சர்ச்சை, கோபம், ஏமாற்றம் என பலதரப்பட்ட உணர்வுகள் அங்கு பொங்கிக் கொண்டிருந்தன. கடைசி லேப் குழப்பத்தால் ஹாமில்ட்டனின் வெற்றியை வெர்ஸ்டப்பன் பறித்து விட்டார் என்றும் பேசுகிறார்கள். ஆனால், இந்த சீஸன் அப்படியொரு சூழ்நிலைக்கு வந்ததற்கே அவரைக் கொண்டாடியாக வேண்டும்.

ஹாமில்ட்டன் போன்ற ஒரு மகத்தான ஜாம்பவானை வெற்றிக்காக கடைசி லேப் வரை ஓட வைத்ததே வெர்ஸ்டப்பனுக்கு மாபெரும் வெற்றிதான். பஹ்ரைனில் ஆரம்பித்த முதல் ரேஸில் இருந்தே ஹாமில்ட்டனுக்குக் கடும் போட்டியளித்துக் கொண்டிருந்தார் மேக்ஸ். எந்த இடத்திலும் பின்வாங்காமல், தவறுகள் அதிகம் செய்திடாமல், ஒரு சாம்பியனுக்கான மனோபாவத்துடனேயே செயல்பட்டார்.

ட்ராக்கில் வெளிப்படும் அவரது செயல்பாடு, அவர் மனதின் பிரதிபலிப்பே! ‘எந்த இடத்திலும் பின்வாங்க மாட்டேன். கொஞ்சம் கூட யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன். வெற்றியைப் பறிக்கக் கிடைக்கும் மிகச் சிறிய வாய்ப்பையும்கூட விடாமல் பயன்படுத்திக் கொள்வேன்’. இதுதான் களத்திற்கு உள்ளேவும் வெளியேவும் வெர்ஸ்டப்பனின் பாலிசி. இதுதான் அவருடைய ரேஸிங் அக்ரஸ்ஸிவ்வாக இருப்பதற்கான காரணம். இது விமர்சனத்துக்கு உட்பட்டாலும் நாளுக்கு நாள் முதிர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கிறார் வெர்ஸ்டப்பன். கற்றுக்கொள்ளவும், மாற்றிக்கொள்ளவும் இன்னும் போதிய காலம் இருக்கிறது.

கிமி ராய்க்கோனன்
கிமி ராய்க்கோனன்

குட் பை கிமி!

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபார்முலா ஒன் ரேஸுக்கு குட்பை தெரிவித்திருக்கிறார் கிமி ராய்க்கோனன். 2001-ல் சௌபர் அணியில் ஆரம்பித்த அவரது பயணம், 349 ரேஸ்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்திருக்கிறது. 22 வயதில் முதல் முறையாக அவர் ஃபார்முலா ஒன் ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டபோது, பலரும் விமர்சனம் செய்தார்கள். பெரிய அனுபவம் இல்லாத ஒரு வீரரை வைத்து ரிஸ்க் எடுக்கிறார்கள் என்றனர். ஆனால், அவர்களுக்குப் பதிலடி கொடுக்க அவருக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. தன் முதல் ரேஸிலேயே ஆறாவதாக முடித்து, தான் யார் என்பதை நிரூபித்தார். அடுத்த சீஸனில் மூன்று முறை போடியம் ஏறினார். 2003-ல் தன் முதல் வெற்றியைப் பதிவு செய்தார். 2007 சீஸனில் உச்சகட்ட ஃபார்மில் இருந்தவர், சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அதுதான், ஒரு ஃபெராரி டிரைவர் வென்ற கடைசி உலக சாம்பியன்ஷிப்!

சாம்பியன் பட்டம் வென்ற இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே கிமியின் ஃபார்முலா ஒன் இடத்துக்கு ஆபத்து வந்தது. அலோன்சோவை ஃபெராரி ஒப்பந்தம் செய்ய, இவர் வெளியேற வேண்டிய சூழ்நிலை. இருந்தாலும், இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ட்ராக்குகளின் தன் வித்தையைக் காட்டினார். கழட்டிவிட்ட ஃபெராரியே மீண்டும் ஒப்பந்தம் செய்யுமளவு தன் மேஜிக்கை நிகழ்த்தினார். இப்போது, ஆல்ஃபோ ரோமியாவுக்கு 3 சீஸன்கள் பங்கேற்றுவிட்டு, ஃபார்முலா ஒன் வரலாற்றில் அதிக ரேஸ்களைத் தொடங்கியவர் என்ற சாதனையோடு விடைபெறுகிறார்.

என்னதான் ட்ராக்கில் அவர் பட்டையைக் கிளப்பியிருந்தாலும், ரசிகர்கள் அவரிடம் அதிகம் ரசித்தது அவர் பேட்டிகளையும், டீம் மைக்கில் கொடுக்கும் கமென்ட்டுகளையும்தான். அவருக்குப் பேசவே பிடிக்காது. அதனால், பத்திரிகையாளர்களிடம் ஒற்றை வரியில் ஏனோ தானோ என்றுதான் பதில் சொல்வார். ஆனால், அதுவே மாஸாக இருக்கும். ரேஸ் நடக்கும்போது, அவர் அணியினர் தனக்கு முக்கியமான விஷயங்களைச் சொல்லும்போது அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன் இன்னும் அல்டிமேட். பின்னால் வரும் வீரரின் வேகம், இடைவெளி பற்றியெல்லாம் கூறும்போது அவர் சொல்லும், “Leave me alone” வசனம், ஃபார்முலா ஒன் ரசிகர்கள் கொண்டாடும் ஒன்று. அபுதாபியில் நடந்த கடைசி ரேஸில், கிமியின் காரில் ‘Dear Kimi, We’ll leave you alone’ என்று எழுதி அவரை வழியனுப்பி வைத்தது ஆல்ஃபா ரோமியோ.

“என்னை ரசிகர்கள் இப்படித்தான் நினைவு வைத்திருக்கவேண்டும் என்று நினைப்பவன் அல்ல நான். சொல்லப்போனால் நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுபவனும் அல்ல. என்னை நல்லவிதமாகவோ, மோசமான விதமாகவோ எப்படி வேண்டுமானால் ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்ளட்டும். எல்லாம் நினைவுதானே” என்று கூறியவர் ராய்க்கோனன். நிச்சயம் எல்லோரும் அவரை நல்லவிதமாகத்தான் நினைவில் வைத்திருப்பார்கள்!

மேக்ஸ் வெர்ஸ்டப்பன்
மேக்ஸ் வெர்ஸ்டப்பன்

“ஹாமில்ட்டனை நேருக்கு நேர் பார்க்கும்போது நாங்கள் எதுவும் பேசாவிட்டாலும், புரிந்துகொள்ள முடியும். இந்தப் போட்டியை இருவருமே மதிக்கிறோம். சில நேரங்களை ஒருவரையொருவர் வெறுக்கவும் செய்கிறோம். ஆனால், அது எங்களின் போட்டித் தன்மைதான். லூயிஸ் ஒரு மகத்தான ரேஸ் டிரைவர்!”

- மேக்ஸ் வெர்ஸ்டப்பன்

மேக்ஸ் வெர்ஸ்டப்பன் in 2021

ரேஸ்கள்: 22

புள்ளிகள்: 395.5

வெற்றிகள்: 10

போடியம் : 18

நிறைவு செய்த ரேஸ்கள்: 20

போல் பொசிஷன் : 10

ஃபாஸ்டஸ்ட் லேப் : 6

ஸ்பிரின்ட் புள்ளிகள்: 7

கிராண்ட் ஸ்லாம்

ஃபார்முலா ஒன் பந்தயத்தில் கிராண்ட் ஸ்லாம் என்ற ஒரு சொல்லாடல் இருக்கிறது. ஒரே ரேஸில் போல் பொசிஷனில் அமர்ந்து, ஒவ்வொரு லேப்பிலும் முன்னிலையில் இருந்து ரேஸை வெல்வதோடு, ஃபாஸ்டஸ்ட் லேப்புக்கான புள்ளியையும் வென்றால் அது கிராண்ட் ஸ்லாம் எனப்படும். இந்த சீஸன் நடந்த ஆஸ்திரியன் கிராண்ட் ப்ரீ பந்தயத்தில் அந்த அளப்பரிய சாதனையைச் செய்திருக்கிறார் வெர்ஸ்டப்பன். ரெட் புல் ரிங்கில் போல் பொசிஷனில் தொடங்கிய மேக்ஸ், 71 லேப்களிலும் முன்னிலையில் இருந்து, 1:23:54.513 மணி நேரத்தில் ரேஸை முடித்து வென்றார். இதுபோக, 62-வது லேப்பை 1:06.200 நிமிடத்தில் முடித்து அதிவேக லேப்பையும் தன்வசப்படுத்தியிருந்தார்.

1. மேக்ஸ் வெர்ஸ்டப்பன் (ரெட்புல்) 395.5

2. லூயிஸ் ஹாமில்ட்டன் (மெர்சிடீஸ்) 387.5

3. வால்ட்டேரி போட்டாஸ் (மெர்சிடீஸ்) 226

4. செர்ஜியோ பெரஸ் (ரெட்புல்) 190

5. கார்லோஸ் சைன்ஸ் (ஃபெராரி) 164.5

6. லாண்டோ நாரிஸ் (மெக்லரன்) 160

7. சார்ல் லெக்லர்க் (ஃபெராரி) 159

8. டேனியல் ரிக்கார்டோ (மெக்லரன்) 115

9. பியர் கேஸ்லி (ஆல்ஃபா டூரி) 110

10. ஃபெர்னாண்டொ அலோன்சோ (ஆல்பைன்) 81

11. எஸ்டபன் ஓகான் (ஆல்பைன்) 74

12. செபாஸ்டியன் வெட்டல் (ஆஸ்டன் மார்டின்) 43

13. லான்ஸ் ஸ்டிரோல்

(ஆஸ்டன் மார்டின்) 34

14. யூகி சுனோடா

(ஆல்ஃபா டூரி) 32

15. ஜார்ஜ் ரஸல் (வில்லியம்ஸ்) 15

16. கிமி ராய்க்கோனன் (ஆல்ஃபா ரோமியோ) 10

17. நிகோலஸ் லடிஃபி (வில்லியம்ஸ்) 7

18. ஆன்டோனியோ ஜியாவனாட்சி

(ஆல்ஃபா ரோமியோ) 3

19. மிக் ஷுமேக்கர் (ஹாஸ்) 0

20. ராபர்ட் குபிசா (ஆல்ஃபா ரோமியோ) 0

21. நிகிதா மேசபீன் (ஹாஸ்) 0