2022 ஃபார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கிறார் மேக்ஸ் வெர்ஸ்டப்பன். கடந்த சீசன் சாம்பியன்ஷிப்பை பெரும் சர்ச்சைக்கு மத்தியில் வென்றவர், இந்த முறை சர்ச்சைகள் ஏதும் இல்லாமல், பெரும் போட்டி கூட இல்லாமல், சொல்லப்போனால் அதீத பரபரப்புமே இல்லாமல் வென்றிருக்கிறார்.
ஜப்பான் கிராண்ட் ப்ரீயை வென்ற வெர்ஸ்டப்பன், இந்த சீசனில் இன்னும் 4 ரேஸ்கள் மீதம் வைத்து தன்னுடைய இரண்டாவது பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார். இந்த சீசன் தொடக்கமே மேக்ஸுக்கு பெரும் சவாலாக இருந்தது. முதல் ரேஸிலேயே எஞ்சின் கோளாரால் அவர் கடைசி தருணத்தில் வெளியேற நேரிட்டது. மூன்றாவது ரேஸிலும் அதுவே தொடர்ந்தது. இந்த சீசன் அவருக்குப் போட்டியாக இருப்பார் என்று கருதப்பட்ட சார்ல் லெக்லர், மூன்றில் இரண்டு ரேஸ்களை வென்றதால் வெர்ஸ்டப்பன் மிகவும் பின்தங்கியிருந்தார். ஆனால் அதன்பிறகு அவர் கம்பேக் கொடுத்த விதம் மிரட்டலாக இருந்தது. மூன்று ரேஸ்கள் முடிவில், வெர்ஸ்டப்பனுக்கும் லெக்லர்க்குக்குமான இடைவெளி 46 புள்ளிகளாக இருந்தது. அடுத்த மூன்று ரேஸ்களையும் அடுத்தடுத்து வெற்றி பெற்று, அந்த முன்னிலையை முறியடித்து முதலிடத்துக்கு முன்னேறினார்.

எமிலியா தொடங்கி சுசூகா வரை நடந்த 15 ரேஸ்களில் 13 முறை போடியம் ஏறினார் அவர். அதில் 11 வெற்றிகள்! இந்த ஜப்பான் கிராண்ட் ப்ரீ வெற்றி, இந்த சீசனில் அவர் பதிவு செய்திருக்கும் 12வது வெற்றி. ஜப்பானில் வெற்றிக் கோட்டைத் தாண்டியதும் வெர்ஸ்டப்பன் பெரிதாகக் கொண்டாடவில்லை. மழையால் பெரிதளவில் பாதிக்கப்பட்ட இந்த ரேஸில், புள்ளிகள் முழுமையாக வழங்கப்படுமா இல்லை 50% புள்ளிகள் தானா என்ற பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதனால் முதலில் இந்த ரேஸை வென்றதாக மட்டுமே அனைவரும் நினைத்திருந்தனர். ரேஸ் முடிந்து சில நிமிடங்கள் கழித்துத்தான் வெர்ஸ்டப்பன் உலக சாம்பியன் என்பதே அறிவிக்கப்பட்டது. அது சொல்லப்பட்டபோது கூட அவரிடம் மிகப் பெரிய ஆர்ப்பரிப்பு ஏதும் இல்லை. ஏனெனில், அவர் உலக சாம்பியன் என்பது இந்த சீசன் பாதியிலேயே முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஒட்டுமொத்த ரேஸிங் உலகமும் அதை மானசீகமாக ஏற்றுக்கொண்டுவிட்டது. அதனால் அவர் ஆர்ப்பரிக்கவில்லை. ஆனால் இது எளிதாகவும் கிடைத்துவிடவில்லை.
பல விளையாட்டுகளில் சொல்வார்களே 'He made look easy' என்று... அதைத்தான் செய்தார் மேக்ஸ். பல கடினமான தருணங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் மிகச் சிறப்பாகக் கையாண்டு முன்னேறினார். ஹங்கேரியில் 10வது இடத்தில் இருந்து தொடங்கியவர், மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்றார். அடுத்த ரேஸில் அதைவிட அட்டகாசம்! 14வது இடத்தில் இருந்து தொடங்கிய அவர் கடைசியில் போடியத்தின் முதல் படியில் ஏறினார். இத்தாலியிலோ ஏழாவது இடத்திலிருந்து வெற்றி. இப்படி மிகவும் பின்னால் இருந்து தொடங்கிய ரேஸ்களில் எல்லாம் போடியம் ஏறி அனைவரையும் பிரமிக்கவைத்தார் அவர். வெர்ஸ்டப்பனின் இந்த அபார செயல்பாட்டுக்கு அந்த அணியின் பங்களிப்பும் மிக முக்கியக் காரணம். அவர்களின் திட்டமிடுதல் குழு அபாரமாக செயல்பட்டது. அதன் தலைமை அங்கமான ஹானா ஸ்மித் தன்னுடைய முடிவுகளால் மிரட்டினார்.
கடினமான சூழ்நிலைகளில் சரியான முடிவுகள் எடுத்து பிரமிக்கவைத்தார். எந்த லேப்பில் பிட்டுக்கு வரவேண்டும், எந்த டயரைப் பயன்படுத்தவேண்டும், தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப கூடுதல் பிட் எடுக்கவேண்டுமா, அண்டர்கட் செய்வதா, ஓவர்கட் செய்வதா, ஒவ்வொரு டயரையும் எவ்வளவு தூரம் பயன்படுத்தலாம்... ஒரு பிட் ஸ்டாப்பை முடிவு செய்வதற்கு இப்படி ஆயிரம் விஷயங்கள் யோசிக்கவேண்டியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் இருக்கும். நிறைய முடிவுகளை எதிரணிகளின் திட்டங்களுக்கு ஏற்ப எடுக்க நேரிடும். சில முடிவுகளை எதிரணிகளின் திட்டங்களை முன்கூட்டியே கணித்து எடுக்க நேரிடும். 70 சதவிகித முடிவுகள் சரியாக எடுக்கப்பட்டாலே பெரிய விஷயம். ஆனால் 95 சதவிகித முடிவுகளை சரியாக எடுத்தார் ஹானா. அவர் திட்டங்களுக்கு வெர்ஸ்டப்பனின் அபார திறமை பலம் சேர்க்க, 4 ரேஸ்களுக்கு முன்பாகவே ஒரு சாம்பியன்ஷிப் முடிவு செய்யப்பட்டுவிட்டது.

பெர்ஃபெக்டான திட்டமிடலும், டிரைவிங்கும் மட்டுமே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் இல்லை. வெர்ஸ்டப்பனின் அணுகுமுறையும் இந்த சீசனில் வெகுவாக மாறியிருந்தது. அதிரடி மூவ்கள், ஆக்ரோஷ முடிவுகள் போன்றவற்றால் Angry Young Man பட்டத்தோடு வலம் வந்த அவர், இந்த ஆண்டு மிகவும் பக்குவமாக நடந்து கொண்டார். சீசனின் தொடக்கம் மிகமோசமாக அமைந்தாலும், மிகவும் கூலாகவே அடுத்த ரேஸ்களை அணுகினார். ஒவ்வொரு ஓவர்டேக்குகளையும் கணக்கிட்டே எடுத்தார். டயரைப் பாதுகாக்கவேண்டுமெனில், முதலிடத்துக்கு முன்னேறும் அவசரத்தை சற்று தள்ளியே வைத்தார். வெர்ஸ்டப்பனுக்கும் தனக்கும் இடையே இருக்கும் இடைவெளியை உணர்ந்து, அவருக்கு பக்கபலமாக சப்போர்டிங் ரோல் செய்ய ஏற்றுக்கொண்ட சக ரெட்புல் வீரர் செர்ஜியோ பெரஸையும் பாராட்டவேண்டும். பல ரேஸ்களில் போட்டியிடமால் அணியின் முடிவுக்குக் கட்டுப்பட்டு அவர் தன் இடத்தை வெர்ஸ்டப்பனுக்கு விட்டுக் கொடுத்தார். தகுதிச் சுற்றில் 'டோ' கொடுத்தார். அவர் பரிபூரணமாக அதை ஏற்றுக்கொண்டதால், மெர்சீடிஸ் சந்தித்த அளவுக்கான தலைவலிகளைக் கூட ரெட்புல் அணி சந்திக்கவில்லை. அவர்களின் முழு கவனமும் தொடக்கத்தில் இருந்தே வெர்ஸ்டப்பனாகவே இருந்தது.
இவர்களின் வெற்றிக்கு ஃபெராரியின் சொதப்பலும் ஒரு மிகப்பெரிய காரணம். தங்கள் கார்களால் புதிய விதிகளுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள முடியாததால், மெர்சீடிஸ் ஆரம்பத்திலேயே டைட்டில் ரேஸிலிருந்து பின்வாங்கியது. லெக்லர்க் தான் வெர்ஸ்டப்பனுக்கு பெரும் போட்டியாக இருப்பார் என்று நினைத்திருக்க, ஓராயிரம் தவறுகள் செய்து ரெட்புல்லின் வேலையை எளிதாக்கியது அந்த அணி. பிட் ஸ்டாப்பில் பல நூறு தவறுகள், குழப்பங்கள், அவ்வப்போது ஏற்பட்ட எஞ்ஜின் கோளாறுகள் போன்றவற்றால் பெரிய அளவில் டைட்டில் கனவை பாதியிலேயே குழி தோண்டிப் புதைத்தது ஃபெராரி.
லெக்லர்க்கும் பல போல் பொசிஷன்களை வெற்றிகளாக மாற்ற முடியாமல் தடுமாறினார். இப்படி ஒன்பது கோள்களும் ரெட்புல்லுக்கு சாதகமாக அமைய, தன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றிவிட்டார் வெர்ஸ்டப்பன். அடுத்த அணிகள் சாம்பியன்ஷிப்பை விரைவில் ரெட்புல் தனதாக்கிவிடும். இப்போது அடுத்த சீசனைப் பற்றி அவர்கள் திட்டமிடத் தொடங்கியிருப்பார்கள் !